தமிழர் தாயகப் பிரதேசங்களான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர் வழிபாட்டுத் தலங்களையொட்டிய பிரதேசங் களிலும், தனியார் காணிகளிலும் அத்து மீறிப் பௌத்த விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகளை அமைப்பதற்கு எதிராக ஐ.நா. சபையிடம் முறைப்பாடொன்றைச் சமர்ப்பிக்கும் முயற்சியில் இந்து மத அமைப்புக்களும் தமிழ் புத்திஜீவிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழர் தாயகப் பிரதேசத்தில் இலங்கை அரசின் ஆசிர்வாதத்துடன் அத்துமீறி அடாத்தாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையீடு செய்வதற்கான முன்முயற்சிகள் தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருவதாக நம்பகரமாக அறியமுடிகின்றது.
தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வரும் இந்த அப்பட்டமான மத உரிமை மீறல்கள் குறித்துப் பல்வேறு மட்டங்களிலும் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களுக்கு நீதியான பதில் கிட்டாத காரணத்தினால் இவ்வாறு ஐ.நாவிடம் நீதி கேட்பதெனத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கமைய, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்களை இந்துமத அமைப்பு களும், தமிழ் உணர்வாளர்களும் தயார் செய்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரிட்டனிலுள்ள பிரபலமான சட்டத்தரணிகள் ஊடாக ஐ.நாவிடம் இந்த முறைப்பாட்டைச் செய்ய ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாக அகில இலங்கை இந்துமாமன்ற வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் புத்தர் சிலை அமைக்கப்பட்டிருப்பது, வடக்கு, கிழக்கில் ஆலய காணிகளில் படையினர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, தம்புள்ள பள்ளி வாசல் விவகாரம் ஆகியன உட்பட்ட பல்வேறு விடயங்கள் ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டப்படவுள்ளதாக இந்துமாமன்ற வட்டாரங்கள் மேலும் கூறின.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத்தின்போது இலங்கை அரசிடம் ஐ.நா. கேள்வி எழுப்பக்கூடிய வகையில் இந்த முறைப்பாட்டைச் சமர்ப்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரியவருகிறது.
உதயன்
0 கருத்துரைகள் :
Post a Comment