தமிழர் பிரச்சனையும் இந்தியா,மேற்குலகின் காய் நகர்த்தல்களும்

போரின் போது அப்பாவி பொதுமக்கள் மீது இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியதால், அந்த நாட்டுக்கு வழங்கப்படும் ஜீ.பி.எஸ் வரிச்சசலுகைகளை இரத்து செய்ய ஜரோப்பிய நாடுகள் முடிவு செய்துள்ளன.

இலங்கையின் மனித உரிமை மீறல்

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின் போது அப்பாவி மக்கள் மீது சிங்கள இராணுவம் குண்டுகளை வீசி தாக்குதலை நடாத்தியது. மேலும் போருக்குப் பின்னர் சுமார் மூன்று இலட்சம் தமிழர்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிறை அகதிமுகாங்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். முற்றுமுழுதான மனித உரிமை மீறல்களுடன் அந்த முகாங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அண்மையில் விறகு எடுக்கச்சென்ற மக்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்ததனூடாக, மிகக்கடுமையான முடிவெடுக்கக்கூடிய இராணுவம் சுற்றி நிறுத்தப்பட்டுள்ளது புலனாகின்றது.

பல்வேறு நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் அங்கு பணியாற்றிக்கொண்டிருக்கும் ஐ.நா மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களும், இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பில் கடுங்கண்டனத்தை தெரிவித்துள்ளன. தேவையில்லாமல் நீண்ட நாட்களாக அப்பாவி மக்களை முகாங்களில் அடைத்து வைத்து இருப்பதாகவும், அவர்களுடைய நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகதவும், மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன. போரின் போது மனித உரிமைகள் மீறப்படாமல் பார்த்துக்கொள்ளுமாறு இந்த அமைப்புகள் கேட்டுக்கொண்ட போதிலும் அவை எதனையும் இலங்கை அரசு கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. அதேவேளை இந்தியா, இலங்கையின் இத்தகைய செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதுடன் ஜநா சபையில் இலங்கைக்குச் சார்பாகச் செயற்பட்டதனூடாக மனித உரிமை தொடர்பான விசாரணையிலிருந்தும் காப்பாற்றியது.


மேற்குலகம்

இலங்கையில் போர் தீவிரமடைந்த காலம் தொடக்கம், தொடர்ச்சியாக மனித உரிமை தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஐ.நா சபை செயலாளர் நாயகம் உட்பட பல நாடுகள் அழுத்தம் கொடுத்தபோதும் இலங்கை அரசு அதற்கு செவிசாய்க்காமலே செயற்பட்டு வந்தது. கடந்த சில வாரங்களாக வெளிப்படையான குற்றச்சாட்டுகளை மேற்குலகம்
வைத்துவருகின்றது. குறிப்பாக பி.பி.சி செய்தி சேவை, இடம்பெயர்ந்த மக்கள் முகாங்களில் அருவருக்கத்தக்க நிலையில் இருக்கின்றார்கள் என பதிவு செய்தது. மனித உரிமை ஆணைக்குழு, ஐ.நா தொண்டு நிறுவனங்களும் தங்களது அதிருப்தியை காட்டமாக வெளிப்படுத்தின. அதன் முடிவாக அமெரிக்க வல்லுனர்குழுவின் சனல் - 04 வெளிப்படுத்திய வீடியோ ஆவணத்தை ஆய்வு செய்த அமெரிக்க வல்லுனர் குழுவின் அறிக்கையும் இலங்கை அரசிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை மனித உரிமை விடயத்தில் ஒத்துப்போகாவிட்டால் எடுக்கப்படும் முடிவு தொடர்பாக கோடிட்டுக்காட்டிய போதும் அதை அலட்சியம் செய்தது இலங்கை அரசு. இந்த நிகழ்வுகளைப் பொறுத்தவரையில், கடும் போக்காளரான ராஜபக்சவைப் பயன்படுத்தி யுத்தத்தில் புலிகளை வென்றுவிட்டு, தனக்குச் சார்பான அரசை இலங்கையில் நிறுவுவதற்கான அடிப்படையாகவே மனித உரிமை விடயத்தை மேற்குலகம் பயன்படுத்துகின்றது என்ற சந்தேகம் எழுகின்றது. எதுவாகினும் அகதிமுகாம்களில் உள்ள மக்கள் தங்கள் வாழ்விடங்களில் குடியேற்றப்பட்டால் அது ஒரு நல்ல காரியமாகவே இருக்கும்.

வரிச்சலுகை இரத்தால் ராஜபக்சேக்கு ஏற்படும் பின்னடைவு

இலங்கைக்கான வரிச்சலுகைகளை(ஜி.பி.எஸ்) ஐரோப்பிய நாடுகள் நீக்கும் பட்சத்தில் இரண்டு இலட்சம் வரையான தொழிலாளர்கள் உடனடியாக வேலையிழப்பார்கள். மேலும் பொருட்களின் விலை 6 சதவீதத்தால் உயர்வடையும். சில்லறை வியாபாரிகள் இந்தியா,சீனா, வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். வேலையில்லா திண்டாட்டம் பணவீக்கம் போன்றன தலைதூக்கும். படையினருக்கு சம்பளம் வழங்கமுடியாத நிலை உட்பட பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சிங்கள மக்கள் மத்தியில் யுத்தம் மையச்சிந்தனையாகவிருந்த போது தங்களின் பொருளாதாரச் சுமைகளைப்பற்றி கவலைப்படவில்லை. ஆனால் யுத்தம் முடிவடைந்த சூழலில் மக்களின் அன்றாடப்பிரச்சனைகளான விலைவாசியேற்றம், வேலையில்லாத் திண்டாட்டம் போன்றன மேலோங்கும் போது அதைச்சமாளிக்க முடியாத சூழல் ஏற்படும். ஏற்கனவே ஜீ.பி.எஸ் பிளஸ் வரிச்சலுகைகளை பெறத்தவறிய அரசு மீது குற்றச்சாட்டுகள் விமர்சனங்கள் வைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இச்சூழலில் இவ்வரிச்சலுகை நீக்கமானது கணிசமான அளவு மகிந்த அரசாங்கத்தின் திடம் மற்றும் வெற்றிவாய்ப்பைக் குறைக்கும்.

இந்தியா

குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் இந்தியாவும் சீனாவின் பக்கம் சார்ந்து செல்லும் இலங்கைத்தீவின் பிடியை மீள தனக்குள் கொண்டு வருவதற்கு எண்ணியிருந்த வேளை, பழம் நழுவி பாலில் விழுந்தததைப்போல சுலபமாக தனது வலையில் சிக்கவைத்துவிட்டது. மனிதஉரிமை விடயத்தில் இலங்கையை காப்பாற்றியது மட்டுமல்லாமல் சர்வதேசம் மனித உரிமை தொடர்பில் பெருங்குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது தனது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி அங்கு மிகமோசமான நிலமையில்லை என்று சான்றிதழ் வழங்கியது. என்றாலும் ஜீ.பி.எஸ் சலுகை விடயத்தில் அது எடுபடாமல் போய்விட்டது. தற்போது மேலும் 500 கோடி ரூபா உதவிகளை வழங்குவதனூடாக தனது பிடியை மேலும் இறுக்கியது மட்டுமல்லாமல் தனது ஆடைகளுக்கான சர்வதேச சந்தை வாய்ப்பபையும் இலங்கைக்கான பொருட்கள் ஏற்றுமதி சந்தையையும் சுலபமாக பெறும் கபட நோக்கோடு தான் இந்தியா தனது காத்திரமான தலையீட்டை செய்துவருகின்றதோ என எண்ணத்தோன்றுகின்றது.


இப்போது ராஜபக்கவை வைத்து தனக்கு சார்பான அரசை இலங்கையில் நிறுவ இந்தியாவும், மனித உரிமை விடயத்தை கையிலெடுத்து தனக்கு சார்பான அரசை இலங்கையில் நிறுவ மேற்குலகமும் செய்யும் நகர்வுகளின் வெளிப்பாடுகள் தான், இன்று இலங்கை விடயம் முன்னிலைப்படுத்தப்படுவதன் பின்னனி என கருத வேண்டியுள்ளது. இந்தியாவும் மேற்குலகமும் தனது அரசியல் ஆதிக்கத்தை இலங்கையில் ஏற்படுத்த முயலும் முயற்சியின் களமாக இலங்கையும் தமிழர் பிரச்சனை உள்ளது என்பதே உண்மையாகும.
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 கருத்துரைகள் :

  1. "இலங்கை தீவில் வெளியுலகத்தின் ஆதிக்கம்."

    இலங்கை சுகந்திரம் அடைந்த காலப்பகுதியில் இருந்து இத்தீவினை எவ்வாறு தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கலாம் என்பதனை அமெரிக்கா, ரசியா, ஆகிய இரண்டு வல்லரசுகளும் தங்களின் கொள்கைகளை வகுத்து செயற்பட ஆரம்பித்திருந்தார்கள். சிறிலாங்கா சுகந்திர கட்சி ரசியாவின் ஆதரவு நிலைப்பாட்டினையும். ஐ.தே கட்சி அமெரிக்கா சார்ந்த நிலைப்பாட்டினையும் கொண்டே தங்களின் திட்டங்களையும், செயற்பாடுகளையும் மேற்கொண்டு வந்தார்கள்.

    இதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக ஆசிய கண்டத்தில் சினாவும் இந்தியாவும் எதிர் நிலைப்பாடுகளில் இருக்கும் நாடுகளாகும். சினா இராசியவுடனும் இந்தியா அமெரிக்காவுடனும் இணைந்து செயற்படும் நாடுகளாகும்.

    இலங்கை தீவில் இருவேறு பிரச்சனைகளுக்கான ஆயுதப் போராட்டங்கள் மிகவும் பலமாக இருந்தன. ஒன்று ஜே.வி.பி இன் ஆயுதப்போராட்டம் மற்றையது ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டம். இப்போராட்டங்களை வெளியுலகம் தங்களின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான கொள்க்கை வகுப்புகளில் உட்புகுத்தி திட்டங்களை வகுத்து செயற்பட்டன.

    இதன் விளைவாகவே தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள ஆட்சியாளர்களின் செயற்பாடுகளை தமக்கு சதாகமாக மாற்றிய இந்திய தேசம் தனது நாசகார திட்டங்களை வகுக்க தொடங்கியது. தந்தை செல்வாவினால் சரியான தீர்க்க தரிசனத்துடன் முன்வைக்கபட்ட தனிநாட்டுக்கோரிக்கையினை அமெரிக்கா தலைமையிலான இந்தியா தனது சுய நலன்களை முதன்மைப்படுத்தி விடுதலைப்போராட்ட இயக்கங்களை உருவாக்கியது.

    இந்தியாவின் செல்லப்பிள்ளைகளாக செயற்பட்ட இயக்க தலைவர்களையும், தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களையும் தனது சுய நலனுக்காக செயற்படுத்திக்கொண்டது. தந்தை செல்வாவிற்கு பின்னர் ஈழத்தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தினை எந்த வெளியுலகத்தின் சுயநலன்களுக்கும் விட்டுக்கொடுக்கமல் தமிழ் மக்களின் சுய பலத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலகள் அமைப்பு போராடியது. இது இந்தியா உட்பட அமெரிக்கா தலைமையிலான அனைத்து நாடுக்களுக்கும் பெரிதும் இடைஞ்சலாக மாறியது. இதனை எவ்வாறு எல்லாம் கையாளமுடியுமோ அத்தனை வகைகளையும் சம்மந்தப்பட்ட நாடுகள் கையாண்டு இன்று பிரபாகரனால் உருவான அனைத்து தடைகளையும் கட்டுப்படுத்தி தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளர்கள். மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகளின் மூலம் தடைகள் உருவாகக்கூடாது என்பதிலும் மிகவும் எச்சரிக்கையாக குறிப்பிட்ட நாடுகள் உள்ளன. கே.பி யின் கைது இதற்கு உதாரணம்.

    அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகள் இன்று போரின் பின்னான மனித உரிமை தொடர்பான குற்ற சாட்டுக்களை வெளிப்படையாக முன்வைத்தாலும் அவர்களின் உள்நோக்கம் சினாவின் பிடியில் இலங்கை தீவு செல்ல கூடாது என்பதுதான். இத்தகைய நிலைப்பாட்டினை இந்தியா தனக்கு சதகமாக்க முனைகின்றது. அதாவது ஐ.தே கட்சி ஆட்சிக்கு வந்தால் அவர்கள் நேரடியாக அமெரிக்காவின் பிடியின் கீழ் சென்றுவிடுவார்கள் மாறாக மகிந்த போன்று கடும் போக்குடைய தலைமை இருந்தால் அவர்களை இப்படியான நெருக்கடிகளில் இருந்து காப்பாற்றி தமது பிடியில் முழுமையாக வைத்திருக்கலாம் என்பதுதான். ஆகா மொத்தத்தில் எல்லோரும் தமது சுய நலனுக்காக இலங்கை தீவினை பயன்படத்தப்போகின்றார்கள் என்பதுதான். இந்த பிரச்சனைகள் முடிந்தால் இன்னுமொரு பிரச்சனை இவர்களாலேயே இலங்கையில் உருவாக்கப்படும் என்பது மட்டும் உண்மை.

    ReplyDelete