இலங்கைக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக வழங்கப்பட்டு வந்த "ஜி.எஸ்.பி." வரிவிலக்கு என்ற ஏற்று மதிச் சலுகையை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சிபார்சை முக்கிய அறிவிப்பை ஐரோப்பிய ஒன்றியம் இன்று உத்தியோக பூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க் கப்படுகின்றது.
மனித உரிமைகள் தொடர்பான சர்வதேசத் தரங்களைப் பேணுவதில் இலங்கை பெரும் தவறிழைத்துள்ளது என்ற காரணத்தினாலேயே இத்தகைய முடிவை எடுக்கும் நிலை மைக்கு ஐரோப்பிய ஒன்றியம் தள்ளப்பட்டிருப்பதாகக் கூறப் படுகின்றது.
இந்த விவகாரங்களை ஒட்டிக் கடந்த ஒரு வருடமாகத் தான் தனது நிபுணத்துவக்குழு மூலம் மேற்கொண்டு வந்த விசாரணைகள் பற்றிய விரிவான அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மனித உரிமைகளைப் பேணல், சித்திரவதை, சட்டத் துக்கு முரணான படுகொலைகள் போன்றவற்றைத் தடுத்தல், சிறுவரின் உரிமைகளைப் பாதுகாத்தல், தொழிலாளர் நலன்களைக் கவனித்தல் போன்ற விடயங்களில் சர்வதேசப் பட்டயங்களை ஏற்று அவற்றை முழுஅளவில் நடை முறைப் படுத்தும் நாடுகளுக்கே அவற்றின் பொருளாதார மேம்பாட் டுக்காக இத்தகைய ஏற்றுமதிக்கான வரிச்சலுகையை அளிக்கவேண்டும் என்பது ஐரோப்பிய ஒன்றியத் தீர்மா னமாகும்.
2004 டிசெம்பரில் ஆழிப்பேரலைத் தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இத்தகைய வரிவிலக்குச் சலுகையை வழங்குவதன் மூலம் இலங்கை, பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீளுவதற்கான ஓர் உதவியை அளிக்க ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்தது.
ஆசிய நாடுகளில், இந்த வரிவிலக்குச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து விசேடமாகப் பெற்ற நாடாக இதுவரை இலங்கை விளங்கிவந்தது. இந்த வரிச் சலுகை மூலம் ஏனைய நாடுகளுடன் போட்டி போட்டுக் கொண்டு, குறைந்த விலையில் குறிப்பாகத் தைத்த ஆடை களை ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கையால் ஏற்றுமதி செய்ய முடிந்தது. இதனால் இலங்கையில் ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகள் வளம் கொழித்தன. நாட்டின் பொருளாதாரத்துக்குப் பெரும் உந்து சக்தியாக ஊக்கியாக இந்த ஆடை உற்பத்தி மூலமான வருமானம் விளங்கிவந்தது.
நாட்டின் பொது அபிவிருத்திச் சுட்டெண் கணிப்பில் பத்து வீதத்தை இந்த ஆடை உற்பத்தித் தொழில் ஆக்கிர மித்துள்ளது. இத்துறையில் இங்கு இரண்டரை லட்சம் பேர் குறிப்பாக இளைஞர், யுவதிகள் நேரடியாக வேலை வாய்ப்புப் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 15 ஆயிரம் கோடி ரூபாவுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இலங் கையிலிருந்து தைத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
இலங்கைக்கான இந்த "ஜி.எஸ்.பி." விசேட வரிச்சலு கையை ஐரோப்பிய ஒன்றியம் துண்டிக்குமானால் இலங்கை யின் நிலைமை அதோ கதிதான்.
இந்தத் தைத்த ஆடைகள் வரிவிதிப்புக்கு உட்பட்டு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அவற்றை வழங்கிவரும் இந் தியா,சீனா, பங்களாதேஷ் போன்ற நாடுகளுடன் போட்டி யிட்டுத் தானும் வரி செலுத்தி, குறைந்த விலைக்கு அவற்றை வழங்க முடி யாத நிலை இலங்கைக்கு ஏற்படும். அப்படி நேர்ந்தால் நாட்டில் தற்போது இயங்கும் பலநூறு ஆடை உற்பத்தித் தொழிற் சாலைகளை இழுத்து மூடவேண்டி நேரும். சுமார் இரண்டரை லட்சம் இளைஞர், யுவதிகள் நேரடியாகவும், மேலும் ஐம்பதாயிரம் பேர் வரை சுழற்சி முறையிலும் வேலை இழக்கும் ஆபத்து ஏற்படும். இவர்களின் குடும்பங்கள் வீதிக்கு வரும். நாட்டின் பொரு ளாதார வளம், அந்நிய செலா வணி ஈட்டல் போன்றவை எல் லாம் பாதிக்கப்படும்.
இவ்வளவும் நாட்டில் யுத்தம் உச்சக்கட்டத்தை அடைந்த காலத்திலும் பின்னரும் நாட்டில் மனித உரிமைகளை நிலைநிறுத்துவதில் அசிரத்தை காட்டி அதற்கு மேல், அத்தகைய மனித உரிமை மீறல்களுக்குத் தூண்டுதலாகி நாட்டைக் குட்டிச்சுவராக்கிய அதிகார வர்க்கத்தின் கைங்கரியமே என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.
இதேசமயம், இலங்கையில் யுத்தத்தின் போது பொது மக் கள் கொல்லப்பட்டமை குறித்து சர்வதேச விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்று பல தரப்புகள் வேண்டுகோள் விடுத்தும் இலங்கை அரசு அதனைப் புறக்கணித்து வரு கின்றமையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை காட்டமான வார்த்தைகளில் கண்டித்திருக்கின்றமையும் கவனிக்கத்தக்க விடயமாகும்.
இத்தகைய விசாரணைகளுக்கு இடமளிப்பது நாட்டின் இறைமையைக் கேலிக்கு கேள்விக்கு உள்ளாக்கும் செயல் என்று கூறுவதன் மூலம் மட்டும் இந்த விடயத்தின் பொறுப்பிலிருந்து இலங்கை அரசு அதிகார வர்க்கம் தப்பிவிட முடியாது என்பதும் கவனிக்கத்தக்கது.
இந்த விடயங்களில் இலங்கை அரசு சர்வதேசம் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் நம்பகத்தன்மை மிக்க விசார ணைகளை நடத்தவேயில்லை என்று ஆணையாளர் நவநீதம் பிள்ளை சுட்டிக்காட்டும் அம்சமும் மறக்கற்பாலதல்ல.
எனவே, இவ்விவகாரத்தில் அடுத்த கட்ட மாற்று நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படுகின்றன என ஆணை யாளர் நவநீதம்பிள்ளை குறிப்பிடும் இந்த வேளையிலேயே "ஜி.எஸ்.பி."வரிச்சலுகை தொடர்பான தனது நிலைப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் இன்று வெளியிடுகின்றது என்பதும்
இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக அமெரிக்க அரசின் உத்தியோகபூர்வ அறிக்கை அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் உத்தியோகபூர்வமாக வெளியாகும் எனக் கூறப்படுவதும்
மிக முக்கிய தகவல்களாகின்றன. இவை எல்லாம் ஒன்று சேர்ந்து வரும்போது, உள்நாட்டில் மட்டுமல்ல, சர்வதேச ரீதியிலும் அவை இந்த ஆட்சியாளர்களுக்குப் பெரும் நெருக்கடிகளைத் தருவனவாக இருக்கப்போகின்றன எனலாம்.
இத்தகைய சவால்களை அரசுத் தலைமை எப்படி சமாளிக்கப் போகிறது, கையாளப் போகின்றது என்பது இவ் வாரத்தில் நாட்டு மக்கள் எல்லோரினதும் கவனத்தை ஈர்க்கும் விடயமாக அமையப் போகின்றது.
நன்றி : யாழ் . உதயன் ஆசிரியர் தலைப்பு
0 கருத்துரைகள் :
Post a Comment