ஐக்கிய நாடுகள் தினம் இன்று ஒக்டோபர் 24ஆம் திகதி அனுஷ் கப்படுகிறது. அதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.
உலகத்தின் சமாதானத்துக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் ஐக்கிய நாடுகள் சபை ஆற்றும் அளப்பரிய சேவையையாராலும் மறக்க முடியாது.
1945 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் ஸ்தாபிக்கப்பட்டது. 1939 ஆம் ஆண்டு செப்டெம்பரில் ஜேர்மனிய நாட்டு சர்வாதிகாரி ஹிட்லர் உலகமகாயுத்தத்தை ஆரம்பித்தார். 60 லட்சத்துக்கும் மேற்பட்ட யூத மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். அதேபோன்று, 1941 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜப்பான், ஆசியாவிலே ஓர் பெரிய போரை ஆரம்பித்தது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் இறந்தார்கள். இதன் நிமித்தம் பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் இணைந்து ஜப்பானுக்கும் ஜேர்மனுக்கும் எதிராகப் போர் தொடுத்தன. 1945 ஆம் ஆண்டுவரையும் போர் நடைபெற்றது. இறுதியில் மேற்கூறிய ஐந்து நாடுகளும் ஒன்றுசேர்ந்து எதிர்காலத்தில் இப்படியான போர் மூலம் அழிவுகள் ஏற்படாமல் தடுப்பதற்கு ஓர் ஸ்தாபனம் வேண்டுமென தீர்மானமெடுத்தன. 1945 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடினர். இவர்களுடன் தென்அமெரிக்காவும் இணைந்து கொண்டது. இதே ஆண்டு ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை உருவாகியது. 1945 ஜூன் 26 ஆம் திகதி ஐ.நா. சாசனம் 50 நாடுகளின் பிரதிநிதிகளால் கைச்சாத்திடப்பட்டது.
போலந்து இம்மாநாட்டில் பங்குபற்றாத போதும் பிறிதொரு தினத்தில் கைச்சாத்திட்டு ஐ.நா. 51 ஆரம்பகால அங்கத்துவ நாடுகளுடன் ஒன்றிணைந்தது. ஐ.நா. ஆரம்பிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை 1955 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி இதில் அங்கத்துவம் பெற்றது. இதன் பின்னர் ஒரு வருடம் கழிந்து 1956 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜப்பான் அங்கத்துவம் பெற்றது. 1973 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜேர்மனி அங்கத்துவம் பெற்றது. ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின்படி ஆரம்ப அத்திவாரமிட்ட ஐந்து நாடுகளும் நிரந்தரப் பாதுகாப்புக்குரிய அங்கத்துவ நாடுகளாகும். ஆனால், இன்று வரையும் 191 நாடுகள் இதில் அங்கத்துவம் பெற்றுள்ளன.
ஐ.நா.சபை பல சர்வதேச உதவி வழங்கும் அமைப்புகளை உருவாக்கியுள்ளது. அதில் முக்கியமானவைகள் சிறுவர்களை பராமரிக்கும் யுனிசெவ் ஸ்தாபனம், அகதிகளை பராமரிக்கும் யு.என்.எச்.சி.ஆர். ஸ்தாபனம், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்ட ஸ்தாபனம். இது போன்று இன்னும் பல ஸ்தாபனங்கள் உருவாக்கப்பட்டன. உலக வங்கி,உலக சுகாதார ஸ்தாபனம், உலக உணவு ஸ்தாபனம், உணவு விவசாய ஸ்தாபனம், உலகத் தொழில் ஸ்தாபனம் போன்ற பல ஸ்தாபனங்கள் இதன் கீழ் இருந்து மக்களுக்குச் சேவையாற்றி வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் எட்டு பெரும் பிரிவுகள் உண்டு.
1. பொதுச்சபை
2.பாதுகாப்புச்சபை
3. பொருளாதார சமூக நலச்சபை
4. நம்பிக்கைப் பொறுப்புச் சபை
5.சர்வதேச நீதிமன்றம்
6. செயலகம்
7.செயலாளர் நாயகம்
8. ஐ.நா. வரவுசெலவுத் திட்டம்.
நோக்கங்களும் கோட்பாடுகளும்:
சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் பேணுதல். மக்களின் சுயநிர்ணய மற்றும் சம உரிமைக்கோட்பாடுகளுக்கு மதிப்பிடும் அடிப்படையில் நாடுகளுக்குக்கிடையில் நட்புறவை வளர்த்தல், சர்வதேச பொருளாதார சமூக, கலாசார மனிதாபிமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களுக்கும் மதிப்பளிக்கப்படுவதை ஊக்குவிப்பதிலும் ஒத்துழைப்பை மேற்கொள்ளல், இப்போது நோக்கங்களை அடைவதில் நாடுகளின் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் மத்திய நிலையமாக செயற்படுதல்.
பணிகளும், அதிகாரங்களும்
* ஐ.நாவின் நோக்கங்களுக்கும், கோட்பாடுகளுக்கும் அமைய சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் பேணுதல்.
* சர்வதேச நெருக்கடிக்கு வழிகோலக் கூடிய ஏதேனும் பிணக்கை அல்லது பிரச்சினையை விசாரித்தல்.
* அத்தகைய பிணக்குகளை தீர்த்து வைக்கும் வழிமுறைகளை அல்லது தீர்வுகளை நிபந்தனைகளை சிபாரிசு செய்தல்.
* ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஓர் அமைப்பு முறையை ஏற்படுத்துவதற்குத் திட்டங்களை வகுத்துக்கொடுத்தல்.
* சமாதானத்திற்கான அச்சுறுத்தல் அல்லது ஆக்கிரமிப்புச் செயல் ஏதாவது உள்ளதா என்பதை ஆராய்ந்து தீர்மானித்து அது தொடர்பாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகளைச் சிபாரிசு செய்தல்.
* ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுத்தல்.
* போர்ப் பிரதேசங்களில் ஐக்கிய நாடுகளின் நம்பிக்கைப் பொறுப்புக் கடமைகளை நிறைவேற்றுதல்.
* செயலாளர் நாயகத்தை நியமிப்பதற்குப் பொதுச்சபைக்கு சிபாரிசு செய்தல். பொதுச் சபையுடன் இணைந்து சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதிகளை நியமித்தல்.
இதன் தலைமைச் செயலகம் நியூயோர்க்கில் உள்ளது. இதன் பணிமனைக் கட்டடம் யோன் டி எருக்கி பெல்லர் என்பவரின் நன்கொடையினால் கட்டிமுடிக்கப்பட்டது. முதலில் பொதுச் செயலகமும், அதை அடுத்து ஐ.நா. செயலாளர் நாயகத்தின் செயலகமும் பின்பு 30 அடுக்கு மாடிகளும் கட்டிமுடிக்கப்பட்டன. 1951 ஆம், 1952 ஆம் ஆண்டுகளில் பொதுச்சபை கூடலுக்காகப் பாரிய கட்டடம் அமைக்கப்பட்டது. ஐ.நா. சின்னம் உலகத்தை மெல்லிய நீலக்கலரினாலும், அதன் வெளிப்பக்கம் வெள்ளைக் கலரினாலும் தயாரிக்கப்பட்டு அதை வளைத்து இரண்டு ஒலிவ் மர இலைக் கொத்துகள் உண்டு. இது சமாதானத்துக்கான ஓர் சின்ன மாகும். நீல நிற வெளிப்புறத்தில் வெள்ளை நிற சின்னத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் கொடி தயாரிக்கப்பட்டுள்ளது. 1956 ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பை உருவாக்கின. ஆனால், இதன்பின்பு பல நாடுகள் பிரிந்து சென்றன. இந்தியா பிரிந்து நாலு நாடுகளாகி யது. இந்தியா, பர்மா, பங்களாதேஷ், பாகிஸ்தான் இவைகளும் பின்பு பிரிந்தன. கொரியா வடகொரியா, தென்கொரியா எனப் பிரிந்தது. வியட்நாம் வடவியட்நாம், தென்வியட்நாம் எனப் பிரிந்துசென்றன. இன்று உலகம் முழுவதும் உள்ள நாடுகள் தனிநாடாக அல்லது சமஷ்டி ஆட்சி நாடாகப் பிரிந்து இயங்குகின்றன. இலங்கையில் உள்ள தமிழ்மக்கள் 1948 ஆம் ஆண்டில் இருந்து கடந்த 61 ஆண்டுகளாகத் தாங்கள் அடிமைகளாக வாழ்வதாக முறையிடுகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் பல நாடுகளில் அநாதைகளாகத் தஞ்சம் புகுந்துள்ளார்கள். பெரும்பான்மை இனத்தின் ஒற்றை ஆட்சியின் கீழ் இராணுவ அடக்குமுறைகளின் கீழ் துன்புறுவதாகக் கூறுகிறார்கள்.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கென ஓர் தனி அலகு அல்லது ஒரு தனித்தாயகம் வேண்டுமென கோரிவந்துள்ளார்கள்.
சகல மக்களையும் சமனாகப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஐ.நா. சபைக்குத் தான் உண்டு. ஆனாலும், ஐ.நா. சபை கடந்த 61 ஆண்டுகளாகத் தமிழ்மக்களை மறந்து மாற்றான் தாய்போல் நடந்து கொள்வது சர்வதேச நீதிக்குப் புறம்பானதாகும். ஐ.நா. தினத்தில் அதன் செயலாளர் நாயகமும், அங்கத்துவ நாட்டினரும் இணைந்து முட்கம்பி வேலிக்குள் அடைபட்டி ருக்கும் தமிழ்மக்களைப் பாதுகாத்து நல்லதோர் தீர்வை வழங்கவேண்டு மென் தமிழ்மக்கள் வேண்டி நிற்கிறார்கள்.
யாழ் உதயன்
0 கருத்துரைகள் :
Post a Comment