தம்பலகாமம், பாரதிபுரப் படுகொலை


சிறிலங்கா சுதந்திரமடைந்த நாளில் இருந்து, தமிழ்மக்கள் எதிர்கொண்ட, அவர்களை உலுக்கியெடுத்த படுகொலைகள் ஏராளம். அதிலும் கிழக்கு மாகாணம் படுகொலைகளின் களமாகவே இருந்தது. காரணம் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் அத்துமீறிய குடியேற்றங்களும் கிழக்கு மாகாணத்தை வசப்படுத்த முற்பட்டமைதான்.  தமிழர் பிரதேசங்களில் படுகொலைகளை நிகழ்த்தி விரட்டியடிப்பதன் மூலம் சிங்களமயமாக்கலைச் செய்வதை உத்தியாகக் கொண்டிருந்தனர். நில அபகரிப்பிற்காக, கிராமப்படுகொலைகள் சத்தமின்றி நடந்தேறின.  பாலம்போட்டாறு, ஜெயபுர ஆனதும் முதலிக்குளம் மொறவெவ ஆனதும் இப்படித்தான். இதன் தொடர்ச்சியாக, தம்பலகாமம் வடக்கில் குடியேற்றப்பட்ட சிங்களவர்கள் தமது எல்லைகளை விரிவுபடுத்தும் பொருட்டு தம்பலகாமத்தின் ஏனைய பகுதிகளை நோக்கித் தாக்குதல்களை ஆரம்பித்தனர். அதில்தான், 01.02.1998 அன்று பாரதிபுரத்தில் நடந்தேறியது அந்தக் கோரச்சம்பவம்.

பொதுவாக, எல்லைக் கிராமங்களில் நடக்கும் படுகொலைகள், தாக்குதல்களை சிங்கள-தமிழ் மக்களிடையேயான இனக்கலவரம் என வரையறைப்படுத்தி, சிறிலங்கா அரசு அதைக்கண்டு கொள்வதேயில்லை. இது சிங்களத் தாக்குதலாளிகளுக்கு வாய்ப்பாக இருந்தது மட்டுமன்றி, அரசின் ஊக்குவிப்பாகக்கூட அமைந்தது. ஆனால் தம்பலகாமத்தில் நடந்த படுகொலையில் காடையர்களுடன் காவல்துறையும் சேர்ந்து கொண்டதுதான் மிகப்பெரிய அவலம்.

தம்பலகாமம், திருகோணமலை மாவட்டத்தில், விவசாயக் கிராமங்களைக் கொண்ட பிரதேசம்திருகோணமலை நகரத்திலிருந்து பன்னிரண்டு மைல் தொலைவில் அமைந்துள்ளதுசம்பந்தரால் பாடல்பெற்ற தலமான திருக்கோணேசரத்துடன் தொடர்புடைய ஆதிகோணேசுரர் ஆலயத்தைக் கொண்டமைந்த சிறப்புப் பெற்றது. பாரதிபுரம், தம்பலகாமத்தின் பசுமையான கிராமங்களில் ஒன்று. கந்தளாய்க்குளத்தின் நீரப்பாசனத்தால் விவசாயத்தில் தன்னிறைவைக் கொண்டிருந்த வளமான கிராமம்.  இதன் காரணமாகவே சிங்களவர்களின் இலக்காக மாறியது

1990களின் பிற்பகுதியில் தம்பலகாம உதவி அரசாங்க அதிபர் பிரிவில் இருந்த அத்தனை தமிழ்க்கிராமங்களும் இனத்தாக்குதலுக்கு உள்ளாகின. மனிதாபிமானமற்ற தாக்குதல்களால் அப்பிரதேசம் ஒட்டுமொத்தமான, பாரிய இடப்பெயர்வைச் சந்தித்தது. பெருமளவு மக்கள் வடபுலம் நோக்கி ஓடிவந்தனர். எஞ்சியோர் அகதிமுகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் தஞ்சமடைந்தனர். கிராமத்து மண்ணையே தமது சீவனோபாயத்திற்காக நம்பியிருந்த மக்களால் சிலகாலங்கள்கூட நீடிக்க முடியவில்லை. பசி, பஞ்சம், வறுமை வாட்டியெடுக்கத் தொடங்கியதால் உயிரைப் பணயம் வைத்து தமது சொந்த இடங்களுக்குச் திரும்பவும் செல்லத் தொடங்கினர். இனவாத அட்டகாசங்கள் சற்றே தணிந்திருந்ததால், சிங்களவர்களால் பறிக்கப்பட்ட கிராமங்கள் போக, மீதி இடங்களில் தமது இருப்பிடங்களை அமைத்துக்கொண்டனர்

அவ்வாறு மீளக்குடியமர்ந்த கிராமங்களான புதுக்குடியிருப்பு, பொற்கேணிபாரதிபுரம் போன்றவற்றை இலக்கு வைத்துப் பேரினவாதிகள் மீண்டும் தாக்கத்தொடங்கினர். அதன் உச்சக்கட்டமாக, தமிழர்களை அச்சமுறுத்தும் நோக்கில் ஒரு கோரப்படுகொலையை பாரதிபுரத்தில் நிகழ்த்தி முடித்தது சிறிலங்கா காவல்துறை

01-02-1998
அன்று காலை, மெதுவாக இருள் அகன்று கொண்டிருந்த வைகறை நேரத்தில் துயிலெழுந்த கிராமம் தனக்கான அன்றைய பணிகளுக்காக தயாராகிக் கொண்டிருந்ததுஏறக்குறைய 5.00 மணிக்கும் 6.00 மணிக்கும் இடைப்பட்ட அந்த விடியல் பொழுதில், காவல்துறை நிலையத்திலிருந்த காவல்துறையினரும் ஊர்காவல் படையினரும், அப்பகுதிகளில் வயல்வெளிக்கும், பணிக்கும் சென்று கொண்டிருந்தவர்களை  விசாரணை எனக்கூட்டிச் சென்று காவலரணனின் முன்னால் நிற்கவைத்தனர். காரணம் ஏதுமின்றி இழுத்துச் செல்லப்பட்ட அப்பாவிகள் நிதானிக்கும் முன்புசுற்றி நின்று சுட்டுத் தள்ளினர். மொத்தமாக எட்டு உடல்கள், சில கணங்களில் பிணமாகச் சரிந்தன. தொடர்ந்து நாலாபக்கமும் இலக்கின்றிச் சுட்டதில் பதினேழுபேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்த எட்டுப்பேரில்,  நான்குபேர் பள்ளிப்படிப்பை முடிக்காத மாணவர்கள். அவா்களில் இருவர் பதின்ம வயதில் இருந்த சகோதரர்கள்.

சுட்டுக்கொன்ற பின்னும் கொலைவெறி அடங்காத காவல்துறை, பிணங்களை உதைத்தும் குத்தியும் உருக்குலைத்தது.  உயிரிழந்த ஒருவரின் ஆண் உறுப்பை வெட்டி அவரது வாய்க்குள் திணித்துவிட்டுச் சென்றது. அதிகாலைவேளையில் நடந்த கோரக் கொலையால் தமபலகாமம் மீண்டும் ஒருமுறை கதிகலங்கியது. பிணமாகப் பிள்ளையைப் பார்த்த பெற்றோர், தந்தையைப் பார்த்த குழந்தைகளின் கதறல், அந்த வைகறைப் பொழுதை அதிரவைத்தது. அவர்களின் கண்ணீரில் அந்தக் கிராமமே நனைந்தது. அடுத்து என்ன நடக்கப்போகின்றதோ என்ற அச்சத்தில் பலர் உறைந்துபோயிருந்தனர். அன்று விழுந்த பேரிடியால், மீண்டும் தமது கிராமத்தை விட்டு இடம்பெயரத்தொடங்கினார்கள்

வழமையாக இத்தகைய தாக்குதல்களை இனவாதம் என முடிச்சிடும் சிறிலங்கா அரசு, இம்முறை காவல்துறையின் அடாவடி நேரடியான சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டதால், கண்துடைப்பாக ஒரு விசாரணையை மேற்கொண்டது. விசாரணையில் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினரும் ஊர்காவல்படையினரும் சம்பந்தப்பட்டிருப்பதாக நிறுவப்பட்டபோதும், இதுவரை அந்தக் குற்ற அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுமில்லை, குற்றவாளிகள் தண்டிக்கப்படவுமில்லை.

அன்றைய சம்பவத்தில் அநியாயமாகக் கொல்லப்பட்ட அப்பாவிகள் விபரம் 
1.     அமிர்தலிங்கம் சுரேந்திரன் -   14
2.     அமிர்தலிங்கம் கஜேந்திரன்-   18
3.     முருகேசு ஜனகன் -                     17
4.     நாதன் பவளநாதன் -                   45
5.     சுப்பிரமணியம் திவாகரன்
6.     குணரத்தினம் சிவராஜன்
7.     ஆறுமுகம் சேகர்
8.     பொன்னம்பலம் கனகசபை
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment