சிறிலங்கர்களின் விவகாரத்தில் நீதியை வழங்குதல், பரிந்துரையை முன்வைத்தல் அல்லது இது தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்தல் என எந்தவொன்றைச் செய்வதற்கும் இவர்களுக்கு தார்மீக ரீதியான அதிகாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது மிக முக்கியமானதாகும்.இவ்வாறு சிங்கள ஊடகரான Malinda Seneviratne கொழும்பை தளமாகக் கொண்ட Colombo Telegraph என்னும் ஊடகத்தில் எழுதியுள்ளார்.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் மற்றும் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் ஆகிய இருவரும் சிறிலங்கா சமாதான நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்கான செயற்திட்டத்தில் இணைந்து பணியாற்றுவதற்கான உடன்பாட்டை எட்டியுள்ளனர். கடந்த செவ்வாயன்று, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகிய இருவருக்கும் இடையில் புதுடில்லியில் மேற்கொள்ளப்பட்ட சந்திப்பிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
ஹிலாரி கிளின்ரனோ அல்லது மன்மோகன் சிங்கோ சிறிலங்காவில் வாழும் மக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அல்ல என்பது முதலாவது விடயமாகும். சிறிலங்கா விடயத்தில் அதன் சமாதான நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்கான எந்தவொரு ஆணையையும் இவ்விருவரும் வழங்கியிருக்கவில்லை. அல்லது 'சமாதான நடவடிக்கை' என்பதன் கருத்து என்ன என்பதை விளங்கப்படுத்த வேண்டிய நிலைக்கு இவ்விருவரும் தள்ளப்படவில்லை. சிறிலங்கர்களின் விவகாரத்தில் நீதியை வழங்குதல், பரிந்துரையை முன்வைத்தல் அல்லது இது தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்தல் என எந்தவொன்றைச் செய்வதற்கும் இவர்களுக்கு தார்மீக ரீதியான அதிகாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது மிக முக்கியமானதாகும்.
இவ்வாண்டு மார்ச் மாதத்தில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் அமெரிக்கா தலைமையில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு இந்தியா தனது ஆதரவை வழங்கியிருந்தது. இத்தீர்மானத்தை சிறிலங்கா எதிர்த்திருந்தது. அமெரிக்காவின் இந்நகர்வானது நட்புக்கு தீங்கு விளைவிக்கின்ற ஒன்றாக நோக்கப்பட்டது. சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவில் இது பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்பட்டது.
கடந்த கால வரலாற்றை நோக்கினால், நிதியளித்தல், ஆயுத உதவி வழங்கியமை, பயிற்சி வழங்கியமை மற்றும் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் வழங்கியமை போன்றவற்றின் மூலம் சிறிலங்காவின் 'சமாதான நகர்வை' இந்தியாவானது துரிதப்படுத்தியிருந்தது. புலிகள் அமைப்பைத் தோற்கடிப்பதை தடுப்பதற்காக இந்தியாவானது 1987ல் எவ்வாறான முயற்சியைக் கைக்;கொண்டது என்பது தொடர்பாக நாம் பார்க்க முடியும். இந்தியாவானது இவ்வாறானதொரு நடவடிக்கையின் மூலம் சிறிலங்காவில் பல உயிர்களை விலையாகக் கொடுத்து முடிவுக்கு கொண்டு வரப்பட்ட யுத்தத்தை மேலும் 22 ஆண்டுகாலம் வரை நீட்டித்திருந்தது. அதாவது இந்தியா 1987ல் முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டிய சிறிலங்காப் போர் தற்போது அதிலிருந்து 22 ஆண்டுகளின் பின்னர், மனிதர்களின் உயிர்களை விலையாகக் கொடுத்து முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் இரு ஆண்டுகளில் 60,000 வரையான மனித உயிர்கள் பலிகொடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பயங்கரவாதத்துக்கு எதிரான தனது நடவடிக்கையை முன்னெடுத்து வரும் அமெரிக்காவானது, தனது உள்நாட்டு பிரதிநிதியான றொபேற் ஓ பிளேக் ஊடாக, சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் அமைப்பு பெரும் இழப்புக்கு முகங்கொடுத்த நிலையில், அமெரிக்காவானது தனது உதவிக்கரத்தை நீட்ட முன்வந்தது. அதாவது இதன் மூலம் அமெரிக்காவானது தனது பெருந்தன்மையைக் காட்ட முனைந்தது. அத்துடன் ஆப்கானிஸ்தான், குறிப்பாக ஒசாமா பின்லேடன் உட்பட அல்குவைதா மற்றும் தலிபான் அமைப்புக்கள் மீது தன்னால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா நோக்கத் தவறியிருந்தது.
சிறிலங்காவில் 2002ல் கைச்சாத்திடப்பட்ட, பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவான யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் தமது ஆதரவுகளை வழங்கியிருந்தன. இவ்வாறான சூழ்நிலைகளுக்கு மத்தியில், சிறிலங்காவானது தனது நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை தோற்கடித்தது. புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்ட பின்னர், சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் சமாதானம், இயல்புநிலை மற்றும் நல்லிணக்கப்பாடு போன்றவற்றை நிறுவுவதற்கான கதவுகளைத் திறந்துவிட்டது.
கிளின்ரன் மற்றும் சிங் ஆகியோர் 'சமாதானம்' தொடர்பாக தமது சொந்த வரையறைகளைக் கொண்டிருக்கலாம். இவர்கள் சமாதானத்துக்கான தம்மால் வரையப்பட்ட வரையறுகளை சிறிலங்காவில் பிரயோகிக்க முன்வரக்கூடாது. உண்மையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், கஸ்மீரிலும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் தனது அரசால் ஜனநாயகம் என்ற பெயரில் மனிதாபிமானத்துக்கு எதிரான மீறல்கள் மேற்கொள்ளப்பட்ட ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் பாதிக்கப்பட்ட ஏனைய நாடுகளில் பிரயோகிக்க முயலவேண்டும்.
எவ்வாறிருப்பினும், சிறிலங்காவானது பிறிதொரு இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ அல்ல. துப்பாக்கிகள், பணம், வீண்பெருமித மனப்பாங்கு என்பன மக்களை அகந்தையுள்ளவர்களாக மாற்றுகின்ற போதிலும், சிறிலங்கா விடயத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் உதவி செய்யும் மனப்பாங்கை விடுத்து மிரட்டல் வழியில் எதனையும் சாதிக்க முடியாது. இவை இரண்டும் நட்புடன் நடந்து கொண்டால் மட்டுமே சிறிலங்காவில் நிலவும் பிரச்சினையைத் தீர்த்து வைக்க முடியும்.
சிறிலங்காவில் 'சமாதான நகர்வானது முடக்கப்பட்டுள்ளது' என்ற கருத்து நிலவுகின்றது. சிறிலங்காவில் அமைதியை நிலைநாட்டுவதில் தடையாக இருந்த விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர். ஆனால் தீர்க்கப்படாத அரசியற் கோரிக்கைகள் காணப்படுகின்றன. இவை நிலையான சமாதானத்தை எட்டுவதில் தடையாக காணப்படுகின்றன என்பது உண்மையானதாகும். இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் தமிழ் மக்களுக்கானது மட்டுமல்ல. இந்தக் கோரிக்கைகள், இந்தியாவில் அல்லது அமெரிக்காவில் வாழும் பாதிக்கப்பட்ட சமூகத்தவர்களின் கோரிக்கைகளைப் போன்றதல்ல.
சிறிலங்காவில் இன்னமும் அரசியற் கோரிக்கைகள் தீர்க்கப்படாது உள்ளன என்றால் அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விட்டுக்கொடுக்காத போக்கே காரணமாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது நீண்ட காலமாக புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வந்த ஒன்றாகும். இந்நிலையில் உண்மையான அரசியல் நிலைப்பாட்டையும் கடந்த கால வரலாறுகளையும் கவனத்திற் கொண்டு கூட்டமைப்பானது தனது தீர்மானத்தை மாற்றத் தயங்குகின்றது.
மே 2009ல், சிறிலங்கா அரசாங்கமானது புலிகளின் அத்தியாயத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. பொன்னம்பலம் இராமநாதன், S.J.v. செல்வநாயகம், G.G பொன்னம்பலம் போன்றவர்களல் விதைக்கப்பட்டு இந்திராகாந்தி மற்றும் அவரது மகனான ராஜீவ் ஆகியோரால் வளர்க்கப்பட்ட பயங்கரவாதம் என்ற விருட்சம் மே 2009ல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. பிளேக் போன்றவர்களால் இதில் உதவி செய்திருக்க முடியாது. ஆனால் கிளின்ரன் மற்றும் சிங் போன்றவர்களால் இதற்கான பாதையில் பயணித்திருக்க முடியும். பயங்கரமான அந்த காலப்பகுதிக்கு மீண்டும் சிறிலங்காவைத் தள்ளிவிட இவர்களால் முடியும். ஆனால் இது 'சமாதான நகர்வுக்கு' உதவுவது எனப் பொருள்படாது.
பழைய காயத்தை மீண்டும் கிளறுவதை விடுத்து, உண்மையில் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் சிறிலங்காவுக்கு உதவி செய்ய வேண்டுமென நினைத்தால், சிறிலங்காவின் சமாதான நகர்வுகளிலிருந்து விலகி இருப்பது மிகச் சிறந்த வழியாகும்.
நாட்டை மீளக் கட்டியெழுப்புதல் என்பது இலகுவானது. அது தற்போது சிறிலங்காவில் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த காலத்தில் ஏற்பட்ட துயரமான சம்பவங்களிலிருந்து நீங்கி மீண்டும் நல்ல நிலைக்கு வருவதற்கு நீண்ட காலம் தேவைப்படுகின்றது. சிறிலங்காவில் தற்போதும் நிலையான அமைதியை உருவாக்க முடியாது உள்ளமைக்கான காரணத்தை புரிந்து கொள்வதற்கு, கிளின்ரனும், சிங்கும் தமது நாடுகளில் தீர்க்கப்படாது காணப்படும் பிரச்சினைகளை எடுகோளாகக் கொள்ள வேண்டும்.
கிளின்ரனும், சிங்கும் 'அமைதியான' நாடொன்றின் குடிமக்கள் அல்லர். யுத்தம் இடம்பெறும், யுத்தத்தை ஏனைய நாடுகளுடன் மேற்கொள்ளும் நாட்டின் தலைவர்களாக இவர்கள் காணப்படுகின்றனர். இந்நிலையில் மற்றவர்களுக்கு புத்தி சொல்வதென்பதும், தீர்வு சொல்வதென்பதும் உண்மையில் இவர்கள் இருவருக்கும் கடினமான விடயமாகும். சிறிலங்காவில் அமைதி என்பது அங்கு வாழும் மக்களின் சொந்த விடயமாகும். 'நன்றி, ஆனால் இல்லை' எனக் கூறும் எவரிடம் இவர்கள் பிழை காணமுடியாது.
0 கருத்துரைகள் :
Post a Comment