"பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை"மாதிரி ஆகியுள்ளது ஈழத் தமிழர்களின் நிலைமை.
வன்னியில் கொடூர யுத்தத்தின் பேரழிவுகளுக்குள் சிக் குண்டு, சின்னாபின்னமாகி, வவுனியா தடுப்பு முகாம்களுக் குள் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் முடக்கி வைக் கப்பட்டிருக்கும் தமிழ் அகதிகளைப் பார்வையிடுகின்றோம் என்ற பெயரில் தமிழகத்திலிருந்து வந்திருக்கும் இந்திய எம். பிக்கள் குழு இங்கு நடத்தும் "திருவிழா"க்கள் ஒருவகையில் பார்த்தால், சென்னையில் உள்ள இலங்கையின் பிரதித்தூது வர் கிருஷ்ணமூர்த்தி குறிப்பிடுகின்றமைபோல இந்த அகதி களை மிருகக்காட்சிச் சாலையில் அடைத்து வைத்துள்ள மிரு கங்களுக்கு ஒப்பானவர்களாகப் பார்வையிடுவது போன்ற தோற்றத்தையே தந்து நிற்கின்றன.
இலங்கைத் தமிழர்களின் பூர்வீகத் தாயகமான வன்னிப் பெருநிலப்பரப்பு மீது இலங்கை அரசு தொடுத்த கொடூர யுத்தத் தின் விளைவாகவே இந்தத் திரிசங்கு நிலைக்கு இப்படி மூன்று லட்சம் மக்கள் தள்ளப்பட்டனர் என்பது வெள்ளிடைமலை.
இந்த யுத்தத்தை கோர இராணுவ நடவடிக்கையை தமது படைகள் வெற்றிகரமாக ஒப்பேற்றி முடித்தமைக்கு இந் திய அரசு வழங்கிய உதவிகளே காரணம் எனத் தெரிவித்து அதற்காக இந்தியாவுக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ முதற்கொண்டு இராணுவத் தளபதி வரை பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர். இதிலிருந்து, வன்னியில் பல்லாயிரம் தமிழர்களைக் கொன்றொழித்து சுமார் மூன்று லட்சம் தமிழர் களை ஏதிலிகளாக்கிய கொடூரப் போரைத் தொடுத்த பங்குதா ரர்களில் இந்தியாவும் ஒரு பிரதான தரப்பு என்பது கண்கூடு.
ஆகவே, இன்று இப்படி முகாம்களுக்குள் மூன்று லட்சம் தமிழர்கள் சிறைவைக்கப்பட்ட கொடூரத்துக்கான மூலகார ணர்களில் இந்தியத் தரப்பும் அடங்கும் என்பது மறுக்கமுடி யாத உண்மை.
எனவே, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி என்ற பெயரில் இந்த அகதிகளைப் பார்வையிட அல்லது தமிழர்கள் தரப்பைச் சந்திக்க இங்கு வரும் எந்தக் குழுவினரும், அந்தப் பெரும் தவறை இழைத்த பங்குதாரர்களில் தாமும் அடக்கம் என்ற குற்ற உணர்வை மனதில் இருத்திக்கொண்டு தான் வரவேண் டும் என்பதை அவர்களுக்கு முதலில் வெளிப்படையாகவும் அப் பட்டமாகவும் சுட்டிக்காட்டி நினைவுபடுத்த விரும்புகிறோம்.
சரி. நீங்கள் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர்கள், உங் களை மீறி உங்களுக்கு அப்பாற்பட்ட புதுடில்லி சக்திகள் இத்தகைய கொடூர யுத்தம் தமிழர்கள் மீது தொடுக்கப்படுவ தற்கு பின்புலத்தில் இருந்துள்ளனர், அதற்கு நாங்கள் என்ன செய்வது என்று உங்கள் தரப்பில் முணுமுணுக்கப்படும் வாத மும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே.
அதுதான் உங்கள் நிலைப்பாடு என்றால் பாதிக்கப்பட்டு பரிதாப நிலையில் இருக்கும் தமிழர்களின் உண்மையான அவலநிலையைக் கண்டறியும் நியாய நோக்கம் மட்டுமே உங்களுடையது என்றால் அதுவும் நல்லதே. ஆனால் அது தான் உங்கள் மனநிலையும், திட்டமும், எண்ணமும் என் றால், உங்களின் இந்த இலங்கை விஜயத்துக்கான திட்டத் தைப் பாதிக்கப்பட்ட தமிழர் தரப்புடன் ஓரளவுக்கேனும் இணைந்துதான் நீங்கள் தயாரித்திருக்கவேண்டும்.
அதை விடுத்து, இலங்கை அரச நிர்வாகத்துடனும், அதன் வழிகாட்டுதலுக்கு ஜால்ரா போடும் கொழும்புக்கான இந் தியத் தூதரக அதிகார வர்க்கத்துடனும் மட்டும் இணைந்து, அவர்களின் வழிகாட்டுதலுடனான சுற்றுலா ஒன்றை இங்கு நீங் கள் மேற்கொள்வது பொருத்தமற்றதும், அபத்தமானதுமாகும்.
* ஆக, தமிழகத்தின் ஆளும் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்தவர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
* இலங்கையில் பெரும்பான்மைத் தமிழர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 90 வீதத்துக்கும் அதிகமானோரைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் குறுகிய நேர முன்னறிவித்தலுடன் ஆக ஒன்றேகால் மணி நேரம் மட்டுமே இக்குழுவினரால் பேச முடிந்தது.
* வன்னி முகாமில் உள்ள அகதிகளின் நிலைமையைக் கண்டறிவதற்காக ஐந்து நாள் விஜயமாக இலங்கைக்கு வந்த இக்குழுவினர் ஒரு நாள் மதியத்துக்குப் பின்னர் மாலை வரை யான சிலமணி நேரத்தை மட்டுமே அந்த அகதிகளைப் பார்வை யிட ஒதுக்க முடிந்திருக்கின்றது. அங்குள்ள பிரதான ஏழு முகாம் களையும் பார்க்கவோ, அந்த மக்களுடன் தனித்தனியாகக் கலந்துரையாடி உண்மை நிலைவரத்தைக் கண்டறியவோ இது போதுமானதாக இருக்கும் என்று கூறுவதில் அர்த்தமில்லை.
* தமிழ்க்கூட்டமைப்பினருடன் இக்குழுவினர் சந்தித்த போது, இந்த அகதிகளை உடனடியாக மீளக்குடியேற்றும் விடயத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இராணுவத் தரப்பில் எதிர்ப்பும், அழுத்தமும் உள்ளது என்ற மாதிரிக் குறிப்பிட்டு, அதனால் அந்த விடயத்தில் சற்றுப் பொறுத்தே போகவேண்டும் என்ற தோறணையில் சில இந் திய எம்.பிக்கள் கருத்துப் பிரதிபலித்தமையும் இந்தக் குழுவி னரின் இலங்கை விஜயத்தின் உள்நோக்கம் குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளது.
* இந்திய அரசின் உத்தியோகபூர்வமான குழுவாக அல்லாமல், தமிழக முதல்வரின் விசேட குழுவாக இது வருகை தந்தி ருப்பது, இலங்கைத் தமிழரின் அரசியல் அவல நிலைமையைத் தமது சுயலாப அரசியலுக்கு வசமாகப் பயன்படுத்தும் தமிழ கத்தின் கிழட்டு அரசியல் தந்திரக்காரரின் மற்றொரு வஞ்சக முயற் சியாகவே இலங்கைத் தமிழர்கள் கருதவேண்டியுள்ளது.
* ஆக, இலங்கை அரசு, அதன் படைத்தரப்பு, அதன் ஏவல் அரசியல்வாதிகள் ஆகியோரின் வழிகாட்டுதலில் இலங்கை யில் சுற்றுலா மேற்கொள்ளும் இக்குழுவினர், தமிழர் தரப்பின் உண்மையான அவல நிலையை பரிதாபப் பக்கத்தை தரி சிக்க வாய்ப்புக்கிடைக்கும் என எதிர்பார்ப்பதும் பய னற்றது.
சோனியாகாந்தி, கருணாநிதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் படங்களுடன், "இந்திய உறவுகளே! வருக! வருக!!" என்று வரவேற்கும் சுவ ரொட்டிகள் நேற்று யாழப்பாணத்தில் பரவலாக ஒட்டப்பட்டி ருந்தன. இலங்கைத் தமிழர் தரப்புகளுடனான தொடர்புக ளின்றி இலங்கை அரசின் வழிகாட்டுதல் ஏற்பாட் டில் வந்த இந் தக் குழுவினர் மேற்படி சுவரொட்டியில் வெளிப் படுத்தப்படும்விட யம்தான் அல்லது கருத்துத்தான் இலங் கைத் தமிழர்களின் இன்றைய நிலைப்பாடு என்று எண்ணி மீளவேண்டி யதுதான்!
அதற்குமேல் ஏதும் நடக்கும் என்று எதிர்பார்ப்பதில் அர்த்த மில்லை. ஏனெனில் முதற்கோணல், முற்றிலும் கோணல். ஆரம் பமே தமிழர் தரப்புப் பிரதிநிதிகளை ஓரம்கட்டி நடக்கும் முயற்சியாகவே இது தொடங்கியுள்ளது.
இதற்குமேல் இந்த விஜயத்திலிருந்து அதிகம் எதிர் பார்ப்பதும், அதற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதும் முற்றும் பொருத்தமற்றதாகும்.
நன்றி : யாழ். உதயன் நாளிதழ் ஆசிரியர் தலைப்பு
0 கருத்துரைகள் :
Post a Comment