ஏமாற்றி விட்டது சிறிலங்கா அரசு – ஒரு முன்னாள் இராணுவ ஆய்வாளரின் ஆதங்கம்

வன்னிப் பெருநிலப்பரப்பு இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது. யுத்தத்தை வெற்றி கொண்ட தரப்பு சிறிலங்காவில் வாழும் ஏனைய சமூகத்தவர்களை அடக்கி ஆள்கிறது. யாழ்ப்பாணத்தில் அரசியற் செயற்பாடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வடக்கில் மீளிணக்கப்பாட்டு முயற்சி மிக மோசமாக காணப்படுகின்றது. இவ்வாறு லக்பிம நியூஸ் வாரஇதழில் எழுதியுள்ளார் ரங்க ஜெயசூரிய. லக்பிம நியூஸ் ஏட்டில் முன்னர் பாதுகாப்பு நிலவரப் பத்தியை எழுதி வந்த இவர், சிறிலங்கா அரசினால் முன்னெடுக்கப்பட்ட போரை வலுவாக ஆதரித்து வந்தவர். 

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட மூன்றாம் ஆண்டு யுத்த வெற்றி விழா மே 19 அன்று கொண்டாடப்பட்டது. யுத்த வெற்றி விழாக் கொண்டாடத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் அணிவகுப்பு நிகழ்வு இடம்பெற்றது. இந்த அணிவகுப்பு நிகழ்வில் 852 அதிகாரிகள் உள்ளடங்கலாக 13,680 சிறிலங்கா பாதுகாப்பு படையினர் மற்றும் காவற்துறையினர் கலந்து கொண்டனர். 


சிறிலங்கா பாதுகாப்பு படை டிவிசன்கள் தமது கொடிகளை ஏந்தியவாறு அணிவகுப்பில் ஈடுபட்டதுடன், பிரதான யுத்த ராங்கிகள் மற்றும் கிபிர் விமானங்களின் அணிவகுப்பு என்பன ஒருசேர இந்த இராணுவ அணிவகுப்பு இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இராணுவ தளபாடங்களில், 148 யுத்த தாக்குதல் வாகனங்களும், 72 கடற்கலங்களும், 32 வான்கலங்களும் உள்ளடங்கியிருந்தன. 

சிறிலங்கா இராணுவம் மீளவும் புதுப்பிக்கப்பட்டு, நவீன இராணுவ நிலைக்கு தரமுயர்த்தப்பட வேண்டும் என்ற பொதுவான நிலைப்பாடு காணப்பட்டாலும் கூட, யுத்த வெற்றியின் போது காண்பிக்கப்பட்ட இராணுவ அணிவகுப்பு மற்றும் கண்காட்சி என்பன சிறிலங்கா இராணுவத்தின் தற்போதைய தரத்தைக் காண்பித்தது. 

சிறிலங்கா தீவின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக தமது உயிர்களையும், உடல் உறுப்புக்களையும் அர்ப்பணித்திருந்த யுத்த வீரர்களை மதிப்பளித்து, அவர்களைக் கௌரவிக்கும் வகையிலேயே இராணுவ அணிவகுப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

சிறிலங்காவில் தொடர்ந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் இராணுவ நடவடிக்கையில் வீரத்துடன் செயற்பட்டு தமது உயிர்களை அர்ப்பணம் செய்திருந்த 15 சிறிலங்கா பாதுகாப்பு படையினருக்கு, உயர் இராணுவ விருதான 'பரம வீர விக்ரம விபூசன' வழங்கி அவர்களின் தியாகம் மதிப்பளிக்கப்பட்டது. 

இவ்வாறு மதிப்பளிக்கப்பட்டவர்களுள் 13 இராணுவ வீரர்களும், கடற்படையைச் சேர்ந்த ஒருவரும், வான்படையைச் சேர்ந்த ஒருவரும் உள்ளடங்குகின்றனர். 


எவ்வாறெனினும், அதிக எண்ணிக்கையில், பெருமெடுப்பில், பெருமளவான இராணுவ வளங்களுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த இராணுவ அணிவகுப்பு, யுத்த வெற்றியைப் பெற்றுக் கொண்ட ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது சிறிலங்கா தன்னை விதிவிலக்காக காட்டுவதற்கான ஒரு செயற்பாடாகவே நோக்கப்படுகின்றது. 

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் புலிகள் அமைப்பைத் தோற்கடித்த சிறிலங்கா அரசாங்கம் அந்த வெற்றியை பெரியளவில் காண்பித்து வருகிறது. மிக மோசமான, மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பைத் தோற்கடித்த நாடாக சிறிலங்கா மட்டும் காணப்படவில்லை. 

பெரு அரசாங்கம் தனது நாட்டில் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட இடதுசாரி அமைப்பான் ‘சைனிங் பாத்‘தைத் தோற்கடித்து அதன் தலைவரை சிறையில் அடைத்த பெருமையைக் கொண்டுள்ளது. இதேபோன்று, ஸ்பெயின் அரசாங்கம் ETA என்ற கிளர்ச்சி அமைப்பைத் தோற்கடித்தது. 

சியாராலியோனின் புரட்சிகர ஐக்கிய முன்னணி என்ற அமைப்பு ஆபிரிக்க அரசாங்கப் படைகள் மற்றும் பிரித்தானிய இராணுவத்தினரின் உதவியுடன் தோற்கடிக்கப்பட்டது. 

சிறிலங்காவுக்கு அருகில், இந்தியா காலிஸ்தான் என்ற சீக்கியர்களுக்கான தனிநாட்டை அமைத்துக் கொடுப்பதற்கான பரப்புரையில் ஈடுபட்டிருந்த சீக்கிய மிதவாதிகளைத் தோற்கடித்தது. 


நோர்மண்டித் தரையிறக்கம், நாசி ஜேர்மனி மற்றும் பாசிச ஜப்பான் மீதான கூட்டு வெற்றி கொண்டாடப்பட்டதைப் போன்றே, மே 19 அன்று சிறிலங்காவில் யுத்த வெற்றி விழாவும் கொண்டாடப்பட்டது. 

ஒரு நாட்டில் நிலவும் ஆட்சி அதிகாரம் சட்டரீதியாக, அரசியலமைப்பின் பிரகாரம் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துகின்ற ஒன்றாகவே யுத்த வெற்றிக்கான இராணுவ அணிவகுப்பு கருதப்படுகின்றது. 

சிறிலங்காவில் தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கம், தனக்கு முன்னைய அரசாங்கங்களால் சாதிக்க முடியாத ஒன்றை, தான் சாதித்து விட்டதை பறைசாற்றுகின்ற விதமாகவே யுத்த வெற்றி விழாவைக் கொண்டாடியுள்ளது. 

அதாவது விடுதலைப் புலிகள் அமைப்பை தனக்கு முன்னைய அரசாங்கங்கள் எவையும் தோற்கடிக்க முடியவில்லை என்றும், ஆனால் தன்னால் தோற்கடிக்க முடிந்ததாகவும் தற்போதைய ராஜபக்ச அரசாங்கம் மமதை கொள்கின்றது. 

யுத்தம் என்பது அரசியலின் 'நீட்சியாகப்' பார்க்கப்படுகின்றது. ஆனாலும் இராணுவ வெற்றி என்பது உண்மையில் முற்றாக முடிவடைந்த ஒன்றல்ல. 

இறுதி இராணுவ வெற்றி நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த உதவுகின்றது. இதுவே இறுதி இராணுவ வெற்றியின் நோக்காகும். 

அரசியல் மற்றும் இராஜதந்திரம் என்பன யுத்தம் ஒன்றின் இறுதியில் விடுபட்டவற்றை ஒன்றிணைக்கின்ற திறன் என இராணுவ கருத்தியல்வாதியான Clausewitz குறிப்பிட்டுள்ளார். 

சிறிலங்காவைப் பொறுத்தளவில், நாங்கள் பெற்றுக் கொண்ட இராணுவ வெற்றி இந்த நாட்டில் எவ்வாறான நிலையான அரசியற் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதற்கேற்ப வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் பல்வேறு சிக்கலான வினாக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் கூட, இன்னமும் நிலையான அமைதி என்பது நீண்ட தூரத்திலேயே காணப்படுகின்றது. 


இதற்கு முன்னர் சிறிலங்காவில் அமைதியை ஏற்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு போன்ற சில ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் சிறிலங்கா அதிபரின் அலுவலகத்தில் தூசிபடிந்து காணப்படுகின்றன. 

சிறிலங்காவின் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்காக, அண்மையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் அமெரிக்கா தலைமையில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட்டது. 

சிறிலங்கா தீவில் நிலையான அரசியற் தீர்வொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் நாடாளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கப்பட்ட போதிலும், தமிழர்களின் பிரதான அரசியற் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது. 

இத் தெரிவுக் குழு என்பது மேலும் தமிழ் மக்களுக்கு அரசியற் தீர்வொன்றை முன்வைக்காது காலத்தை இழுத்தடிப்பதற்கான தந்திரோபாயமாகக் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் குற்றம் சாட்டியிருந்தார். 

இந்நிலையில், கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களில் எவற்றை நடைமுறைப்படுத்துவது எனத் தீர்மானிப்பதற்காக அண்மையில் சிறிலங்கா அரசாங்கம், சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க தலைமையில் பிறிதொரு ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு எந்தவொரு முடிவுமின்றி தொடர்ச்சியாக ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுவது மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்காவின் வடக்கில் முதலீடுகளை மேற்கொள்ளுதல் மற்றும் உள்ளுர் பொருளாதாரத்தை மீளவும் முன்னேற்றுதல் போன்ற அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்ள முடிகின்றது என்பது நிச்சயமான உண்மை. 

யுத்தம் முடிவடைந்ததில் இருந்து சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களின் பொருளாதார வளர்ச்சி மிகத் துரிதமானதாகக் காணப்படுகின்றது.எவ்வாறெனினும், பல்வேறு இடப்பெயர்வுகளைச் சந்தித்து இறுதியில் மெனிக் பாம் முகாங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் என்பது சாத்தியமற்றதாக காணப்படுகின்றது. 

வன்னியைப் பார்வையிடச் செல்பவர்கள் அங்கு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களைக் காணமுடியும். முல்லைத்தீவு மற்றும் யுத்தம் இடம்பெற்ற ஏனைய பகுதிகளில் வீதிகள் மற்றும் பாலங்கள் என்பன மீள்புனரமைக்கப்படுகின்றன. 

பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும், தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் கேள்விக்குறியாக காணப்படுகின்றது. மெனிக்பாமிலிருந்து குடியேற்றப்பட்டவர்களுக்கான நிரந்தர வீடுகள் இன்னமும் அமைத்துக் கொடுக்கப்படவில்லை. 

தற்போது மெனிக்பாமில் எஞ்சியுள்ள 6000 பேரையும் குடியேற்றிய பின்னர் அடுத்த மூன்று மாதங்களுக்குள் இம் முகாம் மூடப்பட்டு விடும் என இவ்வாரம் USAID அமைப்பின் பிரதி இயக்குனர் ரெக்கோர் கப்ளினுடனான (Trekor Hublin) சந்திப்பின் போது சிறிலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் தெரிவித்திருந்தார். 

எவ்வாறெனினும், தமிழ் மக்களின் வாழ்வை மீளவும் முன்னர் போல் கட்டியெழுப்புவதற்கு மேலும் ஐந்து ஆண்டுகள் தேவைப்படும் என அவர் குறிப்பிட்டிருந்தார். சுனாமியால் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்கான மீள்புனர்வாழ்வுச் செயற்பாடு மிக வேகமாகப் பூர்த்தியாக்கப்பட்டது. தென் பகுதிக் கரையோரத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைத்துக் கிராமங்களும் விரைவில் புனரமைக்கப்பட்டது. 

ஆனால் இதனுடன் ஒப்பிடும் போது கடந்த மூன்று ஆண்டுகளில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கான மீள் புனர்வாழ்வுச் செயற்பாடுகள் மந்தநிலையில் காணப்படுகின்றது. யுத்தம் முடிவடைந்த கையோடு பெரும்பாலான உள்ளுர் மற்றும் அனைத்துலக தொண்டர் அமைப்புக்கள் சிறிலங்காவின் வடக்கில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்காக முன்வந்தனர். 

இருந்தும் இந்நிறுவனங்கள் மீது பல்வேறு தடைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. சிறிலங்கா அரசாங்கம் இந்நிறுவனங்களின் செயற்பாடுகள் மீது பல்வேறு கட்டுப்பாடுகளைப் போடுவதால் இவை சுதந்திரமாக, விரைவாக தமது திட்டங்களை நிறைவு செய்ய முடியாது உள்ளனர். 

சிறிலங்கா அரசாங்கத்தின் இவ்வாறான கோட்பாட்டின் விளைவானது போரால் பாதிக்கப்பட்ட மூன்று இலட்சம் தமிழ் மக்களின் வாழ்வில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

யுத்தம் இடம்பெற்ற வன்னிப் பெருநிலப்பரப்பு தற்போது இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது. யுத்தத்தை வெற்றி கொண்ட தரப்பு சிறிலங்காவில் வாழும் ஏனைய சமூகத்தவர்களை அடக்கி ஆள்கின்றது. 

யாழ்ப்பாணத்தில் அரசியற் செயற்பாடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

சிறிலங்காவின் வடக்கில் உள்ள இராணுவ உயர் மட்டத்தவர்களின் இரண்டாவது ஊதுகுழல்களாக அரச அதிகாரிகள் காணப்படுகின்றனர். 

இந்நிலையில் வடக்கில் மீளிணக்கப்பாட்டு முயற்சி என்பது மிக மோசமாக காணப்படுகின்றது. 

பயங்கரவாத அமைப்புக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை மக்களின் சுதந்திரம் மற்றும் சிறிலங்கா அரசின் சுதந்திர ஜனநாயக செயற்பாடுகளுக்கு தடையாக உள்ளது. 

பயங்கரவாதத்தை தோற்கடித்த பல்வேறு நாடுகள் தமது நாடுகளில் மீண்டும் பயங்கரவாதம் வேரூன்றாது தடுப்பதற்காக மிகத் துரிதமாக ஜனநாயக சார் அமைப்புக்களை பலப்படுத்தியுள்ளன. 

இதிலும் சிறிலங்காவின் செயற்பாடானது விதிவிலக்காக காணப்படுகின்றது. 

சிறிலங்காவில் தற்போது காணப்படும் பதினெட்டாவது திருத்தச் சட்டம் சிறிலங்கா அதிபருக்கு பல்வேறு அதிகாரங்களை வழங்குகின்றது. 

இத்திருத்தச் சட்டத்தின் மூலம், சிறிலங்கா அதிபர் எத்தனை தடவையாயினும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும். 

ஆனால் சிறுபான்மை மக்களின் அரசியற் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிவகைகள் இதில் ஆராயப்படவில்லை. 

நாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற அதேவேளை இதன் விளைவாக, அரசாங்க எதிர்ப்பாளர்கள், குற்றவாளிகள் போன்றவர்களும் வெள்ளை வான்களில் கடத்தப்படுகின்றனர். 

மனிதஉரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊடக விமர்சகர்கள் போன்றோர் 'தேசத்துரோகிகள்' என முத்திரை குத்தப்படுகின்றனர். 

இவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கை மக்களால் அடியோடு வெறுக்கப்படுகின்றன. எதிரிகள் குறித்த பயம் மேலும் அதிகரித்துள்ளது. 

யுத்தம் முடிவுற்ற போது வழங்கிய வாக்குறுதிகளை- யுத்தம் முடிவுற்று மூன்று ஆண்டுகள் முடிவடைந்த பின்னரும் நிறைவேற்ற சிறிலங்கா தவறியுள்ளது.

Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment