வன்னி மக்களின் பொருளாதார மேம்பாடும் பொருளாதார மீட்சியும்

வன்னிப் பெருநிலப்பரப்பில் 600 கோடி ரூபா முதலீட்டில் பாரிய விவசாய நடவடிக்கையை மேற்கொள்வதற்கான திட்டமிடல் செயற்பாடுகள் மிகத்துரிதமாக இலங்கை அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வரவேற்கப்படவேண்டிய இத்திட்டம் அரசியல்வாதியான பசில் ராஐபக்ச தலைமையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பது பல சந்தேகங்களைத் தோற்றுவிக்கின்றது.

அதேவேளை அரசியல் பலவீனத் தள நிலையிலிருக்கும் தமிழ்மக்கள் இதை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்ற கேள்வியை சிந்திக்க வேண்டிய கட்டாயத்திலுள்ளோம். ஏதோ ஒருவகையில் நிறைவேறப்போகின்ற இத்திட்டத்தை எவ்வாறு எம்மக்களுக்குச் சாதகமாக மாற்றுவது, அரசியல் ரீதியாக வரக்கூடிய சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்வது போன்ற பிரதான விடயங்களில் உள்ளுர், புலம்பெயர் முதலீட்டார்களும் புலமைசார்வல்லுனர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டிய தார்மீக பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும் என்பது வன்னி விவசாயப் பெருமக்களின் எதிர்பார்ப்பு.

விவசாய மேம்பாட்டுத்திட்டத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கையாக சாத்தியகூற்று ஆய்வினை மேற்கொள்ளும் விவசாய விஞ்ஞானிகளின் குழு கடந்தவாரம் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தது. ஒரு துறைசார் திட்டமிடலுக்கான இக்குழு, நாட்டின் அரசியல் மற்றும் அதிகார உயர்மட்டங்களுடனான சந்திப்பினை மட்டுமே முக்கியத்துவப்படுத்தியிருக்கின்றது. இச்செயற்பாடு, விவசாய மேம்பாட்டுதிட்டத்தில் அரசாங்கத்தின் அபிலாஷைகளே பிரதானமாக்கப்பட்டிருக்கின்றது என்ற முடிவினையே தருவதாக அமைந்துள்ளது. ஏனெனில், ஏற்கனவே மகாவலித்திட்டத்தினூடாக வன்னியில் பாரிய சிங்களக்குடியேற்றங்களை நிறுவ வேண்டும் என்ற இலங்கை அரசின் நீண்டநாள் கனவுக்கோவை மீளத் தூசுதட்டப்பட்டு, சர்வதேச உதவியுடன் புத்துயிர் கொடுக்கக்கூடிய வாய்ப்புக்கள் மேலோங்கியிருப்பதையே இந்த ஆரம்பகட்ட நடவடிக்கைகள் சுட்டிக்காட்டி நிற்கின்றன.

ஒரு நாட்டின் அதிகார வர்க்கம் என்பது அந்நாட்டின் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற, நிர்வகிக்கின்ற வலு (Power) கட்டமைப்பே தவிர அடிப்படைத்துறைக்கான அமைப்பு அன்று. ஒரு துறைக்கான அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்போது, துறைசார் நிபுணர்களாலோ அதற்கென உருவாக்கப்பட்ட குழுவினாலோ முதலில் சாத்தியக்கூற்று ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அதனடிப்படையில் தேவை மதிப்பீடு, திட்டமிடல், திட்டமதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும். இவற்றின் அடிப்படையில் இறுதியாக அதிகாரபீடங்களின் பங்கு உள்வாங்கப்பட வேண்டும். மக்களுக்கான அபிவிருத்தியில் வகுக்கப்பட்ட திட்டங்களுக்கு அதிகாரவர்க்கத்தின் அனுமதி தேவையே தவிர, அதிகார வர்க்கத்தின் அபிலாசைகளுக்கு அமைவாகத் திட்டங்கள் வகுக்கப்படுவதில்லை. அது ஒரு மேம்பாட்டுத் திட்டமும் இல்லை. இங்கு வல்லுனர் குழுவால் தீட்டப்பட்டது இரண்டாவது வகை.

அதேவேளை திட்டமிடல் தொடர்பாக இரண்டு பிரதான கேள்விகள் எழுகின்றன. ஒன்று திட்டமிடலுக்காக வந்த இந்திய விஞ்ஞானிகள் குழுவின் சாத்தியவியல் ஆய்வுதொடர்பானதாகும். ஏனெனில் துறைசார் திட்டமிடலின் சாத்தியக்கூற்று ஆய்வு என்பது குறிப்பிட்ட பிரதேசத்தை மையப்படுத்தியதாக அமையும்போது, களநிலை ஆய்வு (Field Assessment) முதன்மைப்படுத்தப்படுகின்றது. குறைந்தது அப்பிரதேசத்தின் துறைசார் அறிவடையோர், நீண்டகாலம் அத்துறையில் பணியாற்றியவர்கள் தகவல் வழங்குபவராக உள்வாங்கப்பட வேண்டும். இதில் எந்தவொரு முறையும் இக்குழுவால் பின்பற்றப்பட்டதாகக் குறிப்பிடப்படவில்லை.

இலங்கையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு விவசாய வலயமும் வெவ்வேறுபட்ட தன்மையைக்கொண்டது. பொதுப்படையான எடுகோள்கள் பொருத்தமற்றவை. அதேவேளை இலங்கை அரசினால் பேணப்பட்டு வரும் வன்னி மண்ணின் பெரும்பாலான புள்ளி விவரங்கள் இருபது ஆண்டுகளுக்கு முற்பட்டவை. எனவே சாத்திய ஆய்வுக்காக எவ்வாறான தகவல்கள், எவ்வாறு திரட்டப்பட்டன என்பது இதுவரை விளக்கப்படவில்லை. அடுத்து, ஒரு பிரதேசத்தினது அடிப்படைப' பொருளாதாரத் திட்டமிடலில், அப்பிரதேசத்தின் மக்களது பங்கேற்பு (participation) ஒரு முக்கியமான காரணியாக அமைகின்றது. இன்றைய உலகின் பொருண்மிய மேம்பாட்டுக்கான அடிப்படை உத்தியும் அதுவே. ஏனெனில் ஒரு பிரதேசத்தில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருபவனுக்கே அப்பிரதேசத்தின் ஒவ்வோர் அணுவும் அதன் அமைப்பும் நன்கு தெரியும். பிரதேச அறிவு (Local Knowledge) என வரையறுக்கப்படும் இக்காரணியை உள்வாங்கிக் கொள்ளாத திட்டமிடல், வெற்றியின் சாத்தியங்களைக் குறைப்பதுடன் சிலசமயம் எதிர்மறையான விளைவுகளையும் கொடுக்கின்றது.

ஒரு சிறிய உதாரணம், 2005 ம் வருடம் ஒரு தொண்டு நிறுவனம் பூநகரியில் வேளாண் மேம்பாட்டுத்திட்டம் ஒன்றை மிகப்பெரியளவில் முன்னெடுத்தது. இத்திட்டம் முற்றுமுழுதாக வெளியில் இருந்து அழைத்துவரப்பட்ட விவசாய விஞ்ஞானிகள், துறைசார் வல்லுனர்களினால் தயாரிக்கப்பட்டது. பரந்த வயல் வெளியில் பயிர்ச்செய்கை ஆரம்பமானது. அதற்காக வயல் வெளியை சுற்றியிருந்த பற்றைகள் பாரிய இயந்திரங்களின் உதவியுடன் அகற்றப்பட்டுக் கொண்டிருந்தன. அப்போது அங்கு வந்த பெரியவர் ஒருவர் - "அந்தப் பற்றைகளை அகற்ற வேண்டாம். இங்கிருக்கும் பற்றைகள் அகற்றப்பட்டால் இந்த தொடர் வயல் வெளியில் எவ்வித பயிர்செய்கையும் மேற்கொள்ள முடியாது” என வலியுறுத்தினார். ஆனால் வல்லுனர்களில் யாரும் அதை காதில் வாங்கிக்கொள்ளாததுடன் அவரின் வாதம் அர்த்தமற்றது எனவும் தெரிவித்தனர். மேலும் விஞ்ஞான ரீதியாக தமது திட்டம் பலமானது என வாதிட்டனர். இறுதியில் வல்லுனர்களின் திட்டப்படி எந்தப்பயிரும் அவ்விடத்தில் செய்ய முடியவில்லை. பயிர் முளைவிடும்போதே கருகியது. காரணம் அருகிலிருந்த நீரேரியில் இருந்து வந்த உப்புக்காற்றின் தாக்கமே. பற்றைகளால் சூழப்பட்டிருந்தபோது காற்று வருவது தடுக்கப்பட்டது என்பது பின்னர் வல்லுனர்களால் கண்டறியப்பட்டது. இதையே பெரியவர் தனது அனுபவத்தின் மூலம் கூறியிருந்தார்.

இதேபோல, காலம் காலமாக வன்னி மண்ணின் விவசாயத்தை வளர்த்துவரும் அந்த மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்களின் எவ்விதமான பங்கேற்பும் இன்றி பிரதேசத்திற்கான திட்டம் தயாரிக்கப்படுகின்றது.

எனவே முறையான சாத்தியவியல் ஆய்வு இங்கு முதன்மைப்படுத்தப்படவில்லை. மாறாக வன்னியின் விவசாயத்தில் இந்திய முதலீட்டுக்கான சாத்திய ஆய்வே முதன்மைப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்தியாவின் தொழில்நுட்பம், உபகரணங்கள், வேளாண் விதைகள், உரங்கள் இலங்கையால் கோரப்பட்டுள்ளன. இந்தியாவால் வழங்கப்படவுள்ள 600 கோடி ரூபா கடனில் ஒரு பகுதியாக இதனை (பொருட்களாக) வழங்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தேவை மதிப்பீட்டு அடிப்படையில் கோரப்படவில்லை. இதிலிருந்து வன்னியின் விவசாயத்துறையில் இந்தியாவின் கேள்விச்சந்தை தேடப்படுவது தெளிவாகத் தெரிகின்றது.

பொருளாதார ரீதியாக நோக்குவோமாக இருந்தால் வன்னியின் விவசாய உற்பத்தியானது, வடபகுதியின் முழுக்கேள்வியையும் பூர்த்திசெய்யக்கூடியது மட்டுமல்லாமல் ஏற்றுமதியையும் செய்யக்கூடிய வளங்களைக்கொண்ட துறையாக விளங்குகின்றது. குறிப்பாக யாழ்ப்பாணத்தின் நிலத்தடிநீர் மாசுபாடு, நீருக்கான தட்டுப்பாடு மற்றும் விவசாயநிலங்கள் குடியிருப்பிடங்களாக மாற்றப்படுதல் போன்றவற்றால், உள்ளுர் விவசாய உற்பத்தி அம்மக்களின் தேவையை முழுமையாக நிவர்த்தி செய்யமுடியாத நிலையிலுள்ளது. இச்சூழலில் யாழ்ப்பாணத்திற்கான கேள்விச்சந்தை வன்னி விவசாயத்திலேயே முழுமையாக சார்ந்திருக்கவேண்டியுள்ளது. இது வன்னி விவசாயசத்துறையின் கேள்விச்சந்தையினை மேலும் விஸ்தரிக்கக்கூடிய வாய்ப்புக்களை அதிகரிக்கின்றது. இப்புறநிலைகள் சிங்களக் கொள்கைவகுப்பாளரின் சிந்தனையை இங்கு மையங்கொள்ளச் செய்ததில் வியப்பில்லை.

இவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த துறையாக இருந்தபோதிலும் எந்த ஒரு காலகட்டத்திலும் வன்னியின் விவசாயத்துறையில் இலங்கை அரசினாலோ வேறு எந்த அபிவிருத்திப் பங்காளிகளினாலோ நெறிப்படுத்தப்பட்ட மேம்பாட்டுத்திட்டங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக சமாதானம் என்று சொல்லப்பட்ட காலப்பகுதியில் வன்னியின் விவசாயத்துறை மேம்பாட்டில் உலகவங்கியின் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அவை முறையாகக் கையாளப்படவில்லை. நவீன மயப்படுத்தப்பட்ட விவசாயமுறை நீண்டகால பொருளாதரத்தடையால் திட்டமிட்டு தடுக்கப்பட்டது. அதேபோல் சமாதான காலத்தில் வன்னியின் விவசாயிகளை கதிகலங்க வைக்கக்கூடியளவில், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தின் கேள்விச்சந்தைகள் தெற்கிலிருந்து குறிப்பாக தம்புல்ல போன்ற இடங்களிலிருந்து ஆக்கிரமிக்கப்பட்டதையும், வன்னி விவசாயிகள் எதிர்கொள்ளமுடியாத போட்டிச்சந்தையை உருவாக்கி, வன்னியில் விவசாய மேம்பாட்டை தடுக்கின்ற அணுகுமுறை கையாளப்பட்டதையும் நினைவு கொள்ள வேண்டும்.

நீண்டகாலப் போரினால் பாதிக்கப்பட்டே வந்த வன்னிமக்கள், இறுதிப்போரின் இடப்பெயர்வினால் முழுமையாக எல்லாவற்றையும் இழந்துள்ளனர். மீள்கட்டுமானத் திட்டங்களில் இருந்து புறந்தள்ளப்படுகின்றனர். தற்போது கையேந்து நிலையிலிருக்கும் அவர்களை தூக்கிவிடும் பாரிய கடமை தமிழ் முதலீட்டாளர்களிடமும் புலம்பெயர் சமூகத்திடமும் உள்ளது.

இப்படிப்பட்ட புறநிலைகளில், செயற்படப்போகும் விவசாய மேம்பாட்டுத் திட்டங்களை எமது மக்களுக்குச் சாதகமாக்கக்கூடிய சில வழிகள்

Ø உற்பத்தி, உற்பத்தியின் பின்னரான முதலீடு, சந்தைப்படுத்தல், தொழில்நுட்ப உட்கட்டுமானம் போன்றன இங்கிருக்கும் முதலீட்டுக்கான வாய்ப்புகள். இதில் உள்ளுர் மற்றும் புலம்பெயர் முதலீட்டாளர்கள் முதலிடவேண்டும்.
Ø திட்டமிடலில் உள்ளுர், புலம்பெயர் வல்லுனர்கள் ஏதோ ஒரு வழியில் திட்டம் சரியான முறையில் செல்வதற்கான வழிவகைகளை ஆராய்ந்து ஆலோனைகளை வழங்க வேண்டும்.
Ø முக்கியமாக வடபகுதி தமிழ்மக்கள் நகர்ப்புறம் சார்ந்து குடியேறும் நிலையை தவிர்த்து, ஒரு நெரிசல் மிக்க வாழ்க்கை முறையிலிருந்து மாறி வன்னிப்பகுதியில் குடியேறலாம். இதன்மூலம் சிறந்த தொழில்வாய்ப்பைப் பெறுவதுடன் வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்த முடியும் என்பதற்கு அப்பால், எமது பூர்வீக தாயக நிலம் பறிபோவதைக் காப்பாற்றலாம். இதற்கு தமிழ் அரசியல்வாதிகள் மக்களை ஊக்கப்படுத்துவதுடன் அவர்களுக்கான ஒழுங்குகளையும் செய்வதால் பாரிய சிங்களக் குடியேற்றத்தைத் தடுப்பதுடன் நீண்ட போரின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார வாழ்க்கையை மேம்படுத்தலாம்.
Ø புலம்பெயர் மக்கள் தங்களுக்குத் தெரிந்தவர், உறவினர் மூலமோ அல்லது ஒருகுழுவாக சேர்ந்தோ தங்களால் இயன்ற உற்பத்தி முதலீட்டை நேரடியாக வழங்க முன்வந்தால் சிங்களத்திடம் கையேந்தாமல் விரைவாக தங்குநிலையிலிருந்து தனித்துவமான பொருளாதார நிலைக்கு எமது சமூகம் கௌரவமாக செல்லக்கூடிய வாய்ப்புள்ளது.

அபிஷேகா

Share on Google Plus

About அபிஷேகா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment