விடுதலைப்புலிகளின் இராணுவ வல்லமையை இயலாமைக்குட்படுத்தும் நோக்குடன் சிங்களப்படையால் முன்னெடுக்கப்பட்டது தீச்சுவாலை படைநடவடிக்கை. இத்தீச்சுவாலைக்கு எதிரான படைநடவடிக்கையை தலைவர் எவ்வாறு கையாண்டார் என்று எழுதிய போது அவரின் கருத்துக்கமைவாக போராளிகள் சண்டையில் எத்தகைய அர்ப்பணிப்புக்களைச் செய்து, செயற்பட்டு அவரின் எண்ணத்தை நிறைவேற்றினார்கள் என்பதை எடுத்தியம்பும் சில சம்பவங்களைப் பதிய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
தீச்சுவாலை முறியடிப்புத் திட்டத்திற்கமைவாக முன்னனியில் ஒரு காவலரண் வரிசை பின்னுக்கு இரண்டாவது காவலரண் வரிசை என இரண்டு தடுப்பு காவலரண் வரிசைகள் அமைக்கப்பட்டன. முன்னணி தொடர் நிலைக்கு முன்னுக்கு கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டதுடன் தொடர் காவலரண்களை இணைத்து மண் அணையும் மறைப்பு வேலியும் அமைக்கப்பட்டன. காவலரண்களுக்கு இடையில் மண்ணணையின் உட்புறமாகவும் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டன. முன்னணி தொடர் நிலைக்கு முன்னுக்கு (கண்ணிவெடிகளைத்தாண்டி) இரவு வேளைகளில் மட்டும் எல். பி என்று சொல்லப்படும் மூவர் கொண்ட சிறிய அணி முன்னணி நிலையில் இருந்து கிட்டத்தட்ட 100 மீற்றர் முன்னால் நிறுத்தப்படுவர் (எதிரியின் நகர்வை அவதானித்ததும் பகுதித்தளபதிக்கு அறிவிப்பார்கள்) முன்னணி காவலரண் வரிசைக்கு தளபதி தீபன் அவர்களும்,இரண்டாவது காவலரண் வரிசைக்கு தளபதி பால்ராஜ் அவர்களும் பொறுப்பாக இருந்தனர். தளபதி பானு, ராயு ஆகியோர்கள் பீரங்கிகளை ஒருங்கிணைத்தார்கள்.
தீச்சுவாலைக்கு எதிராகக் கிளாலிப்பகுதியில் நடைபெற்ற தாக்குதலை வழிநடாத்திய தளபதியின் அனுபவத்தினூடு இப்பதிவு பயணிக்கப்போகின்றது. கிளாலிப்பகுதியில் நின்றது சோதியா படையணியாகும்.
அதிகாலை 4 மணிக்கு தீபண்ணை கட்டளைமையத்திலிருந்து தொடர்பு கொண்டு “இன்றைக்கு உனக்கு கிடைக்கும்” என்ற செய்தியை வோக்கியில் பரிமாறி இராணுவம் நகரப்போகின்றான் என்பதை பகுதித்தளபதிகளிற்கு உறுதிப்படுத்துகின்றார். அத்துடன் எல்லோரும் தொடர்புடன் இருக்கின்றார்களா? என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்கின்றார். பகுதிகளில் உள்ள எல்லா பொறுப்பாளர்களின் வோக்கிகளும் தொடர்புகளை சரிபார்க்கின்றன.
கிளாலிப்பகுதியின் முன்னணி தொடர்காவலரணுக்கு முன்னுக்கு 130 மீற்றர் தூரத்தில் பகுதித்தளபதியின் நேரடித்தொடர்புடன் விடப்பட்ட எல்.பி அணியின் தொடர்பும் சரிபார்க்கப்படுகின்றது. அவர்களும் 'இன்னும் ஒன்றும் கிடைக்கவில்லை' என 4.15 மணிக்கு உறுதிப்படுத்தினர்.
தொடர்ந்து பாரிய சண்டையை எதிர்பார்த்து அணிகள் தயார்ப்படுத்தப்பட்டிருந்தாலும் இடையிடையே இப்படித்தான் இராணுவம் நகருவான் என எதிர்பார்த்து காத்திருந்து நடைபெறாமல் போன சந்தர்ப்பங்களும் உண்டாகையால் வழமைபோலவே காத்திருந்தனர்.
4.45 மணியளவில் எல்.பி யில் நின்ற பெண் போராளிகள் வோக்கியில் தொடர்பு கொண்டு, மிகவும் இரகசியமான குரலில் 'தங்களிற்கு முன்னால் உள்ள பற்றைகளில் முறித்துச் சத்தம் கேட்கின்றது அண்ணை' என தெரியப்படுத்தினர். உடனடியாகவே அவர்களை லைனுக்குத் திரும்பிவருமாறு கூறினார் பகுதித்தளபதி. ஆனால் அப்பெண் போராளிகளோ 'இல்லை அண்ணை, கொஞ்சம் எட்டத்திலதான் சத்தம் கேட்குது. இன்னும் கொஞ்ச நேரம் இருந்து பார்த்துவிட்டு வருகின்றோம்' என பதிலளித்தனர். மீண்டும் 5.35 மணிபோல் தொடர்பு கொண்டு 'ஆமி கிட்ட வந்திட்டா........' என்று சொல்லி முடிப்பதற்குள் வோக்கியில் துப்பாக்கிச்சத்தங்கள் கேட்க தொடர்பு துண்டிக்கப்படுகின்றது. ‘ஆம்‘ தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை தொடங்கிவிட்டது.
கிளாலிப்பகுதியில் சண்டை தொடங்கி சிறிது நேரத்திலேயே முன்னணிக்காவலரண் வேலியை உடைத்துக் கொண்டு உள் நுழைந்த இராணுவம் 53 வது டிவிசனின் ஒரு தொகுதி, இரண்டாவது காவலரண் வேலியைத் தாண்டிச் சென்று நிலையெடுத்தான். இது அவனது பிரதான உடைப்பு, இது தவிர கிளாலிக்கடற்கரை, மற்றும் அதிலிருந்து 150 மீற்றரில் இருந்த ஆற்றுப்பிரதேசத்தால் என இரண்டு சிறிய உடைப்புக்களையும் செய்திருந்தான். கிளாலிப்பக்கத்தில் பிரதான உடைப்பிற்குள்ளால் நகர்ந்த இராணுவம் வெடிபொருள் விநியோக இடம் மற்றும் தற்காலிக மருத்துவமனை அமைந்திருந்த பங்கர்களிற்கு அருகில் வந்துவிட்டதால், அங்கு நின்ற போராளிகளும் அருகில் இருந்த பகுதி கட்டளை மையத்தில் இருந்த அணிகளுடன் ஒன்றாகினர்.
பொழுது புலர்ந்தபோது இராணுவம் உள்ளுக்கு வந்து கண்டிவீதிக்கு இடது பக்கம் இருக்கும் கிளாலிப்பக்கமும் றோட்டுக்கு வலதுபக்கமான கண்டல்பக்கமும் இரண்டு தனித்தனி பெரிய 'பொக்ஸ்' அடித்துவிட்டான் என்பது புலனானது. குறிப்பாக கட்டளைத்தளபதி தீபன் அவர்களின கட்டளை மையத்தைச்சூழவும் எதிரி முன்னேறியிருந்தான். மொத்தத்தில் முன்னணிக் காவலரண் வரிசைக்கான அனைத்துத் தளபதிகளின் கட்டளை மையங்களையும்தாண்டி இராணுவம் முன்னேறியிருந்தான். இதில் கிளாலிப்பகுதிக்கட்டளை மையம் ஒரு மணல் பிட்டியில் இருந்ததால் அதை சரியாக இனம்காணாத இராணுவம் அதை கைப்பற்றும் நோக்குடன் அந்தப்பகுதிக்குள் நகர்ந்தான்.
அதேவேளை கிளாலி கடற்கரையாலும் அதிலிருந்து 150 மீற்றர் வலதுபக்கத்தாலும் உடைத்த இராணுவம் கடற்கரைப்பகுதியை கைப்பற்றுவதற்கான தாக்குதலை ஆரம்பிக்கின்றான். உடைபட்ட பகுதிக்காவலரண் போராளிகளும் மற்றக்காவலரண்களில் நின்ற போராளிகளுடன் இணைந்து, மோட்டரையும் இணைத்து, பக்கவாட்டால் மேலதிக காவலரண்களை இராணுவம் கைப்பற்ற விடாது தாக்குதலை மேற்கொள்கின்றனர்.
அதேவேளை கண்டிறோட்டிற்கு வலது பக்கமான கண்டல் பக்கமாக உடைத்த இராணுவம் இரண்டாவது காவலரண் வேலியைத்தாண்டி ‘பொக்ஸ்‘ வடிவில் நிலையெடுத்தான். கண்டி வீதிக்கு இடது வலது பக்கமான கிளாலிப்பக்கம் உடைத்த இராணுவமும் இரண்டாவது காவலரண் வரிசையை ஊடறுத்து ‘பொக்ஸ்‘ வடிவில் நிலையெடுத்திருந்தான். இப்போது களமுனை மூன்று துண்டுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
இராணுவத்தின் நோக்கமானது இரண்டு பக்கத்தாலும் புலிகளின் இரண்டாவது காவலரண் வேலியைத்தாண்டி ஊடறுத்து விட்டு, இரண்டாவது காவலரண் வேலியை அடிப்படையாக வைத்து இருபகுதி இராணுவமும் கைகோர்ப்பதாகும் . இதனால் தளபதி தீபன் உட்பட அத்தனை தளபதிகளும் படையணிகளும் தங்களது பொறிக்குள் மாட்டிவிடும் என திட்டமிட்டனர். ஆனால் இரண்டாவது தொடர்காவலரண் பகுதியால் நகர்ந்து இருவரும் கைகோர்ப்பதை தடுத்து பின்னணி நிலையில் கட்டளைத்தளபதி பால்ராஜ் தலைமையில் இருந்தவர்கள் சண்டையைத் தொடங்கினர்.
அதேநேரம் கிளாலிப்பகுதிக் கட்டளைமையத்தை நோக்கி நகர்ந்த இராணுவத்தின் மீது சினைப்பர், மற்றும் ஏ.கே.எல்.எம்.ஜி கனரக ஆயுதத்தாலும் தாக்குதலை மேற்கொள்ள, கிட்டத்தட்ட 22 பேருக்கு மேல் கொல்லப்பட்டு பலர் காயப்பட்டதுடன், தனது நகர்வை நிறுத்தி காயப்பட்டவர்களையும் இழுத்துக் கொண்டு அருகில் இருந்த பண்ட்(மண்அணை) பாதுகாப்பெடுத்து கட்டளைமையத்தின் மீது தாக்குதலை தொடுத்துக்கொண்டிருந்தது இராணுவம்.
இதேநேரத்தில் சாள்ஸ் அன்ரனி படையணியின் சிறப்புத்தளபதி வீரமணி, துணைத்தளபதி கோபித் ஆகியோரின் தலைமையிலான அணிகளும் உடைந்த பகுதிகளை மூடுவதற்கான தாக்குதலை மோட்டாரின் துணையுடன் முன்னெடுக்கத் தொடங்கினர்.
இராணுவம் புலிகளின் முன்னணி காவலரண் நிலையைத்தாண்டி பின்னுக்கு இரண்டு கிலோமீற்றருக்கு மேல் சென்று விட்டது. இராணுவம் தங்களைத் தாண்டியதைப்பற்றி ஒரு பொருட்டாக எடுக்காமல் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன. இதை எதிரி எதிர்பார்க்கவில்லை. தளபதி வீரமணி, கோபித், கிளாலித்தளபதி, தளபதி துர்க்கா போன்ற பிரதான தளபதிகளின் கட்டளை மையங்களை இலக்கு வைத்து நகர்ந்த இராணுவம், தாக்குதல்களை நடாத்தியபோதும் அவர்களின் கட்டளையை செயலிழக்க வைக்க முடியவில்லை.
அங்கிருந்த போராளிகள் கட்டளைமையத்தை இராணுவம் செயலிழக்கவைக்கமுடியாத வண்ணம் தரைவழித் தாக்குதலை நடாத்திக் கொண்டு மோட்டரையும் இணைத்து தங்களின் தளபதிகள் தொடர்ந்து அணிகளை வழிநடாத்த வழிவகுத்தனர். ஆங்காங்கு கள நடவடிக்கைக்காகப் பின்னணியில் நின்ற போராளிகளும் மோட்டாருக்கு இலக்குகளை கொடுத்து எதிரி நின்ற இடங்களில் எல்லாம் தாக்குதலை மேற்கொண்டனர்.
தலைவர் சொன்னது மாதிரியே 'ஒருவரும் இடங்களை விட்டு நகராமல்' முன்னணி காவலரண் வேலியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து எதிரியை உள்ளே மடக்கியழிப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்தனர். சமநேரத்தில் தளபதி பால்ராஜ் தலைமையிலான அணியினரும் இராணுவத்தினரின் மீது தாக்குதலைத் தொடுத்து அவர்களின் இலக்கை அடையவிடாமல் கட்டுப்படுத்தினர்.
கிளாலிப்பகுதியில் உள்நுழைந்த இராணுவம் கிளாலிப்பகுதி அணிகளை சுற்றிவளைக்கும் நோக்கில் நகர்ந்தது. அப்படி கிளாலியால் நகர்ந்த ஒரு இராணுவத்தொகுதி தளபதி துர்க்காவின் கட்டளைமையத்திலும் தாக்குதலைத் தொடங்கியது. எதிரியின் கடுமையான தாக்குதலால் ஒரு கட்டத்தில் தளபதி துர்க்காவின் குறோஸ் (தொலைத்தொடர்பு சாதனத்தின் அன்ரனா) அறுந்து தொடர்பற்றுப் போய்விட்டது. அவர் வோக்கியில் பகுதிக்கட்டளைத் தளபதியை தொடர்புகொண்டு, தனது நிலையைச் சொல்லி தனது முகாமைச் சுற்றிச் செல் அடிக்குமாறு கூறினார். ஆட்லறி பீரங்கிகளை இணைத்து செறிவான செல்த்தாக்குதலை மேற்கொண்டு, தரைவழித்தாக்குதலையும் தொடுக்க பலத்த இழப்புக்களுடன் அந்த கட்டளைமையத்தை விட்டு பின்நகர்ந்தது இராணுவம்.
அதேநேரம் கிளாலி கடற்கரைப் பக்கத்தால் முன்னேறிய இராணுவத்தை சோதியா படையணி சினைப்பர் போராளியின் துப்பாக்கி கட்டுப்படுத்தி பலத்தை இழப்பை ஏற்படுத்தியது. கடற்கரைப்பகுதியால் வந்த இராணுவம் வெட்டையைக்கடந்து மறைப்புகள் உள்ள இடத்திற்கு வரவேண்டும். மறைப்புக்குள் வரவிடாமல் கடுமையான தாக்குதலை மேற்கொண்டனர். அதில் இராணுவத்துக்கு பலத்த இழப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கடும் தாக்குதலை மேற்கொள்ள காலை 9 மணிக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் இராணுவம் பின்வாங்கிவிட்டது.
அதேநேரம் சாள்ஸ் அன்ரனி படையணியினர் கிளாலியை நோக்கி முன்னணி காவலரண் வரிசையால் பிடித்துக் கொண்டு வர, கிளாலிப்பகுதியில் இருந்தும் முன்னணிக்காவலரண் வரிசையால் பிடித்துக் கொண்டு செல்ல, மாலை 6 மணியளவில் இராணுவம் கிளாலிப்பகுதியை விட்டு ஓடிவிட்டான். கிளாலியை நோக்கி வந்த அணிகளுடன் கிளாலிப்பக்கத்திலிருந்து சென்ற அணிகளும் தொடர்பு கொண்டு முன்னணி காவலரண் வேலியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
மறுநாள், நடுப்பகுதியில் தரித்திருந்த இராணுவத்தை அழிப்பதற்கான சண்டை மாலை முடிவடைய அப்பகுதியில் இருந்தும் இராணுவம் ஓடிவிட்டான். மறுநாள் மீதமிருந்தது கண்டல்ப்பக்கம்.
கண்டல்பக்கத்தில் தாக்குதலுக்குப் பொறுப்பாக இருந்த சோதியா படையணித்தளபதி லெப்கேணல் சுதந்திரா காவலரண் பகுதியில் இருந்து பின்வாங்காமல் தாக்குதலை 55 வது டிவிசன் படையணிகளை எதிர்த்து முன்னெடுத்தார். ஒரு கட்டத்தில் அவரது கட்டளை மையம் சுற்றி வளைக்கப்பட்டு இறுக்கமான சண்டை நடைபெற்றது. இராணுவம் கட்டளைமையத்தை நெருங்கிக் கொண்டிருந்தான்.நிலமை கைமீறச்சென்ற அந்த சந்தர்ப்பத்தில் 'என்னையும் சேர்த்துச் செல்லடியுங்கோ இனி ஒண்டும் சரிவராது' எனக்கூறினார். அந்தப்பகுதிக்கு கடுமையான செல்த்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது இராணுவம் பலத்த இழப்பைச் சந்தித்தது. அதில் அவரும் வீரச்சாவடைந்தார்.
மூன்றாம் நாள் இராணுவம் முழுமையாகப் பின்வாங்கி ஓடிவிட்டது. பின்னர் கிளாலிப்பக்கம் எல்.பி நின்ற போராளிகளின் இடத்திற்குச் சென்று பார்த்தபோது அந்த மூவரின் உடல்களும் அந்த இடத்திலேயே இருந்தது. ஒட்டு மொத்தமாக தீச்சுவாலை நடவடிக்கை வெற்றிக்காக நூற்று நாற்பத்தியொரு பேர் வீரச்சாவைத்தழுவிக் கொண்டனர்.
முப்படைகளின் துணையுடன் ஆட்லறி மற்றும் மோட்டாரின் ஆதரவுடன் விசேட தாக்குதல் பிரிவுகளை உள்ளடக்கி பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர் பங்கெடுத்த இந்த நடவடிக்கையை சில நுாற்றுக்கணக்கான போராளிகளைக் கொண்டு முறியடித்ததற்கு தலைவரின் வழிநடத்தலும் போராளிகளின் ஓர்மம் மிக்க செயற்பாடுகளுமே அடிப்படையாக அமைந்தன. தலைவர் சொன்னது போலவே நிலைகளில் இருந்து பின்வாங்காமல் இறுக்கமாக நின்று தாக்குதலை முகங்கொடுத்ததன் விளைவே இந்த வெற்றியாகும்.
0 கருத்துரைகள் :
Post a Comment