விடுதலைக்காக ஏங்கும் தமிழ்கைதிகள்


கடலில் மிதக்கும் பனிக்கட்டியில் பத்திலொரு பகுதி மட்டுமே வெளியில் தெரியும். மிகுதி பத்தில் ஒன்பதும் கடலில் அமிழ்ந்திருக்கும்.கடலில் மிதக்கும் பனிக்கட்டி போன்று ஈழத் தமிழர்களின் அவலங்களில் பத்திலொரு பகுதி மட்டுமே வெளிபடுகின்றது. மிகுதி பத்தில் ஒன்பது பகுதியும் வெளிவராத துன்பமாக -அவலமாக கண்ணீர் வடிக்கும் சோகமாக அமிழ்ந்து போகின்றது. இதில் சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர்களின் அவலம் முதன்மையானது. பல வருடங்களாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் விடுதலைக்காக ஏங்கி ஏங்கி தவிக்கின்றனர்.ஆனால், அவர்களின் விடுதலை தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுவதாக இல்லை. நீதிமன்ற விசாரணை-தவணை ஒத்திவைப்பு என்ற பட்டோலை நீண்டு செல்வதாக இருக்கின்றதே தவிர, சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர்களின் விடிவிற்கு அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை.

தென்பகுதி நீதித்துறையில் தமிழ் - சிங்கள மொழிபெயர்ப்பாளர்களின் பஞ்சம் காரணமாக நீதி விசாரணையை துரிதப்படுத்தத முடியாதுள்ளதாக கூறப்படுகின்றது.மொழி பெயர்ப்பாளர்களின் தட்டுப்பாடு, அதனால் விசாரணை செய்ய முடியாத நிலைமை என்பன தமிழ் இளைஞர்களை சிறையில் அடைத்து வைக்கின்றது என்ற நிஜத்தை எவருமே உணர்ந்து கொள்ள மறந்துவிடுகின்றனர்.

குற்றங்கள் சுமத்தப்படலாம்.ஆனால் அந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட வேண்டும். குற்றங்கள் நிரூபிக்கப்படாத வரை ஒருவரை குற்றவாளியாகவோ அல்லது குற்றவாளிக்குரிய தண்டனையோ வழங்க முடியாது. மாறாக குற்றவாளி என்ற சந்தேகத்தின் பெயரில் மட்டுமே அவர் தொடர்பான விடயங்கள் கையாளப்பட வேண்டும். இலங்கையைப் பொறுத்தவரை வன்னிப் போருக்குப் பின்பு விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் சிலர் அரசுடன் இணைந்துள்ளனர். அரசுடனான இந்த இணைவு படைத்தரப்புடனானதாக, ஆளும் தரப்புடனானதாக இருக்கின்றது. இங்கு அவர்களுக்கு எழுதாயாப்பின் அடிப்டையில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது போன்ற நிலைமையே உள்ளது. ஆனால், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தார், குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டம் தீட்டினார்; புலிகளுக்குத் தகவல் கொடுத்தார்; தடை செய்யப்பட்ட பொருட்களைக் கடத்தினார் என்ற பல்வகைக் குற்றச்சாட்டுகளின் மத்தியில் பலநூறு தமிழ் இளைஞர்கள் பல வருடங்களாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் அதியுயர் பதவிகளில் இருந்து, அரசுடன் இணைந்துகொண்ட கருணா போன்றோர் அரசின் ஆட்சிப் பலத்தைப் பெற்று செளகரியமாக வாழும்போது,விருந்தினர் வரிசையில் கெளரவிக்கப்படும்போது சந்தேகத்தின் பேரில் கைதானவர்களை மட்டும் சிறைகளில் அடைத்து வாட்டுவது எந்தவகையில் நீதியாகும்? சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர்கள் படும் துன்பங்கள் அவர்களுக்கு ஏனைய சிங்களக் கைதிகள் கொடுக்கும் உபாதைகள், சிறைக் காவலர்கள் காட்டும் இனவாதப் போக்குகள் மத்தியில் சிறைக்குள் வாழ்க்கையை தொலைத்து நிற்கும் தமிழ் இளைஞர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்க யார் உளர்? பூட்டிய சிறைக்குள் நடக்கின்ற மனப் பூகம்பங்கள் குறித்தும் கவனம் செலுத்துவது கட்டாயம் என்பதை தமிழ் அரசியல்வாதிகள் காலங்கடந்தேனும் புரிந்து கொள்வார்களா?

நன்றி வலம்புரி 
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment