தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் அச்சாணியாகச் சுழன்ற கடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை

யாழ்.மாவட்டத்தின் வடமராட்சிப் பிரதேசத்தில் தேசியத்தலைவர் வந்துதித்த வல்வை மண்ணுக்கு அண்டியதாக அமையப்பெற்ற செல்வச்செழிப்புமிக்க நெய்தல் நிலமான பொலிகண்டி மண் பெற்றெடுத்த வீரத்தளபதி பிரிகேடியர் சூசை.திரு திருமதி தில்லையம்பலம் தம்பதியினருக்கு 1963-ம்ஆண்டு ஒக்டோபர்மாதம் இரண்டாவது மகனாகப்பிறந்த இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சிவநேசன். ஏற்கனவே ஒரு அண்ணனை மட்டும் சகோதரனாகக் கொண்ட சிவநேசனை எல்லோரும் செல்லமாக காந்தி என்றுதான் அழைத்தனர். இளமைப்பராயத்தில் பள்ளிப்படிப்புக்களில் சிறப்பாகத் தேர்ச்சிபெற்ற காந்தி உயர் வகுப்புக் கல்விகளை வடமராட்சி வேலாயுதம் மகாவித்தியாலயத்தில் முன்னெடுத்திருந்தார்.

காந்திஅவர்கள் பத்தொன்பது வயதையெட்டிய 1982-ம்ஆண்டுகாலப்பகுதி. சிங்கள பேரினவாத சக்திகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப்போராட்டம் முளையிடத் தொடங்கிய காலம். பேரினவாத சக்திகள் தமிழ்மக்கள்மீது திணித்த அடக்குமுறைகள் உயர்தரக்கல்வி கற்றுக்கொண்டிருந்த காந்தி அவர்களின் மனதை வெகுவாகப் பாதித்திருந்தது. அந்தக் காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளான கப்டன் பண்டிதர், கப்டன் றஞ்சன்லாலா, கேணல் கிட்டு ஆகியோர்களின் அறிமுகத்தைத் தொடர்ந்து 1982-ம் ஆண்டுக் காலப்பகுதியில் காந்தி அவர்கள் தன்னையும் ஒரு முழுநேர விடுதலைப் போராளியாக இணைத்துக்கொண்டார். இயக்கப் பாசறையில்தான் இயக்கப்பெயராக சூசை என்ற பெயரைப் பெற்றிருந்தார்.

தொடக்கநாட்களில் கேணல் கிட்டு அவர்களின் வழிகாட்டலில் இயக்கத்தின் வளர்ச்சிக்காக இராணுவ அரசியல் ரீதியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தார். இதன்பின்னர் 1983-ம்ஆண்டின் பிற்பகுதியில் லெப் கேணல் பொன்னம்மான் தலைமையில் இருநூறு போராளிகளைக் கொண்ட விடுதலைப்புலிகளின் முதலாவது பயிற்சிஅணியினர் பயிற்சிக்காக இந்தியாவிற்குச் சென்றபொழுது அந்த அணியில் சூசைஅவர்களும் சென்றிருந்தார். இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் அமைந்திருந்த முதலாவது பயிற்சிப்பாசறையில் வழங்கப்பட்ட பயிற்சிகள் அனைத்திலும் மிகச்சிறப்பாகத் தேர்ச்சிபெற்று ஒரு சிறந்த போராளியாக மட்டுமன்றி சிறந்த ஆளுமைமிக்க பொறுப்பாளராகவும் புடம்போடப்பப்பட்டு தனது பயிற்சிகளை சிறந்த முறையில் நிறைவுசெய்திருந்தார் சூசை அவர்கள்.

1984-ம்ஆண்டு ஜனவரி மாதம் முதலாவது பயிற்சிப்பாசறை நிறைவடைந்ததையடுத்து தாயகம் வந்த சூசை அவர்கள் அதே காலப்பகுதியில் வடமராட்சிக்கோட்டப் பொறுப்பாளராக தேசியத்தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டார். சூசைஅவர்கள் வடமராட்சிக் கோட்டத்தை பொறுப்பேற்றதைத் தொடர்ந்து வடமராட்சி மற்றும் வடமராட்சிக்கிழக்குப் பிரதேசங்களில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் முனைப்புப்பெற்றன. விடுதலைப்புலிகள் இயக்கத்தை பலம்மிக்க ஒரு அமைப்பாக கட்டியெழுப்பும் பொருட்டு பெருமளவு இளைஞர்களை போராட்டத்தில் இணைத்து பயிற்சிகள் பெறுவதற்காக கடல்வழியாக தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்திருந்தார்.

அத்துடன் வடமராட்சிக்கிழக்குப் பிரதேசத்தில் மாவிலங்கை காட்டுப்பகுதியிலும் பயிற்சிமுகாம் அமைத்து அங்கும் புதியபோராளிகளுக்கான பயிற்சிகளை வழங்கி இயக்கத்தின் ஆட்பலத்தை விருத்திசெய்து விடுதலைப்போராட்டத்தின் படிக்கல்லாகத் திகழ்ந்தார். அத்துடன் மக்கள் மத்தியில் போராட்டம் தொடர்பான கருத்துக்களை எடுத்துக்கூறி போராட்டத்திற்கான மக்கள் ஆதரவினையும் வலுப்படுத்தினார். கிராமங்கள் தோறும் மக்கள்கடை என்ற பெயரில் வணிகநிலையங்களை நிறுவி மலிவுவிலைகளில் பொருடகள் மக்களுக்கு கிடைக்கக்கூடியவாறான சூழலை ஏற்படுத்திக்கொடுத்திருந்தார்.

அத்துடன் முதலுதவித் தொண்டர்களை உருவாக்கும் முகமாக கிராமங்களிலுள்ள சில படித்த இளைஞர் யுவதிகளை ஒன்றுசேர்த்து முதலுதவிப் பயிற்சிகளை வழங்கியதோடு பின்தங்கிய இடங்களில் முதலுதவி நிலையங்களை நிறுவி பயிற்றுவித்த முதலுதவித் தொண்டர்களை அந்த நிலையங்களில் மருத்துவத் தொண்டர்களாகப் பணிக்கமர்த்தி மக்களின் வைத்தியத் தேவைகளை நிறைவு செய்தார்.

அன்றய நாட்களில் அந்த முதலுதவி நிலையங்களின் சேவையால் அநேகமான மக்கள் பெரிதும் நன்மையடைந்ததுவும் குறிப்பிடத்தக்கது. மக்கள் மத்தியில் ஏற்படுகின்ற குடும்பப்பிணக்குகள், காணிப்பிணக்குகள் உட்பட ஏனைய பிணக்குகளுக்கும் தீர்வுகாணும்முகமாக ஒவ்வொரு பிரதேசங்களிலும் படித்த அறிவில் முதிர்ந்ததும் மக்கள் மத்தியில் செல்வாக்குமிக்கவர்களுமான சிலரை இணைத்து இணக்கமன்றங்களை நிறுவி மக்கள் மத்தியில் ஏற்படுகின்ற பிணக்குகளுக்கு அந்த இணக்கமன்றங்கள் ஊடாக உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுத்தார். அத்துடன் வடமராட்சியில் இலங்கை இராணுவத்தினருக்கெதிராக இடம்பெற்ற தாக்குதல்கள் அனைத்திலும் நேரடியாக பங்கெடுத்திருந்தார்.

1987-ம்ஆண்டு இலங்கை இராணுவத்தினர் ‘ஒப்பரேசன் லிபரேசன்’ இராணுவ நடவடிக்கைமூலமாக வடமராட்சியைக் கைப்பற்றி நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்தனர். இந்தப் படைமுகாமை அழிப்பதற்கென விடுதலைப்புலிகள் 1987-ம் ஆண்டு யூலைமாதம் 05-ம்திகதி முதன்முதலாக கரும்புலித்தாக்குதலை மேற்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தை கொன்றொழித்து நெல்லியடி மத்திய மகாவித்தியாலயப்படைமுகாமை வெற்றிகொண்டனர்.

இந்த தாக்குதலில் படைமுகாமின் பிரதான தடையை உடைத்து, கரும்புலி கப்டன் மில்லர் அவர்கள் வெடிமருந்து நிரப்பிய வாகனத படைமுகாமின்;தை முகாமிற்கு உள்ளே கொண்டு செல்வதற்கான பாதையை ஏற்படுத்திக்கொடுக்கும் பொறுப்பு சூசை தலைமையிலான அணியினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட தினத்தன்று சரியாக இரவு 7மணி 2நிமிடத்திற்கு சூசை தலைமையிலான அணியினர் முகாமின் தடையை உடைத்து பிரதான பாதையை ஏற்படுத்திக்கொடுக்க 7மணி 5நிமிடத்திற்கு கரும்புலி கப்டன் மில்லர் வெடிமருந்து வாகனத்தை முகாமிற்கு உள்ளே கொண்டுசென்று கரும்புலித்தாக்குதலை மேற்கொண்டார். கரும்புலி கப்டன் மில்லர் அவர்களும் சூசை அவர்களின் ஆளுகையின் கீழ் வடமராட்சி அணியில் செயற்பட்டிருந்தவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இதன்பின்னரான காலப்பகுதியில அதாவது தமிழீழத்தில் இந்தியப்படையினரின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் மணலாற்றுக் காட்டை தளமாகக்கொண்டு செயற்பட்டவேளையிலும் சூசை அவர்களும் இன்னும் சில போராளிகளும் வடமராட்சிப் பகுதியிலேயே மக்களின் உதவியுடன் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர். இந்தக்காலப்பகுதியில் இந்தியப்படையினருக்கெதிரான கெரில்லா முறையிலான பல தாக்குதல்களை மேற்கொண்டதோடு தமிழ்நாட்டிலிருந்து கடல்வழியாக படகுகளில் கொண்டுவரப்படுகின்ற படைக்கலங்களையும் ஏனைய பொருட்களையும் பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வைத்து அவற்றை மணலாற்றுக்காட்டுக்கு அனுப்பிவைப்பது உட்பட அந்த நெருக்கடியான காலகட்டத்திலும் போராட்டப்பாதையில் மிகவும் நேர்மையுடன் பயணித்தார் சூசை.

இதன்பின்னர் ஒரு கட்டத்தில் தேசியத்தலைவரின் அழைப்பையடுத்து தேசியத்தலைவரை சந்திப்பதற்காக மணலாற்றுக் காட்டுப்பகுதிக்கு சென்றுகொண்டிருந்த வேளையில் மணலாறு நித்திகைக்குளம் பகுதியில் இந்தியப்படையினருடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்தார். இருப்பினும் மனம் தளராமல் இடர்மிகுந்த பயணத்தை; தொடர்ந்து தேசியத்தலைவரைச் சந்தித்தார்.

அதன்பின்னர் காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக தமிழகம் சென்றார். அங்கு காயத்திற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு காயம் குணமடைந்து உடல்நிலை தேறியபின்னர் தாயகம் வந்து தேசியத்தலைவருடன் மணலாற்றுக் காட்டில் செயற்பட்டார்.

1990-ம்ஆண்டின் முற்பகுதியில் இந்தியப்படையினர் தமிழீழத்திலிருந்து முற்றாக வெளியேறியவுடன் மீண்டும் வடமராட்சிக ;கோட்டத்தைப் பொறுப்பேற்று சிறந்த முறையில் நிர்வகித்தார். இந்தக்காலப்பகுதியில் கலை கலாச்சாரப்பிரிவை உருவாக்கி அதனூடாக போராட்டக் கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைத்து கணிசமான இளைஞர் யுவதிகளை போராட்டத்தில் இணைத்து பலமானதொரு வடமராட்சி அணியைக் கட்டிவளர்த்திருந்தார்.

அந்தக்காலப்பகுதியில் மண்டைதீவில் தேசவிரோதக்கும்பல் மீதான தாக்குதல,; யாழ்-கோட்டை முகாம் மீதான தாக்குதல் மண்டைதீவுப்படைமுகாம் மீதான தாக்குதல் 1991-ம்ஆண்டு யூலைமாதம் ஆனையிறவுப்படைத்தளம்மீது மேற்கொள்ளப்பட்ட ஆகாயக்கடல்வெளிச்சமர் உட்பட அனைத்து தாக்குதல்களிலும் சூசை தலைமையிலான தாக்குதலணி பங்கெடுத்திருந்தது. ஆகாயக்கடல்வெளிச்சமர் முற்றுப்பெற்றதையடுத்து சூசை அவர்களுக்கான திருமணம் நடைபெற்றது. முதல் மாவீரர் லெப்ரினன்ட் சங்கர் அவர்களின் சகோதரி சத்தியதேவி(சுதா) அவர்கள்தான் சூசையின் வாழ்க்கைத் துணைவியாக அமைந்தார். தனது இல்லறவாழ்க்கையில் சிந்து என்ற ஒரு பெண்பிள்ளைக்கும் மணியரசன், சங்கர் ஆகிய இரண்டு ஆண்பிள்ளைகளுக்கும் தந்தையானார்.

மட்டுப்படுத்தப்பட்ட அளவில் செயற்பட்டுக்கொண்டிருந்த கடற்புறா அணி 1991-ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 19-ம்நாளன்று விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் என்ற கட்டமைப்பாக பரிணமித்தபோது அதன் சிறப்புத்தளபதியாக சூசை அவர்கள் நியமிக்கப்பட்டார். கடற்புலிகளென்றால் சூசை சூசையென்றால் கடற்புலிகள் என்று சொல்லுகின்ற அளவுக்கு அவரினுடய செயற்பாடுகள் அமைந்திருந்தன.

அதாவது கடற்புலிகளினுடய நடவடிக்கைகள் அனைத்திலும் சூசை அவர்களின் பங்களிப்பு மிகப்பிரதானமாகவிருந்தது. கடலும் கடல் சார்ந்த பிரதேசமுமான நெய்தல் நிலத்தை கடற்புலிகள் நிர்வகிப்பதற்காக கடற்புலிகளின் அரசியல்துறை உருவாக்கப்பட்டு மக்களுக்கும் கடற்புலிகளுக்கும் மத்தியிலான ஒரு நெருக்கமான உறவுநிலையை ஏற்படுத்தியிருந்தார். யாழ்.குடாநாட்டுக்கான பாதைகள் தடைப்பட்டு கிளாலிக் கடல்வழியாக மக்களின் போக்குவரத்துக்கள் இடம்பெற்ற பொழுது இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக கடற்புலிகளின் சண்டைப்படகுகளை கடலில் இறக்கி மக்களுக்கான பாதுகாப்புக்களை வழங்கி நிறைவான போக்குவரத்துப்பணியை நெறிப்படுத்தினார்.

1993-ம்ஆண்டு நவம்பர் மாதத்தில் பூநகரி-நாகதேவன்துறை படைத்தளம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ‘ஒப்பரேசன் தவளை’ நடவடிக்கையில் எதிரியின் ஐந்து நீரூந்து விசைப்படகுகளை கைப்பற்றி போராட்டத்திற்கு வலுச்சேர்த்திருந்தார். இதன்பின்னர் ஓயாதஅலைகள் நடவடிக்கையில் முல்லைத்தீவுப் படைத்தளம் வெற்றிகொள்ளப்பட்டமை, ஓயாதஅலைகள் மூன்றில் வடமராட்சிக்கிழக்குப் பிரதேச மீட்புச்சமர், குடாரப்புதரையிறக்கம, தொடராக ஏற்படுகின்ற கடற்சமர்கள், ஆழ்கடல் விநியோக நடவடிக்கைகள் என அவரின் நெறிப்படுத்தல்கள் தொடர்ந்துகொண்டே சென்றன.

2002-ம்ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட சமாதானகாலத்தில் யாழ் மாவட்டத்திலுள்ள கடற்தொழிலாளர் சங்கங்கள் மற்றும், சமாசங்களின் பிரதிநிதிகளை தென்மராட்சி-பளைப்பிரதேசத்திற்கு வரவழைத்து கலந்துரையாடல்களை நடாத்தி அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும் பெற்றுக்கொடுத்தார்.; அத்துடன் முல்லைத்தீவு, வடமராட்சிக்கிழக்கு, மன்னார்மாவட்டம் ஆகிய அனைத்து கரையோரப் பிரதேசங்களிலுமுள்ள பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் தொடரான கலந்துரையாடல்களை நடாத்தி மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து அவைகளுக்கெல்லாம் சுமூகமான முறைகளில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தார்.

நித்திகைக்குளத்தில் காயப்பட்டபோது ரவையின் சிறிய பாகமொன்று அவரின் உடலில் புதைந்திருந்தது. அது உபாதைக்கு உட்படுத்தியதால் சிகிச்சைக்காக 2004-ம்ஆண்டு ஒக்டோபர்மாதம் சிங்கபபூர் நாட்டிற்குச் சென்று சிகிச்சைபெற்று ஒரு வாரத்தில் நாடு திரும்பியிருந்தார். 2004-ம் ஆண்டு டிசம்பர்மாதம் ஏற்பட்ட சுனாமி எனும் ஆழிப்பேரலை அனர்த்தத்தில் முல்லைத்தீவு மற்றும் வடமராட்சிக்கிழக்குப் பிரதேசங்கள் நிறையவே அழிவுகளைச் சந்தித்திருந்தன. அந்தச் சந்தர்ப்பத்தில் குறிப்பாக முல்லைத்தீவில் சூசை அவர்கள் நேரடியாக களத்தில் நின்று மீட்புப்பணிகளை நெறிப்படுத்தினார். சுனாமிஅனர்த்தம் ஏற்பட்டு தொடராக மூன்று மாதங்களுக்கு மேலாக முல்லைத்தீவிலும் வடமராட்சிக்கிழக்கிலும் ஒவ்வொருவாரமும் பொதுமக்களுடனான கலந்துரையாடல்களை நடாத்தி சுனாமி மீளகட்டுமானப்பணிகளை நெறிப்படுத்துவதில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தினார்.

2006-ம்ஆண்டு நடுப்பகுதியில் இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் போர் தொடங்கியபோது படையியல் ரீதியான நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதில் முழுக்கவனத்தையும் செலுத்தவேண்டியவராகவிருந்தார். 2007-ம்ஆண்டு யூலைமாதம் 15-ம் நாளன்று பகல்வேளையில் புதிதாக தயாரிக்கப்பட்ட படகு ஒன்றைக் கடலில் பரீட்சித்துப் பார்த்தபோது தூரதிஸ்டவசமாக ஏற்பட்ட படகுவிபத்தில் சூசை அவர்கள் கடுமையாக காயமடைந்ததோடு அவரது ஐந்து வயது நிரம்பிய மகன் சங்கரும் அவரது மெய்ப்பாதுகாவலர் லெப்ரினன்ட் சீலனும் அந்தச்சம்பவத்தில் சாவடைந்தனர்.

படுகாயமடைந்த சூசை அவர்கள் உடனடியாக புதுக்குடியிருப்பில் அமைந்திருந்த பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதனால் ஒரு மாதத்தில் அவரது உடல்நிலை ஓரளவிற்கு குணமடைந்த நிலையில் அவரது பாதுகாப்பைக் கருத்திற்கொண்டும் அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறுவதற்கு மருத்துவர்கள் அனுமதித்திருந்தனர். மருத்துவமனையிலிருந்து வெளியேறியும் அவர் தனது பிரத்தியேக முகாமிற்குத்தான் வந்தார். அங்கிருந்தவாறு கடற்புலிகளின் நடவடிக்கைகள் அனைத்தையும் நெறிப்படுத்திக்கொண்டிருந்தார்.

என்னதான் வேலைச்சுமைகள் இருந்தாலும் பொதுமக்களிடமிருந்தும் போராளிகளிடமிருந்தும் வருகின்ற கடிதங்களை உடனுக்குடன் பார்வையிட்டு அதற்கான பதில்களை சமபந்தப்பட்ட பொறுப்பாள் ஊடாக அனுப்பிவைப்பார்.

போராளிகளை பலதுறைகளிலும் பயிற்றுவித்து ஆளுமைமிக்க போராளிகளாக வளர்த்தெடுப்பதில் அவருக்கு நிகர் அவர்தான். அத்துடன் போராளிகளின் வீரச்சாவு நிகழ்வுகளில் எல்லோரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும,; வீரச்சாவு நிகழ்வுகளில் எந்தவிதமான தவறுகளும் இடம்பெறக்கூடாது என்பதில் வலுகண்டிப்பாகச் செயற்பட்டதை அவதானிக்கமுடிந்தது. மேலும் போராளிகளின் தனிப்பட்ட ஒழுக்கம் தொடர்பிலும் மிகவும் கண்டிப்பாகச் செயற்பட்டதோடு தனிப்பட்ட ஒழுக்கம் தவறியவர்கள் அவரது தண்டனைகளுக்கு உள்ளாகியிருந்ததுவும் குறிப்பிடத்தக்கது.

2009-ம்ஆண்டின் முற்பகுதிகளில் படையினரின் தாக்குதல்களில் காயமடைந்த மக்களை ஏற்றிச்செல்வதற்கும் போர்வலயத்திற்குள் சிக்குண்ட மக்களுக்கான உணவுப்பொருட்களை கொண்டுவருவதிலும் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தினர் கப்பல் சேவை மேற்கொண்டிருந்தனர். இந்த கப்பல் சேவையை வன்னிக்கு எடுப்பதில் சம்பந்தப்பட்டவர்களுடன் தொலைபேசி மூலமாகத்தொடர்பு கொண்டு கடமையான பிரயத்தனம் மேற்கொண்டார்.

வன்னியில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருந்த இனவழிப்புப்போர் தொடர்பாகவும் மக்கள்படும் துன்பங்களையும் தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு தொடர்ச்சியாக எடுத்துக்கூறி ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துவதற்காக அயராது உழைத்திருந்தார். இயக்கத்தின் எந்தவொரு செயற்பாடுகளும் பொதுமக்களை பாதிக்கக்;கூடாது என்பதில் மிகவும் குறியாக இருந்தார். போரின் இறுதிநாட்களிலும் எங்களது போராட்டம் தர்மத்துக்கான போராட்டம்.
அது நிச்சயம் வெற்றிபெறும். என்ற அசைக்கமுடியாத உறுதி அவரிடம் இருந்ததை அவதானிக்கமுடிந்தது.

2009 மேமாதம 15-ம் நாளன்றும் அவர் படையினரின் எறிகணை வீச்சில் காயமடைந்தபோதிலும் அவர் தளர்வடையவில்லை. மேமாதம் 16-ம்நாளன்று இரவு தமிழகத்திலுள்ள அரசியல் தலைவர் ஒருவருடன் தொலைபேசியில் உறுதிதளராத குரலில் வன்னியின் இறுதிநேர நிலைமைகள் தொடர்பாக அறிவித்துக்கொண்டிருந்ததை என்னால் அவதானிக்கமுடிந்தது.

மறுநாளான 17-ம் நாளன்று அதிகாலைப்பொழுதிலும் அவரது மெய்ப்பாதுகாவலர் புரட்சியின் தொலைத்தொடர்பு சாதனத்தில் அவரது கம்பீரமான கட்டளையை கேட்கமுடிந்தது. அதுதான் இறுதியாக எனது செவிகளில் கேட்ட அவரது குரலாக இருந்தது. அந்த உறுதியானகுரல் மூன்று ஆண்டுகளாகியும் எனது செவிகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றது.


தமிழீழத்திலிருந்து போராளி செங்கோ-
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment