வடக்கின் வசந்தம் கொஞ்சக் காலமாய் பலமாய் வீசியது. சகலவகை ஊடகங்களிலும் அது பெருமெடுப்பில் பிரபல்யப்படுத்தப்பட்டது.வடக்கின் வசந்தம் கொஞ்சக் காலமாய் பலமாய் வீசியது. சகலவகை ஊடகங்களிலும் அது பெருமெடுப்பில் பிரபல்யப்படுத்தப்பட்டது.
வாரத்தில் ஒரு நாளாவது வசந்தத்தை விரைவுபடுத்த, யாரோ ஓர் அமைச்சரோ, பிரதி அமைச்சரோ அல்லது யாரோ ஓர் அதிகாரியோ பலாலியில் இறங்கி "பஜிரோ' வில், யாழ்ப்பாணத்து அரச பரிவாரங்களுடன் பலாலி வீதியால், "யாபனே பட்டுண' வுக்கு ஊர்வலம் போனார்கள். நிலைமை போன போக்கைப் பார்த்து வடக்கின் வசந்தம் புயலாய் ஆகி யாழ்ப்பாணத்தைப் புதுப்பொலிவு பெறச்செய்யப் போகிறதோ என்று "யாழ்ப்பாணிகள்' மூக்கின் மேல் விரல் வைத்து வியந்தனர்.
"இப்போ கொஞ்சக் காலமாய் வசந்தக் காற்று அடங்கிப் போய் விட்டதோ'' என்று முணுமுணுத்தார் அடுத்த வீட்டு மாணிக்கர் அப்பு. வடக்கின் வசந்தக் காற்று பற்றி ஆஹா, ஓஹோ என்று பேப்பர்களிலும், றேடியோவிலும், ரீ.வியிலும் நாளும் பொழுதும் அமர்க்களப்படுத்தப்பட்ட ஆரம்ப நாள்களிலேயே, "இதென்னடா தம்பி, நாங்கள் அறிய சோளகம், வாடை, கொண்டல் என்று தான் காத்து வீசியிருக்கு. இதென்ன வசந்தம் வீசப்போகுது எண்ணீனம்'' என்று அப்பாவித்தனமாகக் கேட்டவர் இந்த மாணிக்கர் அப்பு.
வீச வெளிக்கிட்ட வசந்தக் காற்றின் முக்கிய குறி வடக்கின் தெருக்கள் தான். வடக்கின் வசந்தத்தைத் துரிதப்படுத்தும் அரச பரிவாரங்கள், மாநாடு, ஆலோசனைக் கூட்டம் என்றெல்லாம் நடத்த அடிக்கடி யாழ்ப்பாணத்துக்குப் பயணிக்க வேண்டியிருக்கும். தரை வழியாய்ப் போனாலென்ன, வான் வழிப்பயணம் என்றாலென்ன. யாழ்ப்பாணத்துக்குள் பயணிக்க எப்படியும் தரைவழியைத் தாசூன பயன்படுத்த வேண்டும்.
யாழ்ப்பாணத்து தெருக்களோ கரடுமுரடான நிலையில்; "யாழ்ப்பாணத்துக்குப் போயிட்டு வந்து நாரிப் பிடிப்பில் அவதிப்பட ஏலுமோ?'' என்ற முன்னெச்சரிக்கை யோசனையால் தான் வடக்கின் வசந்தத்தில் வீதிகள் திருத்தத்துக்கு முன்னுரிமை கொடுத்தார்கள் என்பது இந்த மாணிக்கர் அப்பு போன்ற ஆக்களுக்கு எப்படி விளங்கியிருக்கப் போகின்றது?
இருந்தாலும் மாணிக்கர் அப்புவின் முணுமுணுப்புக்கு ஒருபோதும் குறைச்சலில்லை. "வன்னிச் சண்டையிலை தப்பிப் பிழைச்சு, முகாம் சீவியத்திலை இருந்து விடுபட்டு, சொந்த இடத்துக்குப் போக முடிந்த, போக முடியாமல் போன அப்பாவி மனிசர்க்கு அவசியமான உணவு, உடை, தங்கியிருக்க வீடு என்ற மூன்று முக்கிய தேவைகளும் கிடைக்காது அந்தரிச்சு நிற்குதுகள். அந்த அப்பாவிச் சனங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்காமல், றோட்டுப் போடுறம், பாலம் கட்டிறம், போக்குவரத்து வசதிகளைச் செய்து கொடுக்கிறம் என்று "ஷோ' காட்டிறது ஆண்டவனுக்கே அடுக்காது'', என்று மாணிக்கர் அப்பு என்னைச் சந்திக்கும் போதெல்லாம் தன் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்க்கத் தவறியதில்லை.
இருந்தாலும் பத்துப் பதினைந்து வருஷங்களாய் சுத்திச்சுத்தி யாழ்ப்பாண ஏரியாவிலையே வாழவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிப்போன எனக்கு, இந்த ஏரியா றோட்டுக்களும் திருத்தப்பட வேண்டியது அவசியம் தான் என்ற உணர்வு மனதில் நிலைகொண்டிருந்தது என்னமோ உண்மைதான்.
கதையே இனித்தான் ஆரம்பம்.
வதிவிடம் உரும்பிராய். தொழில் யாழ்ப்பாண நகரில். கட்டையில போற வயசாகிப் போனாலும் கடந்த பத்து ஆண்டுகளாய் பலாலி றோட்டில் என்ர கடாமுடா சைக்கிளில் உரும்பிராய்யாழ்ப்பாணம், என காலை மாலைப் பிரயாணம். முக வெய்யிலில் காலையில் தொழிலுக்குப் புறப்பட்டால் வேலை முடிந்து வீட்டுக்குப் புறப்பட மாலை ஏழு மணிக்கு மேலாகிவிடும். வேலை நேரம் அப்படி தனியார் துறை. நிர்வாகத்தை அனுசரித்துப் போக வேண்டும்.
வடக்கின் வசந்தம் பலாலி வீதியை எட்டிப் பார்த்ததோடுதான் எனக்கும் பிரச்சினை ஆரம்பம். அத்தனை காலமும் றோட்டு குன்றும் குழியுமாய் இருந்தும், எனது கடாமுடா சைக்கிளுக்கு இருந்திருந்து தடிமன், காய்ச்சல் என்று வந்தும் கூட காலை மாலைப் பயணத்தில் பெரும் சிக்கல் எதுவும் ஏற்பட்டதில்லை. இருந்தாலும் எல்லை மதில்கள் உள்நகர்த்தப்பட்டு வீதியின் இருபுறமும் அகலப்படுத்தப்பட்ட போது "காப்பெற்' றோட்டிலை சைக்கிள் உழக்கும் கனவு என் மனத் திரையில் பரந்து விரிந்ததும் பொய்யல்ல.
சரி, எல்லை மதில்களெல்லாம் உடைக்கப்பட்டு உள்நகர்ந்து மீண்டும் மதிலாகிப் புதுப்பொலிவு பெற்றாகிவிட்டது. இந்த "ஊட்டு'க்குள் கதியால் வேலியாயிருந்த பல எல்லை வேலிகளும் சிமெந்து மதிலாக சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டன. றோட்டின் எல்லை நிர்ணயம் முடிந்து "பக்கோ'' மெஷினும் றோட்டுக் கரைகளைத் தோண்டத் தொடங்கியது. றோட்டின் இடதுபுறம் குறிப்பிட்ட அளவு ஆழத்துக்கு மண் அகழ்வு. பயணிக்கப் பயங்கரமாயிருக்கின்ற போதிலும் என் மனது சொல்லிக் கொண்டது, "பொறு, பொறு', "காப்பெற்' றோட்டில் இருபது நிமிடத்தில் வீட்டிலிருந்து கந்தோர், கந்தோரிலிருந்து வீடு.
வடக்கின் வசந்தம் பலாலி வீதியில் வீசத் தொடங்கிய காலத்திலிருந்து ஆறுதல் பட்டுக் கொண்டு பயணித்தேன் இப்போது றோட்டு தன்னைச் சுருக்கிக் கொண்டது. தெரியும் தானே, பலாலி றோட்டிலை அதுவும் இண்டைய காலகட்டத்தில் வாகனப் போக்குவரத்து எவ்வளவு தூரம் அதிகரிச்சு இருக்குதெண்டு. காலை வேளையிலை ஒருமாதிரி அங்கை இஞ்சை "சிலோப்பண்ணி' ஒருமாதிரி எந்த வில்லங்கமும் இல்லாமல் கந்தோருக்குப் போய்ச் சேர்ந்திடுறன். ஆனால் பின்னேரப் பாடுதான் பெருங் கஷ்டம். போதாததுக்கு றோட்டு லயிற்றும் இடைக்கிடை இல்லை. சிலவேளை முழு லயிற்றும் எரியாது.
பலாலி றோட்டிலை, யாழ்ப்பாணத்திலை இருந்து கோண்டாவில் டிப்போ வரைக்கும் ஒரு மாதிரிப் போயிடலாம். அங்காலை தான் தொடங்குது மரணப்பொறி முந்தி இருந்த றோட்டின்ரை முக்கால் வாசிப் பகுதியில தான் இப்போது வாகனங்களின்ர போக்குவரத்து.
றோட்டின்ரை இடக்கைப் பக்கம் நீளத்துக்கு ஆழத் தோண்டிய பள்ளம் அதிலை "கிறேசர்' மண்போட்டு நிரப்பி றோட்டு மட்டத்துக்குச் சமன்படுத்துவதுதான் திட்டம். ஆனால் றோட்டுக் "கான்' கிண்டி மூன்று நாலு மாதத்துக்கு மேலாச்சு. இன்னமும் பள்ளம் நிரப்பப்படுவதற்கான அறிகுறியொன்றையும் காணயில்லை.
அந்த நேரத்திலை பலாலிப் பக்கமிருந்து வாகனங்கள் ஏராளமாக வருமோ எண்டு கேக்க நினைக்கிறியள். சினிமாப் பகிடி மாதிரி "வரும்; ஆனா வராது'' எண்டு பதில் சொல்ல நான் தயாராய் இல்லை வரும்; ஒண்டுக்குப் பின்னாலை ஒண்டு, லொறி, டிரக்டர், ஹைஏஸ், கார், மோட்டார்சைக்கிள் எண்டு முன்னாலையும் வரும்; என்னை விலத்திக் கொண்டு பலாலிப் பக்கமும் போகும். டிப்போ வாசலிலை இருந்து கற்பகப் பிள்ளையார் கோயில் தாண்டும் வரைக்கும் என்ரை பாடு "அந்தோ பரிதாபம்' நிலைதான்.
சரி, றோட்டிலை போற வாற வாகனங்களை என்னாலை தடுத்து நிறுத்த இயலுமோ? என்ன; போகட்டும். முன்னாலை இருந்து வாற வாகனங்களின்ரை "றைவர்' மார், லைசென்ஸ் எடுத்த ஆக்கள்தானே? எதிர்ப்பக்கம் இருந்து வாற வாகனங்களைச் செலுத்தி வாறவைக்குத் தங்கடை வாகனங்களின்ரை "ஹெட்லைற்' வெளிச்சம் கண்ணைக் கூச வைக்கும் எண்டு தெரியாதோ? தங்கடை வாகனங்களின்ர "ஹெட்லைற்றை' "டிம்'மாக்கி உதவினாலென்ன? சரி, எது எப்படியோ போகட்டும்.
வசந்தக் காற்று வீசுகிற நேரம் வீசட்டும். பலாலி றோட்டாலை விக்கினம் எதுவுமில்லாமல் கந்தோரிலை இருந்து வீடு போய்ச் சேர வழி என்ன எண்ட கேள்விதான் இப்போதெல்லாம் மனசைப் போட்டுக் குடையுது.
மனம் கேளாமல் இந்த றோட்டு வேலையோடை சம்பந்தப்பட்ட ஒரு சிலரிட்ட இந்த "கிலிசைகேட்டின்ரை' உள்அந்தரங்கம், "றோட்டுக்கான்' தோண்டி நீண்டநாளாய் நிரவுப்படாமல் இழுபறிப்படுகிறதின்ரை ரகசியம் என்ன எண்டு கேட்டுப் பார்த்தேன். ம்... ஒருத்தரும் மூச்சு விடுகினமில்லை.
இன்னும் ஒரு சிலபேர் ஆளை ஆள் சாட்டுகினம். ஆனால் ஒருத்தரிட்டை இருந்தும் உருப்படியாய் எந்தப் பதிலையும் தெரிஞ்சுகொள்ள முடியவில்லை. அதுதான் உங்களைக் கேட்கிறேன்? வடக்கின்ரை வசந்தத்தின்ரை கெதிதான் என்ன?
உதயன்
உதயன்
0 கருத்துரைகள் :
Post a Comment