ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு கோடைகாலச் சுற்றுலாவை மேற்கொண்ட இந்திய மாக்ஸ்சிட் கட்சியின் மக்களவை உறுப்பினர் ரங்கராஜன் ஈழத் தமிழர்கள் தனி ஈழம் கேட்கவில்லை என்றும் ஐக்கிய இலங்கைக்குள் ஒன்றுபட்டு வாழவே விரும்புவதாக இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் தன்னிடம் சொன்னார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கைக்குப் பயணத்தை மேற்கொண்ட இந்திய மக்களவை உறுப்பினர் ரங்கராஜன் அங்கு ஈழம்தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்கள் என்ன கேட்டார்கள்? என்று சொல்லாமல் 'தனி ஈழம் கேட்கவில்லை' என்ற செய்தியோடு திரும்பியிருப்பது இந்திய எம்பிக்களது பயணத்தின் அரசியலை தெளிவாக அம்பலப்படுத்தியிருக்கிறது.
ஈழத்து மக்கள் பற்றி எதைப் பேசினாலும் தமிழீழம் என்றும் ஈழத்து மக்களைப் பற்றி யார் பேசினாலும் புலிகள் என்றும் இலங்கை அரசும் சிங்கள இனவாதிகளும் அடையாளப்படுத்தி ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினையை தொடர்ந்து நிகாரிக்கிறது. அதற்காக பிரபாகரன், புலிக்கொடி, தமிழ் ஈழம், ஈழப்போராட்டம் போன்ற சொற்களையும் இந்த அர்த்தப்படும் கருத்துக்களையும் தவிர்த்துக் கொண்டு பயணிப்போம் என்று சில புத்திஜீவிகளும் அரசியல்வாதிகளும் சொல்லுகின்றனர். இவற்றைப் பற்றி பேசுவதற்கு அவர்கள் மிகவும் பீதியடைகின்றனர். அதற்காக அவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்றும் இலங்கை வாழ் மக்கள் என்றும் என்றும் பேசுகிறார்கள். இம் மாதிரியான பீதியும் அணுகுமுறைகளும் ஈழத்து மக்களின் போராட்டத்தை முக்கியமான கட்டங்களில் வேறு திசைகளுக்கு திருப்பி பாதிப்பை உருவாக்குகின்றன.
இந்த அணுகுமுறை ஈழத் தமிழ் மக்களின் இத்தணையாண்டு போராட்டத்தை அர்தமிழக்கச் செய்வதும் தமிழ் மக்கள் செய்த தியாகங்களை சிங்கள அரசோடு இணைந்து மூடி மறைக்கும் செயற்பாடும் ஆகிறது. இலங்கை அரச சட்டங்களுக்கு உட்பட்டு பதிவு செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது இலங்கையில் இயங்கும் பிற கட்சிகள் தமிழ் ஈழம் பற்றிப் பேசவில்லை என்பதால் அது ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் கனவு இல்லை என்றாகிவிடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசவில்லை என்பதனால் முள்ளிவாய்க்கால் படுகொலை நடக்கவில்லை என்றாகிவிடாது. தமிழ் மக்களும் போராளிகளும் இத்தனை தியாகங்களை செய்தார்கள் என்பதை கூட்டமைப்பு பேசவில்லை என்பதால் அதனை மறுத்துவிட முடியுமா? இங்குதான் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் கூட்டமைப்பு முன்னெடுக்கும் அரசியல் நடவடிக்கை எத்தகைய அடையாளத்தை பெறுகிறது, பலனைத் தருகிறது என்பது தெளிவாகிறது.
முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து மூன்றாவது வருடம் நிறைவுறும் இந்தத் தருணத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்க்கையில் எந்த விதமான மாற்றங்களும் ஏற்படாமல் தொடர்ந்தும் அதே விதமான அடக்குமுறை ஆட்சிக்குள் வாழும் நிலையில் தனி ஈழம் பற்றிய சொற்போர் ஒன்று தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதிக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு செயலாளரும் இலங்கை ஜனாதிபதியின் தம்பியுமான கோத்தாபாய ராஜபக்சவுக்கும் இடையில் நடந்துள்ளது.
கலைஞர் கருணாநிதி தமீழமே தன்னுடைய நிறைவேறாத கனவு என்றும் தமிழ் ஈழம் ஒரு நாள் மலரும் என்றும் கருத்துத் தெரிவித்திருந்தார். ஐ.நா பொதுவாக்கெடுப்பு நடத்தி தமிழ் ஈழத்தை அமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனை இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சு செயலாளரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதருமான கோத்தாபாய ராஜபக்ச தமீழம் வேண்டுமானால் இந்தியாவில் அமையுங்கள் என்று சொல்லிய பொழுது இலங்கை அரசு போல இந்திய அரசு தமிழர்களை கொடுமைப்படுத்தவில்லை என்றும் அப்படி கொடுமைப்படுத்தினால் பின்னர் யோசிக்கலாம் என்றும் கருணாநிதி பதிலளித்தார். தமிழீழத்தைப் பற்றிப் பேசுபவர்கள் பயங்கரவாதிகள் என்றும் கோத்தபாய இதன் பொழுது சொல்லியிருக்கிறார்.
கலைஞர் கருணாநிதி முள்ளிவர்ய்க்கால் போர் நடந்து கொண்டிருந்த பொழுது முதல்வராக இருந்து போரைத் தடுக்கத் தவறியதுடன் மத்திய அரசு பாத்துக் கொள்ளும் என்றும் இரு நாட்டு விவகாரம் என்றும் தப்பித்துக் கொண்டார். இப்பொழுது ஆட்சியழந்த நிலையில் கருணாநிதி இப்படி தன்னுடைய அரசியலுக்காக தமிழீழம் பற்றிக் கூறிய பொழுது இதுதானே எங்களின் ஏக்கம் என்ற உணர்வு கருணாநிதியின் பேச்சை திரும்பிப் பார்க்க வைக்கிறது. தமிழர்கள் சிந்திய இரத்தமும் செய்த தியாகங்களும் வீண்போகாது என்பதை கருணாநிதி குறிப்பிட்டிருந்தாலும்கூட அது, ஒடுக்கப்படும் ஈழத்து மக்கள்Pதான உலக் தமிழர்களுடைய எதிர்பார்ப்புத்தான் என்பதை யாரும் மறுத்துவிட இயலாது.
தமிழ் ஈழம் என்று பேசியவுடன் இலங்கை அரசாங்கத்திற்கும் சிங்கள இனவாதிகளுக்கும் பெரும் பதற்றம் உருவாகிவிடுகிறது. இதுவரை காலமும் தங்களிடமிருந்த ஆட்சி அதிகாரங்கள் பறிபோய் விடுமா? என்று அவர்கள் அஞ்சுகின்றனர். ஏனெனில் இலங்கை சிங்ளவர்களின் நாடு என்று இலங்கை அரசின் நிழலில் வளரும் சிங்கள இனவாதிகள் சொல்லுகின்றனர். தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் அமைச்சர் குணசேகர அபயசேகர போன்றவர்கள் இந்தக் கருத்தின் அடிப்டையில்தான் தமிழர்களுக்கு எந்தத் தீர்வையும் வழங்கக் கூடாது என்று தொடர்ந்து கடும்போக்குடன் சொல்கின்றனர்.
ஈழப் போராட்டதிற்கான காரணங்கள் என்ன? தமிழ் மக்களை படுகொலை செய்வது, அவர்களின் உரிமையை பறிப்பது, அவர்களின் தாயகப்பரப்பை மறுப்பது, சுய அடையாளங்களை அழிப்பது என்று ஈழப் போராட்டத்திற்கான காரணங்கள் நீண்டு செல்லுகின்றன. இந்த மறுப்புக்கள் தொடர்கிற வரையும் இலங்கை சிங்களவர் நாடு என்று சொல்லப்படுகிறவரையும் தமிழர்கள் காலம் காலமாக வாழ்ந்த நாடான ஈழம் என்ற கோரிக்கை கொண்டு நகர்ந்து செல்லவே வேண்டியுள்ளது.
தமிழக தலைவர்கள் சாத்தியமற்றதை பேசுகிறார்கள் என்று கொழும்பு பத்திரிகையாளர் ஒருவர் எழுதியிருந்தார். தமிழக ஆதரவு வேறு. கருணாநிதியின் சந்தர்ப்பவாத ஆதரவு வேறு. முள்ளிவாய்க்கால் காலத்தில் துரோகம் செய்த கருணாநிதி தமீழமே எனது கனவு என்று சொல்லுவதனால் நாங்கள் தமிழீழமே எமது கனவு என்று சொல்hமல் இருக்க முடியுமா? சிங்கள இனவாதிகள் எதிர்க்கிறார்கள் என்பதற்காக தமிழீழம் என்று சொல்லாமல் விடுவதன் அர்தத்தம் என்ன? மக்களை சரணடைவு அரசியலுக்குள் இழுத்துச் செல்லுவது என்ன நியாயம்? தமீழீழத்தைக் கைவிட்டு அரசிடம் சரணடைந்தவர்களின் நிலை இப்பொழுது என்ன?
அண்மையில் தமிழகத்திற்கு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அங்கு ஒரு கூட்டத்தில் பேசிய பொழுது தமிழ் மக்களுக்கு இளைக்கப்பட்ட அநீதிகளை மூடி மறைத்துப் பேசினார். இலங்கை வாழ் தமிழ் மக்கள் என்று ஈழ மக்களை அடையாளப்படுத்திய சுமந்திரன் இலங்கையில் நடந்த அரசியல் முரண்பாடுகளைப் மேம்போக்காக பேசினார். தமிழ் இனத்தின் பேரழிவான முள்ளிவாய்க்கால் குறித்தோ தமிழ் இனத்தின் விடுதலைக்காய் போராடிய விடுதலைப் புலிகள் குறித்தோ பேசவில்லை. அவர் வேண்டுமென்றே இதனை தவிர்த்து ஈழத்து மக்களின் போராட்டத்தையும் அடையாளத்தையும் மறைத்ததுதான் அரசியலே. இத்தகையவர்கள் நம்முடைய பிரதிநிதிகளாக இருந்தால் என்ன செய்ய இயலும்? இன்றைய காலகட்டத்தில் நாங்கள் மெய்யான பிரதிநிதிகளற்றவர்களாகவே இருக்கிறோம்.
நாடு கடந்த தமிழீழ அரசு, தமிழக ஈழ ஆதரவு முதலியற்றைக் கண்டு இலங்கை அரசு அஞ்சவது போல நாமும் அஞ்சுவதன் அர்த்தம் என்ன? பணயக்கைதிகளாக அரசு மக்களை பயன்படுத்தி தமீழத்தைப் பற்றி பேசாமல் இருக்கச் சொல்லுகிறதை இவர்களும் ஏற்றுக்கொள்ளுகிறார்களா? எழுதுவதற்குப் பயமாக இருக்கிறது என்றும் பேசுவதற்குப் பயமாக இருக்கிறது என்பதனால் தனி ஈழம் வேண்டாம் என்று சொல்ல முடியாது. அது எழுத முடியாதவர்களின் பேச முடியாதவர்களின் கனவு. அதற்காக எத்தனையோ தியாகங்களின் மத்தியில் போராடியிருக்கிறோம். நம்முடைய ஜனநாயகப் போராட்டமும் அந்த தியாகங்களை அடிப்படையாகக்கொண்டே நகர வேண்டும்.
தந்திரோபாயமான முறையில் பேசுகிறோம் என்று இவர்கள் சொல்லலாம். ஆனால் ரங்கராஜன் போன்றவர்கள் இந்த தந்திரோபாயத்தை வேறு விதமாக அர்த்தப்படுத்துகிறார்கள். ரங்கராஜன் போன்றவர்கள் ஈழத்து மக்கள் தனி ஈழம் கேட்கவில்லை. மறுவாழ்வு கேட்கவில்லை என்று சொல்லுவதற்கான சூழலை உருவாக்குவது பெரும் ஆபத்தானது. இதுவே ஈழப்போராட்டத்தை பலவீனப்படுத்தும் நிலைக்கு தள்ளுகிறது. போராளிகளின் தியாகங்களையும் மக்களின் கனவுகளையும் இனப்படுகொலையையும் மூடி மறைத்து விடுகிறது. இப்படியான சூழலை உருவாக்குவதால் ஈழத்து மக்களிடமிருந்து ஜனநாயகத் தமிழ் தலைவர்களை விலகிச் செல்லுகிறார்கள்.
இலங்கை அரச சட்டத்திற்கு உட்பட்டு பதிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனி ஈழம் பற்றிப் பேசாது. முட்கம்பிச் சிறையில் இராணுவம் புடை சூழ சந்தித்த மக்கள் தனி ஈழம் கேட்க மாட்டார்கள். ஆனால் முப்பதாண்டுகாலமாக ஏன்; ஆயுதம் ஏந்தி தமிழர்கள் போராடினார்கள்? இத்தகை லட்சம் மக்கள் ஏன் கொல்லப்படட்டார்கள்? இவைகளுக்கு என்ன பின்னணி? என்பதனை ரங்கராஜன் போன்றவர்கள் தெரிந்தும் வேண்டுமென்றே மறைத்து தம்முடைய அரசியலுக்காக திட்டமிட்டு பேசுகிறார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில் சுய உரிமை தேசியம் கொண்ட ஆட்சிக்கான கொள்கையை முன்வைத்த பொழுது அதை மக்கள் வெல்லச் செய்தார்கள். ஆனால் இலங்கையின் ஜனநாயக அமைப்பின் தோல்வியினால்தான் ஆயுதப்போராட்டம் வெடித்தது. இப்பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமே அரசாங்கம் எதனையும் பேசவும் முன்வைக்கவும் தயாரில்லை. தொடர்ந்தும் ஜனநாயக வழிமுறைக்கு தோல்வியே ஏற்படுகிறது. இந்த ஜனநாயக அமைப்பு அர்த்தமற்றதாகவும் பலன் தராததாகவும் தொடர்ந்தும் இருக்கும் சூழலில் பிரச்சினைக்கான தீர்வாக ஈழமே என்பதே மீண்டும் மீண்டும் உணர்த்தப்படுகிறது.
ஈழம் என்பது பல பத்தாண்டுகளாக போராடி மாண்ட போராளிகளின் கனவு மட்டுமல்ல முப்பதமாண்டுப் போரில், வாழும் கனவோடு கொல்லப்பட்டவர்களுக்கான அஞ்சலியும் ஈழம்தான். புலிகளைப் பற்றி பேச மாட்டோம் என்பது அவர்களின் தியாகங்களை மாத்திரம் மறுக்கும் விடயமல்ல ஈழப்போராட்டத்திற்கான காரணங்களையும் மறுக்கின்ற விடயம். சிங்களப் பேரினவாதிகளின் செயற்பாடுகளையும் கொடிய இன அழிப்புப் போரையும் இனவாத உரிமை மறுப்புக் கருத்தையும் நியாயப்படுத்தும் விடயம். இதுபோல குறுகிய அரசியல் முயற்சிகளை நோக்கியும் பரீட்சாத்தமான அரசியல்களுக்காகவும் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை நகர்த்துவது மிகவும் முட்டாள்தனமானது.
இலங்கை இந்திய ஒப்பந்த்தில் இடம்பெறும் 13ஆவது திருத்ச்சட்டத்திற்கு அப்பால் மட்டுமல்ல குறைவாககூட ஒரு தீர்வை முன்வைக்க அரசு தயாராக இல்லை. இந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்க்கப்பட்டது போன்று காவல்துறை, காணி அதிகாரங்கள் கொண்ட தீர்வை வழங்க முடியாது என இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். தமிழர்கள் இழந்ததிற்கு ஈடாக செய்த தியாகங்களுக்கு ஈடாக அமைதியான வாழ்வை உரிமையை ஏற்படுத்தி அடக்குமுறையையும் ஆக்கிரமிப்பையும் அகற்ற மறுத்தால் தனி ஈழமே தீர்வு. இவற்றை செய்வதே தமிழ் ஈழம் என்று சிங்கள ஆட்சியளார்கள் நினைக்கிறார்கள்.
அதனால் இராணுவமயம், சிங்களக்குடியேற்றம், பௌத்தமயம் என்று எல்லா செயல்பாடுகளும் தமிழ் இனத்தை இல்லாமல் செய்ய மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை இல்லாமல் செய்து தமிழ் இனம் வாழ்வதற்கு தீர்வு தமிழ் ஈழம்தான் என்பதை அரசுதான் உருவாக்குகிறது. தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போரடினார்கள். இப்பொழுது அப்படிப் போராடவில்லை. ஆனால் ஆயுதம் ஏந்திப் போராடியதையும் அதற்கான காரணங்களையும் மறுக்க முடியாது. அந்தக் காரணங்கள் இப்பொழுது இன்னுமின்னும் பெருகியிருக்கின்றன. எனவே தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடியதே என்றைக்குமான சிங்கள அரசுகளுக்கு எதிரான நடவடிக்கையாகவும் ஈழத் தமிழர்களின் உலகம் நோக்கிய குரலாகவும் இருக்கும்.
உண்மையில் களைத்தவர்களும் தோற்றவர்களும் போக இளைஞர்களின், வரும் தலைமுறையின் கனவாக ஈழம் இருப்பது தவிர்க்க முடியாதது. தலைமுறைகள் மாறிக் கொண்டேயிருக்கிற நிலத்தில் எத்தனை அழிவுகளின் பின்னரும் அடக்குமுறைகளின் பின்னரும் கனவு வௌ;வேறு வடிவங்களில் புதுப்பிக்கத்தான் செய்யும். அப்படித்தான் ஈழத்தின் அரசியல் சூழலை சிங்கள ஆட்சியாளர்கள்தான் தீர்மானிக்கின்றனர். தனி ஈழம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் கோரிக்கை இல்லை. அது ஈழத் தமிழ் மக்களின் கோரிக்கையாகவும் இலங்கையில் அறுபது ஆண்டுகளுக்காக மேலாக தொடரும் இனப்பிரச்சினைக்கான தீர்வாகவும் அமைகிறது.
முள்ளிவாய்க்கால் போர் முடிந்து மூன்றாண்டுகள் முடிந்த நிலையிலும் தமிழ் மக்களின் வாழ்வில் முன்னேற்றமில்லை. எதையும் அரசாங்கம் பகிர முன்வரவில்லை. மறாக இன அழிப்பை இன்னும் இன்னும் தீவிரப்படுகிறது. இந்தத் சூழல் தொடர்கிற இக்கால கட்டத்தில் ஐ.நா பொதுவாக்கெடுப்பை நடத்தி தனி ஈழத்தை அமைப்பதுதான் சரியானது. தமிழ் இனத்திற்கு அதுவே பாதுகாப்பானது. அதுதான் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கும் போர்க்குற்றத்திற்கும் நீதியான தீர்வாகவும் அமையும்.
தீபச்செல்வன்
நம்மால் பேச முடியவில்லை. எமதுவேதனைகளை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. எம்மை சந்திக்க யாராவது வந்தால்அவர்களைச் சுற்றி ஆக்கிரமிப்பாளன்,அவனது அடிவருடித் தமிழர்கள். பாதிக்கப்பட்ட எமக்கு வாய்திறக்க வழியில்லை. வெள்ளைவான் அச்சம் துப்பாக்கிகளின் அச்சம்....இதையும் தாண்டி வாய்திறந்தால் சந்திக்கவந்தவர்கள் தமது அரசியல் சுயநலன்களுக்காக செவிடர்களாக....! இனியும் இவைகளை சகிக்கத்தான் முடியுமா? பொறுக்கத்தான் முடியுமா? இன்று நேற்றைய கனவல்ல எமது தாயகக் கனவு. அதை எவராலும் மறுக்கவோ மசுபடுத்தவோ இயலாது. நிச்சயமாக நாம் பட்ட துன்பங்கள் அனுபவித்த அவமானங்கள் வேதனைகளுக்கும் இனப்படுகொலை போர்க்குற்றத்திற்கும் தீர்வாக தமிழீழம் அமைவதே சரியான தீர்ப்பு.
ReplyDelete