சிங்கக்கொடி ஏந்திய சம்பந்தனும் புலிக்கொடி ஏந்திய மர்ம நபரும்


கடந்தவாரம் யாழ்ப்பாணத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டு மே தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது. யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலப்பகுதியில் மேதின நிகழ்வுகள் மிகப் பெரியளவில் இடம்பெறுவது வழக்கம். முதல்முறையாக 1986இல் பிரமாண்ட மே தினக் கூட்டம் நல்லூர் கந்தசாமி கோவில் வீதியில் நடந்தது. விமானத் தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் அணி திரண்டனர். அதன்பின்னர், மீண்டும் 1990இல் தொடங்கி 1995 வரை மேதின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றன.  தொழிலாளர் அமைப்புகளின் பேரணி, அலங்கார ஊர்திகள். போரணிகளின் அணிவகுப்பு என்று, யாழ்ப்பாண வரலாறு காணாத வகையில் மே தின நிகழ்வுகள் இடம்பெற்றன. அதற்குப் பின்னர் இம்முறை தான் யாழ்ப்பாணத்தில் மே தினம் களைகட்டியது. ஆனாலும், விடுதலைப் புலிகளின் காலத்து மேதின நிகழ்வுகளில் ஒன்று திரண்டளவுக்கு மக்கள் திரளவில்லை. இம்முறை யாழ்ப்பாண மேதினப் பேரணிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். 

ஒரு பேரணியை எதிர்க்கட்சிகள் இணைந்து நடத்தின. 

மற்றொரு பேரணியை ஈபிடிபி நடத்தியது. 

ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐதேக தலைவர்களும், இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சுரேஸ் பிறேமச்சந்திரன், சுமந்திரன், சிறிதரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், மனோ கணேசன், சிறிதுங்க ஜெயசூரிய போன்ற பிற கட்சிகளின் தலைவர்களும் இந்தக் கூட்டு மேதினப் பேரணியில் கலந்து கொண்டனர். 

இந்தப் பேரணி சென்று கொண்டிருந்தபோது திடீரெனச் சிலர் தமது சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த புலிக்கொடியை எடுத்துக் காட்டியபடி ஓடிச் சென்று மறைந்தனர். இன்னொருவர் தமிழீழ வரைபடம் பொறித்த ரீசேட்டைத் திறந்து காண்பித்தபடி சென்றார்.இந்த விவகாரம் இப்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. 

புலிக்கொடியுடனும் தமிழீழச் சின்னம் பொறித்த ரீசேட்டுடனும் ஓடிச்சென்ற மர்மநபர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இந்த நபர்கள் ஓடிச் சென்ற போதே அதன் பின்னால் ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை உணர முடிந்தது. உடனடியாகவே அரச ஊடகங்கள் தமது வேலையைக் காட்டத் தொடங்கின. எதிர்க்கட்சிகளின் மேதினக் கூட்டத்தில் புலிக்கொடி ஏந்திச் செல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின. 

அதற்கு ஐதேக மறுப்பு வெளியிட்டது. 

இப்போது இது ஒரு ஊடக யுத்தமாக- அறிக்கைப் போராக உருவெடுத்துள்ளது. 

எதிர்க்கட்சிகளின் கூட்டு மே தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதை அரசாங்கம் விரும்பவில்லை.  இந்தக் கூட்டு மேதினத்துக்கு ஐதேகவுக்குள்ளேயும் புகைச்சல் இருந்தது. கூட்டமைப்புக்குள்ளேயும் புகைச்சல் இருந்தது. இதனைக் குழப்புவதற்கு அரசதரப்பில் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு கட்டமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள், யாழ்ப்பாணத்தில் புலிகளின் அச்சுறுத்தல் இருப்பதாகவும், தாங்கள் அங்கு பாதுகாப்புக்கு வரமுடியாது என்றும் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களை எச்சரித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கெல்லாம் ஐதேக அசரவில்லை. எப்படியாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒரே மேடையில் மே தினத்தை நடத்தி விட வேண்டும் என்ற உறுதியில் இருந்தது. அவர்கள் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்று சேர்வதை அரசாங்கம் விரும்பவில்லை. ஏனென்றால், 2010 ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர், உருவாகும் இப்படியொரு அணி ஆபத்தான அறிகுறியாக இருக்கும் என்று கருதியது. இதனை முறியடிப்பதற்கு அல்லது குழப்புவதற்கு அரசிடம் இருந்த ஒரே ஆயுதம் விடுதலைப் புலிகள் என்ற பூச்சாண்டி தான். இந்தப் பின்னணியில் தான் எதிர்க்கட்சிகளின் பேரணி செல்லும் பாதையில் இருந்த சுவர்களில், எமக்குத் தமிழீழம் வேண்டாம் என்ற சுவரொட்டிகள் இரவோடிரவாக முளைத்திருந்தன. அதன் அடுத்த கட்டமாக, பேரணியில் சிலர் புலிக்கொடியுடன் ஓடினர். புலிக்கொடியை கையில் எடுத்துக் கொண்டு ஓடிய அந்த மர்ம நபர்கள் யார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. 

போர் முடிந்து- புலிகள் இயக்கம் அடியோடு அழிக்கப்பட்டு மூன்றாண்டுகளாகி விட்டன. அதற்கு முன்னரே, யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய புலிகள் சிலரை அரசபடையினர் களையெடுத்து விட்டனர். அரசபடையினரின் இறுக்கமான கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணத்தில் ஒன்றுக்குப் பலருக்கு, புலிக்கொடியுடன் ஓடும் தைரியம் வந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் ஏராளமாக இராணுவப் புலனாய்வாளர்களும், ஊடகக் கண்களும் மொய்த்திருந்த சூழலில் பொதுமக்கள் எவரும் இவ்வாறு செய்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் புலிகள் தான் என்றால் கூட, அவர்கள் தம்மை இப்படி வெளிக்காட்டிக் கொள்ள வேண்டிய தேவையும் இல்லை. இதனால் அவர்களுக்கு எந்த இலாபமும் கிடைக்கப் போவதும் இல்லை. புலிகளை வைத்து பூச்சாண்டி காட்ட முனையும் அரசதரப்பின் மீது தான் பொதுவான சந்தேகம் உள்ளது. அதேவேளை, இந்த மேதினக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கையின் தேசியக் கொடியான சிங்கக்கொடியை உயர்த்திப் பிடித்து அசைத்துக் காட்டியதும் புதிய சர்ச்சை ஒன்றுக்கு வித்திட்டுள்ளது.  இது புலம்பெயர் தமிழர்களிடத்தில் கடும் விமர்சனங்களை உருவாகியுள்ளது. 

போர் முடிந்து மூன்றாண்டுகளாகி விட்டன.  அமைதி திரும்பி விட்டதாகவும், மூவினங்களும் ஒற்றுமையாக வாழ்வதாகவும் அரசாங்கம் சொல்கிறது. ஆனாலும், தமிழர்கள் இன்னமும் இலங்கையின் தேசியத்தை ஏற்றுக் கொள்ளத்தக்களவுக்கு நல்லிணக்கச் சூழல் உருவாக்கப்படவில்லை. இன்னம் சிங்கக்கொடியை தமிழர்கள் தமது தேசியக்கொடியாக ஏற்கின்ற நிலைக்கு வரவில்லை. புலம்பெயர் தமிழர்களிடம் இந்த உணர்வு இன்னும் அதிகமாகவே உள்ளது. சிங்கக்கொடியை ஆக்கிரமிப்பின் சின்னமாகவே தமிழர்கள் இன்னமும் கருதுகிறார்கள். இந்தநிலையில் சம்பந்தன் அதனை மே தினக் கூட்டத்தில் அசைத்துக் காண்பித்தது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது அதிசயமல்ல. இதனை சம்பந்தன் எதற்காக செய்தார் என்பது தெரியவில்லை.

அவர் சிங்கக்கொடியை உயர்த்திக் காட்டியது இலங்கையின் தேசியத்தை ஏற்றுக் கொள்ளத் தயார் என்று, அரசுக்கு வழங்கிய ஒரு சமிக்ஞையா? 

அல்லது புலிக்கொடியுடன் ஓடியவர்களுக்குப் பதிலடி கொடுப்பதற்காக அவ்வாறு செய்தாரா என்பது தெரியவில்லை. 

எவ்வாறாயினும் இப்போது தமிழீழம் என்ற தனியரசா அல்லது ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப்பகிர்வுடன் கூடிய தீர்வா என்ற சர்ச்சை வலுவடைந்து வருகிறது. அண்மையில் இலங்கை வந்த இந்திய நாடாளுமன்றக் குழுவிடம் இரா.சம்பந்தன் தான் இலங்கையராக இருப்பதில் பெருமை கொள்வதாகவும் ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளே பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதாக மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ரங்கராஜன் கூறியிருந்தார். 
அதனை நிராகரித்த திமுக தலைவர் கருணாநிதி தமிழீழத்துக்கு குறைவான எதையுமே ஈழத் தமிழர்கள் ஏற்க மாட்டார்கள் என்று பதிலளித்திருந்தார். இப்படி தமிழீழமா - ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வா என்ற விவாதங்கள் மேலோங்கியுள்ள நிலையில், இரா.சம்பந்தன் மேலுயர்த்திய சிங்கக் கொடி சர்ச்சைகளை மேலும் வலுப்படுத்தும். 

தமிழர்களுக்கு தனிநாடு தான் நிரந்தரமான பாதுகாப்பையும், நிம்மதியான வாழ்வையும் தரும் என்ற நம்பிக்கை இரா.சம்பந்தனிடம் மட்டுமன்றி பெரும்பாலான தமிழர்களிடமும் இன்னமும் உள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆனால் அதை தற்போது வெளிக்காட்டிக் கொள்ள முடியாத நிலை சம்பந்தனுக்கு உள்ளது. ஏனென்றால், இப்போதைய சூழலில் சர்வதேச ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, அவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றுபட்ட இலங்கை பற்றிப் பேசித் தான் ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. 

இந்திய நாடாளுமன்றக் குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்த போது, தனிநாட்டுக் கொள்கையைக் கைவிட்டு விட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வாருங்கள் என்று சொன்னதாகவும், அதற்கு இரா.சம்பந்தன் நாங்கள் தனிநாடு கேட்கவில்லை, ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரங்களைப் பகிருங்கள் என்று தான் கேட்கிறோம் என்று பதில் கொடுத்ததாகவும் தகவல். அதற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியக் குழுவினால் மடக்க முடியாத நிலை ஏற்பட்டது. 

சர்வதேச சமூகத்தின் வாயை அடைத்து தமிழர்களுக்கு குறைந்தபட்ச அதிகாரப் பகிர்வையாவது உறுதி செய்ய, இந்த ஒன்றுபட்ட இலங்கை என்ற கோசம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தவிர்க்க முடியாதது. அதற்காக அவர் சிங்கக்கொடியைக் கையில் ஏந்த வேண்டுமா என்ற கேள்விக்கு அவர் வரும் நாட்களில் முகம் கொடுத்தேயாக வேண்டியிருக்கும். ஏனென்றால் இன்னமும் சிங்கக்கொடியைத் தமிழர்கள் தமது தேசியக்கொடியாக ஏற்கின்ற நிலைக்கு வரவில்லை- அதற்குக் காரணம் அரசாங்கமே. 

போருக்குப் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியிருந்தால், தமிழர்களுக்கு நியாயமான முறையில் அதிகாரங்களைப் பகிர்ந்து அவர்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்தால், இந்தநிலை மாறியிருக்கக் கூடும். அதைச் செய்யாமல் போனதால் தான் போரினால் நாட்டை ஒன்றுபடுத்திய போதும், தமிழர்களை ஒட்டவைக்க முடியாதுள்ளது. நியாயமான அதிகாரப்பகிர்வு, உண்மையான நல்லிணக்கம், கௌரவமான வாழ்வு என்பன தமிழர்களுக்கு உறுதிப்படுத்தப்படாது போனால், இன்று சிங்கக்கொடியை ஏந்திய சம்பந்தன், நாளை மர்மநபர்கள் கொண்டோடிய புலிக்கொடியை தான் ஏந்த நிர்ப்பந்திக்கப்படுவார்.

கட்டுரையாளர் தொல்காப்பியன் இன்போ தமிழ் குழுமம்
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment