ஈழத்தமிழ் மக்கள் கடந்து வந்த சோகங்களையெல்லாம் கோர்வையாக்கி பார்த்துப் பார்த்து துயரடைந்த இவ்வேளையில், அவற்றில் இருந்து எவையெல்லாம் கற்றுக்கொண்டோம் என்பதுதான் எம்முன் விரிந்து நிற்கும் வினா.புனர்வாழ்வு முகாமுக்குள் புகலிடம் தேடிய பெண் போராளி பெற்ற தாக்கங்களும் பின்னராக தன்னைத் தானே எரியூட்டிக்கொண்டு சாவடைந்த வரை வெறுமனே சோகங்களின் நிகழ்வுகள்,எம்மிதயத்தின் அடி ஊற்றிலிருந்து புறப்பட்டு கண்ணீராகி வழிந்து செல்வது எமக்கெல்லாம் பழக்கப்பட்ட ஒன்றாகி விட்டது.
சோகங்களை எந்தளவு தூரம் சுமக்கின்றோம் என்பதுதான் எமக்குள் இருக்கும் போராட்டம். சோக திரைப்படம் பார்த்தது போன்று அவ்விடத்தே விடுகின்றோமா?அல்லது சோகங்களை சுமக்கின்றோமா? அல்லது சோகங்களை பகுத்தாய்ந்து அது மீண்டும் வராமல் தடுக்கும் வழிகளை ஆராய்கின்றோமா? அல்லது சோகம் தந்தவனுக்கு சோகம் கொடுப்பது தான் வழியென்று திடசங்கற்பம் கொள்கின்றோமா?இது ஒவ்வொன்றுக்கும் உரிய பெறுபேறுகள் சம்பந்தமானவை பற்றி, தமக்குத் தாமே சுய பரீட்சை வைக்கும் போதுதான் வெளிப்படும் என்பது யதார்த்தம்.
சோகங்கள் நிரந்தரமாகத் தீரும் வரை கடந்தகாலச் சோகச் சுமைகளை இறக்கி வைத்தல் பொருத்தமன்று. தனித்தனி மானிடனாக சுய பரீட்சை செய்து கொண்டு அதனால் பெறும் பெறுபேறுகள் ஒவ்வொருவருக்கும் ஏற்புடையதாக இருப்பின் இலட்சியங்களும் ஒரே வேள்வித் தீயாக அமைவது இயங்கியல் சாஸ்திரம். ஆக,இலட்சியத் தீ ஒரே சக்தியாக வெளிப்படும் போது சோகங்களால் துயர் கொண்ட ஒவ்வொருவரும் தாமாகவே ஒரு குடையின் கீழ் வருவது தவிர்க்க முடியாததாகும்.
முள்ளி வாய்க்கால் மட்டுமல்ல சிங்களத்தால் காலம் காலமாக தமிழினத்திற்கு உண்டாகிவரும் அனர்த்தங்களையும் துயரங்களையும் மனதில் பதித்து வைப்பதற்கும் அப்பால் இதற்கான நிரந்தரத்தீர்வு என்னவென்பதை அறிய முற்படுவோம். காலத்திற்குக் காலம் ஈழத்தமிழர்களின் சோகங்களில் நின்று அரசியல் தாண்டவமாடும் இந்தியா அடங்கலான அனைத்து நாடுகளையும் ஒரு கணம் மனக் கண் முன் கொண்டு வருவோம். இவை எதுவுமே ஈழத்தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வை வழங்க மாட்டாதென்பது காலம் காட்டும் அனுபவம்.
ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு பற்றிப் பேசும் எவராக இருந்தாலும் திருக்கோணமலை தென்னமரவாடி தொடக்கம் அண்மைக்கால முள்ளி வாய்க்கால் வரை தமிழினத்திற்கு ஏற்பட்ட ஈனங்களை தெளிவுற விளங்கிக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.
இலங்கை அரசியலுக்கூடாக ஏறத்தாள 23 ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டும்,கிடப்பில் போடப்பட்டும் இயக்கமில்லாது ஆக்கியதை கடந்தகால வரலாற்றிலிருந்து முதுபெரும் அரசியல் வாதிகளாக தம்மைத் தாமே எண்ணிக்கொள்ளும் தமிழ் அரசியல் வாதிகள் மீளவும் ஒரு தடவை படிக்க வேண்டும்.
இறுதியாக,
முள்ளிவாய்க்கால் வரை அரை மாத்திரை போட்டு நிற்கும் ஈழத்தமிழரின் அனர்த்தம் மிகப் பெரியதொரு வரலாற்றை கூறி நிற்கிறது.
* இலங்கையில் வேறுபட்ட இரு கலாசாரங்களை உடைய, இரு மொழிகள் உடைய,இரு பெளதீக வளங்கள் கொண்ட, இரு கலைகள் கொண்ட இரண்டு இனங்கள் வாழ்கிறது.
இதனால், முள்ளிவாய்க்கால் அனர்த்தம் வரை எப்படி இரு தேசங்கள் இலங்கையில் வேறுபட்டு இயங்கியதோ அதே நிலை மீண்டும் அறிவு பூர்வமான அறத்தினூடாக மலரவேண்டும் என்பதை சோகங்களை சுமந்து நிற்கும் நெஞ்சங்கள் திடசங்கற்பம் கொள்ள வேண்டும் என்பதே அந்தச் செய்தியாகும்.
“தணல்” குழுமம்
0 கருத்துரைகள் :
Post a Comment