இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பில் பொது இணக்கப்பாடு ஒன்றைக் கடைப்பிடிக்க அமெரிக்காவும் இந்தியாவும் தீர்மானித்துள்ளமை கொழும்பு அரசியலில் பெரும் நெருக்கடியையும் சினத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது. தமிழர்களின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான ஆக்கபூர்வமான நடவ டிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டு வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் இந்த இலங்கை விரோதப் போக்கு அரசின் செயற்பாடுகளுக்கு தடங் கலை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ இதுகுறித்து இந்திய வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொண்டு பேசுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சுக்குப் பணித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்களில் இருந்து அறியமுடிகிறது.
அத்துடன் இந்தப் பொது இணக்கப்பாட்டு விடயம் குறித்து அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிங்ரனுடன் பேசுமாறும் ஜனாதிபதி மஹிந்த வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸûக்குப் பணித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அண்மையில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிங்ரன் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசியிருந்தார்.
இந்தச் சந்திப்பில் இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுக்களைத் துரிதப்படுத்துவதற்கும் தமிழ் அரசியல் கட்சிகளை பேச்சு மேசைக்கு அழைத்து வருவது தொடர்பிலும் பொது இனக்கப்பாடு ஒன்றை எடுப்பதற்கு இந்தச் சந்திப்பில் இருநாட்டுத் தலைவர்களும் இணக்கம் தெரிவித்தனர்.
அத்துடன் இலங்கையில் அமைதியை ஏற்படுத்த அந்நாட்டு அரசுக்கு இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து அழுத்தங்களைப் பிரயோகிப்பது எனவும் இதில் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
இந்திய மற்றும் அமெரிக்க அரசுகளின் இந்த நிலைப்பாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கடும் சீற்றத்துக்குள்ளாகியதுடன் இந்தியா அமெரிக்காவுடன் இணைந்து இலங்கையை தொடர்ந்தும் பழிவாங்கி வருகிறது என ஜனாதிபதி கருதுவதாக அரச வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இதனால் சினமடைந்துள்ள ஜனாதிபதி இலங்கை அரசு மேற்கொண்டுவரும் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து இந்திய மற்றும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சுகளுக்குத் தெளிவாகத் தெரியப்படுத்துமாறும் அவற்றுடன் சுமூகமான உறவைப் பேணுமாறும் இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும் அமைச்சின் அதிகாரிகளுக்கும் பணித்துள்ளதாக அரச வட்டாரங்கள் மேலும் கூறின.
எதிர்வரும் 18 ஆம் திகதி வாஷிங்ரனில் அமெரிக்க வெளிவிவகாரச் செயலரைச் சந்தித்துப் பேசும்போது அமைச்சர் பீரிஸ் இந்த விடயம் குறித்து தெளிவுபடுத்துவார் என்றும் தெரியவருகிறது.
உதயன்
0 கருத்துரைகள் :
Post a Comment