இலங்கையின் சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைக்கு சமஷ்டிக் கோட்பாடே தீர்வாக அமையுமென்பது தனது தனிப்பட்ட கருத்தாக இருந்தது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கமானது பிரத்தியேகமான சிங்கள பௌத்த கொள்கையையே உறுதியாகப் பின்பற்றுகிறது. தமிழ் மக்களுக்கும் புலிகளுக்கும் இடையில் வேறுபாட்டை உருவாக்கவில்லை. இன நெருக்கடி தொடர்பான இந்தப் பார்வையானது யுத்தத்தின் போதான பயங்கரமான மனித உரிமை மீறல்களையும் யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நியாயபூர்வமான தீர்வை வழங்குவதற்கு மறுப்பதற்கும் அரசாங்கத்திற்கு இடத்தையும் காலத்தையும் வழங்கியுள்ளது. நியாயப்படுத்துவதற்கும் மதத்தினை பயன்படுத்துவதற்கான ஆதரவைப் பெற்றுக்கொள்ளவும் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பிரத்தியேகமான கொள்கையை பௌத்த மத குருமார் தொடரவும் சிங்கள பௌத்தக் கோட்பாடு அதிகளவு பயன்படுத்தப்படுகிறது என்றும் திருமதி குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
அரச கட்டமைப்புகளில் மதத்தை ஒருங்கிணைப்பதன் மூலம் நியாயபூர்வத்தன்மையை நாட முடியுமென்று அரசு நம்புகிறது. அரச மதத்துக்கான சிறப்புரிமையை பெற்றுக்கொள்ளாதோர் மத்தியில் ஏற்படும் அதிருப்தியும் விசனங்களும் அந்த நியாய பூர்வத்தன்மையை அழித்து நாசமாக்கிவிடும் என்பதை உணர்ந்து கொள்ளவில்லை.
பல்லின, பலமொழி, பல்மத, பல்கலாசார நாடுகளின் ஸ்திரத்தன்மைக்கும் அமைதிக்கும் மதச் சார்பின்மையும் பன்முகத் தன்மையும் மிகவும் அத்தியாவசியத் தேவைகளாகும். மற்றவர்க தொடர்பான வேறுபாட்டை நிராகரிப்பதிலும் பார்க்க “வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதன் உயர்ந்த தன்மையே சிறப்பானதாகும். சமஷ்டி அரசு மற்றும் பன்முக சமூகத்துக்கான அஸ்தீவாரமாக இதுவே அமைகிறது என்றும் திருமதி குமாரதுங்க கூறியுள்ளார்.
தெற்காசியாவின் அநேகமான மோதல்கள் முரண்பாடுகளுக்கு வறுமையும் வளங்களை உரிய முறையில் பகிர்ந்து கொள்வது தடுக்கப்பட்டமையுமே அடிப்படைக் காரணங்களாக அமைந்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சமஷ்டி, பன்முகத்தன்மை சகலரையும் உள்ளீர்த்த அபிவிருத்தி என்பனவற்றில் நாம் கண்டுகொள்ளும் சமூக ரீதியான ஒன்றிணைப்பு ஸ்திரத்தன்மை சுபீட்சமான அரசு என்பவையே இவற்றுக்கான தீர்வாக அமையும் இவற்றைத் தவிர வேறு தீர்வுகள் பற்றி எமக்கு தெரியாது என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்திருக்கிறார்.
பிரான்ஸின் பாரிஸ் விஞ்ஞான மன்றத்தில் பொதுவிவகாரங்களுக்கான முதுமாணிப் பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய உரையை கிரவுண்ட் வியூஸ் இணையத்தளத்திற்கு திருமதி குமாரதுங்க அனுப்பியுள்ளார்.
அண்மையில் தம்புள்ளயில் அமைதியீனம் ஏற்பட்டிருக்கும் நிலையில் , திருமதி குமாரதுங்கவின் “தெற்காசியாவில் அரசும் மதமும் என்ற தலைப்பில் ஆற்றிய உரையை கிரவுண்ட் வியூஸ் 29 ஏப்ரல் 2012 இல் பிரசுரித்துள்ளது. அதன் சாராம்சம் வருமாறு;
மத சார்பின்மையானது சமயத்திற்கும் அரசியலுக்கும் இடையிலான விசேடமாக மதத்திற்கும் அரசுக்கும் இடையிலான உறவை சுட்டி நிற்கிறது. அமானுஷ்ய சக்திகளின்றி சமூகங்கள் தமது வாழ்வை முன்னெடுத்துச் செல்லும் வகையில் மானிட தத்துவத்தின் வளங்களில் இருந்தே மதச் சார்பின்மை கோட்பாடு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. மத ஸ்தாபனங்களின் நேரடி தொடர்புகள் இல்லாமல் நாடும் அரசாங்கமும் நடவடிக்கைகளை முகாமைத்துவப்படுத்த முடியும் என்ற தன்மை இந்தக் கோட்பாட்டிலிருந்தே பிறந்துள்ளது. ஐரோப்பாவில் வேர்விட்ட இந்த மத சார்பின்மைக் கொள்கையானது உலகளாவிய ரீதியில் தனது செய்தியை பரப்பி வருகின்றது. தெற்காசியாவில் 20 ஆம் நூற்றாண்டிலேயே இந்தக் கோட்பாடு செல்வாக்குப் பெற்றது. 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது அரைப்பகுதியில் காலனித்துவத்திற்கு எதிரான போராட்டங்களும் அதன் விளைவாக புதிய சுதந்திர அரசுகள் உருவாகிய நிலையில் இந்தக் கோட்பாடு செல்வாக்குப்பெற்றது. மேற்குலக கருத்தீடான இந்த மத சார்பின்மையானது உலகின் பல பகுதிகளில் அரசியல் தலைவர்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்றதாக ஆழமாக வேரூன்றியது. விசேடமாக ஐரோப்பாவில் கல்வி கற்ற தெற்காசிய தலைவர்கள் மத்தியில் இது செல்வாக்குப் பெற்றதாக விளங்குகிறது. எட்டுத் தெற்காசிய நாடுகளில் ஐந்து நாடுகள், புராதன இந்தியாவின் பகுதியாகவே இருந்து வந்தன. பாரதமென்று அழைக்கப்பட்ட பண்டைய இந்தியாவில் பல்வேறு இராச்சியங்கள் மன்னர்களாலும் குறுநில மன்னர்களாலும் இளவரசர்களாலும் ஆழப்பட்டன. இந்தியாவை பிரிட்டிஷார் ஒன்றுபடுத்தும் வரை பாரதம் ஒரு தனியாட்சியாளரின் கீழ் ஒருபோதும் இருந்ததில்லை. இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய தீவு நாடுகள் மட்டுமே சுதந்திரமான தனித்தேசங்களாக இருந்தன.
சாதி, இனம், மதம் என்பனவற்றால் பிளவுபட்டுள்ள இந்தியர்களை ஒன்றுசேர்ப்பது அத்தியாவசியமான விடயமென சுதந்திர போராட்ட இயக்கத்தில் ஈடுபட்ட இந்தியத் தலைவர்கள் உணர்ந்துகொண்டனர். சகலரும் சம உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் ஒவ்வொரு சமூகமும் தத்தமது அடையாளங்களுடன் சுதந்திரமான முறையில் கருத்தை வெளிப்படுத்தும் உரிமை இருக்க வேண்டுமெனவும் உணர்ந்துகொண்ட தலைவர்கள் மதச் சார்பின்மை கோட்பாட்டிற்கு ஆதரவான கருத்தை வேரூன்றச் செய்தனர். இவர்களில் ராஜாராம் மோகன் ராய், ஜவஹர்லால் நேரு ஆகியோர் முக்கியமானவர்களாவர். இந்த இலக்கு இலகுவானதாக இருக்கவில்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியா தனியொரு மத்திய அரசின் கீழ் நிர்வகிக்கப்பட்டிருக்கவில்லை. வட இந்தியா சமஷ்டி அரசுக் கோட்டை ஏற்றுக்கொண்டது. 1928இல் மோதிலால் நேரு தலைமையிலான குழுவானது இந்தத் தீர்வை பரிந்துரை செய்திருந்தது. மத, சாதி, இன வகுப்பு வாதங்கள் நாட்டை நவீன தேசமாக மாற்றுவதென்ற தமது தொலைநோக்கிற்கு பாரிய அச்சுறுத்தல் என காந்தி, நேரு உணர்ந்துகொண்டனர். குறிப்பிட்ட மதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் ஒருங்கிணைப்பானது ஜனநாயகமற்றதென காந்தி உணர்ந்திருந்தார். இந்த உன்னதமான தலைவர்களின் தொலைநோக்கினால் இந்தியா மதச் சார்பற்ற சமஷ்டி அரசியலமைப்பை உள்ளீர்த்துக்கொண்டது.
இலங்கை
25 நூற்றாண்டுகளுக்கு மேலாக இலங்கையானது வேறுபட்ட பாதையில் பயணித்துள்ளது. கிறிஸ்துவுக்கு முன் இரண்டாம் நூற்றாண்டளவிலிருந்து அரசினால் பௌத்த மதம் உத்தியோகபூர்வமாக உள்ளீர்த்துக்கொள்ளப்பட்டது. சிங்களபௌத்த அடையாளத்தை மையப்படுத்தியதாக அரச கோட்பாடு அமைந்திருந்தது. இங்கு பௌத்தர்கள் சிங்களத்துடன் தொடர்புபடுத்தப்பட்டனர். இனமும் மதமும் தேசிய அடையாளத்துவத்தின் அங்கமாக ஒன்றிணைக்கப்பட்டன. அரசர் அல்லது ஆட்சியாளர் பௌத்தத்தின் பாதுகாவலராகக் கருதப்பட்டார்.
இலங்கையின் அரச மதம் ஸ்தாபிக்கப்பட்ட நிலையில், தென்னிந்திய இராச்சியங்களில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான பல படையெடுப்புக்களினால் ஏற்பட்ட சவால்கள் அரச மதமாக பௌத்தத்தை ஸ்திரப்படுத்துவதை விரிவுபடுத்தியது. 14 நூற்றாண்டுகளில் 52 தடவைகள் தென்னிந்திய இராச்சியங்களில் இருந்து படையெடுப்புக்கள் இடம்பெற்றிருந்தன. படையெடுப்பாளருக்கு எதிராக இன, தேசிய அடையாளத்தை வலுப்படுத்துவதாக மதம் பயன்படுத்தப்பட்டது. படையெடுப்பாளர்கள் வேறு இன, மத, சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தமையால் இது ஏற்பட்டது. 16 ஆம் நூற்றாண்டில் காலனித்துவ ஆட்சி ஏற்படும் வரை சிங்கள பௌத்த அரசு இலங்கையில் தொடர்ந்தும் ஸ்திரமாக இருந்து வந்தது. காலனித்துவ ஆட்சியில் இந்த அடையாளம் தொலைந்திருந்தது. சுதந்திரத்திற்குப் பின்னர் சிங்கள பௌத்த அடையாளம் மீண்டும் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.இந்த விடயமானது, பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களை சாராத ஏனைய குழுக்களைப் புறந்தள்ளியதாக அமைந்தது. அரசியலமைப்பானது மதச்சார்பற்றதாகவும் சிறுபான்மையினருக்கு உத்தரவாதம் அளிப்பதாகவும் ஏனைய இன, மத, சமூகங்களை பாரபட்சப்படுத்தாக ஏற்பாடுகளை க் கொண்டிராததுமாக இருந்தாலும் அனேகமான அரசாங்கங்கள் கடைப்பிடித்த நடைமுறையானது ஏனையவர்களை பல்வேறு வழிகளில் புறந்தள்ளி ஓரங்கட்டுவதாகவே அமைந்திருந்தது. பிரதானமாக கல்வி, வேலைவாய்ப்பு என்பனவற்றில் அவர்களை அந்நியப்படுத்துவதாக அமைந்தது. இந்த விடயமானது விரக்தியையும் கவலையையும் சிறுபான்மைக் குழுக்கள் மத்தியில் ஏற்படுத்தியதுடன் வன்முறைக்கும் பயங்கரவாதத்தைப் பயன்படுத்துவதற்கும் இட்டுச் சென்றது.
அரசாங்கங்கள் தீவிரவாத சிங்கள பௌத்த நோக்கங்களைக் காலத்திற்குக் காலம் ஏற்படுத்திய வந்துள்ளன. ஐம்பதுகளில் தேசிய அடையாளத்தை மீள நிலைநிறுத்துவதற்காக இந்த தீவிரவாத நடவடிக்கைகள் கைக்கொள்ளப்பட்டன. புதிய அரசை வலுப்படுத்த சிங்கள பௌத்த அடையாளம் தேவையென்ற எண்ணப்பாடு காணப்பட்டது. சகல சமூகங்களும் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் ஐக்கியத்தை ஏற்படுத்தி தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும் பார்க்க சிங்கள பௌத்த அடையாளத்தை உறுதிப்படுத்துவதே அவசியம் என்ற எண்ணப்பாடு காணப்பட்டது.
கடந்த சில வருடங்களில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்தது, பிரிவினைவாதிகள் மீதான அரசாங்கத்தின் வெற்றியானது சிங்கள பௌத்த தரிசனத்துடன் இரண்டரக் கலந்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிரான உணர்வுகள், தமிழர்களுக்கு எதிரானதாக வெற்றிகரமான முறையில் இணைக்கப்பட்டதுடன் இப்போது வெளியாள் ஒவ்வொருவருக்கும் எதிரானதாகவும் அது தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறது. சிங்கள பௌத்த அடையாளமானது உன்னதமானது எனவும் பிரத்தியேகமான நியாயபூர்வத்தைக் கொண்டது எனவும் அரசின் மீது மேலாதிக்கத்தைச் செலுத்தும் உரிமையைக் கொண்டது எனவும் இலங்கையின் அரசியல் ஸ்தாபனத்தின் அங்கம் எனவும் உருவாக்கப்படுகிறது. இதனைத் தற்போதைய தலைவர்கள் ஆழமாக முன்னெடுத்துச் செல்வதாகத் தோன்றுகிறது.
சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் இந்தியாவிலும் பார்க்க உள்நாட்டு மோதல்கள் குறைந்தளவைக் கொண்ட அனுபவங்களையே இலங்கை பெற்றிருக்கிறது. நாம் பொருளாதார ரீதியில் வலுவானவர்களாக இருந்தோம். வறுமை குறைந்தவர்களாகக் காணப்பட்டோம். ஆனால், பல்வேறு இனக் குழுக்களையும் பல்வேறு மொழிகளையும் பல மதங்களையும் கொண்டதும் இலங்கையிலும் பார்க்க 60 மடங்கு கூடிய சனத்தொகையைக் கொண்டதுமான இந்தியாவானது நவீன ஜனநாயக அரசாக வெற்றிகரமான முறையில் நிமிர்ந்து நிற்கிறது. ஆனால், இலங்கை மிகவும் சிறியதாலும் 25 வருடங்களாக மோதல்களில் அழிவைச் சந்தித்தது ஏன்? இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இந்த வித்தியாசத்தைத் தோற்றுவித்ததற்கான தன்மையானது மதச் சார்பின்மை மற்றும் சமஷ்டி அரசின் உருவாக்கம் என்பதே என்று நான் துணிச்சலுடன் கூற முடியும். அரசாங்கங்கள் சிலவும் தலைவர்களும் ஒன்றுபட்ட சமஷ்டி மத சார்பற்ற அரசைக் கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டன. தீவிரவாதக் குழுக்கள் அல்லது அரசியல் தந்திரோபாயங்கள் என்பனவற்றினால் ஏற்பட்ட எதிர்ப்தே இதற்குக் காரணமாகும். ஒரு அரசியல் குழுவொன்று மற்றொரு குழுவிலும் பார்க் அனுகூலத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இவை மேற்கொள்ளப்பட்டன. நாட்டின் தலைவராக இருந்த எனது தனிப்பட்ட அனுபவத்தை இந்தக் கட்டத்தில் நான்விபரிக்க விரும்புகிறேன். இலங்கையின் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைக்கு சமஷ்டியும் சகல தரப்பையும் உள்வாங்கும் கோட்பாடுமே தேவையென்பது எனது தனிப்பட்ட கருத்தாக இருந்தது. அரசாங்கம் பிரத்தியேகமாக சிங்கள பௌத்த கோட்பாட்டைக் கொண்டிருக்க வேண்டுமென்ற நிலைப்பாடு கொண்டவர்களில் பெரும்பான்மையினர் ஆளும் மேற்காலாமைச் சேர்ந்த சிறிய சிறுபான்மையினர் என்பதும் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடன் நெருக்கமான பிணைப்பைக் கொண்ட மதகுருமார், தொழில்சார் நிபுணர்கள், வர்த்தகர்கள், ஆகியோரும் என்பதை நான் உறுதிப்படுத்தியிருந்தேன். பொதுமக்களில் பெரும்பான்மையினர் எந்தவொரு தீவிரவாத அரசியல் எண்ணப்பாட்டையும் கருத்துக்களையும் கொண்டவர்களாக இருந்திருக்கவில்லை. எனது ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின் பிரகாரம் பெரும்பான்மையான மக்கள் சமாதானத்தையே விரும்பினர். அத்துடன், அதிகாரப் பகிர்விற்கு ஆதரவானவர்கள் 68 சதவீதமானவர்களாக இருந்துள்ளனர். இலங்கை மக்களின் தெரிவுகளை வடிவமைப்பதற்கு அரசாங்கத்தின் தலைவர்களின் தொலைநோக்கும் செயற்பாடுகளுமே முக்கிய கருவியாக உள்ளது. தற்போதைய அரசாங்கமானது சிங்கள பௌத்த தனித்துவக் கொள்கையைத் தீர்க்கமான முறையில் பின்பற்றுகிறது. தமிழ்ப் பொதுமக்களுக்கும் புலிப் பயங்கரவாதிகளுக்கும் இடையில் எந்தவொரு வித்தியாசத்தையும் உருவாக்காத கொள்கையைப் பின்பற்றுகிறது.
தினக்குரல்
0 கருத்துரைகள் :
Post a Comment