"வடக்கு தமிழர்களுக்கு மட்டும் சொந்தமல்ல" – தமிழரின் தாயகக் கோட்பாட்டை நிராகரிக்கிறார் கோத்தாபய


சிறிலங்காவின் வடக்குப் பகுதி தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழரின் பாரம்பரிய தாயகக் கோட்பாட்டை நிராகரிக்கும் வகையில், பிபிசி செய்தியாளர் சார்ள்ஸ் ஹெவிலண்டுக்கு அளித்த தனிப்பட்ட செவ்வியில்- அவர் சர்ச்சைக்குரிய இந்தக் கருத்துகளை தெரிவித்துள்ளார். 


சார்ல்ஸ் ஹெவிலண்ட்- அண்மையில் வடக்கு சிவில் நிர்வாகத்தில் உள்ள சில மூத்த தமிழ் அதிகாரிகள் மாற்றப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக சிங்கள அதிகாரிகள் நியமிக்கப்படுவதன் காரணம் என்ன? 


கோத்தாபய - போருக்கு முன்னர், அங்கிருந்த அதிகாரிகள் சிங்களவர்களாகத் தான் இருந்தார்கள். அதிகளவான தமிழ் அதிகாரிகள் தெற்கு மாவட்டங்களில் பணியாற்றுகின்றனர். சிங்களவர்களும் முஸ்லிம்களும் வடக்கில் பணியாற்ற முடியுமாக இருக்க வேண்டும். அது சிறிலங்காவின் ஒரு பகுதிதானே.


ஹெவிலண்ட் - வடக்குப் பிரதேசம் அங்கு செறிந்து வாழும் தமிழர்களுக்கே உரித்தான தனித்துவமான பகுதி என்று தமிழர்கள் கருதுவதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? 


கோத்தாபய - ஏன் அப்படி.. ஏன் அப்படி இருக்க வேண்டும், நீங்கள் சிறிலங்கர் என்றால், நாட்டின் எந்த இடத்திற்கும் சென்று சொத்துக்களை வாங்க முடியுமாக இருக்க வேண்டும். திட்டமிட்ட குடியேற்றத்தைப் பற்றி நான் பேசவில்லை. நாட்டின் எந்த இடத்திலும் வாழக்கூடிய சுதந்திரம் சிறிலங்கர்களுக்கு இருக்க வேண்டும் என்று தான் கூறுகிறேன். 


ஹெவிலண்ட் - வடக்கில் நடந்த இறுதிக்கட்டப் போரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா உள்ளிட்ட அமைப்புகள் கூறிவருகின்றனவே?


கோத்தாபய – அப்படியானால், நீங்கள் இதனை சிறிலங்கா இராணுவத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான போர் என்று நினைக்கிறீர்களா, அது சிறிலங்கா இராணுவத்துக்கும், இராணுவத்துக்கு சமமாக ஆயுதம் தாங்கிய தீவிரவாதக் குழுவுக்கும் இடையிலான போர். 


அண்மையில் சிறிலங்கா அரசு நடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிபரங்களின்படி, 7,400 பேரே இறுதிப் போரில் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த 7,400 பேரில் சிறியளவிலானோரே பொதுமக்கள். மற்றவர்கள் விடுதலைப் புலி உறுப்பினர்கள். இந்தக் காலத்தில் 6000 சிறிலங்காப் படையினர் உயிரிழந்துள்ளனர். 


பொதுமக்களுக்கு சில ஆட்சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம், அது நீங்கள் கூறும் எண்ணிக்கையாக இருக்க முடியாது. போரில் சட்டமீறல்கள் நடந்திருந்தால் அதற்காக தண்டனை அளிக்க முடியும், ஆனால் அதனை நீங்கள் நிரூபிக்க வேண்டும். 


அப்பாவி பொதுமக்களை கொன்ற தீவிரவாதிகளைத் தான் சிறிலங்கா இராணுவம் அழித்திருக்கிறது, இப்போது அவை எல்லாம் நிறுத்தப்பட்டு விட்டன, அது பற்றியெல்லாம் நீங்கள் பேசமாட்டீர்கள், நீங்களும் தீவிரவாதிகளின் நிலைப்பாட்டைத் தான் ஆதரிக்கிறீர்கள். 


ஹெவிலண்ட் - கடந்த ஒக்ரோபர் தொடக்கம் பெப்ரவரி மாதத்துக்கு இடையில் 32 பேர் கடத்தப்பட்டுள்ளதாக மனிதஉரிமை அமைப்புகள் கூறியுள்ளனவே? 


கோத்தாபய – தவறான குற்றச்சாட்டுகள். இவை எல்லாம் பொய்கள். சிறிலங்காவுக்கு வருவோரையும் சிறிலங்காவின் முதலீடுகளையும் தடுப்பதற்காக தவறான தகவல்களை வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளிளின் ஆதவாளர்கள் வெளியிடுகின்றனர். 


அவர்கள் சிறிலங்காவின் பெயரைக் கெடுக்க முனைகிறார்கள். காணாமற்போனவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ள பலர் குற்றவாளிகள். அவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று விட்டனர்.
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment