இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் தெற்குக் கரையோரப்பகுதியில் இருந்து இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்டு இப்போது மீள் குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு போதிய அளவில் அடிப்படை வசதிகள் இன்னும் செய்து கொடுக்கப்படவில்லை என முறையிடப்பட்டிருக்கின்றது.
இந்தப் பிரதேசத்திற்கு விஜயம் செய்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இப்பிரதேசத்து மக்கள் தமது சிரமங்களையும், கவலைகளையும் தெரிவித்திருக்கின்றார்கள்.
இடம்பெயர்வதற்கு முன்னர் தாங்கள் விவசாயம் செய்து வந்த தங்களுக்குச் சொந்தமான ஏழாயிரம் ஏக்கர் காணிகளைப் போய் பார்க்கவோ அவற்றில் பயிர் செய்யவோ முடியாதிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். காலம் காலமாகத் தாங்கள் பயிர் செய்து வந்த காணிகளில் இப்போது சிங்கள மக்களே விவசாயம் செய்வதாகவும், தமது காணிகளைத் தங்களுக்குப் பெற்றுத் தருவதற்கு வழி செய்யுமாறும் அவர்கள் கோரியிருக்கின்றார்கள்.
குடியிருக்கும் காணிகளுக்கு ஊடாக போர்க்காலத்தில் இராணுவ பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள மண் அணை அகற்றப்படாததனால், பலகுடும்பங்கள் தமது காணிகளின் எல்லைகளை வரையறுத்து வேலியிடவோ தோட்டச் செய்கையில் ஈடுபடவோ முடியாதிருக்கின்றது.
கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி பாடசாலைகள் இயங்காத காரணத்தினால் போக்குவரத்து சிரமங்களுக்கு மத்தியில் கொக்கிளாய் பாடசாலைக்கே மாணவர்கள் செல்ல வேண்டியிருப்பதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். எனவே இந்த இரு கிராமங்களிலும் இராணுவத்தின் பொறுப்பில் உள்ள பாடசாலையைப் பெற்றுக் கொடுத்து தமது பிள்ளைகள் தங்கள் ஊரிலேயே கல்வி கற்பதற்கு வழி செய்யப்பட வேண்டும் என்றும் அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீள்குடியேறியுள்ள மக்களின் காணி பிரச்சினை தொடர்பில், உரிமை கோருகின்ற காணிகளுக்கான உரிமைப் பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் அடங்கிய விவரங்களை மேல் நடவடிக்கைக்காகத் திரட்டப்படுவதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். இந்தப் பிரதேசத்து மக்களின் போக்குத்துவரத்துக்கென மக்கள் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மூலம் பிபிசி
0 கருத்துரைகள் :
Post a Comment