சரத்திடம் சொல்லுங்கள் நாங்கள் முரண்பட்டால் புலி வந்துவிடும் என்று

ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ஷவிடம் இருக்கக் கூடிய பலம் பலவீனம் பற்றிய ஆய்வுகள் தமிழ்த் தரப்புக்கு அவசியமானதாக இருந்தாலும் அது பற்றி நாம் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. இதுதான் தமிழ்த்தரப்பில் இருக்கக் கூடிய மிகப் பெரிய பலவீனம். தன்னை எதிர்க்கக் கூடியவர்கள் அல்லது தனக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கக் கூடியவர்களை, இனங்கண்டு அவர்களை தன்னுடையவர்களாக மாற்றி விடக்கூடிய பலம் ஜனாதி பதியிடம் உண்டு.


இதற்கு வாசுதேவ நாணயக்கார, டி.யு. குண சேகர, திஸ்ஸ விதாரண, விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் நல்ல உதாரணங்கள். ஜனாதிபதியின் ஆலோசகர் என்ற அடிப்படை யில் வாசுதேவ நாணயக்கார போன்றவர்களைத் தன் பக்கம் இழுத்துக் கொண்ட ஜனாதிபதி, கூடவே அமைச்சுப் பதவிகளை வழங்கியும் சிலரைத் தன் வசப்படுத்தினார். இதுமட்டுமல்ல. தற்போது ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கூட, ஜனாதிபதிக்கு நெருக்க மானவர்தான்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ரணிலை இறக்குவதற்கு அந்தக் கட்சிக்குள் இருந்த முக்கியமானவர்கள் முயற்சி செய்த போதிலும், அந்த முயற்சியில் இருந்து ரணிலைக் காப்பாற்றிய பெரும் பங்கு ஜனாதிபதி மகிந்தவுக்கு உண்டு. இதனால்தான் எப்போது அழைத்தாலும் ரணில் அலரி மாளிகைக்குச் செல்ல மறுப்பதில்லை. இதுபோல விமல் வீரவன்சவை ஜே.வி.பியில் இருந்து பிரித்தெடுத்தமை, சம்பிக்க ரணவக்கவுக்கு அமைச்சுப் பொறுப்புக் கொடுத்தமை என எல்லாம் இதன் பாற்பட்டதுதான். இது இவ்வாறு இருக்க அமெரிக்காவுக்கு எதிராகக் கண்டபாட்டில் கதைத்த விமல் வீரவன்சவின தும் சம்பிக்கவினதும் வாயை அடக்கி உஷ்! இனி மேல் கதைக்கக்கூடாது என்று கட்டளையிட்டதும் ஜனாதிபதிதான். இந்தக் கட்டளைக்குப்பின் மேற்கூறிய இருவரும் நா காப்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றனர்.

இதுதவிர, இந்தியாவை அடக்க சீனாவுடன் நட்புக்கொண்டது, இலங்கைக்குள் சீன ஊடுருவலுக்கு இடமளித்தமை என அனைத்தும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ஷவின் பலம் என்று கூறினால் அது மிகையன்று. இவ்வாறான அவரின் தனிப்பாதையில் தான், சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு முன்னதாக சரத் பொன்சேகாவின் மனைவி அனோமாவை அழைத்து ஜனாதிபதி மகிந்த கதைத்துள்ளார். சரத் பொன்சேகாவை விடுவிப்பதற்கு முன்னர் அனோமாவை ஜனாதிபதி சந்தித்தமை மிகப்பெரிய ராஜதந்திரம் என்றே கூறவேண்டும்.

அமெரிக்காவின் அழுத்தத்தால் பொன்சேகா விடுவிக்கப்பட்டிருந்தாலும், அனோமாவிடம் ஜனாதிபதி என்ன கூறியிருப்பார். அனோமா! நாங்கள் நெருங்கிய குடும்ப நண்பர்கள். சரத்திடம் சொல்லுங்கள். உடம்பை கவனிக்கு மாறு. சரத் விரும்பினால் எந்த நேரத்திலும் என் அரசில் அவருக்கு உயர் பதவி வழங்க முடியும். நாங்கள் சிங்க(ள) இனம். எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் புலி வந்துவிடும். ஆகையால் நாங்கள் என்றும் நட்போடு இருப்போம். இப்படித்தான் - இதைத்தான் ஜனாதிபதி சொல்லியிருப்பார். இல்லையா?

வலம்புரி
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment