தமிழ்மக்கள் எப்போதும் உரிமைக்காகவே வாக்களிப்பவர்கள்


தமிழ் மக்கள் ஒருபோதுமே அரிசிக்கும் பருப்புக்கும் வாக்களித்தவர்கள் அல்ல. எப்போதுமே தமது உரிமைகளுக் காகவே வாக்களித்து வந்துள்ளனர். நாடு சுதந்திரமடைந்த காலத்தின் பின்னர் அநேகமாக எதிரணியிலிருந்த தமிழ் அரசுக்கட்சிக்கே அவர்கள் வாக்களித்துள்ளனர் என்று ஆங்கில வார இதழொன்றுக்கு நேற்று வழங்கியுள்ள பேட்டியிலே, யாழ். மாவட்ட தமிழ் கூட்டமைப்பு எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.  

அரசாங்கம் தமிழ்ப்பகுதிகளில் அபிவிருத்தி வேலைகளை செய்து வருகின்ற போதிலும் அவை வீதிகளை அமைத்தல், மின்சாரம் வழங்குதல் போன்ற உள்சார் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளையே கொண்டுள்ளன. அரசாங்கம் எமக்கு அதிகாரத்தை வழங்கினால் எம்மை நாமே பார்த்துக் கொள்வோம். எமது பகுதிகளை அபிவிருத்தி செய்வோம். புலம் பெயர்ந்தோரிடம், சர்வதேச சமூகத்திடம் எம்மால் உதவியைப் பெற முடியும் என்று எமது மக்கள் கூறுகின்றனர். இந்த சகல விடயங்களுக்குமே எமக்கு அதிகாரங்கள் வேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாகும். மக்களின் பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை.

இப்போதும் முரண்பாடு இருக்கின்றது. முரண்பாடு நீடித்திருக்கும் வரை வெறுமனே இந்த அபிவிருத்தியில் மக்கள் திருப்தியடைவார்கள் என்று நான் நினைக்கவில்லை. தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள தமிழ் மக்கள் விரும்புகின்றனர். தமது அடையாளத்தை பேணுவதற்கு அவர்கள் விரும்பு கின்றனர்.  இலங்கை அரசு செய்ய முடியாமலிருக்கும் முக்கிய விடயங்கள் இவை. யுத்தம் முடிவடைந்து விட்டது. ஆனால் அரசாங்கத்துக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான முரண்பாடு பலவழிகளில் இருந்து கொண்டிருக்கிறது.

பல வழிகளில் தமிழ் மக்கள் நசுக்கப்படுகின்றனர். அந்த முரண்பாடு இப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. இதனை அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவர முடியும். தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் இணக்கப்பாட்டுக்கு அரசாங்கம் வரமுடியும்.  இந்த நாட்டின் சகல மக்களையும் அரசாங்கம் உள்ளீர்க்க முடியும். ஆனால் இந்த நாட்டிலிருந்து தமிழ் மக்களை துரத்த அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் முழுமையான இராணுவமயமாக்கலின் கீழும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழும் இருக்கிறோம்.

இந்த நாட்டில் வாழ முடியாது என்று மக்கள் உணர்ந்து கொண்டால் அவர்கள் நாட்டிலிருந்து வெளியேறவே முயற்சிப்பார்கள். இந்த நாட்டில் தமிழ் பிரஜைகளை ஏற்றுக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. வடக்கு, கிழக்கை, அபிவிருத்தி செய்ய எங்களால் ஆதரவை பெற்றுக் கொள்ளமுடியும். ஆனால் அந்தப் பகுதியை அபிவிருத்தி செய்வதற்கான அதிகாரத்தை அரசாங்கம் வழங்க வேண்டும். 10 இலட்சம் புலம் பெயர்ந்த சமூகம் என்பது சிறிய தொகை அல்ல. அவர்கள் பெருந்தொகை பணத்தை முதலீடு செய்வதற்கு ஆயத்தமாக உள்ளனர்.

ஆனால் தமிழ்க் கூட்டமைப்பை புலிகளின் பிரதிநிதிகள் என உலகத்துக்கு கூற அரசு முயற்சிக்கிறது. புலிகள் கோருவதை தமிழ்க் கூட்டமைப்பு கோருவதாக கூற முயற்சிக்கிறது. இது முற்றுமுழுதாக அபத்தமான பேச்சு. புலிகள் தனிநாடு கோரினர். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வுகாணப் பட வேண்டும் என்று நாங்கள் திரும்பத்திரும்பக் கூறுகின்றோம். இதனை அவர்கள் புரிந்து கொள்ளமுடியாவிடில் எங்களால் எதனையும் செய்ய முடியாது. தப்பிச் செல்ல அரசு விரும்புகிறது. அதனாலேயே தமிழ்க் கூட்டமைப்பை புலிகள் என அவர்கள் வடிவமைக்கின்றனர்.  புலம்பெயர்ந்த சமூகம் முழுவதையும் புலிகள் என்று அவர்கள் வடிவமைக்கின்றனர்.

இந்த நாட்டில் முறையான அரசியல் இணக்கப்பாடு இருக்குமானால் தனிநாட்டுக்காக புலம்பெயர்ந்த சமூகம் போராடாது. முறையான தீர்வுக்கு புலம்பெயர்ந்த சமூகத்தில் பெரும்பான்மையினர் ஆதரவளிப்பார்கள், ஆனால் அரசியல் தீர்வு இல்லாத போது இந்தப் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்றே புலம்பெயர் சமூகம் பார்க்கும். அவர்களால் எது முடிந்ததோ அதனை அவர்கள் செய்வார்கள். 

நன்றி தினக்குரல் 
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment