அரசியல் தீர்வுத் திட்டம் என்ன? முதலில் மக்களுக்குத் தெளிவுபடுத்துக


யாழ். மே தினக் கூட்டத்தில் இரா.சம்பந்தன் சிங்கக்கொடி பிடித்த விவகாரம், தென்னிலங்கையில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.அதைத் தெரிந்துதான் செய்தேன் என்று அடம்பிடிப்பதால் சிங்களத்திற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. கொடி பிடித்து நல்லிணக்கத்தை உருவாக்கலாமென்று சம்பந்தன் கற்பிதம் கொண்டாலும் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேத்தானந்த தேரர் விடுவதாக இல்லை.வட கிழக்கு தமிழர் தாயகம் என்பது புனைக்கதை, பௌத்த கோவில்களை இடித்தே, திருக்கோணேஸ்வரமும் திருக்கேதீஸ்வரமும் கட்டப்பட்டதென தேரர் புது விளக்கம் தருகின்றார்.


திருமலை பத்திரகாளி அம்மனின் வாகனம் சிங்கம் என்பதால், பௌத்த கோவிலை உடைத்து காளி கோவில் நிர்மாணிக்கப்பட்டதாக மேதானந்த தேரர் கூற முற்படலாம்.இம் மாதத்தோடு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நிகழ்ந்து மூன்றாண்டுகள் ஆகின்றன.
இனக் கட்டமைப்புச் சிதைப்பு, கலாசார இனவழிப்பு என்கிற நிகழ்ச்சி நிரல், தம்புள்ளையிலிருந்து திருமலைப் பிள்ளையார் கோவில் வரை விரிவடைந்து செல்கிறது.வெசாக் பந்தலுக்கு அருகாமையில் மாட்டோடு செல்பவர்களின் உயிருக்கும் உத்தரவாதமில்லை.இந்நிலையில், கிழக்கு மாகாண சபையைக் கலைத்து செப்டம்பரில் புதிய தேர்தல் ஒன்றை நடத்த அரசு திட்டமிடுவதாக செய்திகள் வருகின்றன. இலங்கை அரசியல் யாப்பின் 148 ஆவது பிரிவின் கீழ், பொது நிதித்துறையின் முழுக் கட்டுப்பாடும் நாடாளுமன்றின் கைகளில் இருக்கும் நிலையில், மாகாண சபைகளுக்கான காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் என்பவற்றோடு மாகாண நிதியம் குறித்த விடயங்களும் நோக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.


1987 நவம்பரில் அரசியலமைப்புச் சட்டத்தில் இணைக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தில் நிதி ஆணைக்குழு (Financial Commission) உருவாக்கம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாணைக்குழுவில் மத்திய வங்கியின் ஆளுநர், திறைசேரி செயலாளர் மற்றும் மூவினங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் நிதி, சட்டம், நிர்வாகம், வர்த்தகம் போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெறற மூவரும் இடம்பெறுவார்கள்.


இக்குழுவுடன் ஆலோசித்து அதற்கான நிதியை வருடாந்த வரவு செலவுத் திட்டத்திலிருந்து அரசாங்கம் ஒதுக்கும். எல்லாவற்றையும், புதிதாக உருவாக்கப் படும் மாகாண நிதியத்தை (Provincial Fund),  ஜனாதிபதியும் மாகாண ஆளுநரும் நாடாளுமன்றமும் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது.ஒவ்வொரு மாகாணத்திற்கும் எவ்வளவு தொகையை ஒதுக்க வேண்டுமென்பதையும் இந்த உயர்குழுவே தீர்மானிக்கும்.


காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களைப் பற்றிப் பேசும் தமிழ் அரசியல்வாதிகள், இந்த நிதிப் பங்கீடு விவகாரம் குறித்து பேசுவதை தவிர்த்து விடுகிறார்கள்.ஆயினும் நாட்டின் திரட்டிய செல்வத்தின் நியாயமான பங்கினை, மாகாண சபைகளுக்கு கொடுப்பதற்கு நிதி ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென 13 ஆவது திருத்தச் சட்டம் கூறுவதை நடைமுறையில் கொண்டுவர வேண்டுமென அன்றைய வட கிழக்கு முதலமைச்சர் வரதராஜ பெருமாள், ஒன்றரை இலட்சம் இந்தியப் படை பக்கபலமாக இருந்த நிலையில் எதிர்பார்த்தார்.


எதுவுமே நடைபெறவில்லை. ஈழப் பிரகடனத்தை வெளியிட்டு இந்தியாவிற்கு சென்று விட்டார் வரதராஜா பெருமாள்.


பொறுப்புக் கூறும் தன்மையற்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற மறுப்பது போன்று, தாமே உருவாக்கிய 13 ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட நிதி ஆணைக்குழுவினை நிறுவ அன்று மறுத்திருந்தது அரசு.


18 ஆவது திருத்தச் சட்டமானது, சகல ஆணைக்குழுக்களின் ஏகபோக அதிகாரத்தை ஜனாதிபதியின் கரங்களில் ஒப்படைத்துள்ள நிலையில், 13 ஆவது திருத்தச்சட்டத்தில் சொல்லப்பட்ட ஆணைக்குழுக்களுக்கு என்ன நடைபெறுமென்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை.


அரசியல் யாப்பில் 2001 இல் இணைக்கப்பட்ட 17 ஆவது திருத்தச் சட்டத்தினை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவருமாறு வலியுறுத்தும் கூட்டமைப்பின் புதிய பங்காளிக் கட்சியான யூ.என்.பி.க்கு, அதிக பெரும்பான்மையோடு 2010 இல் நிறைவேற்றப்பட்ட 18 ஆவது திருத்தச் சட்டம் நினைவில் இல்லை போல் தெரிகிறது.


13 ஆவது திருத்தச்சட்டம் அரசியல் தீர்விற்கான அருமருந்தென வியாக்கியானமளிப்போர், புதிதாக முளைத்த 18 ஆவது திருத்தச்சட்டம் பற்றி மக்களுக்கு விளக்க வேண்டும்.


அதிகாரப் பகிர்விற்கும் (Power Sharing), அதிகாரப் பரவலாக்கத்திற்கும் (Devolution of Power) இடையிலுள்ள வேறுபாட்டினை துல்லியமாக புரிந்து கொள்ள வேண்டுமாயின், 13 ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள முக்கிய அமசங்களான காணி, காவல்துறை, நிதி போன்ற மூன்று விடயங்களை அவதானித்தாலே போதும்.


பெரும்பான்மை இனத்தின் ஒட்டுமொத்த இலங்கையின் இறைமையை, ஏனைய தேசிய இனங்களேõடு பகிர்ந்து கொள்ள சிங்களம் விரும்பவில்லை என்பது புரியும்.


எதனையும் தீர்மானிக்கும் இறுதியானதும் உறுதியானதுமான அதிகாரம், மத்தியில் இருக்க வேண்டும் என்பதுதான் இந்தப் பகிர்வு, பரவலாக்கம் என்கிற மயக்கமான வார்த்தைகள் ஊடாகப் புரியப்படுகிறது.


"இலங்கையின் தேசிய செல்வத்தை பங்கிட மறுக்கும் சிங்கள தேசம்' என்கிற தலைப்பிற்கு 2004 நவம்பரில் 'தராக்கி' சிவராம் வீரகேசரி வார இதழில் எழுதிய கட்டுரையையும், 13 ஆவது திருத்தச் சட்டம் ஒரு 'நகைச்சுவை அரங்கம்' என்று நடேசன் சத்தியேந்திரா அவர்கள் எழுதிய ஆழமான விமர்சனக் கட்டுரையையும் இப்போது மீண்டும் வாசிப்பது அவசியமாகிறது. 

அதில் ""தேசிய செல்வத்தின் மீதான ஏகபோக உரிமையை அனுபவிப்பவர்கள், ஏனைய அரசியல் சுக போகங்களையும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்'' என்பதோடு, ""தேசிய செல்வத்தில் நியாயமான உரிய பங்கினை ஒரு பகுதியைத் தானும் எவ்வாறு செலவிடுவதெனத் தமிழரே தீர்மானிப்பதற்கான ஒரு கட்டமைப்பை (இடைக்கால தன்னாட்சி அதிகார சபை) பற்றியே விடுதலைப்புலிகள் பேசினார்கள்'' என்றும் தராக்கி குறிப்பிடுகின்றார்.


இவை குறித்து தமிழ் அரசியல்வாதிகள் கரிசனை கொள்வது போல் தெரியவில்லை.நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்குள் செல்ல வேண்டுமா? சிங்கக் கொடியை ஏந்த வேண்டுமா? மாகாணசபைத் தேர்தலில் குதிக்க வேண்டுமா? என்பது குறித்தே அதிகம் விவாதிக்கின்றார்கள்.


ஆனாலும் சர்வதேச அழுத்தங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள ஆட்சியாளர்கள் விரிக்கும் இராஜதந்திர வலைக்குள், தாமாகவே விழும் வகையில் இவர்கள் நகர்வது போலுள்ளது.


வட மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு மேற்குலகம் அழுத்தம் கொடுக்கும்போது கிழக்கில் தேர்தலை நடத்த முயல்கிறது அரசு. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றச் சொன்னால், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்குள் வாருங்களென்று ரவூப் ஹக்கீம் ஊடாக தூதனுப்புகிறது இலங்கையரசு.


ஆனாலும் சம்பந்தன் சுமந்திரனைப் பொறுத்தவரை, இந்திய -மேற்குலகின் நிகழ்ச்சி நிரலை தாம் புரிந்து கொண்டதாகக் கற்பிதம் கொண்டு, அதற்கேற்ற வகையில் தமது இராஜதந்திர காய் நகர்த்தலை மேற்கொள்வதாக கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும் கூற முற்படுகிறார்கள்.


கொடி பிடித்த விவகாரத்தை நியாயப்படுத்தும் இவர்களின் நிலைப்பாடும் இதன் ஒரு அங்கமே .


வாக்களிக்கும் உரிமை மக்களுக்கு உண்டு. எதற்காக வாக்களிக்கிறோம் என்பதைக் கேட்கும் உரிமையும் அவர்களுக்கு உண்டு.ஆகவே, மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு முன்பாக அரசியல்தீர்வுத் திட்டம், அதற்கான வேலைத் திட்டம் என்பதை மிகத் தெளிவாக மக்கள் முன்வைக்க வேண்டும்.


ஏனெனில், முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திற்கும் தற்போது பேசுவதற்கும் பாரிய இடைவெளி காணப்படுகிறது.


 இதயச்சந்திரன்நன்றி- வீரகேசரி
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment