சிறிலங்கா: போர் முடிந்து மூன்றாண்டுகள் - 'காணாமல்போனோர்' ஆயிரக்கணக்கானோர்


"யுத்தத்தின் இறுதியில், சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் காணாமற் போயுள்ளனர். இதில் கத்தோலிக்க மதகுரு ஒருவரும், புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் சிலரும் உள்ளடங்குகின்றனர்" என பெர்னாண்டோ மேலும் தெரித்தார். இவ்வாறு IRIN செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்கட்டுரையில் தெரிவித்துள்ளது.


சிறிலங்கா அரசாங்கமானது, பல பத்தாண்டுகளாக புலிகள் அமைப்புடன் மேற்கொள்ளப்பட்ட யுத்தமானது முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விட்டது என அறிவித்து மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும் கூட தற்போதும் ஆயிரக்கணக்கான மக்கள் காணாமற் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சிறிலங்காவில் உள்ள செயற்பாட்டாளர்கள் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 


சிறிலங்காவில் இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற 2008-2009 காலப்பகுதியில் காணாமற் போன தமிழ் மக்கள் தவிர, அதற்கு முன்னைய யுத்த காலங்களில் 5,671 பேர் காணாமற் போயுள்ளமை பதிவு செய்யப்பட்டுள்ளதாக, ஐ.நா வின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரின் காணாமற் போனவர்கள் தொடர்பில் செயற்படும் அமைப்பு [The Working Group on Enforced or Involuntary Disappearances - WGEID] தெரிவித்துள்ளது.


தனித் தாய்நாட்டுக்காக 30 ஆண்டுகளாகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான மோதல் மே 18, 2009 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.


"யுத்தம் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. எனது மகன் 14, மே 2009 அன்று காணாமற் போயிருந்தார். அதிலிருந்து நான் எனது மகன் தொடர்பான எந்தவொரு செய்தியையும் அறியவில்லை. எனது மகன் புலிகள் அமைப்பினதோ அல்லது வேறு எந்த அமைப்பினதோ உறுப்பினராக செயற்படவில்லை. இவர் ஒரு தமிழ்ப் பொது மகன்" என முன்னர் யுத்தவலயமாகக் காணப்பட்ட சிறிலங்காவின் வடக்கில் அமைந்துள்ள கிளிநொச்சியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான 56 வயதுடைய ஆரதி தெரிவித்துள்ளார். இவரது மற்றைய மகன் 1993லிருந்து காணாமற் போயுள்ளார்.


"எனது மகன் காணாமற் போய் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இது என்னை மிகவும் காயப்படுத்தியுள்ளது. ஆனால் இவர் பெரும்பாலும் இறந்திருப்பார் என்றே நான் நினைக்கிறேன்" என தனது இறுதி நம்பிக்கையையும் தொலைத்துவிட்டு வாழும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணேசன் தம்பையா தெரிவித்துள்ளார்.


காணாமற் போதல்கள் 'மிகப் பெரியளவில்' இடம்பெற்றதாகவும் குறிப்பாக 2006 தொடக்கம் 2009 காலப்பகுதியில் அதாவது யுத்தம் இறுதிக் கட்டத்தை அடைந்த போது இவ்வாறு காணாமற் போனவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகவும் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டுக்கான கிறீஸ்தவ அமைப்பைச் சேர்ந்த றுக்கி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


"யுத்தத்தின் இறுதியில், சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் காணாமற் போயுள்ளனர். இதில் கத்தோலிக்க மதகுரு ஒருவரும், புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் சிலரும் உள்ளடங்குகின்றனர்" என பெர்னாண்டோ மேலும் தெரித்தார்.


இவ்வாறு காணாமற் போனவர்களில் ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், மனித நேயப் பணியாளர்கள் போன்றோரும் காணமாற் போயுள்ளதாகவும், ஆனால் அரச சட்ட அமுலாக்கல் அதிகாரிகளும் அரச திணைக்களங்களும் இந்த துன்பகரமான உண்மையை ஏற்பதில் தயக்கம் காட்டுவதானது பெரும் வேதனையை உண்டுபண்ணுவதாகவும், 'இவ்வாறான பயங்கரக் குற்றத்தை அதாவது காணாமற் போன புலிகளின் தலைவர்கள் சிலர் உயிருடன் இருக்கும் போதும் கூட' அரச அதிகாரிகள் மூடிமறைக்க முற்படுவதாகவும் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.


காணாமற் போன ஊடகவியலாளர் ஒருவர் தொடர்பாக தான் மேலதிக தகவலைக் கொண்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்க ஆலோசகர் ஒருவர் சுட்டிக்காட்டி ஆறு மாதங்களின் பின்னர் கூட குறிப்பிட்ட ஆலோசகரிடம் அது தொடர்பான தகவல்களைக் கொண்ட அறிக்கையை சிறிலங்காவுக்கான சட்ட அமுலாக்கல் மற்றும் மனித உரிமைகள் ஆணையகத்தால் பெற்றுக்கொள்ள முடியாதிருப்பதாக பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.


சிறிலங்காவை ஆட்சி செய்த முன்னைய அரசாங்கங்கள், அரசாங்கத்தை எதிர்த்தவர்கள் மற்றும் தீவிரவாதக் குழுக்களைச் சேர்ந்தவர்களைக் கடத்தினர். ஆனால் தற்போது குற்றவாளிகள் இவ்வாறு கடத்தப்படுகின்றனர். "சிறிலங்கா அரசானது நாட்டில் குற்றவியல் நீதிமுறைச் சட்டங்களைப் பயன்படுத்துவதில் தயக்கம் காட்டுகின்றது. அத்துடன் இவ்வாறான கடத்தல்கள் சட்ட நடைமுறைகளை மீறுவதையே சுட்டிக்காட்டுகின்றன" என பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


எவ்வாறெனினும், குற்றம் சாட்டப்பட்டுள்ள எந்தவொரு காணாமற் போதல் சம்பவங்களிலும் சிறிலங்கா அரசானது தொடர்புபட்டிருக்கவில்லை எனவும், ஆனால் இவ்வாறான குற்றச்சாட்டுக்களில் பெரும்பாலானவை அரசியல் ரீதியான உந்துதல்கள் மூலமே மேற்கொள்ளப்படுவதாக தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத இராணுவ உயர் மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


"நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் உள்ளது. அதனை நாம் மதிக்க வேண்டும். பல்வேறு தரப்பினர்கள் குற்றம் சுமத்துவது போல், சிறிலங்கா இராணுவமோ அல்லது அரசாங்கமோ எந்தவொரு கடத்தல்களுக்கும் பின்னால் இருக்கவில்லை" என இவ் இராணுவ அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.


ஆனால் யுத்தம் முடிவுற்று மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும், காணாமற் போனவர்கள் தொடர்பாக முழுமையான பதிவுகள் மேற்கொள்ளப்படவில்லை என சிறிலங்கா தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்று இயக்குனர் ஜெகன் பெரேரா தெரிவித்துள்ளார். யுத்தப் பாதிப்புக்கு உள்ளான வன்னியில் யுத்தம் முடிவுறுவதற்கு முன்னர் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கைக்கும் தற்போதுள்ள மக்களின் எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


"காணாமற் போனவர்கள் தொடர்பாக நம்பகமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை உள்ளது. இவை தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு சுயாதீன அமைப்புக்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் காணாமற் போனவர்கள் தொடர்பில் எழும் சந்தேகங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கும்" எனவும் ஜெகன் பெரேரா தெரிவித்துள்ளார்.


சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு சிறிலங்கா அரசாங்கம் மீது அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் பலாத்காரமாக அல்லது தன்னிச்சையாக காணாமற் போனவர்கள் தொடர்பாகவும் விசாரிக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


காணாமற் போனவர்கள் தொடர்பாக அறியப்படுத்தல் மற்றும் அவர்களுக்கு சட்ட ரீதியான பரிந்துரைகளை நிறைவேற்றுதல் என்பன நாட்டில் மிக வெற்றிகரமான, நிலையான, திருப்திகரமான, முழுநிறைவான மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதில் செல்வாக்குச் செலுத்துவதாக சிறிலங்காவின் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


காணாமற் போதல் சம்பவங்கள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை என உள்ளுர் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். "நாட்டில் தொடர்ந்தும் இவ்வாறான காணாமற் போதல் சம்பவங்கள் இடம்பெறுவதால் மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்கின்றனர்" என பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.


"அரசாங்கத்தை எதிர்த்துக் குரல் கொடுத்த பலர் 'வெள்ளை வான்' மூலம் கடத்தப்பட்டுள்ளனர். மிக அண்மையில் கூட இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. காணாமற் போனவர்கள் தொடர்பான பட்டியல்கள் இவ்வாறு நீண்டு கொண்டு செல்கின்றன" என கொழும்பிலுள்ள மூத்த மனித உரிமைச் சட்டவாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 09 அன்று மனித உரிமைகள் தின நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடத்தல் சம்பவங்களுக்கு எதிரான இரு மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கடத்தப்பட்டனர்.


இவ்வாண்டின் ஆரம்பத்திலிருந்து ஏப்ரல் 18 வரை 21 காணாமற் போன சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது.


சிறிலங்காவில் மிகப் பாரியளவில் பாதுகாப்பு வலைப்பின்னல் செயற்படுகின்ற போதிலும், 'உயர் மட்ட புலனாய்வு முறைமை' நடைமுறையிலுள்ள போதிலும் "குறைந்தது ஒரு காணாமற் போனவர் தொடர்பாகக் கூட சரியான நியாயப்பாடுகள், காரணங்கள் முன்வைக்கப்படவில்லை" என ஜெகன் பெரேரா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Share on Google Plus

About அகிலன்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment