தமிழர்களுக்கு நியாயமான தீர்வு...................?

"இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கு ஒரே வழி நாடாளுமன்றத் தெரிவுக்குழு தான். அதிகாரப்பகிர்வு, அரசியல்தீர்வு தேவை என்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வந்து தான் ஆக வேண்டும்."  இப்படித்தான் அரசாங்கம் அடம்பிடித்துக் கொண்டிருக்கிறது.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், அரசுக்கும் இடையிலான பேச்சுக்கள் முடங்கிப் போயுள்ள நிலையில், அரசாங்கம் உருவாக்க நினைத்த தெரிவுக்குழுவும் முடங்கிப் போயுள்ளது. அரசியல்தீர்வு குறித்த பேச்சுக்களை முடக்கியுள்ளது அரசாங்கம். தெரிவுக்குழுவை முடக்கியுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐதேக, ஜனநாயக தேசிய முன்னணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். இதனால், அரசியல் பேச்சுக்கள், தெரிவுக்குழு என்ற இரண்டு வழிமுறைகளின் மூலமும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலை இப்போது தோன்றியுள்ளது. 
  
தெரிவுக்குழுவுக்கு கூட்டமைப்பு வராததற்கு கடந்தவாரம் மகிந்த ராஜபக்ஸ ஒரு காரணத்தைக் கூறியிருந்தார். 
  
தெரிவுக்குழு எடுக்கின்ற முடிவுகளுக்கும் தாமும் காரணம் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாக நேரிடும் என்ற அச்சம் அவர்களுக்கு இருப்பதாக அவர் கூறியிருந்தார். அத்தகைய அச்சம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும் உருவாகியிருந்தால் அது தவறானதல்ல. அதேவேளை அத்தகைய அச்சம் இருப்பதை மகிந்த ராஜபக்ஸ புரிந்து கொண்டிருக்கிறார் என்பதும் முக்கியமானது, இந்தக் கட்டத்தில் அத்தகைய அச்சத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருந்தால், அதைப் போக்கியிருக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் அதனைப் புரிந்து கொண்டிருந்தும் அதனைப் போக்காமல் இருந்ததால் தான், இந்த முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது என்பதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. 
  
நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலம் தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளனவா என்பது முதலாவது கேள்வி. 

நிச்சயமாக இதற்கு இல்லை என்றே பதில் கிடைக்கும். 
  
ஏனென்றால்,

தமிழர்களை குறைந்தளவில் கொண்டிருக்கின்ற ஒரு குழுவில்,  பெரும்பான்மை எண்ணிக்கை கொண்ட உறுப்பினர்கள் ஒருபோதும் அத்தகைய உரிமைகளை வழங்க இடமளிக்கப் போவதில்லை. இங்கு இரண்டு விடயங்களில் விட்டுக் கொடுப்பதற்கு வாய்ப்பில்லை. 


முதலாவது :  இனநலன்களை விட்டுக் கொடுத்துப் போக சிங்களத் தரப்பு முன்வரப் போவதில்லை. 

  
இரண்டாவது : கட்சி நலன்களை விட்டுக் கொடுத்துப் போகவும் அவர்கள் தயாராக இருக்கப் போவதில்லை. 

  
இந்த இரண்டு நலன்களையும் மீறி தமிழர்களுக்கு நியாயமான உரிமைகளை தெரிவுக்குழுவினால் ஒருபோதும் வழங்க முடியாது. ஜனநாயகம் என்பது பெரும்பான்மையின் மூலம் தீர்மானிக்கப்படுவது. குறிப்பாக பெரிய மீன்களை சிறிய மீன்கள் உண்பது தான் ஜனநாயகம் என்பது போலவே, இங்கும் நடப்பதற்கு வாய்ப்புக்கள் இருக்கும் என்பதை விட நடக்கும் என்றே உறுதியாகக் கூறலாம். இதனால் தான் தமிழருக்கு நியாயமான தீர்வை வழங்கவோ அல்லது அதை நிராகரிக்கவோ கூடிய மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுள்ள போதும், அரசாங்கம் தெரிவுக்குழு என்ற அரங்கைத் திறந்து விட்டது. இந்தத் தெரிவுக்குழுவில் கூட பெரும்பாலானவர்கள் அரசதரப்பைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். மொத்தம் 31 பேர் கொண்ட தெரிவுக்குழுவில் 19 பேரை நியமித்து விட்டு அரசாங்கம் காத்திருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து 12 பேரை நியமித்தால் தான் இந்தத் தெரிவுக்குழுவால் இயங்க முடியும். அப்படி இயங்கினாலும் கூட இதில் தமிழர்கள் எத்தனை பேர் இடம்பிடிக்கப் போகிறார்கள்? என்பது முதலாவதும் முக்கியமானதுமான கேள்வி. அப்படி இடம்பிடித்தாலும் அவர்களின் சொல் சபையின் காதில் ஏறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. 
  
தமிழர் பிரதிநிதிகளின் கருத்துக்கு முரணாக சிங்களப் பிரதிநிதிகள் ஒன்று கூடி ஒரு தீர்வு யோசனையை முன்வைத்தால், அதனை வேடிக்கை பார்ப்பதை விட வேறெதையும் தமிழர் பிரதிநிதிகளால் செய்ய முடியாது. 
  
மாகாணங்களுக்கு அதிகாரங்கள் தேவையில்லை என்று அடித்துக் கூறுவதற்கும், தலையை ஆட்டுவதற்கும் ஏற்றவாறு தமிழர்கள் சிலரைத் தயார்படுத்தி வைத்திருக்கும் அரசு, தெரிவுக்குழுவில் அவற்றை வழங்குவதற்கான வாய்ப்புகளை ஒரு போதும் உருவாக்கிக் கொடுக்கப் போவதில்லை. அப்படித் தெரிவுக்குழுவுக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் சுயமாக செயற்படும், சிந்தித்து வாக்களிக்கும் வாய்ப்புகளை கட்சிகள் வழங்கப் போவதும் இல்லை. தெரிவுக்குழுவும் அரசதரப்பை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள நிலையில், தமிழர்களுக்கு நியாயமான ஒரு தீர்வை வழங்க அரசாங்கம் நினைக்குமானால் அதையே நாடாளுமன்றத்தில் முன்வைத்திருக்கலாம். இதற்காக ஒரு தெரிவுக்குழு தான் தேவை என்றில்லை. ஆனால் அரசாங்கம் அதற்கும் தயாராக இல்லை.  அரசியல் தீர்வு ஒன்றை எந்த வடிவத்திலும் முன்வைப்பதில்லை என்ற கொள்கையில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. இது சிங்கள மக்களை எந்த வகையிலும் பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையிலானது. 
  
தமிழருக்கு நியாயம் வழங்கப் போனால் சிங்களவரின் ஆதரவை இழந்து விடுவோமோ என்ற பயம் அரசதரப்புக்கு உள்ளது. அதன் விளைவாகவே எந்தவொரு தீர்வுத் திட்டத்தையும் முன்வைக்கவோ ஏற்றுக் கொள்ளவோ அது தயங்கி வருகிறது. ஒருவேளை தெரிவுக்குழுவில் கூட உருப்படியான ஒரு யோசனைக்கு பெரும்பாலான உறுப்பினர்கள் சுயமாக முடிவெடுத்து ஆதரவளித்தாலும் கூட, அதனை நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் தயாராக இருக்கும் என்று உறுதியாக நம்ப முடியாது. ஏற்கனவே நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் விடயத்திலும் இலவு காத்த கிளி நிலை இன்னும் தொடர்கிறது.

தெரிவுக்குழுவினால் தமிழருக்கு நியாயம் கிடைக்கும் என்று அரசாங்கம் எந்தக் கட்டத்திலும் கூறவில்லை. தெரிவுக்குழு மூலம் அரசியல்தீர்வு ஒன்றை எட்டலாம் என்று தான் கூறிவருகிறது. இப்படியான நிலையில் தெரிவுக்குழு ஏற்றுக் கொள்ளும் ஒரு திட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்காளியாகும் ஆபத்து இருக்கத் தான் செய்கிறது. உருப்படியற்ற ஒரு திட்டத்துக்கு துணை போவதைவிட ஒதுங்கி நிற்பதே மேல் என்று அவர்கள் சிந்திப்பதில் தவறில்லை. அதனை மகிந்த புரிந்து கொண்டிருப்பதால் தான், அதனை வெளிப்படுத்தியுள்ளார். இந்த விடயத்தில் கூட்டமைப்புக்கு உள்ள சங்கடத்தை புரிந்து கொண்டுள்ள மகிந்த அதனை நிவர்த்தி செய்யும் வகையில் நடந்து கொண்டிருக்க வேண்டும். நியாயமான தீர்வு ஒன்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதைச் செய்யாமல், இதை மீண்டும் மீண்டும் அவர்களுக்கான பொறியாக்கி வருகிறார். 
  
தமிழர் பிரச்சினைக்கு தெரிவுக்குழுக்களை அமைப்பதன் மூலம் எந்த வகையிலும் தீர்வு காண முடியாது. ஒருவேளை, இது தான் தீர்வு என்று ஏதோ ஒன்றைத் தெரிவுக்குழு தீர்மானித்து விட்டுப் போகலாம். ஆனால் அது தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தும் ஒன்றாக அமைய முடியாது. தமிழரின் நியாயமான உரிமைகளை புரிந்து கொண்ட, விட்டுக் கொடுப்பு மனோபாவத்துடன் கூடிய அரசியல் பேச்சுக்கள் தான் சிறந்த தீர்வைத் தரும். இத்தகைய சூழல் ஒன்று உருவாவதற்கு இப்போதைக்கு வாய்ப்புகள் இல்லை. எனவே தமிழரின் பிரச்சினைகளுக்கு நியாயமான உள்ளகத் தீர்வு ஒன்றைக் காணும் சந்தர்ப்பம் இப்போது மிகமிக அரிதாகவே உள்ளது.

நன்றி இன்போதமிழ் 
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment