எமது கோரிக்கைகளுக்கு உரிய வகையில் இலங்கை பதிலளிக்கவில்லை – நவனீதம்பிள்ளை
தமது கோரிக்கைகளுக்கு உரிய முறையில் இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற போதிலும், இலங்கை அரசாங்கம் அதற்கு செவிசாய்க்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனும் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எவ்வாறன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பதனை செயலாளர் நாயகமும், தாமும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக நவனீதம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எவ்வாறான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்த பொறிமுறைமையை இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடத்திய தேசிய மட்ட விசாரணைகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விசாரணைகள் நடத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் கடந்த காலத்தில் திருப்தி அளிக்கும் வகையில் அமையப்பெறவில்லை எனஅவர் தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் மற்றும் தண்டனை வழங்குதல் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தாம் இலங்கைக்கு விஜயம் செய்வதனை அந்நாட்டு அரசாங்கம் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்வீர்களா? என ஊடகவியலளார்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபேண்ட் விடுத்த வேண்டுகோளை அரசாங்கம் நிராகரித்துள்ளது
வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களை மூடி விடுமாறும், தடுத்து வைக்கப்பட்டுள்ள 11 ஆயிரம் விடுதலைப்புலி உறுப்பினர்களை பார்வையிட ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு வாய்ப்பளிக்குமாறும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபேண்ட் விடுத்த வேண்டுகோளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இலங்கையின் நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டத்தை உடனடியாக விலகிக் கொள்ளப்பட வேண்டும் என மிலிபேண்ட் தெரிவித்துள்ள கருத்துக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. தேசியப் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை எடுப்பது இலங்கை அரசாங்கமே அன்றி பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அல்ல.
அவருக்கு அவ்வாறான கோரிக்கைகளை விடுக்க உரிமையில்லை என அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். டேவிட் மிலிபேண்ட் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இந்த கோரிக்கை விடுத்திருந்தார்
இணைப்பு
விடுதலைப் புலிகள் என 11,000 பேர் இனங்காணப்பட்டமையின் சுயாதீனத்தன்மை தொடர்பாக கேள்வி எழுப்புகின்றது பிரித்தானியா
போரினால் இடம்பெயர்ந்த மக்களில் 11,000 பேர் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என இனங்காணப்பட்டு தனியான முகாம்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்ற போதிலும், இவ்வாறு இவர்கள் இனங்காணப்பட்ட முறை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை என பிரித்தானியா கவலை தெரிவித்திருக்கின்றது.
பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே இது தொடர்பாக நேற்று கேள்வி எழுப்பினார்.
மழை காலம் ஆரம்பமாகும் போது மனிதாபிமானப் பிரச்சினை ஒன்று உருவாகுவதைத் தடுப்பதற்கு இடம்பெயர்ந்த மக்களுடைய நடமாடும் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படுவது அவசியமானது எனவும் தெரிவித்த பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர், முகாம் மக்களுடைய நடமாடும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்காக மற்றவர்களுடன் இணைந்து பிரித்தானியாவும் அழுத்தம் கொடுத்துவருவதாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:
"இடம்பெயர்ந்த மக்களுக்கான சுகாதார வசதிகள் போதுமானதாக இல்லை. இதனைவிட அவர்களுக்கான நீர் விநியோகமும் அண்மைய வாரங்களில் போதுமானதாக இல்லை.அக்டோபருக்குப் பின்னர் எதிர்பார்க்கப்படும் பெரும் மழைக்குத் தாக்குப் பிடிக்கக்கூடியதாக இந்த முகாம்கள் இல்லை, என்பதை ஆகஸ்ட் மாதத்தில் வழமைக்கு முரணாகப் பெய்த பெரும் மழை தெளிவாக உணர்த்தியிருக்கின்றது.
முகாம் மக்களுடைய நடமாடும் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு நாம் கவலையடைகின்றோம். ஏனெனில் இந்த முகாம்கள் அனைத்தும் மிகவும் நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் குடும்பங்கள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளார்கள். அதனைவிட முகாம்களில் படையினரின் பிரசன்னமும் மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றது.
இந்த முகாம்களிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என இனங்காணப்பட்டு 11,000 பேர் தனியான முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு இவர்கள் வடிகட்டப்பட்டமை தொடர்பாக சுயாதீனமான மேற்பார்வை எதுவும் இருக்கவில்லை என்பதால் இதனையிட்டு நாம் கவலையடைகின்றோம். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஐ.நா. மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றினால் கூட பார்வையிட முடியாத வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்."
இவ்வாறு மிலிபான்ட் மேலும் தெரிவித்தார்.
58,000 பேர் மீள் குடியேற்றம் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்கின்றார் சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர்
இடம்பெயர்ந்து முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் 58,000 பேர் அடுத்த 15 நாட்களுக்குள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என வெளியாகியிருக்கும் செய்திகள் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்கான வாரந்த செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே ஊடகத்துறை அமைச்சர் அநுரா பிரியதர்சன யாப்பா இதனைத் தெரிவித்தார். நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
இது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது எனக் குறிப்பிட்ட அமைச்சர் அநுரா பிரியதர்சன யாப்பா, அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம் அவர்கள் கெளரவத்துடன் மீள்குடியேற்றப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.
முகாம்களில் நடமாடும் சுதந்திரம் ஏனைய விடயங்களைப் பொறுத்த மட்டில் ஐக்கிய நாடுகளின் கோட்பாடுகள் மீறப்பட்டுள்ளன
ராதிகா குமாரசுவாமி
சிறுவர்கள் மற்றும் ஆயுதப் போராட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகள் பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி இலங்கையில் இடம்பெயர்ந்த சிறுவர்களது நிலைமை உட்பட பல விடயங்கள் குறித்து அவதானிப்பதற்காக இராணுவ மேஜர் ஜெனரல் பற்றிக் கெம்மேட் என்பவரை தமது பிரதிநிதியாக அடுத்த மாதம் அனுப்ப இருப்பதாக அறிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கை முடிவடைந்த பின்னர் நாட்டின் வட பகுதியில் இன்னமும் முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் இடம்பெயர்ந்த சிறுவர்களின் கதி குறித்து விசேட பிரதிநிதி குமாரசுவாமி கடந்த மாதம் குரல் எழுப்பியிருந்தார்.
இதற்கிடையில் மேஜர் ஜெனரல் பற்றிக் கெம்மேட்டை நவம்பர் மாதம் 8 ஆம் திகதியிலிருந்து 13 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்ய ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் அனுப்பப் போவதாக இன்னர் சிற்றி பிறெஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
மேலும் செப்டெம்பர் மாத இறுதியில் இலங்கைப் பிரதம மந்திரியை ராதிகா குமாரசுவாமி சந்தித்து பேசியது பற்றி இன்னர் சிற்றி பிறெஸ் அவரிடம் கேட்ட போது, தாம் நட்புறவு ரீதியிலேயே இலங்கைப் பிரதமரை சந்தித்ததாகக் கூறினார்.
ஆனால், இலங்கை வெளிவிவகார அமைச்சரையும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையும் தாம் உத்தியோகபூர்வமாக சந்தித்ததாகவும் ராதிகா குமாரசுவாமி தெரிவித்தார்.
அவர்களுடன் தாம் பேசிய விடயங்களில் இடம்பெயர்ந்த சிறுவர்களின் உரிமைகள் பேணப்படுவது பற்றியும் கேள்வி எழுப்பியதாக அவர் தெரிவித்தார்.
வன்னி மெனிக் பாம் முகாமிலும் ஏனைய முகாம்களிலும் வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த சிறுவர்களின் நிலைமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கு அவர் சமர்ப்பித்த அலுவலக அறிக்கையில் இடம்பெயர்ந்த சிறுவர்களின் உரிமைகளும் உத்தரவாதங்களும் என்ற இணைப்பு 1க்கு அமைவானது என்று கருதுகிறீர்களா என இன்னர் சிற்றி பிறெஸ் அவரிடம் வினவியது.
அதற்குப் பதிலளித்த ராதிகா குமாரசுவாமி, முகாம்களில் நடமாடும் சுதந்திரத்தையும் ஏனைய விடயங்களையும் பொறுத்த மட்டில் ஐக்கிய நாடுகளின் கோட்பாடுகள் மீறப்பட்டுள்ளன என்று கூறினார். இது சம்பந்தமான இலங்கையின் பிரதிபலிப்பு மிகக் கடூரமானது என்றும் அவர் கூறியதாக இன்னர் சிற்றி பிறெஸ் தெரிவித்துள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment