பொன்சேகாவால் ஆவதென்ன ?


ராஜபக்ஷவுக்கு எதிரானவர் என்பதால் மட்டுமே ஒருவர் தமிழர்களுக்கு ஆதரவானவர் ஆகிவிட முடியுமா ? முடியாதல்லவா? ஆனால் சரத் பொன்சேகா விடயத்தில் மட்டும் இப்படி யாரும் யோசிக்க வில்லை. இப்போது ராஜபக்ஷவுக்கும் பொன்சேகாவுக்கும் இடையேயான மோதல் நாடகத்துக்கு ஒரு வழியாக  சுபம் போடப்பட்டிருக்கும் வேளையில், இலங்கையின் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவராகி விட்டார் அவர். அதாவது யுத்தத்தை இறுதிவரை முன்னின்று நடத்தி எல்லா வகையான மனித உரிமை மீறல்களையும் செய்த பொன்சேகா , இப்போது தியாகி அளவுக்குச் சித்திரிக்கப் படுகிறார்.


தமிழர் பகுதியைச் சுடுகாடாக மாற்றிய பெருமைக்குரிய இவரைத்தான் அதிபர் தேர்தலில் சில தமிழ் அமைப்புகள் ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தன என்பதையும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

கடைசி நாள்வரை யுத்தகளத்தில் தமிழர்களை வதை செய்து விட்டு திடீரென ராஜபக்ஷவுக்கு எதிராகத் திரும்பி, கொலைகளுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று காட்டிக் கொள்ள முற்பட்டவர் பொன்சேகா. கோதபாயவும்  பிறரும் உத்தரவிட்டதால் தான் சரணடைய வந்தவர்களை இராணுவத்தினர்  கொன்றார்கள் என்று கூறி தப்பிக்க முயன்றார். இதையெல்லாம் தமிழர்கள் நம்பினார்களோ தெரியாது. ஆனால் அரசியல் கட்சிகள் நம்பின. 

ராஜபக்ஷவை பொன்சேகா ஏன் எதிர்த்தார்?  ராஜபக்ஷ சகோதரர்கள் மீது பொன்சேகாவுக்கு என்ன காழ்ப்பு? பொன்சேகா அதிபராகியிருந்தால் தமிழர்களுக்கு என்ன செய்திருக்க முடியும்? பொன்சேகா சிறையில் இருந்த போது கருணை வேண்டுமா என ராஜபக்ஷ அடிக்கடி கேட்டுக் கொண்டது ஏன்? இதில் எந்தக் கேள்விக்கும் உறுதியான பதில் தெரியாமல் ஒருவித உத்தேசக்  கணிப்பில்தான் பொன்சேகாவுக்கு தமிழ் இயக்கங்கள் ஆதரவளித்தன.

தங்களது  கோபத்தால் பொன்சேகாவை பொசுக்க வேண்டியவர்கள் கூட அவர் அதிபரானால் தமிழினத்துக்கு மறுவாழ்வு கிடைத்து விடும் என்று நம்பும் அற்ப நிலை ஏற்பட்டது. அரசியல் தந்திரோபாயம் மக்களைப் பாதுகாக்கும் அக்கறையில் எடுக்கப்படும் நடவடிக்கை என்றெல்லாம் நியாயப்படுத்தினாலும் கூட பொன்சேகாவை ஆதரித்தது அருவருக்கத்தக்க நிலை என்பது எல்லாத் தமிழர்களின் மனச்சாட்சிக்கும் தெரியும்.

நாட்டைக் காட்டிக் கொடுக்கத் துணிந்தார் என்று யார் மீது குற்றம் சாட்டினார்களோ  அதே பொன்சேகாவை விடுவிப்பதற்கு ராஜபக்ஷ குடும்பம் ஓடோடி வருகிறது. முன்னர் ராஜபக்ஷ கேட்டுக் கொண்டது போல பொன்சேகாவோ அவரது குடும்பத்தினரோ கருணை கோராத போது வலியவந்து விடுவிப்பதற்குப் பின்னணியில் அமெரிக்காவின் அழுத்தமோ, வேறு எதுவோ இருந்து விட்டுப் போகட்டும், ஆனால், பொன்சேகாவுக்கும் ராஜபக்ஷவுக்கும் இடையே எப்போதும் ஒரு பிணைப்பு இருந்து வருகின்றது என்பது மட்டும் உண்மை.

யுத்தத்தில் உறவுகளை இழந்தவர்களால் பலவிடயங்களில் உறுதியான முடிவெடுக்க முடியவில்லை. ராஜபக்ஷ அசையும் தொடரும் இன அழிப்பு நடவடிக்கைகளையும் எப்படி அணுகுவது என்பதில் கூட ஒருமித்த கருத்து இல்லை. அவ்வளவு ஏன், பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இல்லை இலங்கை அரசு கூறுவது போல் நந்திக்கடல் பகுதியில் கிடைத்தது அவரது உடல்தானா என்கிற குழப்பத்துக்கே இன்னமும் விடை கிடைக்க வில்லை.  இறந்து விட்டார் என்று அஞ்சலி செலுத்தவும் முடியாமல். உயிருடன் இருக்கிறார் என்று நம்பிக்கை வைக்கவும் முடியாமல் தமிழர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பக்கம் போர்க்குற்றங்களுக்காக ராஜபக்ஷவையும் அவரது சகோதரர்களையும் சர்வதேச நீதிமன்றத்தில்  நிறுத்த வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர் அமைப்புகள் போராடி வருகின்றன. இன்னொரு பக்கம் இலங்கையில் தமிழர்களுக்கு இந்தியா சார்பில் குடியிருப்புகள் கட்டித் தரப்படுகின்றன. வீட்டுச் சாவிகளை மகிழ்ச்சியுடன் பெறும் தமிழ்ப் பெண்களின் படங்கள் ஊடகங்களில் பிரசுரமாகின்றன. “ மேற் கூரை இன்னும் உயரமாக இருக்க வேண்டும், புகை போக்கி பெரிதாக அமைக்க வேண்டும்” என்றும் அவர்கள் கேட்டதாக செய்திகள் வெளியாகின்றன. இதையெல்லாம் பார்த்தால் நிவாரணப் பணிகள் முக்கியமா, நீதி பெறுவது முக்கியமா என்று குழப்பம் எழுந்து விடுகிறது.

சுஷ்மா ஸ்வராஜ் களுத்துறைக்குப் போய் இந்தியாவின் தொழில் நுட்பக் கட்டமைப்பில்  உருவான ரயில் சேவையை தொடக்கி வைக்கிறார், கூடவே “இங்கு யாரும் தனி ஈழம் கேட்கவில்லை” என்றும் கூறுகிறார். உடன் சென்ற தமிழ்த் தலைவர்களும் “ஆமாம்” என்கின்றனர். சிலநாட்கள் வரை சுஷ்மாவின் நிலைப்பாட்டைத் திட்டித் தீர்த்த ஊடகங்கள், பிறகு “ அளுத்கம  களுத்துறை இடையே ரயில்  பாலங்கள் புனரமைக்கப்படுவதால் சில நாட்கள் ரயில்கள் இயங்காது” என்று சேவைச் செய்தி வாசிக்கக் கிளம்பி விடுகின்றன.
“இலங்கையில் உள்ள தமிழர்களே ஈழம் கேட்காத போது” என்கிற வாதம்  தமிழர்கள் மத்தியில் நுழைந்து விடுகின்றது. இப்போதைக்கு தனி ஈழம் தேவையா என்ற கேள்வி முன்வைக்கப் படுகின்றது.

ஏற்கனவே இருக்கும் தடுமாற்றங்ளுக்கு மத்தியில் யுத்தத்தில் கொன்றது போக எஞ்சியிருந்த தமிழர்களின் வாக்குகளைப் பெற்ற பொன்சேகா இப்போது விடுதலையாகிறார். இவர் ரணிலுடன் சேர்ந்து புதிய அரசியல் அவதாரம்  எடுக்கலாம். அல்லது ராஜபக்ஷடன் போய் ஒட்டிக் கொள்ளலாம். ஒரு வேளை ராஜபக்ஷவின் மோசடிகளை அம்பலப்படுத்துவேன் என்று கூட சூளுரைக்கலாம். என்னவாக உருவெடுத்தாலும், தமிழர்களைக் கொன்றொழித்த அவரே, ஐ.நா. விலும் சர்வதேச நீதிமன்றத்திலும் ராஜபக்ஷவுக்கு எதிராக நின்று நீதியைப் பெற்றுத் தருவார் என்று மட்டும் எண்ணிவிடக் கூடாது. 

ராஜபக்ஷவை எதிர்த்தாலும், எதிர்க்காவிட்டாலும் மே 18 என்பது பொன்சேகாவுக்கு வெற்றிநாள். தமிழர்களுக்கு அதுவே இனப்படுகொலை நாள். இந்தப் புரிதல் இல்லாமல் தமிழர்களின் இரத்தக்கறை படிந்த அவரது கரங்களைப் பற்றிக் கொண்டு நீதியைத் தேடிச் செல்வது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களுக்குச் செய்யும் துரோகமாகும்.

புளியங்குடி பூலியன்
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment