வங்காலையை உலுக்கிய அவலம்


பதுங்குகுழி வாழ்க்கையும், இடப்பெயர்வுகளும் தமிழர் தாயகத்தில் சாதாரணமான, அன்றாட வாழ்வியல் விடயங்கள். அது போலவே குருதி தோய்ந்த மரணங்களும் மலிந்த தேசமாக இருந்தது. காரணமின்றிய கைதுகள், சித்திரவதைக் கொலைகள் என பல கொடுமைகளைத் தாங்கிய தேசம் இது. காரணம், பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில், அப்பாவிகளை எங்கு வேண்டுமென்றாலும் எப்படி வேண்டுமென்றாலும் கைது செய்யலாம் கொலை செய்யலாம் என்ற முழுமையான சுதந்திரம் சிறிலங்கா இராணுவத்திற்கு வழங்கப்பட்டடிருந்தது. அதற்காக எந்த விசாரணையோ தண்டனையோ வழங்கப்படமாட்டாது என்ற துணிவும் அவர்களுக்கு ஊட்டப்பட்டிருந்தது. அவ்வாறுதான், 17.02.1991 அன்று வங்காலையில் பயணித்துக் கொண்டிருந்த ஐந்து அப்பாவிகள், சிறிலங்கா இராணுவத்தல் குதறிக் கொலை செய்யப்பட்டார்கள். மரணத்தின் கடைசி நிமிடங்களின் ஒவ்வொரு நொடியிலும் துடித்துத் துடித்து மடிந்து போன அந்த ஜீவன்களை மறக்க முடியவில்லை.

வங்காலை, மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேசசெயலர் பிரிவில் அமைந்துள்ள ஒரு கரையோரக் கிராமம். மீன்பிடி மற்றும் கடல்சார் வர்த்தகம் கிராமத்தின் முதன்மை வாழ்வாதாரத் தொழில்களாக உள்ளன. பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள். மன்னார் மாவட்டத்தின் பிரபலமான புனித ஆனாள் மத்திய மகாவித்தியாலயம் வங்காலையில் அமைந்துள்ளது. 

1990ஆம் ஆண்டு காலப்பகுதியில், சிறிலங்கா இராணுவத்தின் நடவடிக்கை காரணமாக, மன்னார்த்தீவின் நுழைவாயிலிலுள்ள பாரிய சங்கிலிப் பாலமும் தொடருந்துப் பாலமும் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டது. இதனால் மன்னார் தீவுக்கான தரைவழிப் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டது. இதன்  காரணமாக, தமது அன்றாடத்தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட மன்னார் தீவு மக்கள், தாழ்வுப்பாட்டுக் கடற்கரையிலிருந்து கடல் வழியாக கற்பிட்டிக்குச் சென்று, பொருட்களை வாங்கிவந்தனர். இதேவேளை, அதிகரிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக, மன்னார் பெருநிலப்பரப்பின் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வாறே, குடிப்பரம்பலைச் செறிவாகக் கொண்ட வங்கலைக் கிராமமும், இராணுவ ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். வீடுகளிலிருந்து வெளியேறாதவர்களை இராணுவத்தினர் பலவந்தமாக வெளியேற்றிவிட்டு வீடுகளிலுள்ள பெறுமதி வாய்ந்த பொருட்கள் அனைத்தையும் சூறையாடினார்கள்.

இவ்வாறான இராணுவ நெருக்கடிகளால் இடம்பெயர்திருந்த, வங்காலை மகாவித்தியாலய அதிபர் திரு.செபமாலை அவர்களும் ஜஸ்டின் லம்பேட் என்ற வங்காலையைச் சேர்ந்த ஆசிரியரும் இன்னும் சிலரும் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காகக் கற்பிட்டி வழியாக கொழும்பு சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு 16.02.1991இல் படகில் தாழ்வுப்பாட்டுக்கு வந்து சேர்ந்தனர். அன்றிரவு அங்கேயே தங்கியிருந்துவிட்டு, மறுநாள் 17.02.1991 அன்று காலை பத்து மணியளவில் துவிச்சக்கர வண்டியில் வங்காலை வீதி வழியாக காத்தான்குளம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார்கள். 

அவர்கள் வங்காலைப் பாடசாலைச் சந்திக்கு வந்தபோது, அவர்களை வழிமறித்த இராணுவத்தினர், விசாரணை எனக்கூறி, தடுத்து வைத்தனர்.. பின்னர், திரு.செபமாலை (அதிபர்), திரு.ஜஸ்டின் லம்பேட் (ஆசிரியர்), சூசையப்பு (ஆசிரியர்), நவரட்ணம் குருவிக்கந்தையா ஆகியோருடன் ஒரு சிறுவனையும், கயிற்றினால் கைகளையும் துணியினால் கண்களையும் கட்டிவிட்டு நடு வீதியில் இருத்தினர். கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் அவர்களை கத்தியால் குத்திக் கடுமையாகச் சித்திரவதை செய்தனர். சூசையப்பு ஆசிரியரைக் கத்தியால் குத்திக் கொடுமைப்படுத்திய  போது வலி தாங்க முடியாது கதறியதாக, அந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் முருங்கன் பங்குத்தந்தையிடம் சென்று முறையிட்டனர்.

மறுநாளாகியும் கைது செய்யப்பட்டவர்கள் வீடு திரும்பாததினால் கல்க்கமடைந்த உறவினர்களும் பங்குத்தந்தையும் தள்ளாடி இராணுவ முகாமிற்குச் சென்று உத்தரவுபெற்று அவர்களைத் தேடுவதற்கு வங்காலைக்கு வந்தபோது வங்காலைச் சந்தியிலிருந்த இராணுவம் ஊருக்குள்ளே செல்லவிடாது தடுத்துவிட்டது. பங்குத் தந்தையும் உறவுகளும்  பல மணிநேரம் மன்றாடிய பின், ஒரு வழியாக உறவினர்களில் இருவர் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

வெறிச்சோடிப் போயிருந்த கிராமத்தில், இரண்டு உறவினர்களும் அச்சத்துடன் சென்றுகொண்டிருந்தவேளை, வங்காலைச் சந்திக்கு அருகிலிருந்த திரு. பூர்சியன் பீரிஸ் ஆசிரியரின் வீடு திறந்திருந்ததைக் கண்டு  அங்கு சென்றனர். வீட்டுக்குள் எட்டிப் பார்த்தபோது, அந்த வீட்டின் அறைகளெல்லாம் இரத்த வெள்ளமாகக் காணப்பட்டது. சுவர்களில் கை பட்டு இழுத்த இரத்தக் கறைகள் படிந்திருந்தன. பல இடங்களில் தெறித்த குருதி கொஞ்சம் கொஞ்சமாக சிந்திக் கொண்டிருந்தது. திகிலடைந்த அவர்கள், இரத்தத் தடயங்களின் வழியே சென்று பார்த்தபொழுது, வீட்டின் பின்னாலிருந்த கிணற்றுக்குள் ஐந்து சடலங்கள் துண்டங்களாக்கப்பட்டுப் போடப்பட்டிருந்தன. சிவப்பு நிறமாக மாறியிருந்த கிணற்று நீரில் சடலத்துண்டுகள் மிதந்து கொண்டிருந்தன.

நேற்றுக் காணாமல் போனவர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பதைக் கண்ட உறவினர்கள் தாங்க முடியாது துடித்தார்கள். எனினும் அப்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் உடனடியாக சடலங்களை மீட்க முடியவில்லை. அவர்களின் மரணச்செய்தி வங்காலை மக்களுக்குப் பேரிடியாக விழுந்தது. தற்காலிகமாக தங்கியிருந்த இடத்தில் அவர்களுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டது.

இரண்டு வருடங்களின் பின்னர், 1993ஆம் வருடம் வங்காலை மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டனர். கிராமத்திற்கு வந்தவர்கள், பூர்சியன் ஆசிரியரின் வீட்டிற்குச் சென்று பார்த்தபொழுது கிணறு மண்ணால் நிரப்பப்பட்டு மட்டமாக்கப்பட்டிருந்தது. பூர்சியன் ஆசிரியரின் வீட்டுக் கிணற்றில் கடந்தகால இராணுவ நடவடிக்கையின் போது ஐந்து சடலங்கள் போடப்பட்டிருந்தன என்பதைக் காவற்றுறையினருக்குத் தெரியப்படுத்திய மக்கள், கிணற்றைத் துார்வாரி உயிரிழந்த ஐவரினதும் எலும்புக்கூடுகளை மீட்டனர். துண்டங்களாக  மக்கிப்போயிருந்த அவர்களின் எலும்புகளையும் மண்டையோட்டையும்  அடையாளம் கண்ட உறவுகள் அந்த மண்ணில் புரண்டு கதறியழுதது கூடிநின்றவர்களையும் கண்கலங்க வைத்தது.

தோண்டி எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள், பரிசோதனைக்காக மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டன. பின்னர், மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பரிசோதனை,  விசாரணை என எடுத்துச் செல்லப்பட்ட எலும்புக்கூடுகளுக்கு என்ன நடந்தது என இன்றுவரை எந்தத் தகவலும் இல்லை. படுகொலை தொடர்பாக இதுவரை எந்தவிதமான விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

17.02.1991 அன்று கொடூரமாகக் கொலை செய்யப்பட்டவர்கள்

  1. அந்தோனி கொபின்லெம்பேட்..................ஆசிரியர்.................................36
  2. அந்தோனிப்பிள்ளை செபமாலை.............பாடசாலை அதிபர்.............49
  3. அப்புக்குட்டி கந்தையா...................................விவசாயம்.................. .........51
  4. செபமாலை அந்தோனி...................................விவசாயம்...........................30
  5. சீமான் தற்குரூஸ் சூசையப்பு........................பாடசாலை உப அதிபர்..43
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 கருத்துரைகள் :

  1. This happened after the forcible eviction of Muslims in October 1990, we came to know as rumours as we had no communication and were living as refugees and had no connection with the Mannar Tamils and not know what was happening in Mannar.

    I do not know whether this had been brought to the notice of the Government at that time.

    That was one of the atrocities of the forces at that time. They had brutally killed the Parish Priest Fr. Bastian in side the church premises and I have personally complained as a leading citizen and layman of Mannar to the then National Security Minister Mr.Lalith Athulath Mudali at a special meeting three people to witness the killing in the Army camp. Nothing had happened. No one was punished for this crime.

    There were some other atrocities like killings of a Pastor, Police Constable and a Muslim boy and burnt their bodies, arsons, lootings etc and we informed the then UNP regime with solid proofs but all went in vein.

    The two bridges connecting the Mannar main land and Mannar Island had been bombed by the Tigers terrorists but not by the Army.

    Army of course immediately erected a temporary bridge for passengers transportation.

    Due to the destructive activities of the Tigers, Mannar Madawachchiya road had been closed for a long time. All Communication Systems, Water Tanks, trunk roads etc had been destroyed by the Tigers.

    This is why the people and the Departments sought the sea transport to get their essentials from Colombo.

    ReplyDelete