சரத் பொன்சேகா பற்றி தொடர்ந்து கேள்வி கேட்டால்.....! – பிரட்ரிகா மீது சீறிப் பாய்ந்தார் கோத்தாபய


சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டது தொடர்பான தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் அதுபற்றித் தன்னிடம் கேள்வி கேட்க வேண்டாம் என்றும் திரும்பத் திரும்பக் கூறியுள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச,தொடர்ந்து அது பற்றிக் கேள்வி எழுப்பினால் செவ்வியை நிறுத்தி விடுவேன் என்று எச்சரித்துள்ளார். 


கொழும்பில் இருந்த வெளியாகும் ‘சண்டேலீடர்‘ வாரஏட்டின் ஆசிரியர் பிரெட்ரிகா ஜான்சுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு சீறிப் பாய்ந்துள்ளார். 


அந்தச் செவ்வியில் சரத் பொன்சேகா தொடர்பாக பிரெட்ரிகா ஜான்ஸ் எழுப்பிய கேள்விகளும், அதற்கு கோத்தாபய ராஜபக்ச வழங்கிய சீற்றமான பதில்களும் வருமாறு- 


கேள்வி - சரத் பொன்சேகாவுக்கு சிறிலங்கா அதிபர் ஏன் பொதுமன்னிப்பு வழங்கினார்? ஏன் இப்போது? 


பதில் - சரத் பொன்சேகா குறித்த எதற்கும் பதில் சொல்ல விரும்பவில்லை. சரத் பொன்சேகா பற்றிய கேள்விகள் வேண்டாம்.பிபிசி கூட கேட்டது, நான் கூறினேன் எதைப் பற்றியும் எனக்குத் தெரியாது என்று. அது என்னுடன தொடர்புடைய விடயமல்ல. 


கேள்வி - அனைத்துலக அழுத்தங்களால் தான் இது நடந்ததாக, பலர் நம்புகிறார்கள், குறிப்பாக வொசிங்டனில் இருந்து? 


பதில்- எனக்குத் தெரியாது. சிறிலங்கா அதிபரிடம் கேளுங்கள்- எனக்குத் தெரியாது. இது என்னுடன் தொடர்புடைய விடயம் அல்ல. அதுபற்றி என்னால் கருத்துக்கூற முடியாது.ஏனென்றால்,அதுபற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது.- எனக்கு அதில் அக்கறையில்லை. 


எனக்கு புனர்வாழ்வு, மீள்குடியமர்வு, பாதுகாப்பு போன்ற பரப்புகளில் கவனம் செலுத்த நிறைய வேலைகள் உள்ளன- அவற்றை நாம் முன்நகர்த்த வேண்டியுள்ளது. நிறைய அபிவிருத்தி வேலைகள் உள்ளன. இந்த தேவையற்ற மோதலுக்குள் நுழைய விரும்பவில்லை. 


கேள்வி - ஆனால், இந்தக் கேள்வியை ஒவ்வொரும் கேட்கின்றரே. இப்போது சரத் பொன்சேகாவுக்கு ஏன் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது? 


பதில் - ஒருவருமே இந்தக் கேள்விகளை எழுப்பவில்லை. ஊடகங்கள் மட்டும் தான் எழுப்புகின்றன. போருக்குப் பின்னர் எப்படி முன்னேறலாம் என்று தான் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். நான் எல்லோருக்கும், இராஜதந்திரிகளுக்கும், சொல்ல என்ன இருக்கிறது. தேவையற்ற விடயங்களில் நாம் ஏன் தலையிட வேண்டும். 


கேள்வி - நல்லது, அவர் உங்களின் முன்னாள் இராணுவத் தளபதியாக இருந்தவர். சிறையில் அடைக்கப்பட்டவர்.... 


பதில் - எனக்குத் தெரியாது. நீங்கள் சிறிலங்கா அதிபரிடம் கேளுங்கள். நான் விரும்பவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக நான் எதையும் அறியவில்லை. எனக்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன. நான் உறங்குவதில்லை என்பதை நீங்கள் பார்க்க முடியும். 


அங்கே கண்ணிவெடி அகற்றப்படுகிறது. மீள்குடியமர்வு நடக்கிறது. அங்கே பல மாற்றங்களை நாம் செய்ய வேண்டியுள்ளது. போருக்குப் பின்னர் இயல்புநிலையை உருவாக்க நாம் முயற்சிக்கிறோம்.


கேள்வி - சரி, உங்களுடன் தொடர்புடைய ஒரு விடயம் குறித்து நான் கேள்வி எழுப்ப முடியுமா? அதிபர் தேர்தல் நடந்தவுடன் சரத் பொன்சேகாவை கைது செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்தீர்கள் என்பது சரியா? பொதுமன்னிப்பு வழங்குவதற்கு ஆதரவளித்தீர்களா? ஏன்? 


பதில் - எனக்குத் தெரியாது... எனக்குத் தெரியாது. நாள் கருத்துக் கூற விரும்பவில்லை.இதனுடனேயே நிற்பீர்களாக இருந்தால், நான் செவ்வியை நிறுத்தி விடுவேன். நாம் முன்னே செல்ல வேண்டியுள்ளது.... நான் ஒரு அதிகாரி மட்டுமே. ஒரு செயலர். 


நான் நாளாந்த விவகாரங்கள் குறித்தே அதிக ஆர்வம் கொண்டுள்ளேன். நான் முழுமையாக பாதுகாப்புடன் தொடர்புடைய செயற்பாடுகளிலேயே ஈடுபட்டு வருகிறேன். 


இவ்வாறு கூறியுள்ளார் கோத்தாபய ராஜபக்ச.
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment