20 ஆம் நூற்றாண்டின் முதற்கொண்டே இந்து சமுத்திரம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவந்திருக்கின்றது. இருப்பினும் 21 ஆம் நூற்றாண்டில் அதன் முக்கியத்துவம் பன்மடங்காக அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக இந்தியாவும், சீனாவும் இந்து சமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்தி, தம் நலன் சார்ந்த போட்டியிலீடுபடுகின்றன. இந்து சமுத்திரத்தில் உள்ள பல நாடுகளில், சீனா தன் துறைமுகங்களை மிகத் தீவிரமாக அமைத்து வருகின்றது. அதன் மூலம் அதன் கடற்படை இந்துப் பிராந்தியத்தில் படிப்படியாக விஸ்தரிக்கப்படுகின்றது.
இந்தியா, சீனாவை இந்து சமுத்திரத்தில் தோற்கடித்து அதன் கடற்படைப் பிரசன்னத்தினை இழக்கச் செய்ய முயல்கின்றது. இதற்கு இந்தியாவிற்கு அமெரிக்கா பூரண ஒத்துழைப்பும் உள்ளது. இருப்பினும் சீனாவின் செல்வாக்கை இரு நாடுகளாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
உலகில் மூன்றாவது பெரிய நீர்ப்பகுதியான இந்து சமுத்திரம் 47 கடற்கரையோரங்களைக் கொண்ட நாடுகளை உள்ளடக்கியுள்ளது. வங்களா விரிகுடா, அராபியக் கடல், மலாக்கா தொடுகடல் என்பன இந்து சமுத்திரத்தின் பிரதான கடற்பகுதிகளாகும்.
டிக்கோயா காசியோ, இலங்கை, அந்தமான் தீவுகள், மொரிசீயஸ் என்பன இந்து சமுத்திரத்தின் குறிப்பிடத்தக்க தீவுப் பகுதிகளாக காணப்படுகின்றன.இந்தத் தீவுகள் புவிசார் அரசியலில் கேந்திர முக்கியத்துவமிக்கவைகளாகவே எப்போதும் இருந்து வருகின்றன.
சீனா மற்றும் இந்தியா ஆகிய ஆசிய வல் லரசுகளின் பார்வையில் இந்தக் கடல் பிராந் தியமும் அதனைச் சூழ்ந்த நாடுகளும் வணிக ரீதியில் முக்கியமானவை. அதற்கடுத்ததாகவே தம் பாதுகாப்புக்கு இந்தக் கடலைப் பயன்படுத்துவது பற்றி இரு நாடுகளும் சிந்திக்கின்றன.
சீனா பாரசீக வளைகுடாவிலிருந்து போர்முஸ் நீரினையினூடாக 80% மான எண்ணெயினை கப்பல் மூலம் தனது நாட்டுக்கு எடுத்துச் செல்கின்றது. அத்தோடு தனது 85% மான உற்பத்திகளை இந்துசமுத் திரத்தினூடாகவே சீனா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் செல்கின்றது. மறுபுறம் இந்தியா தனது 60% மான எண்ணெய்த் தேவையை இந்து சமுத்திரத்தினூடாகவே கப்பல் மூலம் பெற்றுக்கொள்கின்றது.
மேலும் 55% ஆன தனது உற்பத்திகளை சீனாவினைப் போன்று இந்து சமுத்திரத் தினூடாகவே மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் செல்கின்றது.
இராணுவ ரீதியில் இந்த இரு அரசுகளும் இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவத்தினை உணர்ந்த வகையிலும் செயற்பட்டு வருகின்றன.
அமெரிக்காவின் முன்னாள் கடற்படைத் தளபதியான அட்மிரல் ரி.மோகன்ஸி இன் கருத்துப்படி இந்து சமுத்திரத்தின் கடற்பலத்தில் மிகச் சக்திவாய்ந்ததாகக் காணப்படும் நாடே சர்வதேச அரசியலிலும், பொருளாதாரத்திலும் முக்கியத்துவம் பெறும் என்கின்றார்.
இதனால் தூர நோக்கில் உலக வல்லரசு என்ற அந்தஸ்தினைப் பெற முயலும் இந்த இரு அரசுகளும் தமது கடல் பலத்தினை இந்து சமுத்திரத்தில் அதிகரிக்க முயன்று வருகின்றன. சீனா தமக்கு பலமான எதிரியாக இந்தியாவைக் கருதுகின்றது.
இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருகின்றது. இதனால் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்கா இந்தியாவுடன் கூட்டாக இணைந்து இந்து சமுத்திரத்தில் சீனாவினைத் தோல்வியுறச் செய்வதனையே தற்போது இலக்காகக் கொண்டு இயங்குகின்றது. இந்த விடயத்தில் சீனாவும் இந்தியாவினை தோற்கடிப்பதன் ஊடாக அமெரிக்காவின் செல்வாக்கினை இந்தப் பிராந்தியத்தில் தோல்வியுறச் செய்யும் நோக்கிலேயே தீவிரமாகச் செயற்படுகின்றது.
உலகில் எண்ணெய் நுகரும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது. சீனா நாள்தோறும் 7.5 மில்லியன் பீப்பாய் எண்ணெய் பரல்களை பாரசீக வளைகுடாவிலிருந்து, இந்து சமுத்திரத்தினூடாக கிழக்கு சீனாவிற்கு எடுத்து வருகின்றது. மேலும் அடுத்து வருகின்ற 25 ஆண்டுகளில் 100 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எண்ணெயினை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இந்து சமுத்திரத்தினூடாக எடுத்துவர சீனா திட்ட மிட்டுள்ளது.
இதனை நோக்கமாகக் கொண்டே அது மயூரியா (பர்மா), சிட்டக்காங் (பங்களாதேசம்), அம்பாந்தோட்டை (இலங்கை), காபாடர் (பாகிஸ்தான்) போன்ற துறைமுகங்களை மிகத் தீவிரமாக அமைத்து வருகின்றது. இவற்றை அமைப்பதன் ஆரம்ப கட்டம் வர்த்தக நோக்கமாகவே காணப்படுகின்றது. இருப்பினும் இவற்றைப் பாதுகாப்பது என்ற ரீதியில் ஆங்காங்கே இந்த துறைமுகங்களுக்கு அண்மையில் சில இடங்களில் கண்காணிப்பு மையங்களை சீனா அமைத்து வருகின்றது.
இது சீனாவின் நீண்ட கால இராணுவ வியூகமே உலகில் நான்காவது எண்ணெய் நுகரும் நாடான இந்தியா அடுத்து வருகின்ற 10 ஆண்டுகளில் தனக்குத் தேவையான 90% ஆன எண்ணெயை ஈரானிடம் இருந்து பெற எண்ணியுள்ளது. இதற்கான உடன்படிக்கையினை 2009 இன் பிற்பகுதியிலே இரு நாடுகளும் கைச்சாத்திட்டுக்கொண்டன.
இந்த எண்ணெயை இந்தியாவிற்கு தருவிப்பதற்கு இந்து சமுத்திரத்தின் முக்கியத்துவத்தினை முன்கூட்டியே அறிந்து கொண்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே 2005 ஆம் ஆண்டிலிருந்து சேது சமுத்திரத் திட்டத்தின் பணிகளை நிறைவேற்றுவதில் இந்தியா தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.
மேலும் ஐரோப்பிய, மத்திய, கிழக்கு நாடுகளில் வர்த்தகத்தில் கணிசமான அளவு சந்தையைக் கைப்பற்றி உள்ள இந்தியா அந்த நாடுகளுக்குத் தமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கு கப்பல் போக்குவரத்தினையே நம்பியுள்ளது. இதன் அடிப்படையிலும் சீனாவின் கப்பல் போக்குவரத்தினைக் கண்காணிப்பதற்குமான அந்தமான், நிக்கோபார் தீவுகள், மாலே தீவுகளில், கரக்கா கொக்கோ போன்ற தீவுகளில் கடற்படை கண்காணிப்பு முகாம்களை அமைத்து வருகின்றன.
மேலும் அண்மைக் காலத்தில் தமது கடற்படையினை விஸ்தரிப்பதிலும், நவீனமயப்படுத்துவதிலும் இந்தியா ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பல தசாப்த காலமாக அமெரிக்காவின் ஆதிக்கத்தில் காணப்பட்ட இந்து சமுத்திரம் இந்தியா, சீனா ஆதிக்கத்திற்கு உட்பட ஆரம்பித்து விட்டது. இந்த இரு நாடுகளும் பொருளாதார ரீதியில் பலம் பெற ஆரம்பித்ததனால், இந்து சமுத்திரத்தினைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயல்கின்றன. இதன் வெளிப்பாடாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டி மிகவும் ஆபத்தான கட்டத்தினை எட்டியுள்ளது.
சீனா இதற்கென இந்து சமுத்திரத்தில் காணப்படுகின்ற நாடுகளுக்குப் பெரியளவில் பொருளாதார உதவிகளைச் செய்து வருகின்றது. குறிப்பாக பர்மா, பங்களாதேசம், இலங்கை, பாகிஸ்தான் போன்றவற்றில் தனது துறை முகங்களை அமைத்துள்ளது. இந்த நாடுகளில் தனது பலத்தினை தக்க வைக்க முயல் கின்றது. இந்தியா, சீனாவின் இந்த முயற்சி களை முறியடிக்க பல வழிகளிலும் முயன்று வருகின்றது. இதனால் இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து தனது கடற்படைத் தளத்தினைப் பன்மடங்காக பெருக்கி வருகின்றது. சீனாவுக்கு எதிராக இந்தியாவினை வளர்ப்பதாகவே அமெரிக்காவின் முயற்சி அமைகின்றது.
எனவே அடுத்து வருகின்ற தசாப்தங்கள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான முறுகல் உச்சமடைந்து ஆபத்தான அரசியல் பாதையில் இந்து சமுத்திரப் பிராந்தியம் பயணிக்கப் போகின்றது.
சீனாவின் பக்கம் நிற்கும் ரஷ்யாவும் இந்தியாவின் பக்கம் நிற்கும் அமெரிக்காவும் அளிக்க இருக்கின்ற ஆதரவு பலத்திலேயே இந்தக் கடல் பிராந்தியத்தின் எதிர்காலம் தங்கியிருக்கிறது.
0 கருத்துரைகள் :
Post a Comment