தேசியப்போராட்டத்தில் பெறும் வெற்றிதோல்வி அரசியல் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில்லை

இராஜதந்திர செயல் முறையே அடுத்த பயணம். ஈழப்போராட்டம் அனைத்துலக அந்தஸ்த்து மற்றும் தலையீடு ஆகியவற்றை இப்போது பெற்றுவிட்டது. தம் நலுனுக்காக தலையீடு செய்யும் அனைத்துலகத்தை தமிழர் நோக்கு நிலையில் கையாள்வதிலேயே இறுதிப் பயணத்தின் வெற்றி தங்கி இருக்கின்றது என்கிறார். துரை சண்முகம்"மனித நாகரிகத்தின் மனச்சாட்சியிடம் போய்ச் சொல்லுங்கள் நாங்கள் எங்கள் இனத்தின் விடுதலைக்காக எம்மக்களுடன் இங்கே மரணித்து கிடக்கிறோம் என்று.."இதுதான் முள்ளிவாய்காலில் சிங்கள தேசம் கண்டெடுத்த பெருமை கொண்ட பிணங்களின் பேசாமொழி.

முள்ளிவாய்க்கால் ஒரு முடிவல்ல. உலகின் தேசிய முரண்பாட்டுப் போர்ப்பட்டறிவில் போரின் வெற்றி அரசியல் தோல்வியில் போய் முடிந்திருக்கின்றது. போரின் வெற்றி அரசியல் வெற்றியிலும் முடிந்திருக்கின்றது. நவீன வரலாற்றின் அரசியல் யதார்த்தம் இது. போர் என்பது ஒரு தூண்டல் காரணியே. நிர்ணயிப்பது அனைத்துலக அரசியல் அன்றி வேறல்ல.

கடந்த நூற்றாண்டின் இறுதியில் இரு உதாரணங்கள் இதன் விளக்கத்திற்கு போதுமானவை. பயபிராபின் ஆயுதப்போராட்டம் போரில் வெற்றி கண்டது. ஆனால் போராட்டத்தில் தோற்றுப்போனது. பொருத்தமற்ற அனைத்துலகப் புறநிலையில் காணப்பட்ட வெற்றி விடுதலையை சாத்தியமாக்க முடியாமல் தோல்வியாக்கிற்று. 

கிழக்கு தீமோரில் விடுதலைப் போர் தோற்றுப்போனது. ஆனால் அதன் போராட்டம் வெற்றிபெற்றது. திமோர் தனிநாடாக, ஒடுக்குமுறை அரசு நிகழ்த்திய இனப்படுகொலைப் போரின் வெற்றியே அனைத்துலக சக்திகளின் தலையீட்டுக்குப் போதுமான காரணியாயிற்று.

ஆகவே, தேசியப்போராட்டத்தில் பெறும் வெற்றிதோல்வி அரசியல் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில்லை. ஈழப்போராட்டத்தின் முதற்கட்டம் மிதவாத போர்க்கட்டம். இந்த முதற்கட்ட போர் முயற்சிகள் எல்லாமே தோல்வியில் முடிந்தன. ஆனால் அப்போராட்டம் தோல்வியான விளைவை தமிழர்க்கு தரவில்லை. தேசிய அடையாளம், தாயகக்கோட்பாடு, தேசிய பிரக்ஞை, இவை உருவாக்கப்பட்டது அப்போர் முயற்சியினாலேயே. ஆயுதப்போராட்டத்தை அதுதான் பெற்றெடுத்தது. ஆயுதப் போராட்டம் முன்னேறுவதற்கான ஆதரவுத் தளமும் அதுவே. ஒடுக்குமுறைப் போர் நடத்தியவர்கள் தாம் பெற்ற போர் வெற்றியால் அடைந்தது மாபெரும் அரசியல் தோல்வி. தமிழர்களின் மூர்க்கமான ஆயுதப்போரை இலங்கை ஆட்சியாளர் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. 

இரண்டாம் கட்டம் ஆயுதப்போர். கால்நூற்றாண்டான இலங்கை அரசியலை உலுப்பியெடுத்த போர். மிதவாத போரில் அடைய இயலாத இலக்குகளை ஆயுதப்போர் அடைந்தது. தமிழர்களுக்கு பேரம்பேசும் பலத்தை உருவாக்க கூடிய அகப்புறக் காரணிகளை மிதவாதப் போர் கொண்டிருக்கவில்லை. 

அனைத்துலக சக்திகளுக்கு தேவையற்றிருந்த ஈழப்போராட்டடத்தின் பக்கம் கவனத்தை ஈர்க்கவும் அதனால் முடியவில்லை. ஆனால் ஆயுதப்போர் வளர்வதற்குரிய அனைத்துலக புறநிலைகள் வாய்க்காத போதும் சொந்த நிலத்திலும், சொந்தப் பலத்திலும் ஊன்றி நின்று போர் வளர்க்கப்பட்டது குருதியாலும், கண்ணீராலும், செயல் மூர்க்கத்தாலும். ஒரு கட்டத்தில் பிராந்திய சக்தியும், பின்னர் அனைத்துலக சக்தியும் போரை விரும்பாதபோதும் போரை வெற்றிகரமாக முன்னெடுத்தனர் தமிழர்கள். போரின் விளைவாய் பேரம் பேசும் பலம் உருவாக்கப்பட்டது. அனைத்துலக கவனமும் ஈர்க்கப்பட்டது.

அனைத்துலக சக்திகளின் தேவை தலையீடு இல்லாமல் ஒரு தேசம் உருவாகிவிட முடியாது. 1991ல் பனிப்போர் முடிந்து புதிய அரசியல் ஒழுங்கு உருவானபோது, செங்கடலின் முக்கியத்துவம் கருதி அதன் ஆதிக்கம் எதியோப்பியாவிடம் இருக்ககூடாது என்பதற்காக செங்கடலின் கரைகளை கொண்டிருந்த எரித்திரியா தனிநாடாக்கப்பட்டது. போரின் வெற்றி பொருத்தமான அரசியல் புறநிலை வாய்த்ததில் அரசியல் விளைவைப் பெற்றது. 

சீனா அமெரிக்காவுக்கு போட்டித் தலைமைத்துவமாக தலையெடுத்துள்ள இப்புதிய சூழ்நிலையில் கிழக்கில் உள்ள மேற்கின் பங்காளியான அவுஸ்ரேலியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவை எழுந்தது. மிகப்பெரும் முஸ்லிம் நாடான இந்தோனேசியாவின் கொல்லையில் உள்ள அவுஸ்ரேலியாவுக்கு ஒரு தடுப்பரணை அமைக்கும் பொருட்டு இடையில் இருந்த கிழக்கு தீமோர் இந்தோனேசியாவிடமிருந்து விடுவிக்கப்பட்டது. இந்தோனேசிய ஒடுக்குமுறைப் போரின் வெற்றிக்கு நிகழ்த்திய இனப்படுகொலையே தனிநாட்டுக்கான நியாயம் ஆகியது.

இரஷ்யா தன்னிடம் உள்ள இராணுவ இயலுமையை பேரம் பேசும் பலமாகக்கொண்டு அனைத்துலக அரசியலில் காத்திரமான வகிபாகத்திற்கு முயன்றது. மேலும் மேற்கின் எதிராளிகள் இரஷ்யாவுடன் கூட்டுச்சேர்ந்து அதன் இராணுவ இயலுமையை பயன்படுத்தி அச்சுறுத்தலை ஐரோப்பாவிற்கு விடுக்கக்கூடாது என்பதற்காக இடையில் இருந்த சொசோவாவிற்கு விடுதலை பெற்றுக்கொடுக்கப்பட்டு ஐரோப்பாவிற்கான பாதுகாப்பு அரண் ஆக்கப்பட்டது. மேலும் அங்கு தேசிய ஏவுகணை பாதுகாப்பு பொறிமுறை நிலைப்படுத்தப்பட்டு இரஷ்யாவின் இராணுவ தொழில் நுட்ப வல்லமை அர்த்தமிழக்க வைக்கப்பட்டது.

ஆகவே விடுதலையின் வெற்றிக்கு அனைத்துலக அரசியல் தேவை உருவாகும்வரை, அல்லது உருவாக்கும் வரை உள்நாட்டு அரசுக்கெதிராக போர்ப்பலத்தையும், பேரத்தையும், போர் முனைப்பையும் பாதுகாப்பதே போராட்டத்தின் வெற்றிகரமான போக்காகும். பனிப்போரின் பின் விடுதலைப் போரை முன்னெடுக்க அனைத்துலக புறநிலை இல்லாதபோதும் விடுதலைப்புலிகள் போரை முன்னெடுத்து வளப்பதில் வெற்றி கண்டிருந்தனர். 

தவறுகள் இன்றி ஆயுதப்போராட்டம் அசைந்ததாக இங்கு வலியுறுத்தவில்லை. தவறுகள் இன்றி எந்த அரசும் அரசியல் அசைவை கொண்டிருந்ததும் இல்லை. தவறுகள் குற்றங்கள் அல்ல. தொகுக்கப்பட்ட அர்த்தத்தில் ஆயுதப்போராட்டத்தை அதன் எல்லா எதிர்ச் சூழலில் இருந்தும் போரை வளர்த்துவருவதில் முள்ளிவாய்க்கால் வரை தமழர்கள் வெற்றி கண்டனர்.

2011ல் அமெரிக்கா மீதான அல்கைதாவின் தாக்குதலை அடுத்து பயங்கரவாதத்திற்கு எதிரான போர் பிரகடனப்படுத்தப்பட்டது. உலகின் விடுதலைப் போராட்டங்கள் இதனால் அனைத்துலக அரசியல் தேவைகளுக்கு ஏற்ப முடிவை எட்ட வேண்டியதாயிற்று. அனைத்துலக அரசியலில் தனிநாட்டுக்கான தேவை ஈழப்போராட்டத்திற்கு இருக்கவில்லை. தவிர இலங்கையில் நிரந்தர யுத்த முடிவு அனைத்துலக தேவையாகவும் இருந்தது. இப்புறநிலையில் ஒடுக்குமுறை மூலம் போராட்டத்தை ஒழிக்க முடியாது என்பதை புலிகள் அப்போது தம் போர் அடைவுகள் மூலம் நிரூபித்தனர். இதன் விளைவாக ஈழப்போராடத்தை சமரசம் மூலம் தீர்த்து வைப்பதற்கான அனைத்துலக தலையீடு உருவாக்கப்பட்டது.

சமதரப்பு ஒப்பந்தம், படைபலம், கட்டுப்பாட்டு நிலப்பரப்பும் அதில் நடைமுறை அரசும் என்பவற்றை ஏற்றுக்கொண்ட பேச்சுவார்த்தை மூலம் போராட்டத்தை அனைத்துலக அரங்கிற்கும் அந்தஸ்த்திற்கும் கொண்டு போவதில் விடுதலைப்புலிகள் வெற்றி பெற்றனர்.இலங்கையில் போர் நிரந்தர ஓய்வைக் காண வேண்டும் என்பதே இப்பேச்சு முயற்சியில் அனைத்துலக சக்திகள் கொண்டிருந்த நலன். தமிழர்களின் தாயகமோ, சுயநிர்ணயமோ அனைத்துலக சக்திகளின் அரசியல் தேவையாக இருக்கவில்லை. டோக்கியோ மாநாடு உருவாக்க இருந்த ஒப்பந்தம் நிரந்தர போர் ஓய்வையும் ஆயுதக் கையளிப்பையும் கூட உள்ளடக்கி இருந்தது. சமரச இலக்கு நீண்டகால நிகழ்ச்சி நிரலாகவும் இருந்தது. இதனால் டோக்கியோ மாநாட்டுக்கு புலிகள் அஞ்சினர். 

அனைத்துலக சக்திகளுக்கு இப்போராட்டத்ததின் வெற்றியில் நலன் இருந்திருந்தால் அதன் பொறுப்பில் டோக்கியோவில் கையெழுத்திட அஞ்ச வேண்டியதில்லை. ஆனால் இலங்கையில் ஆட்சி மாற்றமும், நிரந்தர போர் ஓய்வுமே அவற்றின் உடனடி நலன்களாகும். மேலும் மேற்குலகம் இப்பேச்சு வார்த்தை காலத்தில் கூட புலிகள் மீதான தடையை மீளப்பெறவில்லை. இந்தியா தமிழர் தரப்பை புலிகள் பிரதிநித்துவம் செய்யும் இப்பேச்சு முயற்சியில் வெற்றியை விரும்பவில்லை. பேச்சில் எந்த அடைவும் எட்டப்படவில்லை. குறைந்த பட்சம் 90 நாளில் இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்படுவதாக எட்டப்பட்ட விடயம் கூட நிறைவேற்றப்படவில்லை. இவையனைத்தும் சேர்ந்து விடுதலைப் புலிகளின் தலைமையை நியாயபூர்வமாக அச்சம் கொள்ள வைத்தது எனலாம். அவர்கள் டோக்கியோ மாநாட்டை புறக்கணித்தனர்.

அடைவுகள் அற்று இழுபடும் பேச்சில் போர்ப்பலம் நீர்த்துப்போகவே வாய்ப்புகள் இருந்தன. புலிகள் கொண்டிருந்த போர்ப்பலத்தினாலேயே இந்த சமரச தெரிவை அனைத்துலகம் நாடியது. அது இல்லை என்று ஆகினால் ஆட்சி மாற்றம், நிரந்தர போர் ஓய்வு என்ற அனைத்துலக நலன் எட்டப்பட்டுவிடும். பின்னர் புலிகளிடம் மேசையில் வைக்க எந்த பேரமும் இருக்காது. இந்த அச்சத்தின் காரணமாக போருக்கான புறநிலை இல்லாதபோதும் புலிகள் போரை தெரிவு செய்தனர். 

இந்த இடத்தில் அனைத்துலக நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டிருக்கும் இலங்கை அரசியலில் போர் தொடங்கப்பட்டால் அதனை அனைத்துலகம் எவ்வாறு தையாழும் என்பதை கணகிட்டு கொள்வதில் விடுதலைப்புலிகள் தவறிழைத்தனர்.

போர் தொடங்கப்பட்ட காலத்தில் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் ஒருவர் இக்கட்டுரையாளருடன் போரின் நோக்கம் பற்றி பகிர்ந்துகொண்ட போது "ஈழத்தின் கேந்திர மையம் இரண்டு. அதன் அரசியல் கேந்திரம் யாழ்ப்பாணம், இராணுவக் கேந்திரம் திருக்கோணமலை. இந்த இரண்டும் சிறிலங்கா அரசின் வசம் இருந்தன. இந்த இரண்டும் கையில் இல்லாமல் நீண்டகாலம் பேச்சில் ஈடுபடுவது சுய அழிவில் போய் முடியும். இந்த இரண்டில் ஒன்றைத்தானும், முடிந்தால் இரண்டையும் மிகக் குறுகிய கால எத்தனிப்பில் கைப்பற்றிவிட்டு பேச்சுக்கு திரும்புவதே புலிகளின் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்." என்றார். ஆனால் கெடுவாய்ப்பாக அனைத்துலகம் தன் நோக்கு நிலையில் இப்போரை கையாண்டது. 

தனிநாட்டு கொள்கையை விட்டுக்கொடுக்காத புலிகளும், தமிழர் தாயகத்தை கூட அங்கிகரிக்காத இலங்கை அரசும் என்ற விளக்கத்தையே இரு தரப்பு பற்றி அனைத்துலகம் கொண்டிருந்த கருத்தாகும். இந்நிலையில் போர் ஒரு கருத்துப் பரிமாற்றமாகி இருதரப்பில் ஒரு தரப்பு தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே போரில் அனைத்துலகம் கொண்டிருக்க கூடிய தெரிவு.

இலங்கை அரசு போரில் தோல்வி முகம் கண்டால் புலிகள் தனிநாட்டை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். தவிரவும் இந்தியா அதனை விரும்பாது. மேற்குலகம் இந்தியாவை பகைக்க முடியாது. ஆனால் புலிகள் தோல்வி முகம் கண்டால் புலிகள் இறங்கி வர நேரிடும். இது இலங்கையையும், இந்தியாவையும் கையாள வசதியானது என்று மேற்குலம் நம்பியது.

அனைத்துலக சக்திகள் புலிகளின் ஆயுத விநியோக மார்க்கத்தை முழுமையாக முற்றுகையிட்டன. விநியோக முயற்சிகள் அழிக்கப்பட்டன. சிறிலங்கா அரசிற்கு படையியல் தொழில் நுட்ப உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் போரில் இந்த புறநிலையைப் பயன்படுத்தி இந்தியா புலிகளை அழித்துவிட ஊக்கம் கொண்டு போரில் நேரடிச் செல்வாக்கை செலுத்தியது. இதுவே யதார்த்தம் ஆகிற்று. புலிகளும் இதைப் புரிந்து கொண்டனர். இதனை போர் தொடங்கப்பட்டு சில காலங்களின் பின் புலிகளின் தலைவர் பிரபாகரன் தன் உயர்நிலைச் சந்திப்புகளில் இப்போரில் அனைவரும் போரிட்டு மடிய நேரிடலாம் அதற்கான மனநிலையில் போராளிகள் இருக்க வேண்டுமென வலியுறுத்தி வந்ததை தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. சில சந்திப்புகள் இதற்காகவே ஏற்படுத்தப்பட்டதாகவும் அறியக் கிடக்கின்றது. 

இங்கு அனைத்துலக தலையீடு ஒன்றே போராட்டத்திற்கு இருக்கக்கூடியஇறுதித் தெரிவு. ஆட்சிமாற்றம், நிரந்தர போர் ஓய்வு இவையே அனைத்துலகின் உடனடி நலன். இவற்றிற்காக அனைத்துலகம் தலையிட்டே ஆகும். தமிழர்களின் பேரால் தலையிடும் அனைத்துலகம் எதையும் பெற்றுக்கொடுக்காமல் தனது நலனை மட்டும் அடைந்தால் மேற்குலகின் சமாதானம், மனித நீதி என்ற அணுகுமுறை முழுமையாக புனிதம் இழக்கும். அதை அவர்கள் விரும்பமாட்டார்கள். 

இந்த உள்நோக்கம் கருதியே தெற்கில் போரின் இறுதிவரை எந்த நாசகார தாக்குதலையும் செய்யாது தவிர்த்தனர். பல்லாயிரக் கணக்கில் தடைசெய்யப்பட்ட குண்டுகள் மூலம் தமிழர்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருந்த போதும் தெற்கில் குடிமக்கள் மீது தாக்குதல் நடாத்துவதை புலிகள் தவிர்த்தனர். இவ்வாறு செய்திருந்தால் யுததம் திசைமாறியிருக்கும். படைகள் தெற்கின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுக்க நேர்ந்திருக்கும். தொடக்கப்பட்ட போரில் தமக்கெதிரான அனைத்துலக வியூகத்தை புரிந்து கொண்டவிடத்து தோல்வியை உணர்ந்த புலிகள் இத்தகைய ஒரு தெரிவை தீர்மானித்ததையே மேற்சொன்ன நிகழ்வு உணர்த்துகிறது. 

இதன்படி போரின் இறுதிக்கட்டத்தில் அனைத்துலக தலையீட்டை புலிகள் சாத்தியப்படுத்தினர். ஆனால் இதில் இந்தியா தன் விடாப்பிடியான கொள்கையினால் கிடைத்த சந்தர்ப்பத்தில் புலிகளை முற்றாக அழிக்க வேண்டி அனைத்துலக தலையீட்டை தடுத்தது. அனைத்துலக சக்திகளினால் கூட இந்தியாவை கையாள முடியாது போயிற்று. முள்ளிவாய்க்கால் நந்திக்கடல் துயரம் வரை இதுபோய் முடிந்தது. 

ஆனால் அனைத்துலக தலையீடு என்ற வாசலைத் திறக்கும் விளைவை போர் வென்றெடுத்தது. தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட மனித அநீதியின் பேராலேயே இத்தலையீடு வருகின்றது. போரின் முடிவின் மூலம் போராட்டத்திற்கான அடுத்த கட்ட வாசல் அகலத்திறக்கப்பட்டிருக்கின்றது. 

மூன்றாம் கட்டம் இந்த இராஜதந்திர போர்க்கட்டம். இராஜதந்திர செயல் முறையே அடுத்த பயணம். ஈழப்போராட்டம் அனைத்துலக அந்தஸ்த்து மற்றும் தலையீடு ஆகியவற்றை இப்போது பெற்றுவிட்டது. தம் நலுனுக்காக தலையீடு செய்யும் அனைத்துலகத்தை தமிழர் நோக்கு நிலையில் கையாள்வதிலேயே இறுதிப் பயணத்தின் வெற்றி தங்கி இருக்கின்றது. 

போரில் சிங்கள தேசம் பெற்ற வெற்றியை அரசியல் தோல்வியாக்கக் கூடிய சூழலை கனிய வைத்துப் போயிருக்கின்றது இப்போர். குருதி தோய்ந்த மண் கையளித்துப் போயிருக்கின்றது மாபெரும் கடப்பாட்டை. ஆயுதப்போராட்ட தலைமைத்துவ ஆளுமையை உடனடியாக பதிலீடு செய்ய தமிழ்த் தரப்பால் இயலாது போகலாம். ஆனால் ஒரு கூட்டாளுமையை உருவாக்கும் தருணத்தில் இது சாத்தியமே. பிரபாகரன் ஒரு தடவை மூன்று குடிமக்கள் சமூகத்தினரை சந்திக்கும்போது " தமிழர்களிடம் போதிய மின்குமிழ்கள் இருக்கின்றன. ஆனால் அவை வெவ்வேறு திசைகளில் ஒளிர்கின்றன. அவற்றை ஒரே அறையில் ஒளிர்விக்க முடிந்தால் தமிழர்களிற்கு போதுமான வெளிச்சம் கிடைத்துவிடும்." எனக் கூறினார். இது தமிழர்களை பிரதிநித்துவம் செய்ய முனையும் தரப்புகளுக்கு சமர்ப்பணம்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment