யுத்தத்தின் பின்னரான பின்புலம் மற்றும் மனித உரிமைகள் என்ற இருவித காரணிகளை மையமாகக் கொண்டு இலங்கையின் தற்கால அரசியல் தலைவிதியை ஆழமாக நோக்கும் விதத்தில் அமைகிறது இக்கட்டுரை.சுனந்த தேசப்பிரிய எழுதிய இக்கட்டுரை கடந்த 04 ஆம் திகதிய "ராவய'' பத்திரிகையில் பிரசுரமாகியது. அதன் தமிழ் வடிவம் இங்கு தரப்படுகிறது.
இலங்கையில் இடம் பெற்ற யுத்தம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விவகாரம் மீளவும் கடந்த வாரம் முழுவதிலும் விமர்சனங்கள் என்ற வகையில் முன்னெழுந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பைப் போர்ரீதியில் தோற்கடித்ததன் பின்னர் அரசுக்கு மிகப் பெரும் சவாலாகியிருந்த எதிரி இல்லையென்றாகிவிட்டுள்ளதால், அதன் பின்னர் புதியதொரு எதிரியைத் தேடித் திரிந்த அரசு, தற்போது மனித உரிமைகள் மற்றும் மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்களைத் தனது புதிய எதிரியாக்கிக் கொள்ள எண்ணமிட்டுச் செயற்படுகிறதா என்றதொரு வினா சில எழுத்தாளர்களால் கிளப்பப்பட்டிருந்தது. இது இவ்வாறிருக்க, கலாநிதி பாக்கிய ஜோதி சரவணமுத்து, ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு வழங்கியிருந்த தனது கருத்து வெளிப்பாட்டில் ஆழமானதொரு உண்மையை வெளிப்படுத்தியிருந்தார்.
அதாவது, மனித உரிமை மீறல்களை அரசியல் நியாயாதிக்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்கிவைத்து விட்டுச் செயற்பட முடிந்தாலும்கூட அவற்றை மண்ணுக்குள் புதைத்து நிரந்தரமாகவே மூடிமறைத்துவிட இயலாது என்பதே அவரது கருத்து வெளிப்பாடாகும்.
இதனிடையே, தென்பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச் சலுகையை நீடிக்கச் செய்து கொள்வதற்காக நாட்டையோ, இராணுவத்தையோ தாரை வார்த்துக் கொடுக்க இயலாதெனக் கருத்து வெளியிட்டிருந்தார். மேற்படி ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச் சலுகை வழங்கப்படும் விடயத்துடன் பின்னிப் பிணைந்துள்ள மிக அத்தியாவசியமான முன் நிபந்தனையொன்றான மனித உரிமைகள் வரைபு இலங்கையில் இல்லவேயில்லை யென்பதாக ஐரோப்பிய ஒன்றிய ஆணைக் குழு முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை யொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேற்படி, மனித உரிமைகள் வரைபு குறித்த விடயம் மற்றும் ஜீ.எஸ்.பீ.வரிச்சலுகையைப் பெறுவதற்காக நாட்டைத் தாரைவார்த்துக் கொடுக்க இயலாதென்ற ஜனாதிபதியின் கருத்து வெளிப்பாடு ஆகிய இரண்டு விடயங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, பரிந்துரைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் வரைபை செயலுருவில் கடைப்பிடிப்பது நாட்டைத் தாரைவார்த்துக் கொடுக்குமொரு செயலாகுமென்றே இலங்கையரசு கருதுவதாகத் தெரிகிறது. அது ஆரோக்கியமானதொரு அறிகுறி அல்ல.
அத்தோடு சனல் "4" வீடியோ நாடா விவகாரம் சம்பந்தமாக ஆரம்பத்திலிருந்தே இலங்கை அரசால் கொண்டு செல்லப்பட்ட நிலைப்பாட்டிலிருந்தும் கூட, யுத்தம் இடம்பெற்ற காலகட்டத்தில் நிகழ்ந்துள்ள எந்தவொரு எல்லை மீறல் குறித்தோ அல்லது உரிமைகள் மீறப்பட்டமை தொடர்பான எக்கோணத்திலான பரிசீலனை யொன்றுக்கோ இலங்கையரசு தயாரில்லை என்பதும் புலப்படுகிறது. அந்த வீடியோ ஒளி நாடா ஒளிபரப்பபட்ட முதற் சந்தர்ப்பத்திலேயே அது தொடர்பான எந்தவொரு பரிசீலனைக்கும் இடமளிக்காது, பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் குறிப்பிட்ட ஒளி நாடா போலியானதெனத் தெரிவித்திருந்தார். இருந்தபோதிலும், நீதிநியாயமற்ற படுகொலைகள் தொடர்பான ஐ.நா.அமைப்பின் விசேட பிரதி நிதியான "ஸ்ரீவ் அல்ஸ்ரன்" இற்றைக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் மேற்படி வீடியோ நாடா சம்பந்தமான சுயாதீனமான பரிசீலனை அறிக்கையொன்றின் சான்றுகளின்றி அதன் போலித்தன்மை அல்லது உண்மைத் தன்மை தொடர்பாகத் தீர்மான மொன்றை மேற்கொள்ள இயலாதெனத் தெரிவித்திருந்தார்.
இத் தர்க்கவாதத்தில் யதார்த்தமான அர்த்தம் பொதிந்திருப்பது மேற்படி வீடியோ நாடா போலியானதா இல்லையா என்பதில் அல்ல. கடந்த மூன்று தசாப்த காலம் முழுவதிலும் நிகழ்ந்துள்ள நீதி நியாயமற்ற மனிதப் படுகொலைகளை ஏற்றுக்கொள்வதற்கு நாம் தயாரா? இல்லையா? என்பதிலேயே அது தங்கியுள்ளது. அதாவது சமுதாயமொன்று என்ற ரீதியில் இந்த அனர்த்தத்திற்கான பொறுப்பை நாம் ஏற்றுக் கொள்ளத் தயாரா இல்லையா என்பதிலேயே அது தங்கியுள்ளது என்பதாகும். இப் பொறுப்பு பெறுமனே ஆயுதப்படையினரை மட்டும் சார்ந்த தொன்றல்ல.
கடந்த மூன்று தசாப்த காலம் முழுவதிலும் மட்டும் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதற்குக் காலாக அமைந்தவை பலதரப்பட்ட ஆயுதப் போராட்டங்கள் மற்றும் அவற்றை அடக்கிவிடுவதற்கு அரசினால் முன்னெடுக்கப்பட்ட அரசியல், சட்டரீதியான மற்றும் போர் ரீதியிலான செயற்பாடுகளுமேயாகும். மேற்படி செயற்பாடுகள் காரணமாக, நீதி நியாயமற்ற விதத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொன்றொழிக்கப் பட்டனரென்பது சகலரும் அறிந்த தொன்றே. 1998 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் பயங்கரம் மிக்க மனிதப் படுகொலைகள் இடம்பெற்றதில்லை எனத் தென்பகுதி சிங்கள மக்கள் முன் கூறத்தக்க எவராவது இருக்கக்கூடுமா? என்றால் எவரொருவராலும் இவ்விதம் கூற இயலாது என்பதே அதற்கான பதிலாக அமையும். அப் படுகொலைகளுக்கு அரசு மற்றும் அரசின் ஒத்துழைப்பு கிட்டியிருந்த பலதரப்பட்ட ஆயுதக் குழுக்கள் போன்றே அவற்றுடன் இணைந்து நின்று செயற்பட்டுள்ள நாட்டுப்பற்றாளர் மக்கள் அமைப்பும்கூடப் பலதரப்பட்ட மட்டங்களில் பொறுப்புக் கூற வேண்டி நேர்ந்திருந்தது. தென்பகுதி மக்கள் மேற்படி மனிதப்படுகொலை களைக் கண்கூடாகக் கண்டு பட்டனு பவித்துள்ளமை போன்றே, வட புலத்தின் மக்களும்கூட, 1981 இல் இருந்தே அனைத்துத் தரபபுகளாலும் விசேடமாக விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அரச படைகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட கபடத்தனமான மனிதப் படுகொலை களைக் கண்கூடாகக் கண்டு பட்டனுபவித்துள்ளனர். எனவே சனல் "4" வீடியோ ஒளி நாடா தொடர்பான தர்க்க வாதத்தைவிட நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருப்பது இந்த யதார்த்தத்தையே ஆகும்.
இந்த நாடு, சுதந்திரமான, மனுக்குல கௌரவத்தைப் பேணிக்காக்கும் நல்லொழுக்க சீலங்கள் மிக்க நாடொன்றாக முன்னோக்கிப் பயணிக்க வேண்டுமானால்,
இந்தப் படுகொலைக் காலாசாரத்தின் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. எமது சமுதாயத்தின் மனிதாபிமான அணுகல்களென்ற உயர்வான மரபுகள் போற்றத்தக்க பண்புகள், இந்த இரத்தம் சிந்தப்பட்ட வரலாற்றின் மூலம் மிகக் கடுமையாகப் பலவீனப்படுத்தப்பட்டு, மூழ்கடிக்கப்பட்டுள்ளது. நீதி, நியாயமற்ற படுகொலைகள் மட்டுமல்லாது, நீதி, நியாயமற்ற அரசியல் செயற்பாடுகள் மூலமாகவும் கூட இலங்கையரசு இந்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைத் தொடர்ச்சியாகவே சிதைவுறச் செய்துள்ளதென்பதை இலங்கை மக்களுக்குப் புதிதாகப் புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. அடக்கு முறைச் சட்டதிட்டங்கள் மற்றும் அடக்கு முறை அரசியல் கலாசாரம் என்பன இன்றைய இலங்கையின் நிரந்தரமான தொரு அம்சமாகிவிட்டுள்ளதென்றே கொள்ளப்படத் தக்கதாகும்.
இவ்வித பயங்கரங்கள்மிக்க பிரச்சினைகளுக்கு உள்ளாகிய அனைத்து நாடுகளும் தமது சமுதாயத்தைச் சீர்படுத்தி, ஆரோக்கியமானதொன்றாக்கிக் கொள்வதற்காகத் தேர்ந் தெடுத்துக் கொண்டது பழி வாங்கும் நடைமுறையை அல்ல.
மாறாக நல்லாட்சி நுகர்வின், ஆற்றுப்படுத்தலின் மற்றும் சத்தியத்தைத் தேடிப்பெறும் வழிமுறைகள் மூலமே அவை தமது அத்தகைய நோக்கத்தை வென்றெடுத்தன. தவறுகளை ஏற்றுக் கொள்வதன் மூலம் அவை மீளவும் இடம் பெறாதிருப்பதற்கான நட வடிக்கைகளை மேற்கொள்ளும் மார்க்கத்தை அவை கடைக் கொண்டன. ஆனால், இலங்கையோ இன்னமும் அத்திசை நோக்கிப் பயணிக்க முயல்வதாகத் தென்பட வில்லை. அது தொடர்பாக ஆயுதமேந்திய அமைப்புக்களின் வன்முறைப் பயங்கரவாதச் செயற்பாடுகள் போன்றே அரசும்கூட விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படவேண்டியுள்ளது. என்ன இடம் பெற்றன என்பது குறித்த பகிரங்கமான திறந்த கருத்துப் பரிமாறல்கள் முகிழ வேண்டியுள்ளது. அத்தகைய விதத்திலல்லாது, அவசியப்படும் மறுசீரமைப் புக்களைஏற்படுத்திவிட இயலாது.
அரசு மற்றும் அதன் அடக்குமுறை அம்சங்கள் விமர்சனங்களுக்கு உள்ளாவது நாட்டையும் நாட்டு மக்களையும் தாரைவார்த்துக் கொடுப்பதற்கு காட்டிக் கொடுப்பதற்கு ஒப்பானது என அர்த்தம் கற்பிப்பதன் மூலம் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விமர்சனங்களை அலட்சியப்படுத்தி விடுவதற்கு இந் நாட்டு அரசு எத்தனிக்கிறது.
மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட அணுகல்கள் கருத்துவெளிப்பாடுகளென்பவை நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராகப் போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைக்குமொரு எத்தனமேயென்ற சாரப்பட கருத்து வெளிப்படுத்தி, அதைப் பாதுகாப்புக்கேடயமொன்றாக்கிக் கொள்ளும் செயற்பாடு, அதேபோன்ற மேலுமொரு தவறான அர்த்தப்படுத்தலாகும். கடந்த ஜூன் மாதத்தில் இணக்கம் காணப்பட்ட யுத்த காலத்தில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்களைத் தேடிக் கண்டறிவதற்கான ஜனாதிபதி மற்றும் ஐ.நா.பொதுச் செயலாளர் இடையிலான இணக்கப்பாடு மேற்குறிப்பிட்ட அர்த் தப்படுத்தல் தவறானதொன்று என்பதற்கானதொரு உதாரணமாகும். மேற்படி இணக்கப்பாடானது, போர்க்குற்ற எல்லைக்கு அப்பாற்படும் விதத்தில் நடை முறைக்கு வரக்கூடியதொரு கட்டமைப் பேயாகும்.
உண்மையில் அணுகிப் பார்க்கும் போது, நாடு, நாட்டின் குடிமகன் மற்றும் அரசு என்ற இவற்றுக்கிடையில் தெளிவாகத் தெரியும் வித்தியாசமுள்ளது. இவை அனைத்தும் ஒன்றல்ல. அரசொன்றின் நடைமுறைப் போக்கு நாட்டுக்கு மற்றும் நாட்டின் குடிமகனுக்கு விரோதமாகப் பயணிக்கக்கூடும். இதற்கு மிகத் தெளிவான உதாரணமாகப் பர்மா எனப்பட்ட மியன்மார் நாட்டைக் குறிப்பிட்டுக் காட்ட முடியும். மியன்மார் அரச நிர்வாகம் சர்வாதிகார இராணுவ வலைப் பின்னலொன்றின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சர்வாதிகார இராணுவமய நிர்வாகம் அந்த நாட்டை நாசப்படுத்திக் குடிமக்களின் உரிமைகளை ஏறிமிதித்து வருகிறது. நாடு தனிமைப்படுத்தப்பட்டும், நாட்டு மக்கள் சமுதாய அரசியல் மற்றும் பொருளாதாரச் சிரமங்களுக்குள் தள்ளப்பட்டும் அவலமுற நேர்ந்துள்ளது. பர்மாவின் இராணுவ வலைப்பின்னல் மற்றும் இராணுவ நிர்வாகம் தொடர்பான தீவிரமானதொரு விமர்சனம் தலையெடுப்பதன் மூலமும் மற்றும் அந் நிர்வாகத்தைத் தோற்கடித்து விடுவதன்மூலமாகவல்லாது பர்மா நாட்டினது மற்றும் அந்நாட்டின் குடிமக்களது சுதந்திரத்தையும் கௌரவத்தையும் மீளக் கட்டியெழுப்ப இயலாது. சர்வாதிகாரப் பயணமார்க்கத்தில் பயணிக்கும் பர்மிய ஆட்சியாளர்களுக்கு ஜனநாயகவாதத்தை நோக்கிப் பயணிக்க இயலாதிருப்பதற்கு, அவ்வாறு செயற்படுவார்களேயானால் அது அவர்களது நிர்வாகத்தின் முடிவாக அமைந்து விடுமென்பதே காரணமாகிறது.
அதன் காரணமாகவே பர்மிய சமுதாயம் மற்றும் அரசியல் நிர்வாகத்தைக் கடும் அடக்குமுறை வழியில் நடைமுறைப் படுத்திச் செல்வதைத் தவிர எந்தவொரு ஜனநாயகவாத மறுசீரமைப்புச் செயற்பாட்டையும் இந்த மிருகத்தனமான ஆட்சியாளர்களால் மேற்கொள்ள இயலாதுள்ளது.
இன்றைய அளவில், இலங்கை அரசானது நெருங்கிவந்துள்ளதோ அல்லது நெருங்கிவந்து கொண்டிருப்பதோ, தீர்க்கமானதொரு திருப்புமுனைக்காகும். அதாவது, ஒன்றில் சகவாழ்வின் மற்றும் ஜனநாயக வாதத்தின் மார்க்கமாகும். அல்லது யுத்த காலத்தில் கடைக்கொண்டு சென்ற முறைபிறழ்ந்த நடைமுறைப் போக்கினூடான அடக்குமுறை மார்க்கமாகும். இன்று யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு மாதகாலம் கடந்துள்ளது. தொடர்ச்சியாகவே அடக்குமுறை நிர்வாகம் ஒன்றை நடத்திச் செல்லும் அரசொன்றுக்கு ஜனநாயகவாதம் தொடர்பான கதவைத் திறந்து விடுவதென்பது சிரமம்மிக்கதென்பதற்கு, அவ் எத்தனம், அரசின் முடிவுகாலத்தின் முதற்படியாக அமைவதே காரணமாகிறது. இதற்கான உதாரணங்கள் நிறையவே உள்ளன. சிலி நாட்டின் தலைவர் 'பினோச்சே'யை இதற்கான ஓர் உதாரணமாகக் குறிப்பிட இயலும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் இன்னமும் அது அவ்விதத்திலான சர்வாதிகாரத்தை நோக்கி பயணித்திருக்க வில்லை. ஆனாலும், அடக்குமுறை அரசியலிலிருந்து விலகிச் செல்லும் திசையொன்றைக் காட்டி நிற்பதாகவும் இல்லை.
நாட்டில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு அவர்கள் நிர்மூலமாக்கப்பட்டதன் பின்னரான இன்றைய புறச்சூழலின், மனித உரிமைகள் தொடர்பான போராட்டங்களையோ, போர்க்குற்றச் சாட்டுக்களையோ அல்லது அரசுக்கு எதிரான உள்நாட்டு மற்றும் சர்வதேசச் சதிகளையோ பூச்சாண்டியாகக் காட்டிக் கொண்டு தொடர்ச்சியாகவே அடக்கு முறைப் பாதையில் பயணிப்பதற்கு இன்றைய அரசு எண்ணுமானால், நீண்ட கால ரீதியில் அதனூடாக நற்பலன் எதுவும் கிட்டாது என்பதை அரசு இப்போதே புரிந்துகொள்வது பெறுமதிமிக்கதாகும். இக் கருத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிர்வாகத்தால் காத்திரமாகச் சிந்தித்துப் பார்க்கப்பட வேண்டியுள்ளதொரு அரசியல் விடயமாகும்.**************
தமிழில்: சரா
0 கருத்துரைகள் :
Post a Comment