இலங்கையில் சிறுபான்மையினர் அரசியல் தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொள்ள மேற்கொண்டு வரும் முயற்சிக்கு இந்தியா உறுதியான ஆதரவை பின்புலத்தை வழங்க வேண்டும் என்று இலங்கைக்குப் பயணம் செய்த இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் தலைமையிலான நாடாளுமன்றக் குழு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேற்று வலியுறுத்தியுள்ளது.
இலங்கை வந்த இந்தியக் குழுவுக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுக் காலை இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போதே இந்தியக் குழுவினர் மேற்கண்டவாறு வலியுறுத்தினர்.
எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் தலைமையிலான 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். பிரதமர் மன்மோகன் சிங்குடன் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், மாநிலங்கள் துறை அமைச்சர் வி.நாராயணசாமி ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். சுமார் 45 நிமிட நேரம் இந்தச் சந்திப்பு நீடித்தது.
இந்தியக் குழுவினர் தமது 5 நாள் இலங்கைப் பயணம் குறித்து இந்தியப் பிரதமரிடம் விரிவாக விளக்கினார்கள். ஒன்றிணைந்த இலங்கைக்குள் உரிமைகளை மதித்து வாழக்கூடிய சூழல் வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னைச் சந்தித்த வேளை தன்னிடம் வலியுறுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கூறினார்.
அத்துடன் இலங்கைப் பயணம் தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றை அவர் பிரதமரிடம் கையளித்தார். கூட்டமைப்பை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்க வைப்பதற்கு இந்தியா கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னிடம் கூறியதாக சுஷ்மா மன்மோகனிடம் மேலும் கூறினார்.
இந்தியக் குழுவில் பங்குபற்றியிருந்த ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் பிரதமர் மன்மோகன் சிங் இந்தச் சந்திப்பின்போது தனித்தனியே பேசியனார். அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை அவர் கவனமாக செவிமடுத்தார்.
இந்தியக்குழுவின் இலங்கைப் பயணம் பொருத்தமான நேரத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள தருணத்தில் இடம்பெற்றுள்ளது என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்ததாக இந்தியக் குழுவில் இடம்பெற்றிருந்த தமிழகக் காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கதாகூர் கூறினார். இந்தியா இலங்கையுடன் நெருக்கமாகப் பணியாற்றிவருகின்றது என்றும் தமிழ் மக்களுக்கு உறுதியான ஆதரவை இந்திய அரசு வழங்கும் என்றும் மன்மோகன் கூறியதாக தாகூர் சொன்னார்.
வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அவசியத்தை பிரதமர் மன்மோகன் சிங்குடனான இந்தச் சந்திப்பின் போது சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தினார்.
இந்தச் சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்ட இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா "இது மிகப் பயனுள்ள காத்திரமான பயணம். இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இந்தியா கொண்டுள்ள கவலையை பகிர்ந்து கொள்வதற்கான பயனுள்ள பணிகளை இந்தப் பயணம் செய்துள்ளது.'' என்றார்.
"அவர்களுடைய இலங்கைப் பயணம் குறித்த அறிக்கையில் என்ன உள்ளது என்பதையும் அவர்களுக்கு ஏற்பட்ட மனப்பதிவுகள் குறித்தும் என்ன செய்யப்பட வேண்டும் என்பது பற்றிய அவர்களுடைய கருத்துக்களை நாங்கள் அவர்களது வாயால் கேட்டோம்.'' என்றும் கிருஸ்ணா கூறினார்.
தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில், பொது மக்கள் நடமாடும் இடங்களில் இராணுவ அதிகாரங்களைக் குறைக்க வேண்டும் என்றும் பொலிஸ் பிரசன்னத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் இந்தச் சந்திப்பின்போது இந்தியக் குழுவினர் மன்மோகனிடம் கூறினார்கள்.
கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. வடக்கில் அபிவிருத்தியை மேற்கொள்ளவும் தேர்தலை நடத்தவும் இந்திய அரசு முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று மன்மோகன் சிங்கிடம் சமர்ப்பித்த அறிக்கையில் இந்தியக் குழு வலியுறுத்தியுள்ளது.
உதயன்
0 கருத்துரைகள் :
Post a Comment