இன்று தீபத் திருநாள். தீபாவளிப் பெருநாள்.ஒளியைக் காலும் ஜோதியை சுடராய்ப் பிரகாசிக்கும் தீபங்களை போற்றி ஏத்துகின்ற நன்னாள்.
மனித வாழ்வில் துன்ப இருள் அகன்று, இன்ப ஒளி பிரவகிக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டி நிற்கின்ற ஒரு பெருநாளாக இது கருதப்படுவதால், இன்றைய நிலையில் ஈழத் தமிழர்களுக்கு ஒரு முக்கிய நிகழ் வாகவும் இது அமைகின்றது.
அடிப்படை உரிமைகளை இழந்து, நீதியும், சமத் துவமும் கொண்ட கௌரவ வாழ்வைத் தொலைத்து, சுயத்தையும் சுயாதிபத்தியத்தையும் பறிகொடுத்து, தாயகத் தனித்துவத்தை பலிகொடுத்து, வாழ்வியலுக்கும் இருப்பியலுக்குமான விழுமியங்கள் விலை பேசப்பட்ட நிலையில், பாரம்பரிய தாயகத்திலேயே ஏதிலிகளாக முட்கம்பி வேலிகளுக்குள் பல லட்சக்கணக்கில் சிறை வைக்கப்பட்டிருக்கும் பேரவல நிலையில் சிக்கித்திணறி, நிலைகுலைந்து போயிருக்கின்றது தமிழினம்.
நம்பிக்கைகள் தொலைந்து, அடிமைச் சிறை வாழ்வே நித்தியம் என்ற துன்ப சாகரத்துக்குள் மூழ்கிக் கிடக்கும் தமிழினத்தை விடிவு கிட்டுமா, துயர் நீங்குமா என்ற நீண்ட, நெடும் சந்தேகம் இன்று போர்த்திக் கிடக்கின்றது. இந்தப் பேரவலத்திலிருந்து விடுபடுவதற்கு தமிழினத்துக்கு முதலில் நம்பிக்கை தன்னம்பிக்கை அவசியம். அவநம்பிக்கையில் மூழ்கித் தளர்ந்து விடாமல் நிமிருவோம், நிலைப்போம் என்ற நெஞ் சுரத்தோடு தம்மை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய நிலையில் தமிழர்கள் இருக்கின்றார்கள். இழந்த மன ஊக்கத்தை மீளப் பெற, பற்றிப் பீடித்து நிற்கும் அதைரியத்தை விரட்ட, நம்பிக்கை எனும் ஞானம் இன்று நமக்கு அவசியம்.
"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மம் ஒரு நாள் வெல்லும்" என்ற உயரிய அழியாத நீதி நெறியை உணர்த்துவதே இன்றைய தீபத்திருநாளில் உட்கிடையாகப் புதைந்து கிடக்கும் அற்புத அர்த்தமாகும்.
ஆணவம் மேலோங்கினால் அழிவு நிச்சயம். அகங் காரம் மேலோங்கினால் நாசம் உறுதி. இதுவே தீபாவளி நமக்குத் தரும் செய்தி.
நரகாசுரன் என்ற கொடுங்கோலனின் அடாவடித் தனமான ஆட்சியினால் பூலோகத்தவரும் மேலோகத்தவரும் அல்லலுற, தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ் வியது. இந்த அவலம் போக்க மகாவிஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்தார். நரகாசுரனைத் தம் சக்கராயுதத்தால் அழித்தார். அங்கு, தர்மம் காத்திருந்து ஒருநாள் வென்றது. இதுவே தீபாவளித் திருநாளின் பின்னணியில் புதைந்து கிடக்கும் ஐதீக புராணக்கதை.
தீபாவளியைத் தொடர்ந்து வரும் கந்தசஷ்டியிலும் கூட இவ்வாறு அகங்காரம் அழிந்த அழிக்கப்பட்ட செய்தியே உரைக்கப்படுகின்றது. சூரபத்மனை வதம் செய்த கந்தவேள் கடவுளின் சூரசம்ஹாரம் இதைத் தான் நமக்கு உணர்த்துகின்றது.
இலங்கைத் தமிழர்களும் இன்று தமது தர்ம வாழ்வை, பேரினவாதம் என்ற பேரரக்கன் கவ்வியதால் அல்லற்பட்டு அவலப்பட்டு பேரழிவுகளையும், போரழிவுகளையும் சந்தித்து தாங்கொணாத் துயரில் மூழ்கிக்கிடக்கின்றனர். பேரினவாத நரகாசுரன் ஈழத் தமிழினத்தைப் பற்றிப் பிடித்து, அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தி, துன்ப சாகரம் என்ற நிரந்தரச் சிறை யில் தள்ளி விட்டிருக்கின்றான். நம்பிக்கைக்கீற்று மறைந்து, துன்ப இருளுக்குள் துவண்டு கிடக்கின்றது தமிழினம்.
இந்த வாழ்வுச் சிறையிலிருந்து மீட்சி என்ற விடுதலையைப் பெற நவீன கிருஷ்ண பரமாத்மாவாக சங்கெடுத்து ஊதுவதற்கு இனி யார் வரப்போகின்றார்கள்? விடுதலையைச் சாதிப்பதற்கு வழிகாட்டப் போகின்றவர் யார்? இது தெரியாமல் அந்த வரவுக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கின்றது ஈழத் தமிழினம்.
அடக்குமுறை என்ற மேலாதிக்கம் ஆணவத்தோடு உருக்கொண்டு நிற்கின்றது. அந்த அகங்காரம் அராஜகம் அடக்கப்பட்டு, உண்மை உறைப்பாக உணர்த்தப்படும் போதே அமைதிக்காற்று வீச, சுதந்திரச் சுடர் பிரகாசிக்க, அமைதித்தேவன் ஆட்கொள்ளும் உன்னத சூழல் உருவாகும்.
பதினான்கு ஆண்டுகள் இருளில் மூழ்கிக் கிடந்த அயோத்தி நகருக்கு இராமபிரான், சீதைப்பிராட்டி சகிதமாக மீண்டு, அரியணையில் அமர்ந்து, நகரத்துக்கும் மக்களின் வாழ்வுக்கும் ஒளியேற்றிய திருநாளும் இன்றைய தீபத்திருநாளே என்றும் போற்றுகிறார்கள்.
பதினான்கு ஆண்டுகள் அயோத்தி மாநகர் இருளில் மூழ்கிக் கிடந்தமை போல இன்று தமிழர் தாயகமும் இருளில் மூழ்கிக் கிடக்கின்றது. தம்மொழி, தம் இனம், தம் தாயகம், தம் சுயநிர்ணயம் என்ற அடிப்படையில் அவர்களின் மனங்களில் ஆழப்பதிந்து கிடக்கும் நியாயமான அபிலாஷைகள் அரியணை ஏறும் நாளே ஈழத் தமிழர்களுக்கு ஒளி பிறந்த தீபாவளித் திருநாளா கும்.
அந்த நாளுக்காகத் தவமிருக்கும் தமிழர்களுக்கு அதுவரை நம்பிக்கையூட்டும் ஒரு நிகழ்வாக இன்றைய தீபத் திருநாள் கடந்து போகட்டும்.
நன்றி : யாழ் உதயன் ஆசிரியர்
0 கருத்துரைகள் :
Post a Comment