ஜெனீவா களத்தில் வெற்றி யாருக்கு?



ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் வீட்டோவைக் கொண்டு தடுத்து விடும் என்ற வகையில் கூட செய்திகள் வெளியாகின்றன.ஜெனிவாவில் அடுத்தவாரம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இம்மாதம் 27ஆம் திகதி தொடங்கும் இந்தக் கூட்டத்தொடர் அடுத்தமாதம் 23 ஆம் திகதி வரை தொடரப்போகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல நாடுகளின் விவகாரங்கள் குறித்த முக்கியமான விவாதங்கள் அனல் பறக்கும் வகையில் இடம்பெறப் போகிறது. சிரியா, லிபியா, மாலைதீவு, இலங்கை ஆகிய நாடுகளின் விவகாரங்கள் இதில் முக்கியமானதாக இருக்கும். குறிப்பாக, இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்று இந்தக் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படவுள்ளது. இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வரப்போகின்ற நாடு எது என்பது தெளிவாகத் தெரியாது போனாலும் தீர்மானம் வரப்போகிறது என்பது உறுதியாகியுள்ளது. ஏனென்றால் இதனை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. 


அண்மையில் கொழும்பு வந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் இரண்டு மூத்த அதிகாரிகளும், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை தமது நாடு ஆதரிக்கும் என்று அறிவித்திருந்தனர். அமெரிக்காவின் பின்புலத்துடன் ஒரு தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது என்பது உறுதி. ஆனால் அதை யார் கொண்டு வரப்போவது என்று தெரியவில்லை. இந்தக் கேள்வி இலங்கை அரசையும் குழப்புவதாகவே தெரிகிறது. முன்னதாக அமெரிக்காவே இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வரலாம் என்று அரசாங்கம் நம்பியது. ஆனால் அண்மையில் கொழும்பு வந்திருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகளான றொபேட் ஓ பிளேக்கும், மரியா ஒரேரோவும் அமெரிக்கா இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாகவே கூறியுள்ளனர். எனவே அமெரிக்கா அல்லாத இன்னொரு நாடு தான் இதனைக் கொண்டுவரப் போகிறது என்று தெளிவாகியுள்ளது. அந்த நாடு எது என்பதைக் கண்டறியும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்னொரு கட்டத்தில் கனடா இந்த முயற்சிகளில் இறங்கலாம் என்ற கருத்தும் உள்ளது. காரணம்இ ஏற்கனவே கடந்த செப்ரெம்பர் மாதம் நடந்த கூட்டத்தொடரில் கனடா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுவர முயன்றது. ஆனால் அதற்குப் போதியளவு ஆதரவு கிடைக்காமல் போக, தீர்மானத்தைக் கொண்டு வருவதில் இருந்து நழுவிக் கொண்டது. எனவே கனடா இம்முறை அந்த முயற்சியைத் தொடரலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஆனால் அமெரிக்காவோஇ கனடாவோ இந்த முயற்சியில் இறங்க வாய்ப்பில்லை என்ற கருத்தும் பலமாக உள்ளது. ஏனென்றல் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் இந்த முயற்சியில் இறங்கினால் அமெரிக்காவுக்கு எதிரான நாடுகள் குழம்பிப் போய் தீர்மானத்தை எதிர்த்து விடும் என்ற பயம் அமெரிக்காவுக்கு உள்ளது. 


எனவே மற்றொரு நாட்டின் மூலம் தீர்மானத்தைக் கொண்டு வர அமெரிக்கா முனைவதாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக, இலங்கை அரசாங்கம் தனது பக்கம் உள்ளதாகக் கூறும் அணிசேரா அமைப்பிலுள்ள ஆபிரிக்க நாடு ஒன்றைப் பயன்படுத்தி இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும் ஆச்சரியமில்லை என்றும் கருதப்படுகிறது. இதற்கிடையில் ஐரோப்பிய யூனியன் இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவர வாய்ப்புள்ளதாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால் ஐரோப்பிய யூனியன் இந்தத் தீர்மானத்தை நேரடியாகக் கொண்டு வர முடியாது. ஏனென்றால் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அது ஒரு உறுப்பு நாடு அல்ல. ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் ஏதாவது ஒரு நாட்டின் மூலம் வேண்டுமானால் அதைச் செய்யலாம். இரு வாரங்களுக்கு முன்னதாக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்தே இந்த முயற்சியில் ஐரோப்பிய யூனியன் ஈடுபடலாம் என்ற கருத்து வலுவடைந்தது. ஏற்கனவே 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த கையோடு, ஜெனிவாவில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை சுவீடன் கொண்டு வந்தது. அப்போது போரின்போது எந்த மீறல்களும் நடக்கவில்லை என்று இந்தியா, சீனா, ரஷ்யா, கியூபாஇபோன்ற நாடுகள் அடித்துக் கூறின. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முறியடித்து ஆதரவாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றின. அதற்குப் பின்னர் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் எப்போது தொடங்கினாலும் இலங்கைக்கு நெருக்கடிகள் வருவது போல இருந்தன. ஆனால் கடைசியில் அவை விலகிக் கொண்டன. 


கடந்த சுமார் இரண்டு ஆண்டுகளாக அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவைக் காரணம் காட்டி ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் நெருக்கடிகளில் இருந்து மீண்டு வந்தது. இம்முறை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியாகி விட்டது. அதன் மீதான நடவடிக்கை அதாவது, பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை என்பதை வைத்தே இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தக் கோரியும் பொறுப்புக் கூறுவதற்கு பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும் இந்தத் தீர்மானம் வலியுறுத்தும் என்று நம்பப்படுகிறது. ஆனால், எத்தகைய தீர்மானத்தைக் கொண்டு வந்தாலும் அதனை முறியடித்து விடுவோம் என்கிறது அரசாங்கம். நட்பு நாடுகளின் பக்கபலம் இருப்பதாகவும் அரசாங்கம் சொல்லிக் கொள்கிறது. இந்தமுறை அரசாங்கம் தென் அமெரிக்க நாடுகளையும் ஆபிரிக்க நாடுகளையும் மத்திய கிழக்கு நாடுகளையும் வளைத்துப் போடும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது. இந்த முயற்சியில் அவ்வளவாக பலன் கிட்டவில்லை என்று தகவல்கள் வெளியான போதும் அது எந்தளவுக்கு உண்மை என்பதை ஜெனீவா கூட்டத்தொடரின் போது தான் உணர முடியும். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் வீட்டோவைக் கொண்டு தடுத்து விடும் என்ற வகையில் கூட செய்திகள் வெளியாகின்றன. 


ஐ.நா பாதுகாப்பு சபையில் தான் வீட்டோ அதிகாரம் உள்ளது. 47 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் எந்த நாடுமே நிரந்தர உறுப்பு நாடு அல்ல. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் உறுப்பு நாடுகள் மாறிக் கொண்டிருக்கும். ஒரே நாடு அடுத்தடுத்து இரண்டு முறை உறுப்புரிமை பெற முடியாது. இதற்கு அமெரிக்காஇ ரஷ்யா, சீனா போன்ற பாதுகாப்புச்சபையின் நிரந்தர உறுப்புநாடுகள் கூட விதிவிலக்கல்ல. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மேற்கு நாடுகளின் ஆதிக்கம் குறைவு என்றே கூறலாம். இதனால் தான் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உருவாக்கப்பட்ட பின்னர், இஸ்ரேல் மீது 32 தடவைகள் கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வீட்டோ அதிகாரம் இருந்திருந்தால் அமெரிக்காஇ பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இஸ்ரேலை காப்பாற்றியிருக்கும். ரஷ்யா, சீனா, கியூபாவின் ஆதிக்கத்தில் தான் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உள்ளது என்பதையும் கவனித்தாக வேண்டும். ஏற்கனவே மனிதஉரிமைகள் அமைப்புகள் இந்த நாடுகளின் கட்டுப்பாட்டில் தான் ஐ.நா மனித உரிமைகள் பேரவை இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளன. இதனால் தான் வடகொரியா, கம்போடியா, சூடான் உள்ளிட்ட பல நாடுகளின் பிரச்சினைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவை அவ்வளவாக கண்டுகொள்வதில்லை. 


47 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை, சீனா, ரஷ்யாவின் கையில் சிக்கியிருப்பதற்குக் காரணம், ஆபிரிக்க, தென் அமெரிக்கஇ ஆசிய நாடுகளிடம் உள்ள அதிகளவு உறுப்புரிமைதான். ஆபிரிக்காவுக்கு 13 இடங்களும் ஆசியாவுக்கு 13 இடங்களும் லத்தீன் அமெரிக்காவுக்கு 8 இடங்களும் கிழக்கு ஐரோப்பாவுக்கு 6 இடங்களும் மேற்கு ஐரோப்பாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் 7 இடங்களும் மனிதஉரிமைகள் பேரவையில் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெரும்பாலானவை ரஷ்யாவை அல்லது சீனாவை சார்ந்திருப்பவை. இந்தப் பகுதி நாடுகள் பலவற்றுக்கு அமெரிக்காவையோ மேற்குலகையோ பிடிக்காது. எனவே தமது நலனுக்காக சீன, ரஷ்ய சார்பு நிலையை பேணிக் கொள்கின்றன. இவற்றை வைத்துக் கொண்டு தான் இலங்கை அரசாங்கமும் இந்தத் தீர்மானத்தைத் தோற்கடிக்க முனைகிறது. 


இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருவதில் ஆர்வம் காட்டும் மேற்குலக நாடுகள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் பலமான நிலையில் இருப்பதாக கூறமுடியாது. இதனால் தான் அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை தோற்கடித்து விடலாம் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தப் போதிய காலஅவகாசம் இல்லை என்றும்இ பொறுப்புக்கூறுவதற்காக இராணுவ நீதிமன்றம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மனிதஉரிமை மீறல்கள் குறித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அமைச்சர்கள் மட்டக்குழுவொன்றை நியமித்துள்ளதாகவும், ஜெனிவாவில் அரசாங்கம் வாதங்களை முன்வைக்கவுள்ளது. இது எந்தளவுக்கு வெற்றி பெறும் என்று கூறமுடியாது. ஆனால், ஒன்று இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் தோற்கடிக்கப்பட்டாலும் கூட மேற்குலக அழுத்தங்கள் குறையப் போவதில்லை. ஜெனிவாவில் இந்த நாடுகள் தோல்வி காணுமாக இருந்தால் இலங்கை மீதான அழுத்தங்களைப் பிரயோகிக்க மேற்குநாடுகள் மாற்று உபாயங்களைக் கடைப்பிடிக்கும். அவை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கண்டனத் தீர்மானத்தை விடவும் கடுமையானதாகவும் இருக்கலாம்.


கட்டுரையாளர் கே.சஞ்சயன் 
நன்றி தமிழ் மிரோர்

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment