தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆபத்தான அணுகுமுறைகள் பாகம் -2


மக்கள் ஆணையின்படியே அரசுடன் பேசுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறினாலும் உண்மையில் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலோ அல்லது அதிகாரப் பகிர்வு தொடர்பாகவோ அவர்கள் அரசுடன் பேசவில்லை. அதிகாரப் பரவலாக்கம் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறையில் சில திருத்தங்களை செய்து அதனை அமுல் படுத்துவது பற்றியே அரசுடன் பேசுகின்றனர். கடந்த பத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் அவர்கள் கனேடிய தமிழ்க் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த வருடாந்த தைப்பொங்கல் விழாவில் ஆற்றிய உரையினை ஆராய்ந்திருந்தோம்.  அப்பத்தியில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற மற்றும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற அநீதிதிகள் தொடர்பாக சுமந்திரன் அவர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் உள்நோக்கம் என்ன என ஆராய்ந்திருந்தோம். அதில், தமிழ் மக்களுக்கு நீதி பெற்றுக்கொள்ளுதல் வாயிலாக இன நல்லிணக்கத்தினை ஏற்படுத்துதல் என்ற போர்வையில்,    தமிழ் மக்களுக்கு நன்மை பயக்காத விடயங்களை எவ்வாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கின்றது என்பது பற்றியும், தமிழர்களுடைய ஆக்கபூர்வமான முயற்சிகளை எவ்வாறாக முடக்க முயற்சிக்கின்றனர் போன்ற விடயங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தது. 

இவ்வாரப் பத்தியில், சுமந்திரன் அவர்கள் கனடா தமிழ் காங்கிரஸ் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தைப்பொங்கல் விழாவில் உரைiயாற்றிய போது, இனங்களுக்கிடையே நல்;லிணக்கத்தை ஏற்படுத்துதவதற்காக அவர் முன்வைத்துள்ள இரண்டாவது அம்சமான இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றியும்;, அதனை அடைவதற்காக அவர் முன்வைக்கும் கருத்துக்களின் உண்மையான உள்நோக்கங்கள் தொடர்பாகவும் ஆராய்கின்றேன்.

சுமந்திரன் அவர்கள் தன்னுடைய உரையில் ஒரு விடயத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2010 பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கே தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர் என்பதாகும். அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட தமது கொள்கைக்கும், தாம் அரசாங்கத்துடன் பேசுவோம் என்ற நிலைப்பாட்டுக்குமே 2010 பொதுத்தேர்தலில் மக்கள் தமக்கு வாக்களித்தனர். ஆதலால், அதனை நிறைவேற்ற வேண்டியது தமது கடமையும், பொறுப்புமாகும் என்பதே அவர் வலியுறுத்திய விடயமாகும். 

மேலும், தாம் பேச்சுவார்த்தைகளில் பங்கெடுப்பதன் ஊடாக எதனையும் அடையப் போவதில்லை என பலரும் விமர்சிக்கின்றனர். ஆயினும், தம்மைப் பொறுத்தளவில் இப்பேச்சுவார்த்ததையில் ஈடுபடுவது முழுமையாக பயனற்றது என தான் கூறமாட்டேன் எனவும் சுமந்திரன் அவர்கள் அறுதியாகத் தெரிவித்துள்ளார். அத்துடன், பேச்சுவார்த்தையிலிருந்து விலகினால், எமக்கான அடுத்த கட்டம் என்னவெனவும் சுமந்திரன் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். 

சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஒரு தீர்வை நோக்கிப் பயணிப்போம் என த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதற்கே தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர் எனவும் சுமந்திரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அத்துடன்;, பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் எனவும் தெரிவித்துள்ளார். மேற்குறித்தவாறு பேசிய சுமந்திரன் அவர்கள், அதேசமயம் அதிகார பகிர்வு அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் எனவும் முரண்பாடானதும், ஏமாற்றுத்தனமானதுமான கருத்தினை வெளியிட்டுள்ளார். சுயநிர்ணய உரிமையும், அதிகாரப் பகிர்வும் அரசியல் ரீதியாக முரண்பட்ட விடயங்களாகும். சுயநிர்ணய உரிமைதான் எனக் கூறுபவர்கள் அதிகாரப் பகிர்வு தொடர்பாக பேசமுடியாது. அதிகாரப் பகிர்வை தீர்வென முன்வைப்பவர்கள் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தீர்வென கூறமுடியாது.   ஆனால் த.தே.கூ வின் நேர்மையற்ற புத்திஜீவித்தனம் என்னவென்றால அதிகாரப் பகிர்வு ஊடாக சுயநிர்ணய உரிமையை அடைய முடியும் என்பது போன்ற மாயையினை ஏற்படுத்த முனைகின்றமையாகும். இது தொடர்பாக 13-11-2011 மற்றும் 20-11-2011 ஆகிய எனது பத்திகளில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். ஆதலால், இந்த விடயத்தை நான் இங்கு மீண்டும் ஒரு தடவை விளக்க முற்படவில்லை.  

மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில், அரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபடுகிறோம் என கூட்டமைப்பினர் கூறிக்கொண்டாலும், மே 2009 உடனேயே கூட்டமைப்பினர் சுயநிர்ணய உரிமை கோட்பாட்டை அடியோடு கைவிட்டு விட்டனர். தற்போது, சுயநிர்ணய உரிமை என அவர்கள் பேசுவதெல்லாம் மக்களை ஏமாற்றுவதற்கான வெறும் வெற்றுக் கோசங்கள் மட்டுமே. சுயநிர்ணய உரிமையை கைவிட்டுள்ள கூட்டமைப்பினர், அரசாங்கத்துடனான பேச்சுக்களில் சுயநிர்ணய உரிமையுடன் சிறிதளவும் தொடர்பற்ற அதிகார பகிர்வு தொடர்பாகக் கூட பேசவில்லை. அவர்கள் பேசுவதெல்லாம், அதிகார பகிர்வு என்ற கருத்தியலை விடவும் மிகக் குறைந்த அதிகார பரவலாக்கம் என்ற கருத்தியலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட, அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டம், மாகாண சபைக்கான அதிகாரங்களில் ஒரு சில திருத்தங்களை செய்து அமுல்படுத்துவது பற்றி மட்டுமேயாகும். இதனை சுமந்திரன் அவர்கள் தனது உரையின் இன்னுமொரு இடத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார், தாம் இதுவரை அரசாங்கத்துடன் நடாத்தி வந்த பேச்சுக்களில் 13ம் திருத்த சட்டத்திலுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களை அதிகரித்து அமுல்படுத்துவது தொடர்பாகவே பேசி வருவதாக தெரிவித்துள்ளார். இதனைக் குறிப்பிடுவதன் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடனான பேச்சுக்களில் 13வது திருத்த சட்டங்கள் தொடர்பாகவே பேசிவருகின்றதென்பதை சுமந்திரன் தானே ஏற்றுக்கொண்டுள்ளார். இது, ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் உத்தியோகப+ர்வமாக நிரந்தர அடிமைகளாக்கும் நிலைக்கு கொண்டு செல்லும் ஆபத்து நிறைந்த நடவடிக்கையாகும். 

அதாவது, 13ம் ஆவது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளில் அதிகாரப்பகிர்வு கிடையாது என்றும், அதற்கு காரணம் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆளுனரிடம்தான முழுமையான நிறைவேற்று அதிகாரங்கள் இருக்கின்றதென்றும், மக்களால் தெரிவுசெய்யப்படும் சபைக்கு சட்டங்களை நிறைவேற்றும் சட்டவாக்க அதிகாரங்களும் இல்லையெனவும் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில், சபையால் இயற்றப்படும் சட்டங்களை ஆளுநர் ஏற்றுக்கொள்ளாதவிடத்து, எதுவும் செய்யமுடியாது என்பதையும் சுமந்திரன் அவர்களே  தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.   அதுமட்டுமன்றி, இந்தக் காரணங்களுக்காகத்தான், 1980களில் இருந்து தமிழ்த் அரசியல் தலைமைகள் மாகாணசபையை நிராகரித்து வந்துள்ளனர் என்பதையும் சுமந்திரன் அவர்கள் தானே சுட்டிக்காட்டியுள்ளார். 

த.தே.கூ உடன் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தையில்,  காணி, பொலிஸ் அதிகாரங்களை ஒருபோதும் கொடுக்கப் போவதில்லையென்று ஜனாதிபதி மகிந்தவும், அவர்களது சகாக்களும் வெளிப்படையாக கூறுகின்றார்கள். ஆதலால், பேச்சுவார்தையில் ஈடுபடுவதில் என்ன பயனுள்ளது என்ற கேள்வி மேலெழுந்தபோது, தாம் பேச்சுக்களில் ஈடுபடுவதனை நியாயப்படுத்துவதற்கான கருத்துக்களை பின்வருமாறு முன்வைக்கின்றார். அதாவது அவர்கள் கொடுக்க முடியாது என்று கூறிக் கொண்டிருக்கும்போதே தாம் அவர்களுடன் நடைபெறும் பேச்சுவார்தையில் மகாணசபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை அதிகரிப்பது தொடர்பாக பேசிவருகிறோம் என்று கூறி பேச்சுக்களில் ஈடுபடுவதனை நியாயப்படுத்த முனைந்துள்ளார். அதன் மூலம் பேச்சுவார்த்தையின் உண்மை நிகழ்ச்சி நிரலை சுமந்திரன் வெளிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளானார்.

இங்கே கவனிக்க வேண்டிய மிக ஆபத்தான விடயம் யாதெனில், சுயநிர்ணய உரிமையை கைவிட்டுள்ளதாகவும், மகாணசபை தீர்வாக ஏற்றுக் கொள்ளப் போகின்றார்கள் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோது, தாம் 13ம் திருத்த சட்டத்தை தீர்வாக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என கூட்டமைப்பின் தலைவர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறி கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், 13 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபையை ஏற்றுக் கொள்ள பிற சக்திகளால் நிர்ப்;பந்திக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் தாம் ஏற்றுக் கொள்ளப்போகும் 13ம் திருத்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாண சபையை தமிழ் மக்களிடம் விற்பனை செய்வதற்கான தேவை கூட்டமைப்பினருக்கு எழுந்துள்ளது. அதற்காக கூட்டமைப்பு பல்வேறு ஏமாற்றுத் தந்திரங்களை கையாளத் தொடங்கியுள்ளது. 13 ஆம் திருத்தச் சட்டத்தை மக்களை ஏற்றுக் கொள்ள வைப்பதற்கு கூட்டமைப்பினர் எவ்வாறான தந்திரங்களை கையாள்கின்றனர் என்பதற்கு சுமந்திரன் அவர்களது உரை தெளிவான சான்றாக உள்ளது. 

அதாவது 13ஆம் திருத்தம் ஒர் தீர்வு இல்லை அதனை த.தே.கூ ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று வெளியில் கூறிக் கொண்டிருந்தாலும், சனாதிபதியை அம்பலப்படுதுகின்ற தந்திரோபாய நடவடிக்கை என்ற பெயரில் அதே 13 ஆம் திருத்தச் சட்டத்தை ஏற்க வைக்கும் தமது நிகழ்ச்சி நிரலை சுமந்திரன் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்.   “13ம் திருத்தச் சட்டத்தை கூட அமுல்படுத்துவதற்கு தயாரில்லாத ராஐபக்ச அவர்கள் தான் 13 ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த தயார் என்றும் அது மட்டுமன்றி அதற்கு அப்பால் செல்வதற்குக் கூடத் தயார் என்றும் ஓர் பொய்யினை ஐந்து தடவகைள் மீண்டும் மீண்டும் கூறியுள்ளார். எனவே நீங்கள் அமுல் படுத்துவதாக கூறிய 13 ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்ப்படுத்துங்கள் என்று நாங்கள் தந்திரோபாய ரீதியாக அவரிடம் கேட்க வேண்டும். அவ்வாறு கூறி ராஐபக்சவை அம்பலப்படுத்த வேண்டுமென்று சுமந்திரன் தனது உரையில் கூறியுள்ளார்”;.

இவ்வாறு கூறி காய்களை நகர்த்துவதன் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றி,  பின்கதவால் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் என்ற நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ் அரசியலை கொண்டு சென்று முடக்க முயற்சிக்கின்றனர். 

கடந்த 2011 ஆகஸ்ட் மாதத்தில் புதுடில்லியில் நடைபெற்ற மகாநாட்டில் அதன் ஏற்பாட்டாளரான சுதர்சனநாச்சியப்பன் அவர்கள் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலேயே தீர்;வு யோசனையை முன்வைக்கும்படி கூறி, அவ்வாறான தீர்வு யோசனையை மட்டுமே இந்திய அரசு ஏற்றுக் கொள்ளும் என்றும் கூறி அந்த அடிப்படையில் தீர்வு யோசனையை தயாரித்து தருமாறு அழுத்தத்தினை பிரயோகித்திருந்தார். அது மட்டுமன்றி இந்திய பாராளுமன்றில் இலங்கை பிரச்சினை தொடர்பான இடம்பெற்ற விவாதங்களின்போது இந்தியாவின் ஆட்சியிலுள்ள கூட்டணிக் கட்சிகள் மற்றும் பிரதான எதிர் கட்சியான பிNஐபி உட்பட்ட முக்கிய கட்சிகள் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான தீர்வை வலிறுத்தி வந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. 

எனவே 13 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான தீர்;வை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது பிற சக்திகளால் எப்பொழுதோ தீர்மானிக்கப்பட்ட விடயம். இராஐதந்திரம்  என்னும் பெயரில் ஏமாற்றி 13 ஆம் திருத்தம், மாகாண சபை என்ற நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ் மக்களை கொண்டு வருவதற்கு கூட்டமைப்பினரும், அவர்களுக்கு பின்னால் உள்ள சக்திகளும் கூட்டாக மேற்கொள்ளும் நாடகமே தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 

தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கான கூட்டமைப்பினரது நாடகம் இவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது எமது மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால். சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் தேசமும் சிங்கள தேசமும் ஒரு நாட்டுக்குள் தீர்வு காணுவதாயின் அது தமிழ் தேசத்தின் தனித்துவமான இறைமை அங்கீகரிக்கப்பட்டு தமிழ் தேசத்தின் இறைமையின் பகுதிகளை சிங்கள தேசத்தின் இறைமையுடன் கூட்டுவதனூடாக அவ்வாறான தீர்வு காணப்பட முடியும். அதனைவிட வேறு தெரிவுகள் எதுவுமே இல்லை. 

அதிகாரப் பகிர்வு ஊடாகவோ அல்லது கூட்டமைப்பு தற்போது  பெற்றுக் கொள்ள முயலும் அதிகாரப் பரவலாக்கல் ஊடகவோ தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையை நிறைவேற்ற முடியாது. மாறாக இது எமது சுயநிர்ணய உரிமையை நாமாவே புறந்தள்ளி நிரந்தர அடிமைகளாக வாழும் சூழலை நாமே விரும்பி ஏற்றுக் கொள்வதாக அமையும்.  

கூட்டமைப்பினர் தமது இந்த மோசமான திட்டத்தை மக்கள் மத்தியில் விற்பதற்காக மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய சில வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக “தந்திரோபாயம்”, “பொறுப்புணர்வுடன் செயற்படுகின்றோம்”, “பக்குவமாக செயற்படுகின்றோம்;”, “நிதானமாக செயற்படுகின்றோம்”,  “சர்வதேசத்தின் நம்பிக்கையை பெற்றுக் கொள்ளும் வகையில் செயற்படுகின்றோம்” இவ்வாறெல்லாம் வார்த்தை ஐhலங்களை பயன்படுத்துகின்றனர். இவர்களது இந்த வார்த்தை ஐhலங்களை நம்பி தமிழ் மக்கள் ஏமாந்து விடாமல் இருக்க வேண்டுமாயின் ஆழமாக சிந்தித்து செயற்படல் வேண்டும்.

- கஜேந்திரகுமார் பொன்னம்பலம் -

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment