ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளித்த பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள நெருடல் தீவிரமடைந்து வருகிறது. இந்தியாவின் இந்த முடிவு தமக்கு ஏமாற்றத்தை அளித்த போதும், அதனால் உறவுகளில் எந்த விரிசலும் இல்லை என்று இலங்கை அரசாங்கம் கூறியிருந்தது. அதேவேளை, ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கவில்லை என்றும், அந்தத் தீர்மானம் இலங்கைக்கு எதிரானது அல்ல என்றும் விளக்கமளித்திருந்தார் சுஸ்மா சுவராஜ். ஜெனிவா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளிக்க முன்வந்திராது போயிருந்தால், இலங்கை தொடர்பான தீர்மானம் இன்னும் இறுக்கமானதாகவே அமைந்திருக்கும்.ஆனாலும் இந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததை ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்துக்கு இலங்கை இன்னமும் வரவில்லை. தீர்மானத்தைக் கொண்டு வந்த அமெரிக்காவிடம் வளைந்து போகின்ற அளவுக்கு, இந்தியாவிடம் நெகிழ்ந்து கொடுக்கின்ற தன்மையைக் காணவில்லை.
இந்தியாவும் கூட தனது நிலைப்பாட்டில் சற்று இறுக்கமான போக்கையே வெளிப்படுத்தி வருகிறது.
13வது திருத்தம் தொடர்பாக இலங்கையிடம் இருந்து ஒரு வாக்குறுதியைப் பெறவோ அல்லது பெற்ற வாக்குறுதியை நடைமுறைப்படுத்த வைக்கவோ இந்தியாவினால் முடியவில்லை. இந்தியாவுக்கு எந்த வாக்குறுதியும் கொடுக்கப்படவில்லை என்று கவிழ்த்து விட்டது இலங்கை அரசு. அதுவும் ஒன்றுக்கு இரண்டு முறை அவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விடயத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவுக்கு கிடைத்த அதே அனுபவம் சுஸ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும் கிடைத்துள்ளது. இந்த விடயம் இந்தியாவுக்கு மிகுந்த உறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
தெற்காசியப் பிராந்தியத்தின் வல்லரசாக இருந்தும் இந்தியாவினால் இதைச் செயற்படுத்த முடியாது போனது ஒரு தலைகுனிவாகவே கருதப்படுகிறது. இந்தநிலையில் இந்தியா இறுக்கமான போக்கை வெளிப்படுத்துவது வியப்பானதல்ல. அதைவிட, இப்போது இந்தியாவில் உள்ள அரசியல் சூழல் இலங்கைக்கு வக்காளத்து வாங்குவதற்கு இடம்கொடுப்பதாகவும் இல்லை. முன்னர் வைகோ, நெடுமாறன், திருமாவளவன் , ராமதாஸ் போன்றவர்கள் மட்டும் தான் தமிழீழம் பற்றியும், ஈழத்தமிழர்களின் உரிமைகள் பற்றியும் அதிகம் பேசினார்கள். இப்போது இவர்களோடு ஜெயலலிதாவும் கருணாநிதியும் கூட சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மட்டும் என்றால் கூடப் பரவாயில்லை. காங்கிரசின் தமிழ்நாடு பிரிவு கூட தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்க வேண்டும், பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளது புதிய திருப்பம்.
இதற்கு மத்தியில் இலங்கைக்கு வந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கருத்தும் கூட இலங்கைக்கு சார்பானதாக இல்லை.
இந்தநிலையில் இந்தியா சற்று எட்ட நிற்கவே விரும்புகிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில், ஜெனிவாவை மனதில் வைத்து இந்தியாவைப் பழிதீர்க்கும் காரியங்களில் இலங்கை ஈடுபட்டு வருவதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஜெனிவாவில் இந்தியா எதைச் செய்ததோ, அதையே நியுயோர்க்கில் திருப்பிச் செய்துள்ளது இலங்கை.
ஐ.நாவின் ஒரு அங்கமான- நீதிக்கான அனைத்துலக நீதிமன்றத்தின் நீதிபதிகள் பதவிக்கான போட்டியில் இந்தியா சார்பில் நிறுத்தப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதி தல்வீர் பண்டாரிக்கு எதிராக இலங்கை வாக்களித்துள்ளது. வழக்கத்தில் இந்தியாவுக்கு எதிராக எப்போதுமே இலங்கை வாக்களிப்பதில்லை. ஆனால் இம்முறை பிலிப்பைன்ஸ் நிறுத்திய நீதிபதிக்கு இலங்கை ஆதரவளித்துள்ளது. இது இரகசிய வாக்கெடுப்பு என்பதால் விவகாரம் உடனடியாக வெளிச்சத்துக்கு வரவில்லை. ஆனால் அரசாங்க வட்டாரங்களே இதை வெளிப்படுத்தியுள்ளன. இதுபற்றி ஐ.நாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கொஹன்ன கருத்துக் கூற மறுத்துள்ளார். இரகசிய வாக்கெடுப்பு என்பதால் எதுவும் கூற முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை பிலிப்பைன்ஸ் எதிர்த்தது- இந்தியா ஆதரித்தது. இதற்காக இலங்கை பிலிப்பைன்சுக்கு நன்றிக்கடன் செலுத்தியதுடன் – இந்தியாவைப் பழிதீர்த்துக் கொண்டது. இது மட்டுமன்றி இன்னொரு விவகாரத்திலும் இழுபறி உருவாகியுள்ளது.ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா விதித்துள்ள தடையை அடுத்து, சபுகஸ்கந்தை சுத்திகரிப்பு ஆலையை மறுசீரமைக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆகின்ற செலவு மிகப் பெரியது. அது கிட்டதட்ட 2 பில்லியன் அமெரிக்க டொலர். இந்த மறுசீரமைப்பு வேலையை மேற்கொள்ள இந்திய நிறுவனம் விரும்பியது. ஆனால் அதற்கான வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்க அரசாங்கம் மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. அதேவேளை சீன அரச வங்கியிடம் இருந்த வாங்கவுள்ள கடனில் இருந்து, இந்த மறுசீரமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. சீன அரச வங்கிகள் இலங்கைக்கு கடனையும் கொடுத்து விட்டு அந்தக் கடனைக் கொண்டு செய்யப்படும் அபிவிருத்தித் திட்டத்துக்கான ஒப்பந்தத்தையும் தாமே பெற்றுக் கொள்ளும் வழக்கத்தைக் கொண்டவை. இதனால் சீனா ஒரே கல்லில் பல காய்களை வீழ்த்துகிறது. இலங்கை மீதான ஆதிக்கத்தை உறுதிப்படுத்தலாம், கடனுக்கு வட்டியும் கிடைக்கிறது, அதைவிட ஒப்பந்த வேலையை மேற்கொள்வதால் இலாபமும் கிடைக்கிறது. சீனாவின் கடன் நிபந்தனைகள் இலகுவானது என்பதால், இந்தியாவிடம் இந்த வேலையை ஒப்படைக்க இலங்கை தயாரில்லை. சீனாவிடம் ஒப்படைக்கவே விரும்புகிறது. இதுபோன்று இந்தியாவிடமிருந்து இலங்கை விலகிக் கொள்ளும் பல நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இவை இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் நெருடல் நிலை இன்னும் தீரவில்லை என்பதற்கான அடையாளங்கள்.
இன்னும் பல விடயங்கள் வெளியே தெரியவராமல் நடந்திருக்கலாம்.
இலங்கை - இந்திய நாடுகளுக்கிடையிலான இந்த நெருடல் நிலை எதுவரை தொடரப்போகிறது என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது. ஏனென்றால், இது தமிழர் பிரச்சினைக்கான தீர்விலும் தாக்கம் செலுத்தவல்லது. எவ்வாறாயினும், இந்த இடைவெளி தமிழர்களுக்கு நன்மையாக அமையுமா - தீமையாக அமையுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
கட்டுரையாளர் சத்ரியன் இன்போ தமிழ் குழுமம்
0 கருத்துரைகள் :
Post a Comment