அமெரிக்காவின் இப்போதைய பிடி இறுக்கமானது:இதிலிருந்து எப்படி இலங்கை தப்பிக்கப் போகிறது?


இதிலிருந்து எப்படி இலங்கை தப்பிக்கப் போகிறது?

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்கும் வகையில் தான், அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலகம் நகர்வுகளை மேற்கொள்கிறது. இந்த வகையில் பார்க்கும் போது இதையிட்டு இலங்கை அவ்வளவாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றே கூறலாம். ஏனென்றால் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் கண்டனத் தீர்மானத்தினால் உடனடியாக பாரிய பிரச்சினைகள் ஏதும் வந்து விடப் போவதில்லை. இந்தத் தீர்மானத்துக்குப் பின்னரும் மசிந்து கொடுக்காது போனால் தான் அடுத்தடுத்த கட்டங்கள் ஆபத்தாக அமையும். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த காலஅவகாசம் தேவை என்று மகிந்த அரசாங்கம் கூறினாலும், அதற்காகத் தானே இந்தத் தீர்மானம் என்று மேற்குலகம் அதன் வாயை அடைத்து விடும். இத்தோடு இந்தப் பிரச்சினை தீரப்போவதில்லை. அரசாங்கம் இந்தத் தீர்மானத்தைத் தோற்கடிக்கும் முயற்சிகளில் இறங்கினால் தான் ஆபத்து, விரைவில் சூழ்ந்து கொள்ளும். ஏனென்றால் இலங்கையை அழுத்திப் பணிய வைப்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதை உணர முடிகிறது. அதற்கான காரணம் என்னவாகவும் இருந்து விட்டுப் போகட்டும். அமெரிக்காவின் இப்போதைய பிடி இறுக்கமானது, அதுதான் உண்மை. இந்தநிலையில் மேற்குலகின் தீர்மானத்தை இலங்கை தோற்கடிக்குமேயானால் அடுத்து ஏற்படக் கூடிய விளைவுகள் ஆபத்தாக அமையலாம். ஏனென்றால் அமெரிக்கா மாற்று வழிகளின் ஊடாக இலங்கை மீது கைவைப்பதற்கு அது இலகுவான வழியை ஏற்படுத்திக் கொடுக்கும். இந்தநிலையில் அரசாங்கம் ஜெனிவாவில் தொடுத்த இராஜதந்திரப் போர் எந்தளவுக்கு காத்திரமானது என்ற கேள்வி எழுவது இயல்பு. அரசாங்கத்தைப் பொறுத்தவரை, ஜெனிவா என்பது வெறுமனே கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளுடன் மோதும் களமாக இருக்காது. அது கண்ணுக்குப் புலப்படாதவர்களுடன் மோதுகின்ற, ஒன்றை அவிழ்க்க இன்னொரு முடிச்சைப் போடுகின்ற களமாகத் தான் இருக்கப் போகிறது. இதிலிருந்து எப்படி இலங்கை தப்பிக்கப் போகிறது?


இலங்கைக்கு எதிரான தீர்மானம் உடனடித் தாக்கத்தை ஏற்படுத்துமா?


ஜெனிவாவில் இன்று தொடங்கப் போகிறது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19வது கூட்டத் தொடர். இதில் பங்கேற்பதற்காக ஒரு வாரம் முன்னதாகவே, கடந்த 20ம் திகதி அதிகாலை ஜெனிவாவுக்கு வந்தடைந்தார் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். அவருடனும், அவரைத் தொடர்ந்தும் இலங்கை அரசைப் பிரதிநிதித்துவம் செய்யும் 52 பேர் கொண்ட பெரியதொரு குழு ஜெனிவா வந்தடைந்துள்ளது . ஜெனிவாவுக்கு கடந்த 20ம் திகதியே வந்தடைந்து விட்ட வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிப்பதற்கான இராஜதந்திரப் போரைத் தொடங்கியுள்ளதாக மறுநாளே ஊடகவியலாளர்களிடம் கூறினார். உண்மையில் ஜெனிவா ஒரு இராஜதந்திரப் போர்க்களமாகவே காட்சியளிக்கிறது, காட்சியளிக்கப் போகிறது. மற்றைய நாடுகளின் விவகாரங்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தால், இலங்கை விவகாரத்தில் ஜெனிவா கூட்டத்தொடரும் அதை முன்னிறுத்திய நகர்வுகளும் ஒரு பெரும் போரை ஒத்தவையாகவே காட்சியளிக்கின்றன. 

இலங்கை அரசு மீது அழுத்தங்களைக் கொண்டு வரும் தீர்மானத்தைக் கொண்டு வருவதில் மேற்குலக நாடுகள் உறுதியாக உள்ளன. அதனை முறியடிப்பதற்கான முன்னகர்வுகளில் இலங்கை அரசு மிகத்தீவிரமான முயற்சிகளில் இறங்கியுள்ளது. இந்த இராஜதந்திரப் போர்க்களத்தில் வெற்றியைப் பெறப் போவது யார் என்ற கேள்வி, இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை பற்றிய தீர்மானம் வாக்கெடுப்புக்கு செல்லும் வரை இருக்கத் தான் போகிறது. இந்தத் தீர்மானத்தின் பின்புலத்தில் அமெரிக்காவே இருந்து கொண்டிருக்கிறது. அதனை வெளிப்படையாகவும், அதிகாரபூர்வமாகவும் இலங்கை அரசிடம் அமெரிக்கா அறிவித்தும் விட்டது. ஐரோப்பிய ஒன்றியம் இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கும். அதைவிட மேலும் பல நாடுகளின் ஆதரவை அமெரிக்கா எதிர்பார்க்கிறது. 



47 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், பெரும்பான்மை வாக்குகளால் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிப்பது ஒன்றும் அவ்வளவு இலகுவானதாக இருக்காது. 

அதேவேளை, இந்தத் தீர்மானத்தை வெற்றி பெற வைப்பதுவும் மேற்குலகிற்கு சுலபமாக இருக்காது. 

இந்த ஒரு விடயம் தான் இலங்கை அரசுக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. 

லத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியா, கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஐரோப்பா என்று ஐந்து வகைப்பட்ட நாடுகளின் கையில் தான் ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளது. 

இதில் லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு மட்டும் தலா 13 வீதம் 26 உறுப்பு நாடுகள் உள்ளன. 

இந்த நாடுகளை வளைத்துப் போட்டாலே போதும் இலங்கையால் சுலபமாக வெற்றி பெற்று விடலாம்.

அதைப் பயன்படுத்தித் தான் இம்முறை அரசாங்கம் லத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்க நாடுகளின் பக்கம் பிரசாரத்தை முன்னிறுத்தியது. அது எந்தளவுக்கு பயன்பட்டுள்ளது என்பது போகப் போகத் தான் தெரியவரும். 

ஜெனிவாவில் கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னரே இந்த நாடுகளை வளைத்துப் போடும் பயணங்களை அமைச்சர்கள் மேற்கொண்டிருந்தனர். ஆனாலும் திருப்தியில்லாமல் தான், முன்கூட்டியே ஜெனிவா சென்று இறுதிநேர இராஜதந்திரப் போரைத் தொடர்ந்தார் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ். இந்த இராஜதந்திரப் போரின் ஒரு கட்டமாக இலங்கையும் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர அனுசரணையாக இருக்கவுள்ளது. பாகிஸ்தான், கியூபா ஆகிய நாடுகளுடன் இணைந்து ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் நிதி மற்றும் நிர்வாக விடயங்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வர அது முயற்சிக்கிறது. 



கடந்த செப்ரெம்பர் மாதம் நடந்த கூட்டத்தொடரில், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவில்லை என்று அமைச்சர் மகிந்த சமரசிங்கவும், ஐ.நாவுக்கான தூதுவர் தாமரா குணநாயகமும் கடுமையாக குற்றம்சாட்டியிருந்தனர். இதனால், ஒரு கட்டத்தில் நவநீதம்பிள்ளை கண்ணீர் விட்டதும் குறிப்பிடத்தக்கது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை முறியடிக்க, வெளிப்படைத்தன்மை, பக்கச்சார்பு ஆகிய ஆயுதங்களை அரசாங்கம் கையாண்டிருந்தது. இந்தநிலை இம்முறை மேலும் மோசமடைவதற்கான அறிகுறியாகவே, தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படவுள்ளது. இதற்காக முழுவீச்சில் வேலை செய்வது இலங்கை தான். ஏட்டிக்குப் போட்டியான தீர்மானங்களின் ஊடாக அரசாங்கம் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவே கருதப்படுகிறது. இந்தத் தீர்மானத்தினால் பாதிப்பு ஏதும் வராது என்று இப்போது அமெரிக்கா கூறுவதாக வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் கூறியுள்ளார். ஆனால் அதை ஏற்க முடியாது என்றும், இந்தத் தீர்மானம் இலங்கை விவகாரத்தை சர்வதேச மயப்படுத்தி விடும் என்றும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார். 

இந்த விவகாரம் சர்வதேச மயப்படுத்தப்படுவதை தவிர்க்கவே அரசாங்கம் முனைகிறது. 

அதற்காகவே, இராஜதந்திரப் போரைத் தொடுத்துள்ளது.

இந்த இராஜதந்திரப் போரின் அச்சாணியாக இருக்கப் போவது போர்க்குற்றங்களும், அதற்குப் பொறுப்புக் கூறுவதற்கான பொறிமுறையும் தான். 

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்கும் வகையில் தான், அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலகம் நகர்வுகளை மேற்கொள்கிறது. இந்த வகையில் பார்க்கும் போது இதையிட்டு இலங்கை அவ்வளவாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றே கூறலாம். ஏனென்றால் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் கண்டனத் தீர்மானத்தினால் உடனடியாக பாரிய பிரச்சினைகள் ஏதும் வந்து விடப் போவதில்லை. இந்தத் தீர்மானத்துக்குப் பின்னரும் மசிந்து கொடுக்காது போனால் தான் அடுத்தடுத்த கட்டங்கள் ஆபத்தாக அமையும். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த காலஅவகாசம் தேவை என்று மகிந்த அரசாங்கம் கூறினாலும், அதற்காகத் தானே இந்தத் தீர்மானம் என்று மேற்குலகம் அதன் வாயை அடைத்து விடும். இத்தோடு இந்தப் பிரச்சினை தீரப்போவதில்லை. அரசாங்கம் இந்தத் தீர்மானத்தைத் தோற்கடிக்கும் முயற்சிகளில் இறங்கினால் தான் ஆபத்து, விரைவில் சூழ்ந்து கொள்ளும். ஏனென்றால் இலங்கையை அழுத்திப் பணிய வைப்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதை உணர முடிகிறது. 

அதற்கான காரணம் என்னவாகவும் இருந்து விட்டுப் போகட்டும். 

அமெரிக்காவின் இப்போதைய பிடி இறுக்கமானது, அதுதான் உண்மை. 

இந்தநிலையில் மேற்குலகின் தீர்மானத்தை இலங்கை தோற்கடிக்குமேயானால் அடுத்து ஏற்படக் கூடிய விளைவுகள் ஆபத்தாக அமையலாம். ஏனென்றால் அமெரிக்கா மாற்று வழிகளின் ஊடாக இலங்கை மீது கைவைப்பதற்கு அது இலகுவான வழியை ஏற்படுத்திக் கொடுக்கும். இந்தநிலையில் அரசாங்கம் ஜெனிவாவில் தொடுத்த இராஜதந்திரப் போர் எந்தளவுக்கு காத்திரமானது என்ற கேள்வி எழுவது இயல்பு. அரசாங்கத்தைப் பொறுத்தவரை, ஜெனிவா என்பது வெறுமனே கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளுடன் மோதும் களமாக இருக்காது. அது கண்ணுக்குப் புலப்படாதவர்களுடன் மோதுகின்ற, ஒன்றை அவிழ்க்க இன்னொரு முடிச்சைப் போடுகின்ற களமாகத் தான் இருக்கப் போகிறது. இதிலிருந்து எப்படி இலங்கை தப்பிக்கப் போகிறது?


கட்டுரையாளர் தொல்காப்பியன்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment