போர் முடிவுக்கு வந்தவுடன் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார் - “பிரபாகரனுடன் அவரது ஈழக்கனவும் செத்து விட்டது“ என்று. அவர் இவ்வாறு கூறி மூன்றாண்டுகள் கடந்து விட்டன. ஈழக்கனவை இப்போது சாகடிப்பதில் முன்னுக்கு நிற்பவர்கள், தமிழர்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்களே என்பது தான் வேதனை. எம்மையறியாமலே தமிழீழம் பற்றிய விவாதம் மேலோங்கி வரும் போது தான் இவர்கள், இதைச் செய்யத் துணிந்துள்ளனர்.
தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகள் என்று இன்றும் நம்பிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சொல்கிறார் – “நாங்கள் ஈழத்தைக் கேட்கவில்லை, ஒன்றுபட்ட இலங்கைக்குள் கௌரவமான வாழ்வைத் தான் கேட்கிறோம்“ என்று. அதேவேளை, கூட்டமைப்பின் இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சொல்கிறார்- “தமிழ்மக்கள் ஈழம் கேட்வும் இல்லை, அதனால் கூட்டமைப்பும் ஈழத்தைக் கேட்காது” என்று.
சிங்கக்கொடிச் சர்ச்சையும் அதற்கு இவர்கள் இருவரும் கொடுத்துள்ள வியாக்கியானங்கள் குறித்த சர்ச்சைகளும் முடிந்து போவதற்குள், தமிழீழம் பற்றிய சர்ச்சையைத் தொடக்கி வைத்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்ந்து மூன்றாண்டுகள் தான் முடிந்து போயுள்ளது. கண்முன்னே நடந்த போரும் அதன் கொடூரங்களும் மனதை விட்டு அகலவில்லை. முள்ளிவாய்க்காலில் வெடித்துச் சிதறிய –கடித்துக் குதறப்பட்ட போராளிகளின் ஆன்மாக்களின் துடிப்புக் கூட இன்னமும் அடங்கவில்லை. அதற்குள் தமிழீழத்தைத் தமிழ்மக்கள் கேட்கவில்லை என்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்துள்ளனர் என்பதற்காக, கூட்டமைப்பில் உள்ள தலைவர்கள், வாய்க்கு வந்தபடியெல்லாம் தமிழர்களின் சார்பில் பேச முடியாது. கொழும்பிலும், வெளிநாடுகளிலும் பெரும்பாலான காலத்தைக் கழித்துக் கொண்டு, பொழுதுபோக்கிற்காக அரசியல் செய்ய வந்தவர்கள் என்ற குற்றச்சாட்டு ஏன் வருகிறது என்பதை இப்போது புரிந்து கொள்ள முடிகிறது.
தமிழ்மக்கள் தமிழீழம் கேட்கவில்லை என்கிறார் சுமந்திரன்.
தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைமுறைத் தலைவராக வரக்கனவு காணும் அவருக்கு, வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு என்ற கடந்த காலம் மறந்து போனதா?
அல்லது அதை அவர் குழி தோண்டிப் புதைக்கப் பார்க்கிறாரா என்று தெரியவில்லை. அது மூன்றரை தசாப்தத்துக்கு முந்திய வரலாறு என்பதால் சிலவேளை மறந்து போயிருக்கலாம். ஆனால் அதற்குப் பின்னர், 2009ம் ஆண்டு வரை தமிழர்கள் எதற்காக ஆயுதம் ஏந்திப் போராடினார்கள் என்பது கூடவா அவருக்கு மறந்திருக்கப் போகிறது. கொழும்பிலே குடியிருந்த ஒருவர் என்பதற்காக, தமிழீழம் என்ற இலக்கிற்காக தமிழர்கள் நடத்திய போராட்டத்தின் நியாயம் புரிந்திருக்காமல் போயிருக்க முடியாது. மகிந்த ராஜபக்ச மூன்றாண்டுகளுக்கு முன்னர் கூறியதற்கும் சுமந்திரன் இப்போது கூறியுள்ளதற்கும் இடையில் பெரிதான வேறுபாடு ஒன்றும் இல்லை. தமிழீழம் என்பது பிரபாகரனினதோ அவருக்குப் பின்னால் அணி திரண்டவர்களினதோ அபிலாசை மட்டும் அல்ல. அது பிரபாகரனின் கனவு என்று மகிந்த ராஜபக்ச எப்படி நினைத்தாரோ- அதுபோலத் தான் சுமந்திரனும் நினைத்துக் கொண்டிருக்கிறார் போலும்.
தலைவர் பிரபாகரனுக்குப் பின்னால், அணி திரண்ட போராளிகளும், கடைசிவரை இலட்சியத்துக்காக அவருடன் தளராமல் நின்று போராடிய மக்களும், புலம்பெயர் தமிழர்களும் தமிழீழத்தை தமது மூச்சாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதைச் சுமந்திரன் அறியாமல் போனது ஏன்?
அவ்வாறு அறிந்திருந்தால், அவர் தமிழ்மக்கள் தமிழீழத்தைக் கேட்கவில்லை என்று சுஸ்மா சுவராஜ் போலச் சொல்லியிருக்கமாட்டார்.
அதுவும் யாழ்ப்பாண மண்ணில் நின்று அவர் அவ்வாறு கூறியிருக்கமாட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழீழத்தை அடைவதற்காக உருவாக்கப்பட்டதல்ல என்பதை அறியாத யாரும் இருக்க முடியாது. அத்துடன் தமிழீழத்தை கூட்டமைப்பு பெற்றுக் கொடுக்கும் என்று நம்புவதற்கு தமிழர்கள் ஒன்றும் முட்டாள்களும் இல்லை. ஆனால் கூட்டமைப்பின் சில தலைவர்கள் தமிழர்களின் தலைவிதியைத் தாமே தீர்மானிக்கின்றவர்கள் போல நடந்து கொள்வது தவறானது. சுமந்திரனோ அல்லது சம்பந்தனோ தாம் தமிழீழத்தை வலியுறுத்தமாட்டோம் என்று ஒரு சராசரி அரசியல்வாதியாக வேண்டுமானால் சொல்லியிருக்கலாம். தமிழர்களின் பிரதிநிதியாக நின்று கொண்டு அவர்கள், தமிழ்மக்கள் தமிழீழம் கேட்கவில்லை என்று சொல்ல முடியாது. அவ்வாறு சொல்லும் அதிகாரத்தை தமிழ்மக்கள் அவர்களுக்குக் கொடுக்கவில்லை.
போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் தமிழக ஊடகம் ஒன்று தேசியத் தலைவரிடம், நீங்கள் தமிழீழத்தைக் கைவிட்டு விட்டால்?
என்று கேள்வி எழுப்பியது.
அதற்கு அவர்,
“நான் அவ்வாறு செய்தால், கூட இருக்கும் போராளிகளே எனக்குத் தண்டனை தருவார்கள்“
என்று பதிலளித்திருந்தார்.
அப்படிப்பட்டவர்களின் தியாகங்களினால் தான் கூட்டமைப்புக்கு மக்களினது அங்கீகாரம் கிடைத்தது என்பதை மறந்து போகக் கூடாது. அதுவும், தேசியப் பட்டியல் மூலம் ஆசனத்தைப் பிடித்தவருக்கு தமிழ்மக்களின் சார்பில் இவ்வாறு கூறும் அதிகாரம் கிடையாது. தமிழீழத்தைக் கேட்காமல் தான் கூட்டமைப்பு தேர்தலில் வென்றது என்கிறார் சுமந்திரன்.
அவ்வாறாயின், தமிழீழக் கோரிக்கையை நிராகரிக்கிறோம் என்று கூறி அவர்களால் வடக்கு மாகாணசபைத் தேர்தலைச் சந்திக்க முடியுமா?
அதற்குத் தான் திராணி உள்ளதா?
தமிழீழம் என்பது பெரும்பாலான தமிழர்களின் இலட்சியக் கனவாக - உயரிய அபிலாசையாக ஒவ்வொருவர் மனதிலும் உறைந்திருக்கிறது.
அதை யாராலும் உடைக்க முடியாது.
விடுதலைப் புலிகளின் போராற்றல் அழிந்த பின்னர் தேசியத் தலைவரின் மறைவின் பின்னர் இந்த இலட்சியத்தை வென்றெடுப்பதற்கான வழி வேண்டுமானால் அடைபட்டுப் போயிருக்கலாம்.
நிராந்தரமானது அல்ல.
தமிழீழத்தை அடைய வேண்டும் என்ற வெறியும் வேட்டையும் அவாவும் சுமந்திரனிடமோ, சம்பந்தனிடமோ வேண்டுமானால் இல்லாமல் போயிருக்கலாம்.
மானமுள்ள தமிழர்களிடம் அந்த நம்பிக்கையும் உறுதியும் இன்னமும் குலையாமல் உள்ளது.
இந்திய நாடாளுமன்றக் குழுவின் தலைவி சுஸ்மா சுவராஜ், புதுடெல்லியிலும் மதுரையிலும் இலங்கைத் தமிழர்கள் தமிழீழம் கேட்கவில்லை என்று கூறியுள்ளதற்குக் காரணம் சம்பந்தன் தான்.
சிங்கள அரசு நியாயமாக அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுத்தால், ஒன்றாக வாழத் தயார் என்று அவர் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.
அது தான் இராஜதந்திரம்.
ஆனால் சம்பந்தன் அவ்வாறு செய்யவில்லை.
அவர் ஒன்றாகத் தான் வாழ்வோம் என்று அடித்துச் சொல்லியுள்ளார்.
தமிழ் மக்களுக்கு ஒரு போதும் துரோகம் செய்யப் போவதில்லை என்று அடிக்கடி கூறிக் கொள்வதை அவர் செயலில் காட்டுவதில்லை.
சம்பந்தன் இந்தியக் குழுவிடம் தமிழீழத்தைக் கேட்கவில்லை என்று வலியுறுத்தியதன் விளைவாக, அது தனியே புலிகளின் கோரிக்கையாக மாற்றப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளை அழித்தவுடன் மகிந்த ராஜபக்சவும் இதையே சொன்னார். ஆனாலும் அவர் சொன்னபடி, ஈழக்கனவு சாகவும் இல்லை, அவரால் சாகடிக்கவும் முடியவில்லை. இன்று சம்பந்தனும் அவரது அரசியல் வாரிசும் தமிழீழக் கனவை சாகடிக்க முனைகின்றனர். சாத்தியமான வழியில் உரிமைகளை வென்றெடுப்பது என்ற கொள்கை நியாயமானதே. கூட்டமைப்பு தன்னால் எதைச் செய்ய முடியுமோ – எதைச் சாத்தியப்படுத்த முடியுமோ- அதைச் செய்யலாம். அதற்காக தமிழர்களின் இலட்சியக் கனவை விலை பேசி விற்க முனையக் கூடாது. இதே நிலைப்பாட்டில் தான் கூட்டமைப்பின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பர் என்பதில் சந்தேகமில்லை.
தமிழர்களின் உரிமைகள் நசுக்கப்பட்டுள்ளதை உலகம் ஏற்கிற நிலை வந்துள்ள போது- தமிழர்களுக்கு சிங்கள அரசிடம் இருந்து நியாயமான உரிமைகள் கிடைக்க வாய்ப்பில்லை என்ற கருத்து சர்வதேச சமூகத்தினால் ஏற்கப்படும் நிலை உருவாகியுள்ள போது – தமிழீழம் என்ற இலட்சியத்தை இவர்கள் பலப்படுத்தாது போனாலும் பரவாயில்லை, பலவீனப்படுத்தாமல் இருப்பதே நல்லது. கூட்டமைப்புத் தலைவர்கள் தமிழீழத்துக்காக எதையும் செய்யா விட்டாலும் பரவாயில்லை, அந்தக் கனவை - இலட்சியத்தை சிதைக்காமல் இருப்பதே மேல். இதுவே தமிழீழத்துக்காக முள்ளிவாய்க்கால் வரை - போரிட்டுப் புதைந்து போன ஆன்மாக்களுக்கு அவர்கள் செய்யும் மிகப்பெரிய அஞ்சலியாக அமையும்.
கட்டுரையாளர் தொல்காப்பியன் இன்போ தமிழ் குழுமம்
எமது எதிரிகள் வெளியிலில்லை. எம் இனத்துக்குள்ளேயே இருக்கின்றார்கள். அதற்கு சாட்சி இந்த அசிங்க அரசியல் வியாதிகள். அடுத்துவரும் தேர்தலில் இவர்களுக்கு தமிழ் மக்கள் நிச்சயமாக பாடம் கற்பிப்பார்கள். எதிரிகளின் அடிவருடிகளாக மாறி இனத்தையே அசிங்கப்படுத்தி விட்டார்கள் இந்த கூத்தணி. மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம். தகுந்த பதிலடி விரைவில் கிட்டும்.
ReplyDelete