கைதிகளின் போராட்டம் சக்திமிக்கதாக மாற்றப்பட்டமைக்கு அது வெகுஜன மயப்படுத்தப்பட்டமை முக்கியமாகும். எனவே எதிர்காலத்தில் இம்முறை வவுனியாவில் இடம்பெற்ற போராட்டம் போன்று யாழ்ப்பாணம், மன்னார், திருமலை, மட்டக்களப்பு எனத் தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகள் எங்கும் நடத்தப்பட்டு ஒரு பேரெழுச்சி அலை உருவாக வேண்டும்.
இலங்கைச் சிறைகளில் தம்மை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியோ அல்லது தம்மீதான விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரியோ தமிழ் அரசியல் கைதிகள் பலமுறை போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
ஒவ்வொரு முறையும் உணவு தவிர்ப்புப் போராட்டங்கள் மேற்கொள்ளப்படுவதும் சிலர் உயிராபத்தான நிலைக்குள் தள்ளப்படுவதும் அரசியல்வாதிகள் அங்கு சென்று சில வாக்குறுதிகளை வழங்குவதும் பின் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படுவதும் தொடர் கதையாகவே நிகழ்ந்து வருகிறது. ஆனால் கைதிகளுக்கு வழங்கப்படும் வாக்குறுதிகள் எவையுமே நிறைவேற்றப்படுவதில்லை.
முன்னாள் இராணுவத்தளபதியும் முப்படைகளின் தலைமை அதிகாரியுமான சரத் பொன்சேகா ஜனாதிபதியின் விசேட அதிகாரங்களின் பேரில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நிலைமையில் கடந்த 14 ஆம் திகதி தமிழ்க் கைதிகள் தம்மையும் விடுதலை செய்யக் கோரி உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டம் ஏழு நாள்கள் தொடர்ந்து சிலர் ஆபத்தான நிலையை எட்டியபோது நாடாளுமன்றத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஒரு மாதத்துக்குள் கைதிகளின் விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார் என்று கூறியதன் பேரில் கடந்த 24 ஆம் திகதி கைதிகளின் போராட்டம் ஒரு மாத காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டு உணவு தவிர்ப்பு கைவிடப்பட்டது.
கைதிகளின் போராட்டம் தொடங்கப்படுவதும் அது ஒரு கட்டத்தை எட்டும் போது சில வாக்குறுதிகள் வழங்கப்பட்டு அது கைவிடப்படுவதும் நாம் ஏற்கனவே சந்தித்த ஏமாற்றமளிக்கும் சம்பவங்கள்தான். இம்முறையும் கைதிகள் ஏமாற்றப்பட்டு விட்டனரோ என்ற சந்தேகம் எழுமானால் அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. ஏனெனில் இலங்கையின் ஆட்சியாளர்களுக்குத் தாங்கள் கொடுத்து வாக்கையே கைவிடுவதும் அதற்குக் காரணங்கள் தேடிக் கண்டு பிடிப்பதும் கைவந்த கலை.
அதற்கேற்ற வகையிலேயே அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா உரையாற்றும்போதும் அமைச்சரவை முடிவை அறிவிக்கும் கூட்டத்தில் லக்ஷ்மன் பிரியதர்சன யாப்பா உரையாற்றும் போதும் இலங்கையில் அரசியல் கைதிகள் என எவருமே இல்லை எனவும் தடுத்து வைக்கப்பட்டவர்கள் பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்டவர்கள் எனச் சந்தேகிக்கப்படுவர்களே எனவும் தெரிவித்துவிட்டனர்.
எனினும் இம்முறை சூழ்நிலை அவ்வளவு இலகுவாக இல்லை என்பதை அவர்கள் ஓரளவுக்குப் புரிந்து கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது. அதற்கு முக்கியமான காரணம் அரச தரப்பினர் எவ்வளவுதான் பயங்கரவாதம் என உரக்கக் குரலெழுப்பினாலும் இலங்கையில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களையும் சர்வதேசம் உற்று நோக்கத் தொடங்கிவிட்டது என்பது நிதர்சனமாகும். இலங்கையின் திட்டமிட்ட இன ஒடுக்குமுறை நடவடிக்கைகள் இன்று பல்வேறு வழிகளிலும் அம்பலப்படுத்தப்பட்டுவிட்டன.
உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில நாள்களிலேயே ஐரோப்பிய ஒன்றியம் தமிழ்க் கைதிகளின் விடுதலை தொடர்பாக நியாயபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கையைக் கேட்டுள்ளது. இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் ஐரோப்பிய ஒன்றியம் பிரதான பங்கை வகிப்பதால் இலங்கை நேரடியாக அதன் கோரிக்கையை நிராகரித்துவிட முடியாது. அதேவேளையில் ஏதாவது நொண்டிச் சாட்டை முன்வைத்து இலங்கை அந்தக் கோரிக்கையை தீர்ந்துப் போக வைக்காது என்று சொல்லிவிடவும் முடியாது.
முன்னைய கைதிகளின் போராட்டத்தைவிட இம்முறை உரிமை மிக்கதாகவும் அரசு நாடாளுமன்றத்திலேயே சில நடவடிக்கைகள் தொடர்பாக அறிவித்தல் விடும் வகையிலும் இருந்தமைக்குச் சில முக்கிய காரணங்கள் உள்ளன.
முதலாவது காரணம் பத்துச் சிறைகளிலுள்ள தடுத்து வைக்கப்பட்ட 526 கைதிகளில் அரைவாசிக்கு மேற்பட்டோர் ஒரேநாளில் ஒரே நேரத்தில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் இறங்கியமை. சிறைச்சாலை நிர்வாகங்களையும் அரச தரப்பினரையும் அதிர வைத்ததில் ஆச்சரியமில்லை. இது சர்வதேச அளவில் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இன ஒடுக்குமுறை என்பவற்றில் அம்பலப்பட்டுப் போயுள்ள அரசுக்கு இவ்வளவு பெருந்தொகையானோர் போராட்டத்தில் குதிப்பது பல நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
இரண்டாவது, போராட்டம் நடந்து கொண்டிருந்த அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தப் பிரச்சினையை ஒத்திவைப்புப் பிரேரணை மூலம் நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்தது. ஊடகங்கள்கூட அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் எழுந்தது. அதுமட்டுமன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பதில் தரவேண்டிய தேவையையும் நிராகரிக்க முடியாமல் போய்விட்டது. கைதிகளின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியமையும் மனோகணேசனும் அவரின் கட்சியும் கலந்துகொண்டமையும் பெரும் அதிர்வை ஏற்படுத்தின.
மூன்றாவது தமிழ் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவு வழங்க வவுனியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம். அது நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுக்கப்பட்டாலும் தமிழ்க் கைதிகள் விடுதலை தொடர்பாகச் சிங்கள மக்களை அக்கறை காட்ட வைத்தமை அரசுக்கு ஒரு நல்ல அறிகுறியாகத் தோன்றியிருக்க முடியாது.
எப்படியிருப்பினும் இம்முறை கைதிகளின் போராட்டம் என்பது சிறைச்சாலை மதில்களுக்குள் முடங்கி விடவில்லை. அது நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. மக்கள் போராட்டமாகவும் விரிவடைந்தது. இதுவே இம்முறை இப்போராட்டத்துக்கு ஒரு தனித்துவமான வலிமையைக் கொடுத்திருந்தது.
எனவே இம்முறை கைதிகள் நடத்திய தமது விடுதலைப் போராட்டத்திலிருந்தும் அதன் எதிரொலியாக வெளியில் இடம்பெற்ற போராட்டங்களிலிருந்தும் நாம் நிறையவே கற்றுக் கொள்ள வேண்டியுள்ளன. தமிழ்க் கைதிகள் தங்கள் கோரிக்கை தொடர்பாகவும் அதைப் பொறுவதிலும் காட்டிய உறுதிப்பாடு முக்கியமானது. ஏறக்குறைய ஒன்பது பேர் ஆபத்தான நிலையை எட்டியபோதும் ஒருவர் கூட உறுதி குலையவில்லை. அந்தப் போராட்டத்தை முறியடிக்க சிறைக்குள் பலவிதமான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டிருக்கும். கைதிகள் மத்தியில் பிளவுகளையும் முரண்பாடுகளையும் ஏற்படுத்தச் சதிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும். அவற்றையெல்லாம் மீறி அவர்கள் போராட்டத்தை உறுதியாக முன்னெடுத்தனர். அதுமட்டுமன்றி ஏழாவது நாளில் மேலும் 92 பேர் களத்தில் இறங்கினர். அதாவது போராட்டம் சிறைக்குள்ளேயே விரிவடையும் நிலை தோன்றியது.
அங்கு தமிழ்க் கைதிகளின் உறுதிப்பாடு என்பது முக்கியமானது. ஏனெனில் போராட்டத்தின் அடிப்படையே அவர்கள்தான். இனப்பிரச்சினை தொடர்பாக அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையே இடம்பெற்ற பேச்சுக்கள், அவை ஒரு வருடமாக இழுபட்டும் எந்த முடிவும் எட்டப்படாமலும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமலும் இருந்த நிலையில் அரசு அதைப் புறமொதுக்கிவிட்டு நாடாளுமன்றத் தெரிவுக்குழு என்ற மாயையை முன்வைத்தமை, நல்லிணக்க ஆணைக்குழுவை தானே நியமித்துவிட்டு அவற்றின் பரிந்துரைகளை நிறைவேற்றாமை என்பன போன்றே தமிழ்க் கைதிகளுக்கும் வழங்கப்பட்ட ஒரு மாத கால அவகாச வாக்குறுதி கைவிடப்படலாம் அல்லது திசைதிருப்பப்படலாம்.
அப்படியான ஒரு நிலையில் கைதிகள் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்கும் நிலை தோன்றலாம். எனவே நாம் இம்முறை இடம்பெற்ற போராட்டத்தில் கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் செயற்பட வேண்டும். குறிப்பாகத் தமிழ் மக்களின் தலைமைச் சக்தியாக விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தப் போராட்டத்துக்கு தலைமை கொடுத்து அதை வெகுஜன மயப்படுத்தவேண்டும். தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர்கள் என்ற அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குரலுக்கு எவரும் செவி கொடுக்காமல் இருக்க முடியாது.
அடுத்து நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாகக் கைதிகள் விடுதலை தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குரல் கொடுக்க வேண்டும். இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவும் திரட்டப்பட வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, நவசமஜமாஜக் கட்சி என்பன மேதினம் நடத்த எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பாக இணைய முடியுமானால் தமிழ்க் கைதிகளின் விடுதலைக்கு ஏன் இணைய முடியாது? நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் இவ்விடயத்தில் குரல் கொடுக்கும் வண்ணம் தூண்டப்பட வேண்டும்.
தமிழ் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் வெற்றிக்கு மட்டும் பயன்படும் சக்திகளாக மட்டுப்படுத்தக் கூடாது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நேர்மையாகக் குரல் கொடுக்கும் நிலைக்கு ஐ.தே.க.வைக் கொண்டு வர வேண்டும். அப்படிச் செய்வது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவிர்க்க முடியாத கடமை.
இம்முறை கைதிகளின் போராட்டம் சக்திமிக்கதாக மாற்றப்பட்டமைக்கு அது வெகுஜனமயப்படுத்தப்பட்டமை முக்கியமாகும். எனவே எதிர்காலத்தில் இம்முறை வவுனியாவில் இடம்பெற்ற போராட்டம் போன்று யாழ்ப்பாணம், மன்னார், திருமலை, மட்டக்களப்பு எனத் தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகள் எங்கும் நடத்தப்பட்டு ஒரு பேரெழுச்சி அலை உருவாக வேண்டும்.
அவ்வாறே தென்னிலங்கையிலும் கைதிகளுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, நவசமசமாஜக்கட்சி என்பனவற்றால் போராட்டங்கள் நடத்தப்படவேண்டும். இப்படியாகப் போராட்டத்தை விரிவுபடுத்த வேண்டிய கடமையும் தகைமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே உண்டு. அது எதிர்காலத்தில் எமது உரிமைப் போராட்டத்துக்கு ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்கும் என்பதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவுக்குப் பெரும் ஆதரவை வழங்கினர். அவர் தமிழ் மக்களுக்கு எதிரான போரை வழி நடத்தியவர் என்பதை தமிழர்கள் மறந்துவிடாத போதிலும் தொடர்ந்து அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடும் மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு ஒரு மாற்று சக்தியாக பொன்சேகாவை அவர்கள் எதிர்பார்த்தனர். அதுமட்டுமன்றி அவரும் சிறைவாசம் அனுபவித்தவர்.
தனக்கு வழங்கப்பட்ட தண்டனை நியாமற்றது எனக் கூறி மேன்முறையீடு செய்தவர். எனவே தமிழ்க் கைதிகள் விடுதலைக்கான போராட்டத்தில் அவருக்கும் பங்களிக்க வேண்டிய கடப்பாடு உண்டு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் தலைமைச் சக்தியாகத் தொடர்ந்து தன்னை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் தமிழ்க் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஐக்கியப்படுத்தக் கூடிய சகல சக்திகளையும் ஐக்கியப்படுத்திப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். தொடர்ந்து தமிழ் மக்களின் சக்தி ஜனாதிபதிகளையும் பிரதமர்களையும் உருவாக்குமளவுக்கு மட்டுப்படுத்தப்படக் கூடாது. அவர்களையும் தமிழ் மக்களுக்காகக் களத்தில் இறக்க வேண்டும். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலையாய உடனடிக் கடமையாகும்.
இதை அவர்கள் செய்யத் தவறினால் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் ஓர் அரிய சந்தர்ப்பத்தை தவற விட்ட குற்றத்துக்கு ஆளாக வேண்டிவரும்.
உதயன்
0 கருத்துரைகள் :
Post a Comment