சர்வதேச சமூகமும், மனித உரிமைபேசும் அமைப்புகளும் மௌனித்துப் பார்த்திருக்க, சிங்களப்பேரினவாத அரசு நடாத்திய முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் வடுக்களுடன் மூன்று ஆண்டுகளைக் கடந்து நிற்கின்றோம்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை முன்னிறுத்திய நகர்வுகள், சர்வதேச தளத்தில் பிறிதொரு பரிமாணத்தில் ஈழப்போராட்டத்தைக் கொண்டு சென்று விட்டுள்ளன.
சிங்கள தேசத்தின் மீது பலம் அல்லது அழுத்தம் பிரயோகிக்காதவிடத்து, ஈழத்தமிழர்களின் உரிமையைக் கேட்க முடியாது என்ற நிலையில், சனல்-04 தொலைக்காட்சி உட்பட பலரது விடாமுயற்சிகளின் பலனாக ஜெனிவாவில் சிறிலங்கா அரசுக்கெதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது ஒரு வகையில் ஈழத்தமிழ்மக்களின் உரிமைகளை சர்வதேச அளவில் ஓரளவு நிலைபெறச் செய்வதற்கான தளத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கின்றது.
மறுவளமாக, இனவிடுதலைக்கான நகர்வுகள் என்ற அடிப்படையில் நோக்கும்போது, முள்ளிவாய்க்காலின் பின்னரான சுழலை வெல்லுதலும் மீள் எழுதலும் என்பது கடினமான காரியமாக இருப்பதாகவே உணரப்படுகின்றது.
ஏனெனில் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பிலும், தற்போது நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும், சர்வதேசத்தில் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு அப்பால், கடந்த மூன்று வருடத்தில் ஈழத்தமிழினம் தன்னை முள்ளிவாய்க்கால் பின்னடைவிலிருந்தும் அதன் அழிவிலிருந்தும் மீள் ஒழுங்குபடுத்தி அரசியல், சமூக ரீதியாக விடுதலைப்போராட்டத்தை எந்தளவிற்கு முன்னகர்த்தியுள்ளது என்பதும் பாரிய அழிவைச் சந்தித்துள்ள இனத்தின் விடுதலையை நோக்கி தனித்துவமான நிகழ்ச்சி நிரலுக்குள் ஒருமுகப்பட்டு செயற்படுகின்றதா? என்பதும் மூன்று வருடங்களைக் கடந்தும் தொடர்கின்ற கேள்விகளாகவே உள்ளன.
அதேவேளை, ஈழத்தமிழர்களைப் போரில் வெற்றிபெற்ற மனோபாங்கைக் கொண்டுள்ள சிங்களத்தின் பேரினவாத சிந்தனை, இன்று அவர்களின் தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வேரூன்றி வியாபித்து நிற்கின்றது.
பண்பாடு, கல்வி, அரசியல், பொருளாதாரம் என அனைத்து வேர்களிலும் ஊடுருவியுள்ள இனவாதம், இலங்கைத் தீவின் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வை ஆட்டிப்படைக்கும் சக்தியாக மேலும் முனைப்புப் பெற்றுள்ளது.
சிங்களப் பேரினவாதத்தின் தற்போதைய பிரமாண்டமான வளர்ச்சியும், எழுச்சியும், அம்மக்களின் சமூக எண்ணவியக்கத்தில் அது புரியும் ஆதிக்கமும், எமக்கு ஒரு யதார்த்தபூர்வமான அரசியல் உண்மையைப் பறைசாற்றுகின்றது.
அதாவது, பகை மற்றும் ஆதிக்கவெறியுடன் சிங்களப் பேரினவாதம் பூதாகரமாக வெளிப்பட்டு நிற்கையில், புலிகளின் ஆயுதப்போராட்டப் பின்னடைவை அடுத்து, ஈழத்தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்நகர்த்தும் விடயத்தை மிகவும் ஆழமாக உற்று நோக்கினாலன்றி, சுதந்திரவிடுதலை சாத்தியமற்றது என்ற அப்பட்டமான உண்மையை நிராகரிக்க முடியாது.
முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவிற்குப்பின் ஈழஅரசியல் என்பது முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலை, போர்க்குற்றங்களின் அடிப்படையிலிருந்து உருவாக்கம் பெறுகின்றது.
இதனூடாக எப்படிப்பட்ட தீர்வு கிடைக்கும். அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது தெளிவில்லாத நிலையில் ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய விடுதலைப் போராட்டத்திற்கான ஒரு நம்பிக்கையை சர்வதேசத்தில் ஏற்படுத்தியிருக்கின்றது.
இன்றைய சர்வதேச அரசியல் சூழலில் உரிமைப் போராட்டம் என்பது சர்வதேச நிகழ்ச்சி நிரலின் பின்னால் இயைந்து, இணைத்து, முன்நகர்த்திச் செல்லப்படவேண்டும் என்பது அவசியமானதே.
இருந்தாலும், சுயநலன்களின் அடிப்படையில் உருவாகும் உலக மேலாண்மை சக்திகளின் ஆதிக்க அரசியல் நோக்கத்திற்குள் ஈழத்தமிழர்களின் முள்ளிவாய்க்கால் மனித அவலம் அவசியப்பட்டது. இதன் வெளிப்பாடாகவே ஜெனிவாத் தீர்மானம் அமைகின்றது என்ற விடயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஏனெனில் வல்லாதிக்க சக்திகளில் நிகழ்ச்சி நிரலில் மகிந்தவைப் பயன்படுத்தி விடுதலைப்புலிகளை இல்லாதொழித்துவிட்டு, அங்கு தான் விரும்பும் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி, தமிழ் மக்களுக்கு ஜக்கிய இலங்கைக்குள் ஒரு தீர்வை வழங்கும் திட்டம் இருந்தது என்ற கருத்துக்களும் இருந்தன.
எனவேதான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மையப்படுத்தப்பட்ட போர்வெற்றியின் பிரதான பங்காளியான சரத் பென்சேகாவை, ஜ.தே.க கட்சி சார்பில் களமிறக்கியது. இது ஈழத்தமிழ் அரசியல் நிகழ்ச்சி நிரலில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
அதேநேரம், தாயகத்தில் ஈழத்தமிழனினத்தின் இருப்பை இல்லாதொழிக்கும் சிங்களத்தின் நீண்டகாலத் திட்டம் கனகச்சிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதை எதிர்கொண்டு தமிழினத்தின் தனித்துவமான சமூக, பொருளாதார, அரசியல் இருப்பிற்கான அடிப்படைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற யதார்த்தத்தினை இவ்வருட மேதின அறிக்கையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெளிப்படுத்திய ஆதங்கத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.
அதாவது “போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்க வேண்டும். தமிழ்த்தேசத்திற்கான சுயாதீன பொருளாதாரத்தை நாமே கட்டி எழுப்புவோம். எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப சிங்கள தேசம் உதவப்போவதில்லை.
நாம் புலம்பெயர் மக்களின் உதவியுடன் எமது பொருளாதாரத்தை நாமே கட்டியெழுப்புவோம். எமது மக்களை அவரது சொந்தக்காலில் நிற்கச் செய்வோம் என்பதுடன் சிங்களம் அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர் தேசத்தில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், கடந்தகாலத்தில் நடைபெற்றதைப்போன்று எதிர்கால சிங்களமயமாக்கல் நடவடிக்கைகளை மையப்படுத்திச் செல்கின்றன” என்று கூறப்பட்டுள்ளது.
எனவே தாயகத்தின் கள யதார்த்தத்தையும் புரிந்து கொண்ட அரசியல் நகர்வுப்பாதையே ஈழத்தமிழினத்தின் இருப்பிற்கான அடிப்படையாக அமையும். சர்வதேச நிகழ்ச்சி நிரலின் இறுதி அடைவிடமும் அதற்காக எடுக்கும் காலமும் வரையறுக்க முடியாதவை. ஆனால் அதற்கு நீண்டகாலம் எடுக்கும் என்பது மட்டும் வெளிப்படையானது.
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் தீவிரம் பெற்ற சிறிலங்கா அரசின் கொள்கைகளில் முதன்மைத் தந்திரோபாயங்களாக அமைவது ஈழத்தமிழினத்தின் இருப்பிற்கான அடிப்படைகளை இல்லாதொழித்து, தன்னாட்சிக் கோட்பாட்டிற்கான மூலகாரணிகளை இல்லாது ஒழிப்பதற்கான செயற்பாடுகளை பலமுனைகளில் பல வடிவங்களில் செய்துகொண்டு வருகின்றது.
வடக்கு, கிழக்கை தொடர் இராணுவ பிரசன்னத்திற்குள் வைத்துக்கொண்டு, குடியேற்றம், மறைமுக இனஅழிப்பு, இன விகிதாசாரமற்றத்தை ஏற்படுத்தல், போராட்ட சிந்தனையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்கல், பொருளாதாரத்தில் தங்குநிலையை ஏற்படுத்தல், ஆளுமையற்ற அடிமைப்பாங்குள்ள சமூகமாக ஈழத்தமிழினத்தை உருவாக்குதல் என்ற இலக்குகளில் அடிப்படையில் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது.
இதன்மூலம் தமிழினம் இயல்பாக தனக்கான தனித்துவத்தை இழந்து போகும். அதேவேளை, தாயகத்தில் அரசியல் பெரும்பான்மையைக் கொண்டுள்ள கூட்டமைப்பு ஈழத்தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை பலவீனப்படுத்தாமல், காத்திரமாக தனது அரசியல் முன்னெடுப்புக்களை செய்யவில்லை என்ற பலத்த விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கின்றது.
முள்ளிவாய்க்கால் வரை புலிகளின் அரசியல் செல்வாக்கினுள் தனக்கான இருப்பை அமைத்துக்கொண்ட கூட்டமைப்பு, கடந்த மூன்று வருடங்களாக பிராந்திய, சர்வதேச அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் பயணிப்பது மட்டுமல்ல தமிழ்மக்களின் அரசியல் அடிப்படைகளை கைவிட்டுவிட்டது என்ற சந்தேகங்களும் கருத்துக்களும் உருவாகும் வகையில் தனது கருத்துக்களையும் முன்வைக்கின்றது.
தனித்துவமான அரசியல் தளத்தில் இயங்காத அதன் தலைமைத்துவம், சுய அடையாளத்தையும் சுயமரியாதையும் இழந்து தனக்கான அரசியல் நகர்வை செய்யப்போகின்றதா? அல்லது ஈழத்தமிழர்களின் அடிப்படைகளில் இருந்து கொண்டு அங்கு செய்யவேண்டிய அரசியல் அடைவுகளிற்காக பிராந்திய, சர்வதேச அரசியலை தனக்கு வாய்ப்பாக பயன்படுத்தப் போகின்றதா? அல்லது அவர்களின் நிகழ்ச்சி நிரல்களிற்குள் இயங்கும் ஒரு தரப்பாக செயற்படப்போகின்றதா? என்பது கவனத்துக்குரியதாக உள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்துடன் ஆயுதப் போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியில் இனத்தின் இருப்பை தக்கவைப்பதற்கானதும் விடுதலைக்கானதுமான அனைத்து விடயங்களும் அது கொண்டிருந்தது. அப்போது கணிசமான அளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்த சிங்களத்தின் தமிழர் தாயகச் சிதைவுத் தந்திரோபாயங்கள் தற்போது மிகவும் மூர்க்கத்தனமாக முன்னெடுக்கப்படுகின்றன.
இதையே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் சுட்டிக்காட்டியிருந்தது. ஆனால், தமிழ் மக்களின் இருப்பிற்கான அடிப்படைகளை அழிவுக்குள்ளாக்கும் இச்செயற்திட்டங்களை எதிர் கொள்வதற்கான வேலைகளை ஈழத்தமிழினம் செய்கின்றதா?
அரசியல் அடைவிற்கான அல்லது சர்வதேச தலையீட்டிற்கான வாய்ப்பு ஏற்படும் காலப்பகுதிக்குள் தாயகத்தில் வாழும் ஈழத்தமிழினம் தனது சுயத்தை தக்கவைக்குமா? கல்வியில், பொருளாதாரத்தில், இனவிகிதத்தில், கலாச்சாரத்தில், அடிப்படை வாழ்வியலில் பொருளாதாரத்தில் தம்மை சுயமாக நிலை நிறுத்துமா?
சிங்களத்தால் திட்டமிட்டு, மௌனமான நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனப்படுகொலைக்குள் தார்மீக உதவியற்ற, பலவீனமான நிலையில் எவ்வாறு தாயகத்தில் தமிழினம் தன்னை தக்கவைக்க முடியும்? அல்லது அதற்காக பாடுபடும்? என்ற கேள்விகள் மூன்று ஆண்டுகள் கடந்தும் விடையின்றித் தொடர்வது வேதனையானது.
எதிர்கால அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தில் சர்வதேசத்தின் பின்னால் ஒடுவது என்ற தீர்மானத்தில் மட்டும் தனித்து செயற்பட முடியுமா?. இது புலம்பெயர் தேசத்தில் முன்னெடுக்க வேண்டிய பிரதான பணியாகும் என்பதை மறுப்பதற்கில்லை.
அதேவேளை, சர்வதேசத் தலையீடு வரும்வரை, நாம் நீண்டகாலப் போரினால் பாதிக்கப்பட்ட தாயகத்து சமூகத்தின் சமூக, அரசியல், பொருளாதார இருப்பை தக்கவைக்கும் முயற்சிகளை “சர்வதேச தலையீடு வரும் வரை பொறுமைகாப்போம்” என்ற தீர்மானத்திற்குள் அப்படியே விட்டுவிடமுடியுமா?
மூன்று வருடங்களைக் கடந்தும் ஒரு அரசியல் வெளியில் நிர்க்கதியற்றுப் பயணிக்கும் ஒரு நிலையில், தமிழர்களை கையேந்தும் சமூகமாக உருவாக்க சிங்களம் திட்டமிட்டு மேற்கொள்ளும் செயற்திட்டங்களை எவ்வளவு காலம் மௌனித்துப் பார்க்கமுடியும்.
எதிர்காலத்திலும் இனவிடுதலையை தாங்கும் சமூகமாக இருக்கும் தாயகத்து மக்களுக்கு தற்போது நடைபெறும் நிகழ்ச்சிகள் எல்லாமே அனுபவங்களாகப் பதியப்படுகின்றன. எதிர்காலத்தில் அரசியல், சமூகம் தொடர்பான விடயங்களில் அவர்கள் தீர்மானம் எடுக்கும் போது தற்போதைய சம்பவங்களின் தாக்கத்தின் பிரதிபலிப்பும் இருக்கும் என்பது கவனத்திற்குரியது.
எனவே ஈழத்தமிழ் மக்களிற்கான பலம் சுயமாக கட்டியெழுப்பப்படும் வரை அந்த சுயபலத்தை தோளில் சுமக்க வேண்டிய மக்கள் சமூகத்தின் பலமாக நின்று, அவர்களை வலிமையான சமூகமாக உயர்த்திவிடுதல் என்பது தற்போதைய இடைமாறு காலத்தில் அவசியமாகின்றது.
ஏனெனில் இன்றும் பொருளாதார உதவிகளின்றி பசி, பட்டினி, தற்கொலை மற்றும் வாழ்வாதாரம் ஆக்கப்படும் பாலியல் தொழில் என அவலங்களின் மத்தியில் எமது இனம் தவித்துக் கொண்டிருக்கின்றது. உயிர்வாழ்வதற்காக எதையும் இழக்கத் தயாரான ஒரு சமூகமாக எமது சமூகம் மாற்றங்கண்டு வருவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு பல வகைகளில் நெருக்கடிக்குள் வாழ்கின்ற எமது சமூகத்தை எப்படி கட்டமைக்கப் போகின்றோம்?. மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தொடரும் கேள்விகளுக்கு உறுதியான பதில் கிடைக்கப்பெற்றால் மட்டுமே ஈழத்தமிழினத்தின் இருப்பு இலங்கைத்தீவில் உறுதிப்படுத்தப்படும்.
இத்தனை வருடங்களாக ஈழத்தமிழினம் சுமக்கும் அவலங்களுக்கு ஒரு விடிவு வேண்டும். அர்ப்பணிப்புக்களுக்கும் தியாகங்களுக்கும் அர்த்தம் வேண்டும். கோரிக்கைகளுக்கு நியாயம் வேண்டும். எமக்கான கடமையின் அவசியத்தையும் அவசரத்தையும் மீண்டும் ஒருமுறை சொல்லிச் செல்கின்றது முள்ளிவாய்க்காலின் மூன்றாம் வருடம்.
அபிஷேகா
அபிஷேகா
0 கருத்துரைகள் :
Post a Comment