இராணுவ முகாம் அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்- பெண்கள் அமைப்பின் கோரிக்கை


தமிழர் தாயகத்தின் நிலங்களை இராணுவ முகாம்களுக்கும், சிங்கள குடியேற்றங்களுக்கும் கையகப்படுத்தும் வேலைத்திட்டங்கள் முழுவீச்சில் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதனால் பாதிக்கப்படும் மக்கள் பல முறைப்பாடுகள் செய்தும் அதற்கான, காத்திரமான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், மன்னார், தரவன்கோட்டை வீதியில் இராணுவத்திற்கு ஒதுக்கிய காணியில் இராணுவ முகாம் அமைப்பதை நிறுத்துமாறு மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ஒன்பது மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் கூட்டாக இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளன.
மன்னார் மாவட்டத்திலுள்ள தரவன்கோட்டை, தோட்டக்காடு, எழுத்தூர், கீரி, செல்வநகர், தாழ்வுபாடு, ஜிம்றோன்நகர், ஜீவபுரம் மற்றும் பட்டிதோட்டம் ஆகியவற்றின் மாதர் கிராம அபிவிருத்தி சங்க அங்கத்தவர்களே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
குறித்த கோரிக்கையின் பிரதிகள் சிறிலங்காவின் வட மாகாண ஆளுனர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி, நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாட் பதியுதீன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், காணி ஆணையாளர், மன்னார் மாவட்ட செயலாளர், மன்னார் பிரதேச செயலாளர் மற்றும் மன்னார் நகர சபை தலைவர் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
நிலமீட்புக்கான அந்த அறிக்கையின் முழுவடிவம்.
ஒன்பது மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களை சேர்ந்த அங்கத்தவர்களாகிய நாங்கள் எங்களது கிராமத்திற்கு மத்தியில் ஐக்கிய நாடுகள் அபிருத்தி திட்ட நிறுவனத்தினால் அமைத்துக்கொடுக்கப்பட்ட குளத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள காணியை அரசாங்கம் படையினருக்காக ஒதுக்கீடு செய்வதை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளோம். இந்த ஒன்பது கிராமங்களில் வாழும் மக்கள், வறுமைகோட்டிற்கு கீழ் வாழும் மக்களாகவும், யுத்தத்தினால் அதிகமாக பாதிக்கப்பட்ட மக்களாகவும் இருப்பதுடன், பெரும்பான்மையான குடும்பங்கள் பெண்களை தலைவர்களாக கொண்டவையாகவும் உள்ளன.
ஏற்கனவே இந்த கிராமத்தில் வாழும் மக்களுக்கு அடிப்படைவசதிகள் தொடர்பான பிரச்சினைகளும், காணி, குடிமனை தொடர்பான பிரச்சினைகளும் மேலோங்கி காணப்படுகின்றன. இதனை விட மாரி காலங்களில் இந்த கிராமங்கள் வெள்ளத்தினால் தொடர்ச்சியாக பாதிப்படைகின்ற நிலை காணப்படுகின்றது. ஜீவபுரம், ஜிம்றோன்நகர், தரவன்கோட்டை ஆகிய கிராமங்களில் மழை காலங்களில் தேங்கும் நீர் இராணுவத்திற்கு வழங்கப்பட்ட காணியின் ஊடாகவே குளத்தை அடைகின்றது. இந்நிலையில் படையினருக்கு ஒதுக்கப்பட்ட காணியில் முகாம் அமைக்கப்படுமானால் பெண்களாகிய நாங்கள் பின்வரும் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும்
பெண்களாகிய எங்களுடைய பாதுகாப்பு, மற்றும் நடமாடும் சுதந்திரம் பறிக்கப்படும்.
பெண்பிள்ளைகளை தனியாக பாடசாலைக்கு அனுப்புவது தொடர்பாக பெற்றோர்கள் மீள்சிந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
பெண்களை மாத்திரம் கொண்ட குடும்பங்களும், இளம்வயது பெண்களை அங்கத்தவர்களாக கொண்ட குடும்பங்களும் தங்களுடைய பாதுகாப்பு தொடர்பாக அச்சமடையும் நிலை காணப்படும்.
மக்களது பாவனைக்காக அமைக்கப்பட்டுள்ள தரவன்கோட்டை வீதியில் அமைந்துள்ள இக்குளத்தினை தொடர்ந்து பாவனைக்கு (பெண்கள் குளிப்பதற்கு பயன்படுத்துதல்) உட்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
இப்பகுதியினை சூழவுள்ள கிராமங்களில் ஏற்கனவே காணியற்ற குடும்பங்கள் அதிகமாக வாழ்கின்றார்கள். அவ்வாறிருக்க இக்காணியினை படையினருக்கு வழங்கியமை கவலைக்குரிய விடயமாகும்.
இந்தப்பகுதியில் வாழ்கின்ற குறிப்பிட்ட தொகையான குடும்பங்கள் மலசலகூட வசதியின்றி அருகில் இருக்கும் காட்டுப் பகுதியினை பயன்படுத்துகின்றார்கள். இந்நிலையில் படையினர் முகாம் அமைப்பதால் இக்குடும்பங்களுக்கு தங்களது நாளாந்த கடமைகளை பாதுகாப்பு கருதி நிறைவேற்ற முடியாமல் இருக்கும். (குறிப்பாக பெண்களுக்கு நாளாந்த கடமைகளை நிறைவேற்ற முடியாது)
இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள தாழ்நிலம் உயர்த்தப்படும் போது மழைகாலங்களில் ஏற்கெனவே வெள்ளத்தினால் பாதிக்கப்படும் இப்பகுதியில் உள்ள கிராமங்கள் அதிக வெள்ளத்தினால் மேலும் அதிகமாக பாதிப்படையும்.
பாதுகாப்பு கருதி உயர்தரம் கற்கும் மாணவிகள் அதிகாலையில் (காலை 5.00 மணி) பிரத்தியேக வகுப்பிற்கு தனியாக செல்லமுடியாத நிலை உருவாகும்.
இராணுவ முகாம் இங்கு அமையுமாயின் இவ்வீதி கனரக வாகனங்களின் பாவனைக்குட்படுத்தப்படும் இதன் காரணமாக சிறுபிள்ளைகள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படும்.
இப்பகுதியில் காணப்படும் அதிகமான வீடுகள் பாதுகாப்பற்ற வீடுகளாகவே காணப்படுகின்றன. தற்போது படையினரின் (ஆண்களின்) நடமாட்டம் அதிகரித்தால் பெண்கள் தங்களது அந்தரங்கமான விடயங்களை நிறைவேற்றுவதற்கு குந்தகம் ஏற்படும் என நாங்கள் உணர்கின்றோம்.


மேற்குறித்த விடயங்களை கருத்தில் கொண்டு தயவுசெய்து இப்பகுதியில் இராணுவ முகாம் அமைப்தை நிறுத்துவதற்கு ஆவணம் செய்யுமாறு தங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி நாதம்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment