இலங்கையின் தற்போதய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் 2005-ம்ஆண்டு நவம்பர் மாதத்தில் பதவியேற்றதைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக முடங்கிப்போயிருந்த, விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்குமிடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள். 2006-ம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் சுவிஸ்நாட்டின் தலைநகரான ஜெனீவாவில் மீளத்தொடங்கியிருந்தது. இந்தப்பேச்சுவார்த்தையின் போது 2002-ம் ஆண்டில் நோர்வே அரசினால் வரையப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவே ஆராயப்பட்டது. இந்த விடயங்களுக்கு அரசதரப்பு பிரதிநிதிகளால் விடுதலைப்புலிகளுக்கு குறிப்பிட்ட காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறு அரசதரப்பினரால் வழங்கப்பட்டிருந்த காலஅவகாசத்தில் உருப்படியான முன்னேற்றங்கள் எதுவும் ஏற்பட்டிராதபட்சத்திலேயே விடுதலைப்புலிகள் நான்காவது கட்ட ஈழப்போருக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை தொடங்கியிருந்தனர். அதாவது, இதற்கான தாக்குதல் அணிகளை ஒழுங்குபடுத்துதல் பயிற்சித்திட்டங்களை வழங்குதல் போன்ற வேலைத்திட்டங்களில் சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்த சூழ்நிலையில்தான் திருகோணமலையில் மாவிலாறு தண்ணீர் விநியோகத்தை விடுதலைப்புலிகள் தடுத்திருந்ததனர். இதன் விளைவாக மாவிலாற்றைக்கைப்பற்ற அரசபடையினர் மேற்கொண்டிருந்த முன்னேற்ற நடவடிக்கையினால் விடுதலைப்புலிகளுக்கும் அரசபடைத்தரப்பினருக்குமிடையிலான போர் தொடங்கியது.
இதே காலப்பகுதியில் யாழ்.குடாநாட்டின் மீதான பாரிய வலிந்த தாக்குதலொன்றை மேற்கொள்வதற்கு விடுதலைப்புலிகள் திட்டமிட்டனர். இதற்கமைவாக 11-08-2006 அன்று தளபதிகளான பிரிகேடியர் பால்ராஜ், பிரிகேடியர் தீபன் ஆகியோர்களின் வழிநடத்தலில் தாக்குதல் தொடங்கியது. முகமாலைப் பகுதியால் தரைமார்க்கமாக தாக்குதலணிகள் தாக்குதலைத் தொடுத்து முன்னேறிக்கொண்டிருக்க கிளாலி, அல்லைப்பிட்டி உட்பட யாழ்.குடாநாட்டில் ஐந்து இடங்களில் கடற்புலிகள் படகுகள் மூலமாக தாக்குதலணிகளை கொண்டுசென்று குறிப்பிட்ட நேரத்தில் தரையிறக்கம் செய்து, அந்த தாக்குதலணிகள் ஒரேநேரத்தில் பலமுனைகளில் தாக்குதலைத்தொடுத்து பிரதேசங்களை மீட்டெடுத்துக்கொண்டு செல்வதுதான் தாக்குதலின் திட்டமாகவிருந்தது.
குறிப்பிட்ட தினத்தன்று முதற்கட்டமாக முகமாலைப்பகுதியில் விடுதலைப்புலிகள் படைத்தரப்பினருக்கெதிரான தாக்குதலைத் தொடுத்தவுடனேயே குடாநாட்டுப்படையினர் உசார்நிலையடைந்துவிட்டனர். தாக்குதலணிகளை கடற்புலிகள் படகுகளில் கொண்டு சென்று குறிப்பிட்ட இடங்களில் தரையிறக்க முற்பட்டபோது கடுமையான எதிர்த்தாக்குதல் படைத்தரப்பிடமிருந்து வந்துகொண்டிருந்தது. சாதாரண ஆயுதங்கள் முதற்கொண்டு கனரகஆயுதங்கள் மற்றும, எறிகணைத் தாக்குதல்கள் வரையிலும் படையினர் தாராளமாகவே மேற்கொண்டனர்.
இந்தநிலையில் கடற்புலிகள் தாக்குதலணிகளை அல்லைப்பிட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்கு கொண்டுசென்று தரையிறக்கமுடியாத சூழ்நிலையேற்பட்டது. கிளாலியில் தரையிறக்கவேண்டிய அணிகளும் படையினரால் பலமான எதிர்த்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதால் அங்கு திட்டமிட்டபடி தரையிறக்குவதற்கான சாதகமான சூழ்நிலை இருக்கவில்லை.
இவற்றைவிட மற்றய இடங்களில் கடற்புலிகளால் குறிப்பிட்ட நேரத்திற்கு தாக்குதலணிகள் தரையிறக்கம் செய்யப்பட்டது. இவ்வாறு குறிப்பிட்ட நேரத்திற்கு தரையிறக்கம் செய்யப்பட்ட அணிகளும் படையினரின் கடுமையான எதிர்த்தாக்குதலினால் கணிசமான இழப்புக்களைச் சந்தித்தன. சண்டை தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே கணிசமான போராளிகள் வீரச்சாவடைந்தார்கள். இன்னும் பல போராளிகள் காயமடைந்தார்கள்.
அத்துடன் சமாதான காலத்தில் புதிதாக தருவிக்கப்பட்ட பெருமளவு ஆயுதங்களும் இழக்கப்பட்டன. ஆகவே, இந்த வலிந்த தாக்குதலில் விடுதலைப்புலிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்ததையடுத்து தாக்குதலணிகள் களமுனையைவிட்டு பின்வாங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதன் நிமித்தமாக தாக்குதலணிகள் களமுனையைவிட்டு பின்வாங்கியதோடு யாழ.குடாநாட்டின் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட வலிந்த தாக்குதல் நடவடிக்கை முற்றுப்பெற்றது.
இதன்பின்னர் நடந்துமுடிந்த யாழ.குடாநாட்டின் மீதான வலிந்த தாக்குதலின் பின்னடைவுகளுக்கான காரணிகளை ஆராயும் முகமாக விடுதலைப்புலிகளின் சமராய்வுமையத்தினர் தாக்குதலில் பங்கெடுத்திருந்த தளபதிகளிடத்திலும் பொறுப்பாளர்களிடத்திலும் தாக்குதல் தொடர்பான கருத்துக்களைக் கேட்டறிந்து அந்தக்கருத்துக்களை உள்ளடக்கியதான ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு அந்த அறிக்கை சமராய்வுமையத்தினரால் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிக்கையின் பிரகாரம் தலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமையில் தளபதிகள் அனைவருக்குமான ஒன்றுகூடல் ஒன்று இடம்பெற்றது. அந்த ஒன்றுகூடலின்போது தலைவர் பிரபாகரன் அவர்கள் சமராய்வு அறிக்கையை வைத்துக்கொண்டு “கடற்புலிகள் தாக்குதலணிகளை திட்டமிட்டபடி உரியநேரத்தில் தரையிறக்கம் செய்யவில்லை என அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக்குற்றச்சாட்டை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா.” என்று கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அவர்களிடம் கேட்டார். அதற்கு சிறப்புத்தளபதி சூசை அவர்கள் “அது எங்களது தவறுதான்” என்று தங்கள் பக்கத்திலுள்ள தவறை பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார்.
அதற்கடுத்த கேள்வியாக “அவ்வாறு நீங்கள் உரியநேரத்தில் அணிகளை தரையிறக்கியிருந்தாலும் அவர்கள் சண்டையிட்டு இடங்களை மீட்டுக்கொண்டு முன்னேறியிருப்பார்களா.” என தலைவர் அவர்களால் சிறப்புத்தளபதி சூசையிடம் கேட்கப்பட்டது. அதற்கு சூசைஅவர்கள் ஓரிரு இடங்களில் சரியான நேரத்திற்கு தரையிறக்கப்பட்ட அணிகளும் வெற்றிகரமான முன்நகர்வை மேற்கொள்ளவில்லை என்பதை சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்தத் தாக்குதலில் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட ஆளணி இழப்பினை ஈடுசெய்வதற்காகவும் இயக்கத்தின் பலம்மிக்க இராணுவக்கட்டமைப்பை கட்டியெழுப்புவதற்காகவும் ‘வீட்டுக்கொரு வீரர் நாட்டைக்காக்க வாரீர்’ என்ற தொனிப்பொருளுடன் ஆடசேர்ப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியிருந்தனர் விடுதலைப்புலிகள்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையினை அநேகமான பொதுமக்கள் அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு தங்களது பிள்ளைகளை தாங்களாகவே அரசியல்த்துறைச் செயலகங்களுக்கு கூட்டிவந்து போராட்டத்தில் இணைத்திருந்தனர். அதிகளவு புதிய போராளிகளின் வருகையைத் தொடர்ந்து புதிய பல அடிப்படைப்பயிற்சி முகாம்களும் தோற்றம் பெற்றன.
இவ்வாறு தோற்றம்பெற்ற அடிப்படைப்பயிற்சி முகாம்களில் புதியபோராளிகளுக்கான அடிப்படைப் பயிற்சிகள் அனைத்தும் வழங்கப்பட்டு சிறந்த போராளிகளாக புடம்போடப்பட்டார்கள். இவ்வாறாக புடம்போடப்பட்டவர்கள் இயக்கத்தின் அனைத்து தாக்குதல் படையணிகளையும் நிர்வாக அணிகளையும் அலங்கரித்திருந்ததாலும் கிழக்கு மாகாணத்தின் அநேகமான பிரதேசங்கள் படையினரின் ஆக்கிரமிப்புக்குள்ளாகியதையடுத்து கிழக்கு மாகாணத்தில் நிலைகொண்டிருந்த விடுதலைப்புலிகளின் அணிகள் வன்னிக்கு நகர்த்தப்பட்டிருந்ததாலும் வன்னியில் விடுதலைப்புலிகள் இயக்கம் ஆளணிப்பலம் பெற்றது.
இந்தக்காலப்பகுதியில்தான் மன்னாரில் மூன்று முனைகளில் அரசபடையினர் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இந்த மூன்று போர் முனைகளிலும் விடுதலைப்புலிகளின் தாக்குதலணிகள் மறிப்புச்சமரில் ஈடுபட்டிருந்தனர். கடற்புலிகள் தளம் அமைத்து கடல்வழி விநியோகத்தை மேற்கொண்டிருந்த மன்னார் மாவட்டத்திலுள்ள அரிப்பு-சிலாபத்துறைப் பிரதேசங்களும் படையினரின் ஆக்கிரமிப்புக்குள்ளாகியதாலும் விடுதலைப்புலிகளின் கப்பல்களும் இலங்கை கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்டதாலும் விடுதலைப்புலிகளின் கடல்வழி விநியோகம் முடங்கிப்போனது.
2007-ம்ஆண்டு அனுராதபுரம் வான்படைத்தளம்மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட இருமுனைத் தாக்குதலான கரும்புலித்தாக்குதல் மற்றும் வான்புலித்தாக்குதல் என்பவற்றைக் கொண்ட எல்லாளன் நடவடிக்கை திட்டமிடப்பட்ட சந்தர்ப்பத்தில் பாரியதொரு தரைவழி வலித்த தாக்குதலுக்கும் விடுதலைப்புலிகளால் திட்டமிடப்பட்டு அதற்கான தாக்குதலணிகள் தேர்வுசெய்யப்பட்டு அந்த அணிகளுக்கு தாக்குதல் நடவடிக்கைக்கான சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
அதாவது எல்லாளன் நடவடிக்கையின் மூலம் அநுராதபுரம் வான்படைத்தளத்தை தகர்த்து அந்த அதிர்ச்சியில் சிங்களதேசம் திகைத்திருக்க அதே நேரத்தில் பெருமெடுப்பிலான நிலமீட்புப் போரை நிகழ்த்திச்செல்வதுதான் விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடத்தின் திட்டமாகவிருந்தது. பின்னர் 22-10-2007அன்று திட்டமிட்டபடி எல்லாளன் நடவடிக்கை விடுதலைப்புலிகளின் சிறப்புக்கரும்புலி அணிகளாலும் வான்புலிகளாலும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதேநேரம் திட்டமிட்டிருந்த நிலமீட்புப்போரான வலிந்த தாக்குதல் திட்டம் கைவிடப்பட்டது.
அது கைவிடப்பட்டதற்கான காரணம் தலைடைப்பீடத்தைத் தவிர மற்றய போராளிகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. குறிப்பிட்ட தாக்குதலுக்கென தேர்வு செய்யப்பட்டிருந்த அணிகளும் மன்னாரில் விரிந்திருந்த போர்முனைகளுக்கு அனுப்பப்பட்டு அங்கு மறிப்புச்சமர்களில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். தேசியத்தலைவரும் தனது எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் முகமாக அரசபடையினர் பெருமெடுப்பில் முன்னெடுக்கின்ற படைநடவடிக்கைகளை முறியடிக்கக்கூடியவாறான சிறப்பு முறியடிப்புத் தாக்குதலணி ஒன்று உருவாக்கும் செயற்திட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
அதற்கமைவாக அனைத்து படையணிகளிலிருந்தும் போராளிகளைத் தேர்ந்தெடுத்து சிறப்பு அணியாக ஒருங்கிணைத்து பிரத்தியேகமான இடமொன்றில் சிறப்புக் கொமாண்டர்ஸ் பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த சூழ்நிலையில் தான் மணலாற்றில் இரண்டு முனைகளில் படையினர் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். வடபோர்முனையில் முகமாலை, கிளாலி, நாகர்கோவில் ஆகிய மூன்று களமுனைகள் மன்னாரில் மூன்று களமுனைகள் மணலாற்றில் இரண்டு களமுனைகள் என அனைத்து களமுனைகளிலும் போர்கள் விரிந்திருந்ததால் போராளிகளும் வீரத்துடனும் அர்ப்பணிப்புடனும் போரிட்டனர்.
இந்த மறிப்புச் சமர்களில் கணிசமான போராளிகள் வீரச்சாவடைந்தும் காயமடைந்தும் களமுனைகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். களமுனைகளில் இவர்களின் வெற்றிடங்களை ஈடுசெய்வதற்காக தேசியத்தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்டிருந்த சிறப்புக்கொமாண்டர்ஸ் அணியும் களமுனைகளுக்கே அனுப்பப்பட்டன. இவ்வாறு அனுப்பப்பட்ட போராளிகளும் அனேகமானோர் வீரச்சாவடைந்தனர். அத்துடன் இந்தக்காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் சமர்க்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் மாரடைப்பால் சாவடைந்தமையும் விடுதலைப்புலிகளுக்கு இராணுவரீதியாக பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது.
ஒட்டுமொத்தத்தில் தேசியத்தலைவர் அவர்களின் எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் அனைவரும் சரியானமுறையில் செயல்வடிவம் கொடுத்திருந்தால் விடுதலைப்புலிகள் அமைப்பு இவ்வாறானதொரு தூரதிஸ்டவசமான சம்பவத்தை சந்தித்திருக்க வாய்ப்பில்லை என்பது சகல விடயங்களையும் பகுப்பாய்வு செய்கையில் தெரிய வருகின்றது.
-போராளி செங்கோ-
போராளி செங்கோவிற்க்கு வணக்கம், முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கும் முன்பும்,பின்பும் தற்போதைய காலக்கட்டத்திலும்;சிங்கள உளவு அமைப்புக்களின் நடவடிக்கைகள்,ஒட்டுண்ணி குழுக்களின் நடவடிக்கைகள்; மற்றும் ஊடுருவல்கள் பற்றிய விரிவான ஆய்வறிக்கை ஒன்றை தங்களிடத்தில் எதிர்பார்க்கிறேன். நன்றி
ReplyDelete