முற்றுமுழுதாக சர்வதேச சமூகத்தை நம்பி.....!

கிழக்கில் மட்டுநகரில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டின் நிறைவு நாளான நேற்று முன்தினம் அதன் தலைவரான இரா.சம்பந்தன்  அவர்கள் நிகழ்த்திய நீண்ட உரை உள்நாட்டுப் போரின் முடிவிற்குப் பிறகு மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், தமிழர் அரசியலை வழிநடத்துவதற்கு அந்தக் கட்சி கடைப்பிடிக்கத் தீர்மானித்திருக்கும் அணுகு முறைகளை விளக்கும் கொள்கைப் பிரகடனமாக அமைந்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழர்கள் எல்லோருக்குமான தலைமைச் சக்தி என்றும் அந்தத் தலைமைச் சக்தியின் தலைமைக் கட்சி தமிழரசுக் கட்சியே என்றும் வரைவிலக்கணம் ஒன்றை வகுத்தவாறு உரையை நிகழ்த்திய சம்பந்தன் அவர்கள் இதுவரையில் தங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கக்கூடிய அரசியல் அணுகுமுறைகளின் காரணமாக அதிகூடிய இராஜதந்திர அங்கீகாரம் சர்வதேச சமூகத்தினால் தமிழரசுக் கட்சிக்கே வழங்கப்படுகின்றது என்றும் அதன் வழியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அந்த இராஜதந்திர அங்கீகாரம் ஏற்புடையதாகவும் உரித்துடையதாகவும் கைவரப்பெற்றிருக்கிறது என்றும் ஒரு வியாக்கியானத்தைச் செய்திருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.


பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான காலகட்டத்தில் முதல் மூன்று தசாப்தங்களுக்கு தமிழ் மிதவாத அரசியல் தலைவர்களினால் வழிநடத்தப்பட்ட அமைதிவழிப் போராட்டங்களில் இருந்தும் அடுத்த மூன்று தசாப்தங்களுக்கு ஆயுதமேந்திய தமிழ்த் தீவிரவாத இயக்கங்களின் வழிநடத்துதலின் கீழான வன்முறைப் போராட்டங்களில் இருந்தும் முறையான பாடங்களைப் பெற்றுக்கொண்டு உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்திலும் மாற்றம் கண்டிருக்கும் அரசியல் சூழ்நிலைகள் வேண்டி நிற்பதற்கு இசைவான முறையில் கொள்கைகளையும் தந்திரோபாயங்களையும் வகுத்துச் செயற்பட வேண்டியதே இன்று இருக்கக்கூடிய தமிழ் அரசியல் சக்திகள் சகலதினதும் தலையாய பணியாகும். இந்த வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த பணியை நோக்கிய திசையில் பயணம் செய்வதற்கு சம்பந்தன் அவர்கள் தலைமையிலான இன்றைய தமிழரசுக்கட்சி தன்னை எந்தளவுக்கு பயனுறுதியுடைய முறையில் தயார்படுத்தியிருக்கிறது என்ற கேள்விக்கு சந்தேகத்திற்கிடமின்றிய இரு பொருள்படுதலுக்கு அப்பாற்பட்ட பதில்களை அவரின் உரை திருப்திகரமான முறையில் வழங்கவில்லையென்பது எமது அபிப்பிராயமாகும். 
முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலையில் புதியதோர் அத்தியாயத்திற்குள் பிரவேசித்திருக்கும் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தை தலைமையேற்று வழிநடத்திச் செல்லும் கட்சியாக தமிழரசுக் கட்சியை முன்னிறுத்தி வர்ணிக்கும் சம்பந்தன் அவர்கள் “எவ்வளவு தான் பலம்வாய்ந்ததாக இருந்தாலும், எவ்வளவுதான் தர்மத்தின்பாற்பட்டதாக இருந்தாலும் தமிழர்கள் இலங்கைத் தீவில் வன்முறை அரசியல் செய்வது என்றென்றைக்குமே நடைமுறைச் சாத்தியமானதாக இருக்கப்போவதில்லை என்பதும் இராணுவ பலத்தை மட்டும் அடிப்படையாகக்கொண்டு, உலகப் போக்கிற்கு ஒத்திசைவில்லாத அரசியல் கோட்பாட்டின் ஊடாகக் கட்டியெழுப்பப்படும் எந்தவொரு போராட்டமுமே நின்று நிலைக்காது என்பதுவுமே இதுவரையான போராட்ட வரலாறு உணர்த்தி நிற்கும் உண்மையாகும்’ என்று பிரகடனம் செய்திருக்கிறார்.

தங்களது தேச நலன்களை மாத்திரமே மையப்படுத்தி உலக ஒழுங்கை வகுத்துச் செல்லும் வல்லாதிக்க நாடுகளின் வியூகங்களைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ற முறையில் மாத்திரம் தந்திரோபாயங்களை வகுத்துச் செயற்படுவதே விவேகமான மார்க்கம் என்பது சம்பந்தன் அவர்களின் இன்றைய நிலைப்பாடாக இருக்கிறது. அத்துடன், இந்தியாவின் தேசிய நலன்களுக்கு ஒத்திசைவாக அமையாத எந்தவொரு அரசியல் தீர்வையும் இலங்கையில் தமிழர்கள் பெறுவதை இந்தியா ஏற்றுக்கொள்ளாது என்பதே இந்தியத் தலையீடு தங்களுக்கு உணர்த்திய கட்டாய பாடம் என்கின்ற சம்பந்தன் அவர்களின் விளக்கம் இலங்கைத் தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அரசியல் தீர்வின் எல்லைவரையறை எவ்வளவு தான் விரிவானதாக இருந்தாலும் இந்தியாவின் அபிலாசைகளுக்கு இசைவான தீர்வை ஏற்றுக்கொண்டு வாழ்வதைத் தவிர தமிழர்களுக்கு வேறு வழியே இல்லை என்ற அர்த்தத்தில் அமைவதாக இருக்கிறது. இந்தியாவையும் சர்வதேச சமூகத்தின் வல்லாதிக்க நாடுகளையும் அந்நியப்படுத்தவோ அல்லது சங்கடப்படுத்தவோ கூடாது என்ற அவரின் அக்கறையின் எல்லை எதுவென்பது தான் உண்மையில் விளங்கவில்லை. 

"ஒற்றையாட்சி இலங்கை' என்ற கட்டமைப்பிற்கு வெளியே “ஐக்கிய இலங்கை’ என்ற வரையறைக்குள் தமிழர்கள் சுயமரியாதையுடனும் தன்னிறைவுடனும் வாழ்வதற்குத் தேவையான கூடுதல் பட்ச அரசியல் அதிகாரங்களை உறுதிப்படுத்தக்கூடிய ஆட்சியலகையே தமிழ்த் தேசிய இனத்தின் இறையாண்மைப் பிரச்சினைக்கான தீர்வாக எதிர்பார்ப்பதாகவும் அதன் மூலமாகவே தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையைப் பூர்த்தி செய்ய முடியுமென்றும் கூறுகின்ற சம்பந்தன் அவர்கள் புதிய அரசியல் சூழ்நிலைகளின் கீழ் அத்தகைய தீர்வைக் காண்பதற்கான வழிவகைகளைப் பொறுத்தவரை தனது அரசியல் அணி உள்நாட்டில் எத்தகைய செயன்முறைகளை முன்னெடுப்பதற்கு உத்தேசித்திருக்கிறது என்பதை தெளிவாக விளக்கவில்லை. "ஒன்றுபட்ட இலங்கை' என்ற அமைப்பிற்குள் தமிழர்களுக்கான அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க பேரினவாத ஆட்சியாளர்கள் ஒருபோதும் முன்வர மாட்டார்கள் என்பதைத் தாங்கள் சொல்லாமலேயே சர்வதேச சமூகம் அதன் அனுபவத்தின் மூலமாக உணருவதற்கு இடமளிக்க வேண்டுமென்று மாத்திரம் கூறிவிட்டு எதற்கும் தமிழ் மக்கள் பொறுமை காக்க வேண்டுமென்று சம்பந்தன் அவர்கள்  அடிக்கொரு தடவை வேண்டுகோள் விடுத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. தமிழ் மக்களும் பொறுமை காத்து, இலங்கை ஆட்சியாளர் தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்க மாட்டார்கள்என்பதைச் சர்வதேச சமூகமும் அனுபவ வாயிலாக உணர்ந்த பிறகு பொறுமை எல்லையை கடக்கும் போது அமைதிவழி போராட்டம்... இது தமிழர்களுக்கு மீண்டும் கண்ணாடியில் காட்டப்படுகின்ற நிலவு.

இலங்கை நெருக்கடி மீது சர்வதேச சமூகத்தின் வல்லாதிக்க நாடுகள் பிரதானமாக அவற்றின் மேலாதிக்க நலன்கள் சார்ந்த காரணங்களின் நிமித்தம்  தீவிர அக்கறை காட்டுவதன் விளைவாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் எதிர்நோக்குகின்ற இராஜதந்திர ரீதியான நெருக்குதல்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு தங்களது சகல அணுகுமுறைகளையும் வகுப்பதிலேயே சம்பந்தன் அவர்கள் அக்கறை கொண்டுள்ளார் என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியிருக்கிறது. அத்தகைய அணுகுமுறையை சம்பந்தனை பாராளுமன்றக் குழுத் தலைவராகக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையாளுவதில் முனைப்புக்காட்டிய சந்தர்ப்பங்களில் அதுகுறித்து நினைவுறுத்தப்பட்டபோது அரசாங்கத்தின் மீதான சர்வதேச நெருக்குதல்களை அடிப்படையாகக் கொண்டு முழுமையாக தங்களது தந்திரோபாயங்களை வகுப்பது மீண்டும் ஆபத்தான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை  அவரும் அவரது சகாக்களும் பல தடவைகள் வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டார்கள். ஆனால், தமிழரசுக் கட்சியின் மகாநாட்டில் அவர் ஆற்றிய உரை  அந்த ஒப்புதலுக்கு மறுதலையாகவே அமைந்திருக்கிறது. தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியாத ஒரு சஞ்சலமான சூழ்நிலையில் தமிழ் அரசியல் சமுதாயம் இருக்கிறது என்பதை சம்பந்தன் அவர்களின் உரையில்  பல இடங்களில் இழையோடியிருக்கக் காணப்படுகின்ற உறுதியின்மை தெளிவாக வெளிக்காட்டுகிறது.

தினக்குரல்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment