போரில் கணவரை இழந்த பெண்கள் பாலியல் தொழிலாளியாக மாறுகின்றனர் - அதிர்ச்சி அளிக்கும் ஓர் ஆய்வு


இவர்களில் பலர் தமது குடும்பத்தவர்களைப் பராமரிப்பதற்காகவும், வாழ்வாதாரத்தைக் கொண்டு நடாத்துவதற்காகவும் பாலியல் தொழில்களில் ஈடுபடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு IPS செய்தி நிறுவனத்திற்காக Feizal Samath எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் மூன்று பத்தாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தின் இறுதியில் காணாமற் போன மற்றும் இராணுவத்திடம் சரணடைந்த தமது கணவன்மார்களின் நலம் வேண்டி மே 18 அன்று சிறிலங்காவின் வடக்கில் வாழும் 800 பெண்கள் வரை இந்து மத வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளனர். 

"இறுதி யுத்தத்தின் போது காணாமற் போன மற்றும் சரணடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் யுத்தத்தின் போது கொல்லப்பட்டிருப்பதற்கான சாத்தியப்பாடுகள் தென்படுகின்ற போதிலும், தமது கணவன்மார் உயிருடன் இருப்பதாக தமிழ்ப் பெண்கள் தொடர்ந்தும் நம்பிக்கையுடன் வாழ்கின்றனர்" என சிறிலங்காவின் வட பகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவர்களுக்காக பணிபுரியும் முதன்மையான மனித உரிமைச் செயற்பாட்டாளரான ஸ்ரீன் அப்துல் சரூர் [Shreen Abdul Saroor] தெரிவித்துள்ளார். 

"மறுபுறத்தில், தமது கணவன்மார் யுத்தத்தின் போது கொல்லப்பட்டு விட்டனர் என அறிந்தபோதிலும், தாம் ‘விதவைகள்’ என்ற பெயரில் வாழ்வதை இந்தப் பெண்கள் விரும்பவில்லை. இது அவர்கள் வாழும் சமூகத்தில் அவர்கள் மீது எதிர்மறை மனப்பாங்கைத் தோற்றுவித்துவிடும் என இவர்கள் கருதுகின்றனர். இதனால் இவர்கள் தம்மை குடும்பங்களைத் தலைமை தாங்கும் பெண்களாக அல்லது தனித்து வாழும் பெண்களாக தம்மை அடையாளங் காட்டிக் கொள்ளவே விரும்புகின்றனர்" எனவும் சரூர் மேலும் விபரித்தார். 

இந்து சமய முறைப்படி, கணவன்மாரை இழந்த பெண்கள் அபசகுனமாகக் கருதப்படுகின்றனர். இவர்கள் மீண்டும் திருமணம் செய்வதை இந்து சமயம் விரும்பவில்லை. சிறிலங்காவின் 20 மில்லியன் மக்களில் 12 சதவீதம் வரை காணப்படும் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இந்து மதத்தையும், சிறிலங்காவின் மொத்த சனத்தொகையில் 74 சதவீதம் வரை காணப்படும் சிங்கள மக்களில் பெரும்பாலானவர்கள் பௌத்த மதத்தையும் பின்பற்றுகிறார்கள். 

தமிழர்கள் அதிகம் வாழும் சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில், உள்நாட்டு யுத்தத்தின் விளைவாக 59,000 வரையான பெண்கள் யுத்த விதவைகளாக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கத்தின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்தப் பெண்களுக்கான புனர்வாழ்வுச் செயற்பாடுகள் மிகக் குறைவாகக் காணப்படுகின்றது. இதனால் இவர்களில் பலர் தமது குடும்பத்தவர்களைப் பராமரிப்பதற்காகவும், வாழ்வாதாரத்தைக் கொண்டு நடாத்துவதற்காகவும் பாலியல் தொழில்களில் ஈடுபடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

"நாங்கள் இவ்வாறான பாலியல் தொழில்களில் ஈடுபடும் பெண்களை அதிலிருந்து மாற்றுவதற்கு முயற்சிக்கின்றோம். ஆனால் இதை விட்டால் தமக்கு வேறு தெரிவு எதுவும் காணப்படவில்லை என அவர்கள் கூறுகின்றார்கள்" என அச்சத்தின் காரணமாக தனது பெயரை வெளியிட மறுத்துவிட்ட செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார். 

சிறிலங்கா அரசாங்கத்தால் வடக்கில் பணிபுரிவதற்காக அனுமதி வழங்கப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் வீடமைத்தல், வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்கள், கட்டுமானத் திட்டங்கள் போன்ற அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அமைதி, மனவடு மற்றும் பெண்கள் உரிமைகள் தொடர்பாக விழிப்புணர்வை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் உந்துதலை வழங்கவில்லை. 

"அரச சார்பற்ற நிறுவனத்தைச் சேர்ந்தவள் என நான் என்னைக் கூறினால் அங்கு பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது. இவ்வாறான சூழலே இங்கு நிலவுகின்றது" என மன்னார் வடக்கு பெண்கள் அபிவிருத்தி நிலையம் மற்றும் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்துக்கான மன்னார் பெண்கள் அமைப்பு ஆகியவற்றின் நிறுவுனரான சரூர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

"சிறிலங்காவின் வடக்கில் சிறுமிகள் பாலியல் துர்நடத்தைகளுக்கு உட்படுத்தப்படுவது மிகப் பெரிய பிரச்சினையாக காணப்படுகின்றது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 26 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது போன்ற சிறுவர் பாலியல் சீர்கேட்டுச் சம்பவங்கள் பல வெளிக்கொண்டு வரப்படவில்லை" என ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் முதலாவது N-PEACE விருதைப் பெற்ற நான்கு வெற்றியாளர்களில் ஒருவரான சரூர் இவ்வாறு தெரிவித்தார். 

இவ்விருதானது நேபாளம், இந்தோனேசியா, சிறிலங்கா மற்றும் தீமோர் ஆகிய நாடுகளில் பெண்களுக்கு ஆதரவை வழங்கக் கூடியவாறு சமாதானம், சமஉரிமை, தொடர்பாடல், சமூகம் மற்றும் மேம்பாடு ஆகியவற்றுக்கான மூலோபாயத்தில் பங்குபற்றி பாதிக்கப்பட்ட சமூகத்தின் பெண்களுக்கு உறுதுணையாக விளங்கும் பெண்களுக்கு வழங்கப்படுகின்றது. 

நாட்டில் நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலை மற்றும் குடும்பத்தைப் பாதுகாக்கும் ஆண்கள் இல்லாமை போன்றவற்றால் வளப் பற்றாக்குறை போன்றவற்றால் சிறிலங்காவின் வடக்கில் வாழும் இளம் பெண்களின் பாதுகாப்பு என்பது அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளது. 

"ஒன்பது வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தமது பிள்ளைகளின் பாதுகாப்புக் கருதி தாம் வீட்டுக்கு வெளியே செல்வதற்கு அச்சப்படுவதாக பெண்கள் கூறுகின்றனர்" என சரூர் தெரிவித்தார். 

"சிறிலங்காவின் வடக்கில் வாழும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்தப் பெண்களுக்கு, தமது மனவடுக்களை மனந்திறந்து பேசுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இதனால் இந்தப் பெண்களுக்கான ஆற்றுப்படுத்தல் நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்" என யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சேவையாற்றும் மனித வள அபிவிருத்திக்கான விழுது அமைப்பின் நிறைவேற்று இயக்குனர் சாந்தி சச்சிதானந்தம் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட இறுதி யுத்தத்தில் அகப்பட்டுக் கொண்ட பொதுமக்களில் பெருந் தொகையானவர்கள் கொல்லப்பட்டமை மற்றும் மே 2009 இலும் அதற்கு முற்பட்ட மாதங்களிலும் சிறிலங்கா வான்படையினர் விமானத் தாக்குதல்களை மேற்கொண்ட போது அதில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களை மேற்குலக நாடுகள் மற்றும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் முன்வைக்கின்ற போதிலும் அவற்றை சிறிலங்கா அரசாங்கம் ஏற்க மறுக்கின்றது. 

யுத்தம் தீவிரம் பெற்றிருந்த இறுதிக் கட்டத்தில், யுத்தம் நடந்த வலயத்ததுக்கு செல்வதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அத்துடன், யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் செயற்பட்டுக் கொண்டிருந்த அரச சார்பற்ற நிறுவனங்களையும் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இதனால் சிறிலங்காவின் கொலைக் களங்களில் உண்மையில் என்ன நடந்தது என்பதற்கான சுயாதீன சாட்சியங்கள் எதுவும் காணப்படவில்லை. 

இவ்வாண்டு மார்ச் மாதத்தில், ஜெனீவாவைத் தளமாகக் கொண்டியங்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கா தலைமையில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின் பிரகாரம், யுத்தகால மீறல்களை விசாரணை செய்வதற்காக சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை உடனடியாக அமுல்படுத்துமாறு இத்தீர்மானத்தின் மூலம் கோரப்பட்டுள்ளது. 

தமது கணவன்மாரையும், அன்புக்குரியவர்களையும் இழந்து வாழும் பெண்கள் மற்றும் தாய்மார் சிக்கலான விடயங்களை வெளிப்படுத்துவதற்கு அச்சப்படுகின்றனர். 

ஷீலா [இது அவரது உண்மைப்பெயரல்ல]என்கின்ற பெண் சில வாரங்களுக்கு முன்னர் சிறிலங்காவின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்ற செய்தியை சில பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததால், பின்னர் இவரும் இவருடன் நிறுவனத்தில் பணிபுரியும் ஏனைய பணியாளர்களும் அச்சுறுத்தப்பட்டனர். 

"இந்தப் பெண்கள் மிகவும் நலிவடைந்தவர்கள். இவர்களின் பிரச்சினை என்ன என்பதை அறிந்து நாங்கள் அவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளோம். அரசின் ஆதரவின்றி இந்த விடயத்தில் நாங்கள் நிறையச் செய்ய முடியாது" என ஷீலா தெரிவித்தார். 

குடும்பக் கட்டுப்பாட்டு முறை தொடர்பாக போதியளவு விழிப்புணர்வு இல்லாததால், சட்ட ரீதியற்ற பிள்ளைகள் பிறப்பதற்கும், எயிட்ஸ் நோய் மற்றும் ஏனைய பாலியல் ரீதியான நோய்கள் பரவுவதற்கும் இது காரணமாக அமைவதாக ஷீலா மேலும் தெரிவித்தார். 

தனது நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் ஆய்வு யூன் மாதத்தில் முடிவடையும் எனவும் இதன் பின்னர் இது வடக்கில் வாழும் பெண்களின் நிலை தொடர்பாக தெளிவான வரைபடம் ஒன்றைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் காணாமற் போன இராணுவ வீரர்களின் பெற்றோர் சங்கத்தின் தலைவியும், நிறுவுனருமான விசாகா தர்மதாச தெரிவித்துள்ளார். 

"யுத்தத்தின் போது காணாமற் போனவர்களின் உறவுகளை ஆற்றுப்படுத்துவதற்கான எந்தவொரு திட்டங்களும் வடக்கு, கிழக்கில் உருவாக்கப்படவில்லை. ஆனால் சிறிலங்காவின் வடக்கு, கிழக்கில் கட்டுமான மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பாக மட்டும் முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ளது" என விசாகா தர்மதாச மேலும் தெரிவித்துள்ளார். 

"வடக்கு கிழக்கில் யுத்தத்தின் போது தமது கணவன்மாரை இழந்த பெண்கள் பொருளாதார ரீதியாக மேம்படுத்தப்படவில்லை. ஆனால் இவர்களுடன் ஒப்பிடும்போது, போரின் போது சாவடைந்த சிறிலங்கா இராணுவ வீரர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக கவனிக்கப்படுகின்றனர். ஆனால் இரு தரப்பிலும் அவர்களுக்கான சமூக மற்றும் உளவியல் பிரச்சினைகள் இன்னமும் முதன்மைப்படுத்தப்படவில்லை. இவை உண்மையில் மிகப் பெரிய சவால்களாக காணப்படுகின்றன" என தர்மதாச குறிப்பிட்டுள்ளார். 

"யுத்தத்தின் பின்னான அபிவிருத்தியில் பெண்கள் முக்கியத்துவப்படுத்தப்படுவதாக பல்வேறு உதவி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் இளம் பிள்ளைகளைக் கொண்ட பெண்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ளனர். ஆடு வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்புக்கு கடன் வழங்கப்படுகின்ற போதிலும், இவை இறக்கும் நிலையில் தாம் பெற்ற கடனைத் திருப்பிக் கட்ட முடியாத நிலைக்கு இப் பெண்கள் தள்ளப்படுகின்றனர். இதனால் வடக்கில் வாழும் பெண்களைப் பொறுத்தளவில் வாழ்வாதாரத்துக்கான கடன் அவர்களை மேலும் கடனாளியாக்குகின்றது" என சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார். 

இதனாலே சரூர் குறிப்பிட்டவாறு பெண்கள் பாலியல் தொழிலை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகுகின்றனர். 

"போரில் கணவன்மாரை இழந்த பெண்களின் வாழ்வு தனிமையில் கழிகின்றது. அத்துடன் அவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்கின்றனர். அவர்களது சொந்த சமூக வட்டத்தில் கெட்ட சகுனத்தின் குறியீடாக இந்தப் பெண்கள் நடாத்தப்படுகின்றனர்" என பெண்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்திய கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

திருமணம் செய்து தமது கணவன்மாரை இழந்த பெண்கள் தாம் திருமணம் செய்து கொண்டதை தமது திருமண சான்றின் மூலம் உறுதிப்படுத்த முடியும். ஆனால் வடக்கில் வாழும் பெண்களின் பதிவுச் சான்றிதழ்கள் யுத்தத்தின் போது அழிவடைந்ததால் அவர்களால் தாம் திருமணம் செய்து கொண்டதைக் கூட உறுதிப்படுத்திக் கொள்ள முடியாது உள்ளது. 

மே 2009ல் புலிகள் என சந்தேகிக்கப்பட்ட 11,995 வரையான ஆண்கள் தம்மிடம் சரணடைந்ததாகவும், இவர்களில் 10,874 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், 852 பேர் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் புனர்வாழ்வளிக்கப்படுவதாகவும், 13 பேர் இயற்கை மரணத்தை அடைந்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் றுவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

புதினப்பலகை
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 கருத்துரைகள் :

  1. தங்களின் பதிப்பு அருமை. உங்களின் அருமையான இந்த இடுக்கையை இன்னும் பல நண்பர்கள் படிக்க இங்கே இணைக்கவும். http://www.tamilpathivu.com/

    வாழ்க தமிழ், வளர்க தமிழ்....

    ReplyDelete