இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விவகாரத்தை ஒட்டி பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அதுவும் இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பி லிருந்து குறிப்பாகப் புலம்பெயர்வாழ் தமிழர்கள் மத்தியில் பல்வேறு எண்ணக்கருக்கள் பிரதிபலிக்கப்படுகின்றன.
எவ்வகையிலான தீர்வு என்ற விடயத்தில் இடங்களின் பெயர்களை "ஆகு பெயர்களாக"குறிப்பிட்டு கருத்து வெளியிடும் சூழலும் இப்போது காணப்படுகின்றது.
ஒரு சாரார் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பார்கள். இன்னொரு தரப்பினர் திம்புக் கோட்பாடு என்பார்கள். பிறிதொரு குழுவினரோ ஒஸ்லோ கூட்டு அறிவிப்பு என்பார்கள். இப்படி இடங்களின் பெயரால் சுட்டப்படும் ஒவ்வொரு அம்சமும் தன்தன் நிலையில் ஆழமான கருத்து நிலைப்பாட்டைப் பிரதிபலித்து நிற்கின்றமை கண்கூடு.
"வட்டுக்கோட்டைத் தீர்மானம்" என்பது 1976 மே 14 ஆம் திகதி வட்டுக்கோட்டைத் தொகுதியில் உள்ள பண்ணாகத் தில் இடம்பெற்ற தமிழர் விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை (Resolution) குறித்து நிற்கிறது. தனித் தமிழீழம் அமைப் பதற்கான முடிவைத் தமிழினம் அந்த மாநாட்டிலேயே முதன் முறையாக உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தியிருந்தது."இலங்கைத் தீவில் தமிழர் தேசத்தின் பாதுகாப்பை உறு திப்படுத்தும் பொருட்டு, ஒவ்வொரு தேசத்துக்கும் உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சுதந்திரமான இறையாண்மையுடைய மத சார்பற்ற சோஷலிஸ தமிழீழ அரசு மீளப்பட்டு, மீள்நிர்மாணம் செய்யப்பட வேண்டும்"" என அந்த மாநாட்டின் மேற்படி தீர்மான வாசகம் கூறுகின்றது.
அடுத்தது, திம்புக் கோட்பாடு பற்றியது. பூட்டான் தலை நகர் திம்புவில் இலங்கை அரசுக்கும் தமிழர்கள் தரப்பில் அவர்களின் விடுதலைக்காகப் போராடிய அனைத்துத் தரப்பின ரும் ஒன்றிணைந்த அணிக்கும் இடையில் பூட்டான் அரசின் ஆதரவுடனும் இந்திய மத்தியஸ்தத்துடனும், இடம்பெற்ற பேச்சுகள் பற்றியதே இது. திம்புப் பேச்சுகள் இரண்டு சுற்றாக நடைபெற்ற போதிலும் பொதுவாகத் திம்புக் கோட்பாடு என் பது 1985 ஜூலை 8 முதல் 13 ஆம் திகதி வரையான காலப்ப குதியில் இடம்பெற்ற முதல் சுற்றுப்பேச்சின் முடிவில் தமிழர் களின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றுகூடி வெளியிட்ட கொள்கை விளக்கமாகும். தமிழரின் தனித்துவத் தேசிய இனம், தனியான தாயகம், சுயநிர்ணய உரிமை ஆகிய மூன்று பிரதான அம்சம்களையும், இலங்கையில் வாழும் சகல தமிழ் மக்களுக்கும் முழுமையான குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகள் உண்டென்ற அடுத்த விடயத்தையும் உள்ளடக்கி மொத்தம் நான்கு விசேட கொள்கைகளை (Four Cardinal Principles) திம்புக் கோட்பாடு வெளிப்படுத்தி நின்றது. இதில் முதல் மூன்றும் வடக்கு, கிழக்கு தமிழர் தொடர்பிலும் நான் காவது விசேடமாக மலையகத் தமிழர் தொடர்பிலும் முன் வைக்கப்பட்டன.
அடுத்த விவகாரம் ஒஸ்லோ கூட்டு அறிவிப்பாகும். இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002 முதல் 2004 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுகள் சமயத்தில் 2002 டிசெம்பர் 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நோர்வேத் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற மூன்றாவது சுற்றுப் பேச்சுகளின் முடிவில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஆரம்ப ஏற் பாடாகத் தங்களுக்குள் ஏற்பட்ட இணக்கம் குறித்து இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகள் வெளியிட்ட கூட்டு அறிவிப்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட விடயங்களையே இது பிரதிப லித்து நிற்கின்றது.
"உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகத்தில், ஐக்கியமான இலங்கைக்குள், சமஷ்டி ஆட்சிமுறை தழுவிய தீர்வு ஒன்றை ஆராய்ந்து பார்ப்பதற்கு இரு தரப்பிலும் இணக்கம் காணப்பட்டது." " இதுவே ஒஸ்லோ கூட்டறிக்கையின் (Oslo Communique) சாரமாகும்.
இந்த மூன்று முக்கிய அம்சங்களையும் தங்களின் வாதங்களுக்கு அடிப்படையாகக் கொண்டு, அவற்றின் அடிப் படையில் தமது தீர்வுத் திட்ட எண்ணங்களைப் பிரதிபலித்து நிற்போர் மற்றைய ஒரு விவகாரத்தையும் இன்றைய நிலை யில் கவனத்தில் கொள்வது நல்லது.
முதலாவது வட்டுக்கோட்டைத் தீர்மானம். அது தனித் துத் தமிழர் தரப்பினால் எடுக்கப்பட்ட ஏகமனதான முடிவு.
இரண்டாவது திம்புக் கோட்பாடு. அது ஈழத் தமிழர் களும், தென்னிலங்கை அரசுத் தரப்பினரும் இந்திய மத்தி யஸ்தத்துடன் ஒரு மேடையில் இருந்து பேசிய சமயம் தமிழர் தரப்பால் ஏகமனதாக அங்கு முன்வைக்கப்பட்டது. அதிலே அனைத்துத் தமிழர்களுக்கும் குடியுரிமை உண்டு என்ற நான்காவது கோட்பாடு தவிர்ந்த ஏனைய மூன்றையும் தமிழர்கள் தனித்துவமான இனம், அவர்களுக்குத் தனித்துவ மான, விசேட பாரம்பரிய தாயகம் உண்டு, அவர்களுக்கு சுய நிர்ணய உரிமை உள்ளது என்ற மூன்றையும் அந்தப் பேச்சுகளின் போதே கொழும்பு அரசு நிராகரித்து விட்டது. (இரண்டு ஆண்டுகள் கழித்து 1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் மூலம், மேற்படி தமிழர் தரப்பின் பிரதான மூன்று கோரிக்கைகளில் சுயநிர்ணய உரிமை தவிர்ந்த ஏனைய இரண்டையும் தமிழர்கள் இலங்கையில் தனித்துவ மான இனம், வடக்கும் கிழக்கும் அவர்களின் பாரம்பரிய, பூர்வீகத் தாயகம் என்ற இரண்டு கோட்பாட்டையும் கொழும்பு ஏற்றுக்கொண்டு விட்டது என்பது வேறு விடயம்.)
மூன்றாவது ஒஸ்லோ கூட்டறிவிப்பு. இது, அதில் தமிழர் தரப்பில் பங்குபற்றிய விடுதலைப் புலிகளும் தென்னி லங்கைச் சிங்களவர் தரப்பில் பங்குபற்றிய கொழும்பு அரசும் ஒப்புக்கொண்டு இணங்கிய விடயமாகும்.
ஆகவே, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையிலா அல்லது திம்புக் கோட்பாடு மீதான உறுதிப்பாட்டுடனா அல்லது ஒஸ்லோ கூட்டறிவிப்பின் போக்கிலா இனப்பிரச் சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று சர்ச்சைப் படும் புலம்பெயர் தமிழர்களின் தரப்புகள், நாம் சுட்டிக்காட்டிய இந்த விடயங்களைக் கவனத்திலும் பரிசீலனையிலும் கொள்வது அவர்களைச் சிறந்த முறையில் வழிப்படுத்த உத வும் என நினைக்கிறோம்.
நன்றி : யாழ் உதயன் ஆசிரியர் தலைப்பு
0 கருத்துரைகள் :
Post a Comment