ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதிக்கான வரிக் கட்டணம் ஏதுமின்றியே தைத்த ஆடைகளை ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக இலங்கைக்கு வழங் கப்பட்டு வந்த "ஜி.எஸ்.பி." வரிச்சலுகை நீக்கப்படுமா என்ற சந்தேகம் வலுத்து வருகையில், இது தொடர்பான வாதப்பிரதிவாதங்களும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன.
இத்தகைய விசேட வரி விலக்கு சலுகையை ஐரோப் பிய ஒன்றியம் இலங்கை உட்பட உலகின் பதினாறு வறிய நாடுகளுக்கு வழங்கியுள்ளது. ஏதேனும் ஒரு காரணத் திற்காக இச்சலுகையை இலங்கைக்குத் தொடர்ந்து வழங் காமல் ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்துமானால், இந்தச் சலு கையைக் கோட்டைவிட்ட முதல் நாடு என்ற "தனிப் பெருமை" இலங்கைக்குக் கிட்டும்.
இலங்கை நிலைமை குறித்த தனது விசாரணை அறிக் கையை அண்மையில் பகிரங்கப்படுத்திய ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையில் சித்திரவதை, கடத்தல், அரசுடன் தொடர்புடைய துணைப் படைக் குழுக்களுக்கு சிறுவர்களைச் சேர்த்தல், அவசரகால நிலைமையைப் பயன்படுத்தி அரசியல், சிவில் உரிமைகளை அடக்குதல் போன்ற அத்துமீறல்கள் அளவுக்கு அதிகமாக இடம்பெற்று வருகின்றன என்று அதில் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த அத்துமீறல்களுக்குத் தாராளமாக அனுமதித்து நிற்பதன் மூலம், இவ்விடயங்களை ஒட்டிய பல்வேறு சர் வதேசப் பட்டய ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் தனது கடப்பாட்டை நிறைவு செய்ய இலங்கை தவறிவிட் டது என்று ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
ஆனால், இந்தக் காரணத்துக்காக இலங்கைக்கான விசேட வரி விலக்குச் சலுகையை ரத்துச்செய்யவேண்டும் என்ற திசையை நோக்கி ஐரோப்பிய ஒன்றியம் நகர முற் படுவது குறித்தும் சர்ச்சைகள் கிளப்பப்படுகின்றன.
ஒரு நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக் காக, அந்நாட்டின் கைத்தொழில் துறையைத் தண்டிப்பதா அதுவும் வருமானம் குறைந்த மட்டத்தைச் சேர்ந்த பல லட்சம் பேர் தமது அன்றாட சீவியத்துக்காகத் தங்கியிருக் கும் ஒரு துறையை சாகடிப்பதா என்றெல்லாம் விமர்சகர் கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆனால், இலங்கைக்கான "ஜி.எஸ்.பி." வரிவிலக்குச் சலுகையை நிறுத்த எத்தனிக்கும் ஐரோப்பிய ஒன்றி யமோ, இலங்கை தொடர்பில் தான் எடுக்க உத்தேசிக்கும் நடவடிக்கை இலங்கையைத் தண்டிக்கும் செயலே அல்ல என்று வாதிட்டு வியாக்கியானம் கூறுகின்றது.
2005 இல் மேற்படி வரிவிலக்குச் சலுகையைத் தனக்கு வழங்கும்படி கோரி இலங்கை விண்ணப்பித்த போது, மனித உரிமைகள், சிவில் உரிமைகள், அரசியல் உரிமை கள் தொடர்பான சர்வதேசப் பட்டயங்களை மதித்து நடை முறைப்படுத்தும் என்ற உறுதிமொழியை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கியிருந்தது. அந்த உறுதிமொழியின் மீதே இலங்கைக்கு அந்த விசேட வரிவிலக்கு வசதியை சிறப்புரிமையை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்தது. ஆனால் இப்போது இவ்வாறு தான் உறுதியளித்த பல்வேறு சர்வதேசப் பட்டயங்கள் தொடர் பான விவகாரத்தில் அந்தப் பட்டயங்களை இலங்கை வெளிப்படையாக அப்பட்டமாக மீறி வருகின்றது. ஆகவே, "ஜி.எஸ்.பி." வரிவிலக்கு சலுகையைப் பெறு வதற்கான உடன்பாடு தொடர்பான ஒப்புக்கொண்ட ஏற் பாடுகளை இலங்கை மீறிவிட்டது என்பதே உண்மை. உடன்பாட்டை இலங்கை மீறியதால், அந்த உடன்பாட் டின் கீழ் தனக்குக் கிட்டிய சலுகையை இலங்கை இழக் கின்றதே தவிர, இது மனித உரிமை மீறல்களுக்குத் தாராள மாக அனுமதித்து நிற்கும் இலங்கைக்கு அதன் காரணமாக வழங்கப்படும் தண்டனையே அல்ல என்று ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் விளக்குகின்றனர்.
இவ்விடயத்தில் ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் சுட் டிக்காட்டும் இன்னும் சில விடயங்கள் கவனிக்கத்தக்கவை.
"இந்தச் சலுகையை இலங்கை இனித் தொடர்ந்து பெறவேண்டுமானால் இந்த வாய்ப்பு நீடிக்கப்பட வேண்டு மானால் இலங்கை இனியும் வெறும் வாய் வாக்குறுதி களை வழங்கிக்கொண்டிருப்பதோடு அடங்கிவிடக் கூடாது. உறுதியான செயற்பாட்டிலும் அவற்றை வெளிப் படுத்திக் காட்டவேண்டும்." என்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தெற்காசிய உறவுகளுக்கான பிரதிநிதிகள் குழுவின் தலைவர் ஜீன் லம்பேர்ட் வெளிவெளியாகவே கூறிவிட்டார்.
இதேசமயம், இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் தலைவர் பேர்னாட் ஸ்வேஜ் தெரிவித்த ஒரு விடயமும் கவனிக்கத்தக்கது.
"இந்த வரிச்சலுகையை நீடிப்பது தொடர்பான பேச் சுக்கான காலம் முடிவடைந்து விட்டது. இந்த விவகாரத் துக்காக (ஏனைய தரப்புகளிடம்) பிரசாரம் செய்யும் முயற் சியை விட்டுவிட்டு, நேரடியாக விடயத்தைக் கவனித்துத் திருத்தங்களைச் செய்வது குறித்துப் பார்ப்பது நல்லது என்பதை அவர்களுக்கு (இலங்கைக்கு) சிபார்சு செய்ய விரும்புகிறோம்." என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, "ஜி.எஸ்.பி." வரிச்சலுகை தொடர்ந்து நீடிக்கப்பட வேண்டும் என அதன் மூலமான பொருளாதார வளம் கிட்டவேண்டும் என இலங்கை நினைக்குமானால், அந்த வசதியை நீடிக்குமாறு கோரி பல தரப்புகளிடம் பிரசாரம் செய்யும் எத்தனத்தில் தொடர்ந்து ஈடுபடுவதை விட்டு விட்டு, அந்தச் சலுகை நீடிப்பதற்கான நிபந்தனைகளை மனித உரிமைகள் மற்றும் அரசியல், சிவில் உரிமைகள் தொடர்பான சர்வதேச பட்டய ஏற்பாடுகளை முழு அளவில் நடைமுறைப்படுத்துவோம் என்ற தனது உறுதிமொழியை செயலில் நிறைவேற்றுவது குறித்து அது கரிசனை காட்டவேண்டும். காட்டினால் பயன் உண்டு. செய்வார்களா?
நன்றி : உதயன்
0 கருத்துரைகள் :
Post a Comment