மஹிந்த ராஜபக்ஷ நாடகமாடுகிறாரா? அல்லது நீர் நாடகமாடுகிறீரா? ரொபேர்ட் ஓ பிளேக்கிடம் "ஒபாமா" கேள்வி?


இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் இலங்கையைத் தண்டிக்க வேறு வழியில்லை என்பதும் அவர்களின் கருத்தாகவுள்ளன. ஆகவே மேற்குலகம் இதனை கனகச்சிதமாக, தந்திரமாகக் கையாண்டு இலங்கைக்கு எதிராக தீர்மானம் மேற்கொள்ளும் என்பது பெரும்பாலும் உறுதியாகிவிட்டது.நல்லிணக்க ஆணைக்குழு விவகாரம் அரசுக்குப் பொல்லைக் கொடுத்து அடிவாங்கிய கதையாகிவிட்டது. அதன் சிபார்சுகளை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்ற அழுத்தம் அரசுக்கு வரத்தொடங்கிவிட்டது. ஏற்கனவே போர்க்குற்ற விசாரணை விடயம் நிலுவையாக உள்ள நிலையில் இது புதிய தலையிடிதான்.


நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை போர்க்குற்ற விவகாரத்தைச் சிறிதளவுகூட சாதகமான வகையில் அணுகவில்லை என மனிதஉரிமை அமைப்புக்கள் தொடக்கம் மேற்குலக நாடுகள் வரை உறுதியாகக்கூறிவிட்டன. இதுவிடயத்தில் உள்நாட்டு முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேசப் பொறிமுறை தேவை என்ற குரலும் சற்றுத் தீவிரமாக மேலெழும்ப ஆரம்பித்துள்ளன.



அமெரிக்கா இந்த விடயத்தில் உறுதியாக நிற்பதுதான் அரசிற்குப் புதிய தலையிடி.



போர்க்குற்றப் பிரேரணைக்கு ஜெனீவா மாநாட்டில் ஆதரவு கொடுக்கப் போவதாக அமெரிக்கா எழுத்துமூலம் இலங்கைக்குத் தெரிவித்துவிட்டது. அதே வேளை இவ்விவகாரத்துடன் நல்லிணக்கம், வடமாகாணசபைத் தேர்தல் என்பவை பற்றி விவாதிக்க வெளிவிவகார அமைச்சரை வாஷிங்டனுக்கு வருமாறும் அமெரிக்கா அழைத்துள்ளது. இந்த நிலையில் தெற்காசிய விவகாரங்களுக்கான துணை இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கின் அணுகுமுறைதான் அரசுக்குப் பெரிய நெருக்கடிகளைக் கொடுத்துள்ளது.
இம்முறை கொழும்பு வந்த அவர் அரசுக்கு நல்ல உச்சந்தலையடி கொடுத்துவிட்டுத் திரும்பியதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது. அதுவும் மஹிந்த ராஜபக்ஷ அரசில் அதிக செல்வாக்கைச் செலுத்தும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதருமான கோத்தபாய ராஜபக்ஷவுக்குத்தான் பிளேக்கின் பயணம் பெரும் கசப்பாக அமைந்துவிட்டது. கோத்தபாயவை பிளேக் சந்தித்த போது இருவருக்கு இடையேயும் பெரும் வாதப்பிரதி வாதங்கள் இடம்பெற்றதாகவும் பிளேக் கடும் தொனியில் அவருடன் பேசியதாகவும் தெரியவருகிறது.
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை ஜெனிவா மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா மிகவும் தீவிரமாக உள்ளது. அதன் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே அதனை விரும்புகின்றது. போர்க்குற்ற விவகாரத்தில் சற்றுப் பின்னடிக்கின்ற நாடுகள் கூட அதற்கு ஆதரவு கொடுக்க முன் வந்துள்ளன. ஏதோ ஒரு வகையிலாவது சர்வதேசத்துக்கு இலங்கை பொறுப்புக்கூறக்கூடிய பொறிமுறை தேவை என்று அமெரிக்கா கருதுகின்றது. இந்தியா உட்பட மேற்குலகின் முழு இலக்குமே சீனாவிடமிருந்து இலங்கையைக் கழற்றுவதுதான். தற்போதைய சூழலில் இலங்கையின் ஆட்சி மாற்றம் ஒன்றைக் கொண்டு வருவதன் மூலமே இதனை மேற்கொள்ள முடியும். ஆட்சி மாற்றத்தினைக் கொண்டு வருவதற்கு இலங்கையில் அதிகாரச் சமநிலை மாற்றமடைய வேண்டும். தற்போது அதிகாரச் சமநிலை மகிந்தருக்குச் சார்பாக அதி உச்சவகையில் உயர்ந்திருக்கின்றது. தமிழ் அரசியலுக்குச் சிறிய வகை வெற்றிகளையாவது கொண்டுவராமல் இந்த அதிகாரச் சமநிலையில் மாற்றங்களை மேற்கொள்ள முடியாது. இதனால்தான் குறைந்தபட்சம் வடக்கு மாகாணசபைத் தேர்தலையாவது நடத்த வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கின்றது. 
காலதாமதம் இலங்கையின் மீதான சீனாவின் பிடியை மேலும் உறுதிப்படுத்தும் என்பதால் அமெரிக்கா இலங்கை விடயத்தில் இப்போது அதிக அவசரம் காட்டுகின்றது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவரினால் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட கடிதம், ஹிலாரி கிளின்டனின் அமெரிக்க அழைப்பு, பிளேக்கின் இலங்கைப் பயணம், சொல்ஹெய்மின் இந்தியப் பயணம், ஜெனிவாவுக்குக் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்தல் என்பனவெல்லாம் இந்த அவசரத்தின் எதிரொலிகளே. 
இன்னொரு பக்கத்தில் ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சிக்குமிடையே அதிகாரச் சமனிலையைக் கொண்டு வருவதற்காக சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான முயற்சிகளிலும் அமெரிக்கா இறங்கியுள்ளது. இது தொடர்பாக அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் அரசுடன் தொடர்ச்சியான பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இரு தரப்பிலும் நிபந்தனைகள் முன் வைக்கப்படுவதனால் இன்னமும் பேச்சுகள் வெற்றிபெறவில்லை. இன்று மகிந்தாவுக்கு போட்டி போடக்கூடிய தலைவர் சரத்பொன்சேகாதான்.போர் வெற்றியில் அவர் மாத்திரமே பங்கெடுக்கக் கூடியவராக இருக்கின்றார். ஆனால் அவர்கூட ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து அதன் தலைமைப் பொறுப்பினை எடுக்கும்போதே அதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கும். இன்று ஐக்கிய தேசியக்கட்சி என்னதான் பலவீன நிலையில் இருந்தாலும் அரச கட்சிக்கு மாற்று அதுவேயாகும். அமெரிக்கா ஐக்கிய தேசியக்கட்சிக்குள் அவரைக் கொண்டு வருவதிலும் முன்னின்று செயற்படுவது போலத்தெரிகின்றது. 
ஜெனிவா கூட்டத் தொடரில் தமக்கு ஆதரவான நாடுகளைத் திரட்டிக்கொள்வதில் இலங்கை இப்போது அவசர அவசரமாக ஈடுபட்டு வருகிறது. அதற்காக அமைச்சர்கள் பல்வேறு ஆசிய, ஆபிரிக்க நாடுகளுக்குப் படையெடுத்துள்ளனர். சென்றதடவை இந்தியா உற்சாகத்துடன் ஆதரவைத் திரட்டிக் கொடுத்தது. ஆனால் இந்தத் தடவை இந்தியா உற்சாகமாக செயற்படுவதாகத் தெரியவில்லை.அமெரிக்காவின் முயற்சிக்கு இந்தியாவும் ஆதரவளிப்பது போலவே தென்படுகிறது. இந்தியா தன்னால் முடியாத ஒன்றை அமெரிக்கவைக் கொண்டு செயற்படுத்துகிறது என்ற தகவலிலும் உண்மைகள் இல்லாமல் இல்லை.   
இப்போது புதிதாக இராணுவ நீதிமன்றம் என்று ஒரு புஷ்வாணத்தை அவிழ்த்துவிட்டிருக்கிறது இலங்கை அரசு. இறுதிப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்கென இராணுவ நீதிமன்றம் ஒன்றை நியமித்திருக்கிறார் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய. ஜெனிவாவில் அழுத்தங்களைத் தவிர்ப்பதற்கான அரசின் ஒரு நாடகமே இது. இந்த நாடகம் சர்வதேசத்துக்குப் புரியாத ஒன்றல்ல. நியமிக்கப்பட்ட அடுத்த நாளே சர்வதேச மனித உரிமை அமைப்புக்களான மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச்சபை ஆகியவை இந்த இராணுவ நீதிமன்றை முற்றாக நிராகரிப்பதாக அறிவித்துவிட்டன. அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதனை ஒரு போதும் ஏற்கமாட்டோம் என்று வெளிப்படையாக தெரிவித்துவிட்டது. இது இப்போது அரசுக்கு மேலும் தலையிடியைக் கொடுத்துள்ளது.

இதனிடையே ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படைகள் தொடர்பான ஆலோசனைக் குழுவுக்குச் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை மறுபக்கத்தில் அரசுக்கு பெரும் நெருக்கடியாகிவிட்டது. போர்க்குற்றவாளியான ஒருவரை எப்படி இந்தக் குழுவில் நியமித்தீர்கள் என்று மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கேள்வி எழுப்பியிருந்தார். அத்துடன் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதிகளும் இந்த நியமனத்தைக் கடுமையாக எதிர்த்துள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவுடன் இந்தியாவும் இலங்கைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளமை வெட்ட வெளிச்சமாகிவிட்டது. இதனால் இப்போது இலங்கை அரசு ஆப்பிழுத்த குரங்கின் நிலையில்தான் உள்ளது. 
இந்தியா, அமெரிக்கா ஆகியவற்றுடன் முரண்படவும் முடியாமல் ஒத்துப் போகவும் முடியாமல் இரண்டும் கெட்டான் நிலை இலங்கை அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் இந்த ஜெனிவா மாநாடுதான். அங்கு தனக்கு எதிராகத் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டு அது நிறைவேற்றப்பட்டால் தனது ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்பது ஜனாதிபதி மஹிந்தவுக்கு நன்றாகத் தெரியும். அதிலிருந்து தப்பிக்கத் தான் கடுமையாகப் போராடுகிறார் அவர். அவரது போராட்டம் பலிக்குமா? பலிக்காதா? என்பது வேறு கதை. ஆயினும் ஜெனிவா மாநாடு இலங்கை அரசுக்கு நல்ல ஒரு சூடு போடும் என்றே ராஜதந்திரிகள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளார்கள். இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் இலங்கையைத் தண்டிக்க வேறு வழியில்லை என்பதும் அவர்களின் கருத்தாகவுள்ளன. ஆகவே மேற்குலகம் இதனை கனகச்சிதமாக தந்திரமாகக் கையாண்டு இலங்கைக்கு எதிராக தீர்மானம் மேற்கொள்ளும் என்பது பெரும்பாலும் உறுதியாகிவிட்டது என்றே கூறப்படுகிறது. 
பிளேக்கின் இலங்கைப் பயணமும், அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்றவியல் விசாரணைகளுக்கான விசேட தூதுவர் ஸ்ரீபன் ராப்பின் இலங்கைப் பயணமும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான ஒரு நடவடிக்கைதான். அது இலங்கை அரசுக்கும் தெரியும். ஆயினும் அமெரிக்காவைப் பகைத்துக் கொள்ளும் துணிவு மஹிந்தருக்கு இல்லை. 
மகிந்தாவைச் சந்தித்த பிளேக், அவரிடம் சில விடயங்களை தெளிவாகத் தெரிவித்திருக்கிறார். 



"யுத்தம் முடிவுற்ற பின்னர் நான் இலங்கை வந்த போது உங்களால் வழங்கப்பட்ட உறுதி மொழிகளில் எதனையும் நீங்கள் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. இதன்பின்னரும் நான் அதுபற்றி உங்களுக்கு ஞாபகமூட்டினேன். அப்போதும் நீங்கள் அக்கறை காட்டவில்லை. உங்களால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நான் எனது தலைமைக்குத் தெரிவித்திருந்தேன். இப்போது அந்த உறுதிமொழிகள் எவையும் நடைமுறைப்படுத்தப்படாதமை குறித்து என்னிடம் எனது தலைமை கேள்வியெழுப்பி இருக்கிறது" உறுதிமொழியை வழங்கிய மஹிந்த ராஜபக்ஷ நாடகமாடுகிறாரா? அல்லது நீர் நாடகமாடுகிறீரா? என்று என்னிடம் கேள்வியெழுப்பப்பட்டிருக்கிறது. ஆகவே உங்களது விடயத்தில் நான் இனி கடுமையாகவே இருப்பேன்'' என்று மஹிந்தவிடம் கூறியிருக்கிறார் பிளேக். 
இதிலிருந்து அமெரிக்கா இந்த விடயத்தில் மிகக் கடுமையாக இருக்கிறது என்பது அரசுக்கும் வெளியுலகுக்கும் வெளிப்பட்டிருக்கிறது. அந்த வெளிப்பாடு வெறுமனே பேச்சோடு மட்டுமல்ல ஜெனிவா மாநாட்டிலும் எதிரொலிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அந்த மாநாட்டில் இலங்கை அரசை நோக்கி இந்தியா, அமெரிக்கா , மேற்குலகம் எனப் பல பல்குழல்கள் தாக்குதலை நடத்தத் தயார் நிலையில் காத்திருக்கின்றன. இலங்கை அந்தப் பல்குழல் தாக்குதலில் இருந்து எப்படித் தப்பிக்கப் போகிறதோ தெரியவில்லை.

நன்றி - இன்போதமிழ்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment