அடிபட்ட பாம்பாகவே சரத் பொன்சேகா வெளியே வந்துள்ளதால் விரைவில் சூடு பறக்கப் போகும் அரசியல் களம்......?


முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சுமார் 27 மாதகால சிறைவாழ்வில் இருந்து மீண்டு வெளியே வந்துள்ளார். இவரை விடுவிப்பதற்கு பிடிவாதமாக மறுத்து வந்த அரசாங்கம் இப்போது, அவரை விடுவிப்பதில் அதீத அக்கறை காட்டியது பலரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.


2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு, பெப்ரவரி 08 ஆம் திகதி - கைது செய்யப்பட்ட சரத் பொன்சேகா மீது அடுக்கடுக்காக வழக்குகள் போடப்பட்டன.இராணுவ நீதிமன்றத்திலும், சிவில் நீதிமன்றத்திலும் சரத் பொன்சேகாவுக்கு 30 மாதகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. வேறும் சில வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன.  இவரை எப்படியாவது விடுதலை செய்ய வைப்பதற்கு அமெரிக்கா தனிப்பட்ட ரீதியாக கடும் முயற்சிகளை மேற்கொண்டது.


சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா அல்லது அவரது குடும்பத்தினர், ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரினால் விடுதலை சாத்தியம் என்றும் அரசதரப்பில் தகவல்கள் வெளியிடப்பட்டன. ஆனால் சரத் பொன்சேகா அதற்கு உடன்பட மறுத்து விட்டார். காலில் விழுந்து பொதுமன்னிப்பு பெறமாட்டேன் என்றும், தானோ தனது குடும்பமோ பொதுமன்னிப்புக்காக அரசாங்கத்திடம் கையேந்தாது என்றும் அவர் உறுதியாக கூறியிருந்தார். சர்வதேச அழுத்தங்கள் தீவிரமடையும் போதெல்லாம், சரத் பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படலாம் என்றும், விடுதலை செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாவது வழக்கம். ஆனால் அவை எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில், சரத் பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தனிப்பட்ட ரீதியாக பேச்சுக்களை ஆரம்பித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் ரிரான் அலஸ்.அனைத்துலக அமைப்புகளும், பல்வேறு நாடுகளும் - ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் என்ற வகையில், இவரது விடுதலைக்காக குரல் கொடுத்தன. ஆனால் அரசாங்கம் அதற்கெல்லாம் மசியவேயில்லை. எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் அசைந்து கொடுப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவே இருந்து வந்தது. இதற்கிடையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலில் விழுந்தால், சரத் பொன்சேகாவுக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்று அமைச்சர்கள் சிலர் வெளிப்படையாகவே கூறிப் பார்த்தனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான இந்தப் பேச்சுக்கள் பல மாதங்களாகவே நீடித்தன. ஆனாலும் பெரியளவில் முன்னேற்றங்கள் இருக்கவில்லை. இதற்கிடையில், நன்னடத்தையுடன் சிறையில் இருப்பவர்களை முன்கூட்டியே விடுவிப்பதற்கு உள்ள விதிமுறையின் கீழ், சரத் பொன்சேகா விடுவிக்கப்படலாம் என்ற தகவல் பரவியது. அப்போதும் அவர் விடுவிக்கப்படவில்லை. சிவில் நீதிமன்றினால் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கே அது பொருந்தும் என்றும் இராணுவ நீதிமன்றினால் தண்டனை விதிக்கப்பட்ட இவருக்கு அது பொருந்தாது என்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் கூறியிருந்தார். இதனால் சரத் பொன்சேகா தண்டனைக்காலம் முடியும் வரை வெளியே வரமுடியாது என்றே கருதப்பட்டது. அனால் இந்தச் சூழலில் தான் பொன்சேகாவை விடுவிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் அவசர அவசரமாக மேற்கொள்ளத் தொடங்கியது. வொஷிங்டனில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டனைச் சந்திக்க, வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் புறப்படத் தயாரான போது இந்த முயற்சிகள் இன்னும் வேகம் பெற்றன. வெளிவகார அமைச்சர் பீரிசின் அமெரிக்கப் பயணம் கடுமையானதொன்றாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால், சரத் பொன்சேகா விடுதலை விடயத்தில் அதிக ஆர்வம் காட்டி வரும் அமெரிக்காவை சமாதானப்படுத்த, அவரை விடுவிக்கத் திட்டமிட்டது அரசாங்கம். 


கடந்த 15ஆம் திகதி 'கோத்தாவின் போர்' நூல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம், 'இந்து' செய்தியாளர் இராதாகிருஸ்ணன் பொன்சேகாவின் விடுதலை குறித்துக் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அவர், 'மத்தியஸ்தர் வெளிநாடு சென்றுள்ளதால், அவர் நாடு திரும்பியதும் விரைவில் அவரை விடுவிப்போம்' என்று கூறியிருந்தார். இந்தநிலையில் உயர்நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான ஒரு வழக்கில் பிணையில் செல்ல அனுமதி கிடைத்தது. அதேவேளை மத்தியஸ்தராக தொழிற்பட்ட டிரான் அலஸ் அவசரமாக நாடு திரும்பி, ஜனாதிபதியுடன் பேசினார். அதையடுத்து டிரான் அலஸின் இல்லத்துக்குச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அனோமா பொன்சேகாவுடன் பேசினார். இதன்போது, விடுவிக்கப்பட்ட பின்னர் சரத் பொன்சேகா, உள்நாட்டில் இருந்து நீதிமன்ற விசாரணைகளை சந்திப்பார் என்ற உறுதிமொழி பெறப்பட்டுள்ளது. இதனையடுத்து சரத் பொன்சேகாவை விடுவிப்பதற்காக அமைச்சரவையில் அனுமதியையும் பெற்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.


சரத் பொன்சேகாவை கடந்த வெள்ளியன்று நடந்த ஹிலாரி – பீரிஸ் சந்திப்புக்கு முன்னர் அல்லது, கடந்த சனியன்று நடந்த போர் வெற்றிவிழாவுக்கு முன்னதாக விடுவிப்பது தான் அரசின் திட்டமாக இருந்தது. அதற்குள் ஒரு சட்டச்சிக்கல் வந்தது. உயர்நீதிமன்றத்தில் சரத் பொன்சேகாவின் மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணையில் இருப்பதால், அந்த வழக்கு முடியும் வரை அல்லது மேல்முறையீட்டை விலக்கிக் கொள்ளும் வரை பொதுமன்னிப்பு அளிக்க முடியாது என்பதே அந்தச் சிக்கல்.  அரசாங்கம் எதிர்பார்த்தது போன்று வொஷிங்டன் சந்திப்புக்கு முன்னதாகவோ, போர் வெற்றி விழாவுக்கு முன்னதாகவே இந்த அறிவிப்பை வெளியிட முடியவில்லை. இதனால் தடைகளை நீக்க மீண்டும் அலரி மாளிகையில் அவசர சந்திப்புகள் நடந்தன. இதனடிப்படையில் சரத் பொன்சேகாவின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விலகிக் கொள்ள இணக்கம் காணப்பட்டது.இதற்கிடையில், மேல்முறையீட்டு மனுக்களை விலக்கிக் கொள்வதானாலும் கூட உடனடியாக அதைச் செய்ய முடியவில்லை.காரணம், அடுத்து வந்த சனி மற்றும் ஞாயிறு ஆகியன, விடுமுறை தினங்களாக இருந்தன. எனவே திங்கட்கிழமை வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அதைவிட இன்னொரு சிக்கல், 12ஆவது டோஹா கருத்தரங்கில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்டார் செல்ல வேண்டியிருந்தது. சனிக்கிழமை இரவு புறப்படுவதாக இருந்த நிலையில் - டிரான் அலஸ் கொடுத்த வாக்குறுதியை அடிப்படையாக வைத்து, வெள்ளிக்கிழமை இரவே விடுதலைக்கான ஆவணங்களில் கையெழுத்திட்டார்   மஹிந்த ராஜபக்ஷ. ஆனால் ஞாயிற்றுக்கிழமை தான் இந்தத் தகவல் வெளியே கசிய விடப்பட்டது.


இதன்பின்னர், திங்கட்கிழமை மருத்துவமனையில் இருந்து விடுதலையாகி, உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை விலக்கி, வெலிக்கடைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் ஒரு வழியாக விடுதலையானார் சரத் பொன்சேகா. அவர் வெளிநாடு செல்ல முடியாது. உள்நாட்டில் இருந்தபடியே வழக்குகளை சந்திக்க வேண்டும். அதே வேளை, சரத் பொன்சேகாவை வைத்து எப்படி அரசியல் நகர்வுகளை தீவிரப்படுத்தலாம் என்று, அவர் வெளியே வர முன்னரே எதிர்க்கட்சிகள் திட்டம் போடத் தொடங்கி விட்டன.

சரத் பொன்சேகாவும் அடிபட்ட பாம்பாகவே வெளியே வந்துள்ளதால், விரைவில் அரசியல் களம் சூடு பறக்கக் கூடும். இவையெல்லாம் ஒருபுறத்தில் இருக்க, அரசாங்கம் எதற்காக அவசரப்பட்டு சரத் பொன்சேகாவை விடுதலை செய்தது என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.


அதுவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே, இந்த விவகாரத்தில் அதீத அக்கறை காட்டியிருந்தார். பொன்சேகாவை விடுவிக்கக் கோரி அலரி மாளிகைக்குச் செல்ல முடியாது என்று மறுத்த அனோமாவைச் சந்திப்பதற்காக, டிரான் அலஸின் வீடு தேடிப் போயிருந்தார் ஜனாதிபதி மஹிந்ந்த ராஜபக்ஷ. இது ஒன்றும் சாதாரண விடயம் அல்ல. சரத் பொன்சேகா விடயத்தில் அரசாங்கம் திடீரெனத் தனது போக்கை மாற்றிக் கொண்டு, அவரை விடுவிப்பதில் அவசரம் காட்டியது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. 'சோழியன் குடுமி சும்மா ஆடாது' என்பது போலத் தான் இதுவும். இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் ஒன்று வெளிநாட்டு அழுத்தங்கள். குறிப்பாக அமெரிக்காவின் அழுத்தங்களுக்குப் பயந்தே அரசாங்கம் அவரை விடுதலை செய்தது என்ற கருத்து வலுவாக உள்ளது. ஆனால், உள்நாட்டு அல்லது வெளிநாட்டு அழுத்தங்களுக்குப் பயந்து சரத் பொன்சேகாவை விடுவிக்கவில்லை என்று ஜனாதிபதியின் ஊடகப்பேச்சாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அழுத்தங்கள் ஒன்றும் அரசாங்கத்துக்குப் புதியது அல்ல. சரத் பொன்சேகா கைது செய்யப்பட்ட நாள் தொடக்கம் அமெக்காவின் அழுத்தங்கள் இருந்தே வந்துள்ளன. எனவே திடீரென அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அரசாங்கம் பயந்தது என்று கூறமுடியாது. வெளிவிவகார அமைச்சர் பீரிசின் அமெரிக்கப் பயணத்தில் உள்ள நெருக்கடிகளை குறைப்பதற்கு இவரை விடுவிக்க அரசாங்கம் முடிவு செய்திருக்கலாம். ஆனால், முன்கூட்டியே திட்டமிடப்பட்டதும், உயர் மட்டத்தில் நடப்பதுமான சந்திப்புகளில் இதுபோன்ற சின்னச் சின்ன விவகாரங்களின் மூலம் மையப் பிரச்சினையை ஓரம்கட்ட முடியாது என்பது அரசாங்கத்துக்குத் தெரியாமல் இருக்காது. அதேவேளை, உள்நாட்டு அரசியல் நெருக்கடிகள் என்று கூறும் அளவுக்கும் பெரிதாக ஒன்றும் இல்லை. அப்படியானால் எதற்காக அரசாங்கம் அவசரப்பட்டது என்ற கேள்வி எழுகிறது. இந்தச் சூழலில் தான், எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்துவதற்காகவே சரத் பொன்சேகா விடுவிக்கப்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.அரசாங்கத்தின் செல்வாக்கு குறைந்து வருகிறது. இதை அரசாங்கத்தில் உள்ள அமைச்சரான ரவூப் ஹக்கீமே கூறியுள்ளார். பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அரசின் மீது இருந்த மக்களின் நம்பிக்கை உடைந்து போகத் தொடங்கியுள்ளது. இதற்குள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் விவகாரம் வேறு சிக்கலாக இருக்கிறது. அரசியல் பிரச்சினைக்கான தீர்வு, அதிகாரப்பகிர்வு என்று பல பிரச்சினைகள் தொந்தரவு கொடுக்கின்றன.


இந்தநிலையில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி மக்களின் ஆணையைப் பெற அரசாங்கம் முனையலாம் என்ற வலுவான சந்தேகம் எழுந்துள்ளது. செல்வாக்கு மோசமாக வீழ்ச்சியடைவதற்கு முன்னர் தேர்தலை நடத்தினால் தப்பிக்கலாம் என்று அரசாங்கம் திட்டமிடக் கூடும். அதன் ஒரு கட்டமாகவே, வரும் செப்ரெம்பரில் மூன்று மாகாணசபைகளுக்குத் தேர்தல் நடத்தி ஆழம் பார்க்கவும் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்த முனையும் அரசாங்கத்துக்கு, அதற்குள் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து விடுமோ என்ற பயமும் ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின்  செல்வாக்கு வீழ்ச்சி, ஆளும் கூட்டணிக் கட்சிகளை எதிரணிக்குள் கொண்டு போய் விடவும் கூடும். யாழ்ப்பாணத்தில் மேதினத்தன்று சம்பந்தனும் ரணிலும் ஒன்றிணைந்ததை அரசாங்கம் விரும்பவில்லை. இப்படியான சூழலில் சரத் பொன்சேகாவை உள்ளே அடைத்து வைத்திருப்பதை விட வெளியே விடுவது தான் இராஜதந்திரம். ஏனென்றால், அவரது விடுதலை ஏற்கனவே ஐதேகவுக்குள் இருக்கும் தலைமைத்துவப் பிரச்சினையை மேலும் தீவிரமாக்கும்.


சரத் பொன்சேகாவுக்கும் ஜேவிபிக்கும் இடையில் இப்போது உறவுகள் இல்லை. எனவே ஜனநாயக தேசிய கூட்டணியை வைத்து அவர் அரசியல் நடத்தமாட்டார். அவரை ஐதேகவுக்குள் கொண்டு வர ஏற்கனவே பேச்சுக்கள் நடத்தப்பட்டன. மீண்டும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படலாம். குறிப்பாக, ரணிலுக்கு எதிரான ஐதேகவினர், பொன்சேகாவை முன்னிலைப்படுத்தலாம். அது எதிரணிக்குள் குழப்பத்தை உருவாக்கும். அதுபோன்ற சூழல் ஏற்படுவது அரசதரப்புக்கு வாய்ப்பை ஏற்படுத்தும். இதுவே பொன்சேகா விடுதலையின் சூட்சுமம் என்கின்றனர் சில ஆய்வாளர்கள். அரசாங்கத்தின் அவசரத்தைப் பார்க்கும் போது, இந்த விடுதலையின் ஊடாக எதையோ பெற முனைகிறது என்பதை மட்டும் உணர முடிகிறது. 


வெளியே வந்துள்ள சரத் பொன்சேகா அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தப் போகிறாரா அல்லது எதிர்க்கட்சிகளை வலுவிழக்கச் செய்யப் போகிறாரா என்பதைத் தெரிந்து கொள்ள சிறிது காலம் தேவைப்படும்.


கட்டுரையாளர் கே.சஞ்சயன் இன்போ தமிழ் குழுமம்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment