தமிழ்த்தேசிய அரசியல் அபிலாசைகளை அழிக்க நினைக்கும் சிங்களத்தின் நகர்வுகள்

இலங்கைத்தீவில் ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கான அயுதப் போராட்டம் பின்னடைவைக்கண்டுள்ள இந்நிலையில் ஏற்பட்டுள்ள அரசியல் பாதுகாப்பற்ற நிலையில், தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பாக தமிழ்மக்கள் விழிப்புடன் செயற்படுவது அவசியமாகும்!

வடக்குகிழக்கு தமிழ் மக்களின் அரசியல், பொருளாதாரம் எப்போதும் தென்பகுதிச் சிங்களவர்களினுடைய கைகளில் தங்கியிருக்க வேண்டும் என்பதுடன் தமிழ்மக்களின் பிரதிநிதித்துவத்தை பிரித்தால் தமிழ் தேசியம், தாயகம் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடுகளை வலுவற்றதாக்கலாம் என்பது சிங்களத்தின் நீண்ட நாள் கனவு ஆகும். தமிழர்கள் ஒரு பலமற்றவர்களாகவும் அரசியல பொருளாதார விடயங்களில் சிங்களத்திடம் தங்கியிருக்க வேண்டும் என்பதே இதன் அடிப்படை உள்ளடக்கம். இதற்கமைவாகவே சிங்களத்தின் காய்நகர்த்தல்கள் எப்போதும் இருந்து வந்துள்ளது.

தற்போது

• தமிழ்த்தேசியக்கட்சிகளை இல்லாதொழிக்கும் முயற்சியாக இன அடையாளயங்களை பிரதிபலிக்கக்கூடிய பெயர்களுள்ள கட்சிகளின் பெயர்களை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற எண்ணப்பாட்டை முன்வைத்து இலங்கை பாராளுமன்றத்தில் சட்டமாக்க முற்பட்டபோது இலங்கை நீதித்துறை அதைத்தடுத்து நிறுத்தியது.

• தென்பகுதி ஆழும் வர்க்கம் தமிழ் தேசியக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்குவதனுடாக தமிழ்மக்களின் பிரதிநிதித்துவத்தை பலவீனமடையச்செய்தல்.

• தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு செல்வாக்குள்ள தமிழ் பிரதிநிதிகளை உள்வாங்குதல்.

• தமிழ் தேசியம் பேசும் கட்சிகளின் செயற்பாடுகளை முடக்குதல் அல்லது செயற்படாமல் செய்தல்

போன்றவற்றுடன்

கருணா கட்சியைக் கலைத்து விட்டு சுதந்திரக்கட்சியில் இணைத்ததும் டக்ளஸ் தேவானந்தாவை சுதந்திரக்கட்சிக்குள் இழுப்பதற்கான முயற்சிகளுடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரையும் தமது பக்கம் இழுப்பதனூடாக தமிழ் தேசியத்தை அழிப்பதற்கு தென் பகுதி அரசியல் கட்சிகள் முயல்கின்றன. இதன் அடுத்த வெளிப்பாடு தான் சுதந்திரக்கட்சியில் சேர மறுத்த கிழக்கு முதமைச்சர் பிள்ளையானை பதவியிலிருந்து நீக்குவதனுடாக, கிழக்கில் தனது அரசியல் செல்வாக்கை கருணாவினுடாக நிறுவுவதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன.

இன்று வரை மக்களினால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக்கட்சி பராளுமன்ற உறுப்பினர்கள், முகாம்களிற்கோ, மீள்குடியேற்ற விடயங்களில் பங்கு கொள்வதற்கோ சிங்களம் அனுமதிக்கவில்லை. ஆனால் மக்களால் தெரிவு செய்யப்படாத கருணாவை முகாம்களிற்கு செல்ல அனுமதித்தது. தற்போது வவுனியா முகாம்களிலிருந்து கிழக்கில் மீள்குடியேற்றத்திற்கு அனுப்பும் நிகழ்வுகளில் கருணா உள்ளடங்கலாக சிங்கள அரசியல்வாதிகளே பங்கெடுக்கின்றனர். இதனூடாக தங்களின் அரசியல் செல்வாக்கை கிழக்கில் நிலைநாட்டுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.

அடுத்ததாக நீண்ட யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பொருளாதார அபிவிருத்திளை எதிர்பார்த்து நிற்கின்றார்கள். எனவே சர்வதேச உதவிகளை பெற்று தென்பகுதிச்சிங்களத்திடம் அடிமைப்பட்டிருக்கும் தமிழ்தேசிய விரோத சக்திகளைக் கொண்டு, தமிழ்பிரதேசத்தில் அபிவிருத்திச்செயற்பாடுகளை முன்னெடுப்பதனுடாக, நீண்ட கால நோக்கில் சிங்களத்தின் நிரந்தரமாக அடிமைகளாக தமிழ் மக்களை கொண்டு செல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. இது தமிழ் மக்களின் அரசியல் விடுதலையின் கூர்மையை மழுங்கடிக்ககூடும்.

தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான காய் நகர்வுகள் தற்போது புலத்திலும் மையங்கொண்டுள்ளது. தமிழ் மக்களின் அபிலாசைகளை முன்னெடுக்கும் தமிழ் தேசிய அரசியல் சக்திகளை தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் பலப்படுத்துவது தமிழ் மக்களின் இன்றியமையாத கடமையாகும்;. புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் தாயகத்தில் உள்ள தமிழ் தேசிய கோட்பாடுகளை கொண்டிருக்கும் கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயற்படுவது மிகமிக அவசியமாகும். குறிப்பாக இவ்விரண்டு சக்திகளும் இரண்டு தண்டவாளங்களைப்போல இருந்து அரசியல் விடுதலை என்னும் புகைவண்டியை நகர்த்த வேண்டும். இந்த யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் எல்லோரும் தவறிழைப்போமாக இருந்தால் தமிழ்த்தேசிய சக்திகள் தமிழ் மக்களை தென்இலங்கைக்கு நிரந்தர அடிமைகளாக்கிவிடும் என்பதை மறந்து விடக்கூடாது.
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment